யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏன் தேசியவிருது கிடைக்கவில்லை?

Why Yuvan Shankar Raja did not get the National Award

யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்ற கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அந்தக் கேள்விக்கான விடைதான் இன்றும் கிடைத்தபாடில்லை.  முதலில் இசைத்துறை கலைஞர்களுக்கும்  அவர்களுக்கு கிடைத்த தேசிய விருதுகள் குறித்தும் பார்ப்போம்.  இசை அமைப்பாளருக்கு என்று தனியாக தேசிய விருது கொடுக்க தொடங்கிய முதலாம் ஆண்டு தேசிய விருதை வென்றவர் ஒரு தமிழ் இசை அமைப்பாளர்.  ஒட்டுமொத்த இந்திய அளவில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை அதிக முறை வென்றவர் ஒரு தமிழர். அவர் வேறு யாரும் இல்லை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். 

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எப்படி அத்தனை முறை தேசிய விருது கிடைத்தது. அவருக்கு கிடைத்த விருதில் அரசியல் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விகளெல்லாம் எழுப்பப்பட்டு வருகிறது.  உண்மையிலேயே அவருக்கு விருது கிடைப்பதில் ஏதாவது அரசியல் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால்  குழப்பமான பதில்கள் தான் உங்களுக்கு கிடைக்கும். 

ஏ ஆர் ரகுமான் இளையராஜாவிடம் பணியாற்றிய காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிய சூழல் இருந்தாலும் அவருக்கு எடுத்த எடுப்பிலேயே இயக்குனர் மணிரத்தினத்தின்  படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவரை சினிமா துறைக்கு அதிக முறை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலச்சந்தர் தான் அறிமுகப்படுத்தி வைத்தார்.  அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் முதல் படத்திலேயே தன்னுடைய முத்திரையை பதித்தார்.  பலரும் எதிர்பார்த்தது போலவே முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.  அவருடைய சினிமா வாழ்க்கை பயணம் தொடக்கத்திலேயே டாப் அளவில் இருந்ததால் அவர் தொடர்ந்து பணியாற்றிய இயக்குனர்கள் எல்லாம்… டாப் இயக்குனர்கள், டாப் தயாரிப்பாளர்கள், டாப் நடிகர்கள், டாப் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றிய படங்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். 

