காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்

Peranbu movie review

இயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல சினிமா ரசிகர்களிடையே. பல சர்வதேச விழாக்களில் கலந்து கொண்ட படம் தற்போது திரையரங்குகளில் ( பல இடங்களில் நடிகர் சிம்பு படம் இறங்கி இருப்பதால் பேரன்பு வெளியாகவில்லை ) வெளியாகி உள்ளது. எப்படி இருக்கு என்பதைப் பார்ப்போம்.

இயற்கையை மிக ஆழமாக நேசித்தவர்கள் எப்படிபட்ட சூழலிலும் உயிரை இழக்க மாட்டார்கள், உயிரை எடுக்க மாட்டார்கள் மாறாக சக உயிர்கள் மீது பேரன்பு செலுத்துவார்கள் என்பதை கூறிய படம் அருவி. அதைத் தொடர்ந்து பேரன்பு அந்த வரிசையில் இடம்பெறுகிறது. 

இயக்குனர் ராம் இயற்கையை எப்படி இவ்வளவு ரசிக்கிறார் என்பது வியப்புக்குரியதே. வருடத்தில் 12 மாதங்கள். ஒவ்வொரு மாதத்திற்கு இயற்கை தன்னுடைய பல முகத்தை காட்டுகிறது ( புயல், சுனாமி, வெள்ளம், வெயில், விஷப்பனி ). அதே போல இயற்கையைப் பற்றி 12 அத்தியாயங்கள் பிரித்து அதன் வழியே கதை சொல்கிறார் ராம். ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்த முயன்றிருக்கிறது என்று சொல்லலாம்.

இயற்கை வெறுப்பானது, இயற்கை அதிசயமானது, இயற்கை கொடூரமானது,

இயன்கை அற்புதமானது, இயற்கை புதிரானது, இயற்கை ஆபத்தானது, இயற்கை சுதந்திரமானது, இயற்கை இரக்கமற்றது, இயற்கை விதிகளற்றது, இயற்கை முடிவற்றது, இயற்கை பேரன்பானது என்று 12 அத்தியாயங்களாக படம் நகர்கிறது. அத்தியாயத்தின் தலைப்புகளுக்கு ஏற்றவாறே எந்த இடத்திலும் சலிப்பு இல்லாமல் படமும் நகர்கிறது.

சிட்டுக்குருவி, நெயில்பாலிஷ் குதிரை, கருப்பு சிம்பு என்று இயற்கை மற்ற உயிரினங்களுக்கும் உரித்தானது என்று காட்சிகள் வழியே உணர்த்தும் இடங்கள் அருமை.

தம்பியின் மகள் சொன்னதை செய்ய முயற்சிக்கும் இடத்திலும், அஞ்சலியை நம்பி ஏமாறும் இடத்திலும், மகளுக்கு பேட் மாற்ற முயன்று உதை வாங்கும் இடத்திலும், கடலுக்குள் விழப்போகும் இடத்திலும் மம்முட்டி அலட்டல் இல்லாத நடிப்பால் சென்சுரி அடிக்கிறார். வாழ்ந்திருக்கிறார் மனிதர். சாதனாவும் அவருக்கு ஈடாக நடித்திருக்கிறார். மீரா கதாபாத்திரத்தில் நடித்தவர் யாரப்பா? அசால்ட்டாக ரசிகர்களை கவர்கிறார்.  மூவருமே பல விருதுகள் வெல்ல வாய்ப்புண்டு. 

சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட உயிர்களைப் பற்றி படம் எடுத்தால் அது நல்ல படம் என்ற இமேஜைப் பெறுகிறது என்று நினைத்துக்கொண்டு சிலர் படம் எடுத்து தாளிக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அருவி, பேரன்பு போன்ற படங்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷியங்கள் நிறைய உள்ளது.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் யார் யார்? என்ற கேள்வி எழுப்பினால் சகஜமான மக்களைப் போல இடத்திற்குத் தகுந்தாற்போல புறணி பேசாத அப்பாவிகள், முகச்சுளிப்புக்கும் பழிப்புக்கும் உரிய நோயால் பாதிக்கப்பட்ட மக்கள், சகஜமான உடலமைப்பை பெறாதவர்கள், அறியாமையின் காரணமாக மட்டம் தட்டப்படும் பாமர மக்கள் என்று பல விடைகள் நமக்கு கிடைக்கிறது. இப்படிபட்ட கதாபாத்திரங்களை தயவு செய்து ராம், அருண்பிரபு, மிஷ்கின் போன்ற படம் எடுக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தினால் சிறப்பு.

மீரா கார்க்கதவை நீக்கிக்கொண்டு தலையை வெளியே நீட்டி காற்று வாங்கும்போது ஒலிக்கிறது என் மீதினில் மோதும் காத்து என்ற பாடல் வரி. உடல் சிலிர்த்துவிட்டது. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் அற்புதம். காக்காய் குஞ்சுகளை திரையில் காட்டியதற்காகவே  கண்டிப்பாக அனைவரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் பேரன்பு.

Related Articles

தோசைல சாதி இருக்கு!  – வே. மதிமாறன... தோசைல கல் இருக்கு! தோசை கல்லு மாதிரி இருக்கு! இப்படிபட்ட விமர்சனங்கள் தோசை மீது இதுவரை இருந்திருக்கிறது. ஆனால் சாதாரண தோசையில் சாதி இருக்கு என்பது பு...
தமிழ்நாடு எனும் சுடுகாடு – மூடப்பட... தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எதாவது ஒரு தொழிற்சாலையை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ரத்த ஆறு ஓடுகி...
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி, கட்டுரை ... இந்த மாதிரி இணையதளங்களை நம்பி சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்கள் இளைஞிகள் எல்லாம் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. அவர்களெல்லாம் இந்த பக்கம் எட்டி...
K – 13 படம் எப்படி இருக்கு?... இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் K-13. நாயகன் திரைப்பட இயக்குனர், நாயகி எழுத்தாளர்(காட்சிப் பிழை என்ற புத்தகம் எழுதியுள்ளா...

Be the first to comment on "காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*