அவர் தமிழில் மட்டும் இசை அமைக்காமல் அதிக மார்க்கெட் உள்ள அதிக  வியாபாரம் உள்ள இந்தி சினிமாவிலும் கால் பதித்தார்.  அங்கேயும் யாரெல்லாம் டாப் தொழில் நுட்ப கலைஞர்களோ அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார். அங்கேயும் தனது முத்திரையைப் பதித்தார்.  அங்கேயும் அவருடைய இசைக்கு தனி ரசிகர் கூட்டம் ஒன்று உருவானது. இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர், அடுத்ததாக உலக அளவிற்கு செல்கிறார். ஆங்கில படங்களில் இசையமைக்கிறார்.  அங்கேயும் அவர் தனது முத்திரையைப் பதித்து புகழ்ச்சியை பெறுகிறார். மற்ற தமிழ் சினிமா இசை அமைப்பாளர்கள் எல்லோரும் வெளிநாட்டுப் படங்களில் இருந்து தான் இசையை காப்பி அடிப்பார்கள்.  ஆனால் ஏ ஆர் ரகுமானின் இசை வெளிநாட்டுப் படங்களில்  சிறப்பு காட்சிகளாக சிறப்பு இசையாக வந்து சென்றுள்ளது. அதை அடுத்து யாருமே  அவ்வளவு எளிதில் பெற்று விடாத ஆஸ்கர் விருதை ஒரே படத்திற்கு 2 விருதுகளாக வாங்கி வந்தவர்.  இப்படி புகழ்ச்சியின் உச்சியில் இருக்கும் ஏ ஆர் ரகுமானின் பெயர் தேசிய விருதுக் குழு பட்டியலில் இடம் பெற்று விட்டால்  தேசிய விருதுக் குழு கமிட்டியில் இருக்கும் உறுப்பினர்கள் ஏ ஆர் ரகுமானின் பெயரை பார்த்து விட்டால் அந்தப் பெயரை தாண்டி வேறு ஒரு சிறந்த இசையமைப்பாளரை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.  அந்தளவுக்கு தனது திறமையால்  மக்களின் கவனம் கவர்ந்து விட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். தேசிய விருதுக் குழுவைப் பொருத்த வரையில் ஒரிஜினல் கண்டன்ட் என்ற வார்த்தை அடிக்கடி  அந்தக் குழுவில் இடம்பெறும் என்று சொல்கிறார்கள். தன்னுடைய இசைப்பணியை  இரவு நேரத்தில் செய்யும் ஏ ஆர் ரகுமானின் இசை அவ்வளவு பரிசுத்தமானதாக இருக்கிறது.  அவர் இதமான குரலை கொண்ட பாடக பாடகிகளை தேர்ந்தெடுத்து அவர்களிடம் இருந்து இரவு நேர அமைதியில் சிறந்த குரலை வெளி வாங்கி சிறந்த பாடலைத் தந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். ஆதலால் அவர் அதிக முறை தேசிய விருது வென்றதில் அரசியலும் இருக்கிறது என்பது முற்றிலும் உண்மை அல்ல. தேசிய விருதை வாங்குவதற்கான தகுதியும் தரமும் அவருடைய இசையில் இருக்கிறது அதனால் அவருக்கு விருது கிடைக்கிறது என்பதே உண்மை. 

இப்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பக்கம் வருவோம்.  17 வயதில் இசையமைப்பாளராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் யுவன் சங்கர் ராஜா.  இளையராஜாவின் மகன் என்பதால் பெரிய படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு உண்மையில் எளிதாக கிடைத்து விட்டது.  அதேசமயம் அவரை இளையராஜா எந்த மேடையிலும் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. என் மகனுக்கு உங்களுடைய ஆதரவு வேண்டும் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொள்ளவில்லை. தகுதியும் திறமையும் இருந்தால் நீயே மேலே ஏறி வா என்று விட்டுவிட்டார் இளையராஜா. இத்தனைக்கும் இளையராஜா யுவன் சங்கர் ராஜாவின் இசையை ஒருபோதும் எந்த மேடையிலும் பாராட்டியது இல்லை. அப்படிப்பட்ட யுவன் சங்கர் ராஜாவுக்கு முதல் சில படங்கள் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா நடிப்பில் உருவான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் தன்னுடைய ஒட்டுமொத்தத் திறமையையும் காட்டி இருந்தார்.  குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் “சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே”, “பூவ பூவ பூவ பூவே”, “இரவா பகலா குளிரா மழையா” என்ற இந்த மூன்று பாடல்களில் ஏதோ ஒரு பாடலுக்கு அப்போதே யுவனுக்கு தேசிய விருது கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் அப்போதே அந்த விருதுகள் மீது இருக்கும் ஆசை, நம்பிக்கை இவற்றை எல்லாம் தூக்கி தூர வீசி விட்டார் யுவன் சங்கர் ராஜா என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு, விருதுக்கு தேர்வு ஆகும் அல்லது விருது வாங்கும் அளவுக்கு பாடல்களை உருவாக்கனும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல், நான் பாட்டு போடுற படம் ஹிட்டாகுதா? அந்தப் பாட்டை மக்கள் ரசிக்கிறார்களா? இவ்வளவு தான் என்னுடைய நோக்கம் என்பதை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு பாடல்கள் இசையமைத்திருக்கிறார். 

அதை மட்டுமே நோக்கமாக வைத்துக் கொண்டு இசை அமைத்ததால் பல கலைஞர்களுடைய வாழ்க்கை மாறி இருக்கிறது. குறிப்பாக அஜீத்துக்கு தல என்று பட்டம் சூட்டி அவரை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டிய ஏ ஆர் முருகதாஸ்க்கு பெரிய வெற்றியாக அமைந்த தீனா படத்தில் யுவனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதனால்தான் அன்று முதல் இன்று வரை யுவனும் அஜித்தும் சேரும் படங்கள் மக்களிடம் அவ்வளவு  வரவேற்பைப் பெறுகின்றன. இப்படி நடிகர் அஜீத் (தீனா, பில்லா, ஆரம்பம், பில்லா 2, மங்காத்தா, நேர்கொண்ட பார்வை, வலிமை),  சூர்யா (பூவெல்லாம் கேட்டுப்பார், மௌனம் பேசியதே, நந்தா), கார்த்தி (பருத்திவீரன், பையா), தனுஷ் (துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி), சிம்பு (கோவில், வல்லவன், மன்மதன்), விஷால் (திமிரு, சண்டக் கோழி, இரும்புத்திரை), ஆர்யா (அறிந்தும் அறியாமலும், சர்வம், பாஸ் என்கிற பாஸ்கரன்), ஜீவா (கற்றது தமிழ், ராம், ஒரு கல் ஒரு கண்ணாடி) என்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இன்றைக்கு வலம் வந்து கொண்டு இருக்கும் இந்த நடிகர்களின் ஆரம்பகால வளர்ச்சியிலும் அல்லது  சறுக்கலை சந்தித்து தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வந்த வளர்ச்சியிலும் யுவன் சங்கர் ராஜாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் யுவன் இல்லை என்றால் இந்த நடிகர்கள் எல்லாம் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. இதை அந்த நடிகர்களே பல இடங்களில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட், அவற்றிலுள்ள பிஜிஎம் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றவை. லிங்சாமி, ராம், அமீர், விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு, செல்வராகவன் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் ஆக இருக்கும் இவர்களின் வெற்றிக்கு முக்கிய பங்களித்திருக்கிறார் யுவன். இன்றுவரை இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக பார்க்கப்படுகிறது. 

சென்னை 28 என்ற படத்திற்கு ஒரு வேலை யுவன் சங்கர் ராஜா இசையமைக்காமல் இருந்திருந்தால் நாங்கள் இவ்வளவு தூரம் வந்து இருப்போமா என்று தெரியவில்லை என்று இயக்குனர் வெங்கட்பிரபு சொல்லியிருக்கிறார். அதேபோல இயக்குனர் வெங்கட்பிரபு, விஜய் டிவி விருது மேடையில் மங்காத்தா பிஜிஎம்மை ஒலிக்க சொல்லிவிட்டு,   ரசிகர்களிடம் இவ்வளவு ஆதரவைப் பெற்ற இசைக்கு, இசையமைப்பாளருக்கு ஏன் விருது கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார் வெங்கட் பிரபு. அதே விஜய் டிவி விருது மேடையில் இயக்குனர் ராம், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்றிருக்கும்  ஆனந்த யாழை பாடல் தேசிய விருதுக் குழுவில் ஒரு ஓட்டு குறைந்ததால் தேசிய விருதை தவறவிட்டது. அப்படிப்பட்ட ஒரு பாடலுக்கு நீங்கள் விருது கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் சிறந்த பாடல்கள் பட்டியலில் கூட சேர்க்காமல் இருக்கிறீர்கள் என்று அத்தனை பேர் முன்பு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

யுவன் பற்றி பேசும்பொழுது நா.முத்துக்குமார் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? யுவனும் முத்துக்குமாரும் பெரும்பாலும் இயக்குனர் ராம், செல்வராகவன் இவர்களுடைய படங்களில்தான் இணைந்து அதிகம் பணியாற்றி இருக்கிறார்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் யுவனிடம் நா முத்துக்குமாரை அறிமுகப்படுத்தி யுவனையும் நா. முத்துக்குமாரையும் ஒன்றாக இணைத்து முதல்முறையாக பாடல் வாங்கியவர் இயக்குனர் பாலா.  நந்தா படத்தில் இடம்பெற்றிருக்கும் ஓராயிரம் சூரியன் என்கிற பாடல்தான் யுவனும் நா.முத்துக்குமாரும் இணைந்து முதல்முறையாக பணியாற்றிய பாடல். அப்படி யுவனிடம் இணைந்து பணியாற்றிய நா முத்துக்குமார் முதல் முறையாக யுவன் இசையில் எழுதிய பாடலுக்காக தேசிய விருது வாங்கியதும் “இந்த விருது யுவன் சங்கர் ராஜாவுக்கு கிடைக்க வேண்டிய விருது” என்று தெரிவித்தார். அதன்பிறகு நா. முத்துக்குமாரும் யுவனும் இணைந்து கடைசியாகப் பணியாற்றிய “தரமணி” படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. 

இந்த தருணத்தில் யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றிய “தர்மதுரை” படத்தில் இடம்பெற்றிருக்கும் “எந்தப் பக்கம் போனாலும்” என்ற பாடல் சிறந்த பாடல் வரிகளுக்காக தேசிய விருதை வென்றது. அதே கூட்டணி “பேரன்பு” படத்திற்காக இணைந்த பொழுது இந்த முறை நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. ஏன் யுவனுக்கு இன்னும் தேசியவிருது கிடைக்கவில்லை என்று கேட்டால்… இளையராஜாவின் தீவிர ரசிகர்களிடம் கேட்டுபாருங்கள்,  யுவன் எந்த எந்த பாடலை எங்க எங்க இருந்து எடுத்து இருக்கிறார் என்றும், யுவன் மட்டும் இல்லை, இப்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் எல்லாருமே அங்க பாதி இங்க பாதி என்று பல பாடல்களில் இருந்து உருவி எடுத்து அதை கலந்துகட்டி தான்  கொடுக்கிறார்கள் என்றும் அவர்கள் சொல்வார்கள் என பதில் வருகிறது. இதுகுறித்து இயக்குனர் பாலா ஒரு மேடையில் சொன்னது:  யுவனுடைய இசையில் அவிங்க அப்பாவோட சாயல் நிறைய இருக்குன்னு சொல்றாங்க… யாரோட இசையில தான் இளையராஜாவோட சாயல் இல்லை… அதை ஒரு பெரிய விஷயமாக பேச வேண்டிய அவசியமில்லை! 

நாம் தான் யுவனுக்கு ஏன் இன்னும் தேசியவிருது கிடைக்கவில்லை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் யுவனுக்கு தேசிய விருது கிடைத்தால் அதை வியந்துபோய் ஆச்சரியமாக யாராவது யுவனிடம் சொன்னால் யுவனிடமிருந்து “ஓ” என்கிற அசால்ட்டான ஒலி மட்டுமே பதிலாக வரும். 

Related Articles

இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத்... மே, ஜூன், ஜூலை இந்த மூன்று மாதங்களில் ரிசல்ட், தற்கொலை, நீட், கவுன்சிலிங், ஆன்லைன் கவுன்சிலிங் சரிவரவில்லை போன்ற வார்த்தைகள் தான் அடிபட்டுக் கொண்டிருக...
உங்கள் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளி ம... பணம்கொடுத்து அரசுப்பணியில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டிஎன்பிஎஸ்சி, ட...
Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய ... இந்தியாவிலயே முதன் முறையாக இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது பிஎஸ்என்எல்.பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விங்க்ஸ் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு இந்...
தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால்விட்ட சன் பிக்ச... தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. அதை தொடர்ந்து இந்தப் படத்தை இணைய...

Be the first to comment on "யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏன் தேசியவிருது கிடைக்கவில்லை?"

Leave a comment

Your email address will not be published.


*