ஐடி துறை பெண்கள் கலாச்சார சீரழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்களா? –  பொது சமூகம் என்ன சொல்கிறது? 

ஐடி துறையில் பணியாற்றும் பெண்களின் குறைகள் என்னென்ன என்று பார்த்தால் அதை இந்த பொது சமூகம்  எண்ணிக்கையே இல்லாமல் தன் இஷ்டத்திற்கு அடுக்கிக் கொண்டே போகிறது. உதாரணத்திற்கு ஐடி துறையில் பணியாற்றும் குடும்பப்பெண் பற்றி சிறப்பான காட்சிகள் வைத்து படம் என்றால் அது இயக்குனர் தாமிரா அவர்களின் “ஆண் தேவதை” படம். அந்த படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்த  நடிகை ஐடி துறையில் பணியாற்றும் பெண்ணாக இருப்பார். அவர் இரண்டு குழந்தைகள் பெற்றிருந்த போதிலும் ஐடி துறையில் பணியாற்றினால் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று மாடர்ன் உடை அணிந்து கொண்டு செல்வார். நான் சம்பாதிக்கிறேன் என்னுடைய சம்பாத்தியத்தில் தான் நீ சாப்பிடுகிறாய் என்று கணவனை சுட்டிக்காட்டுவாள்.  இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்ற போதிலும் இரவு நேரத்தில் தன் சக தொழிலாளர்களுடன் நடக்கும் விருந்திற்குச் செல்கிறார். அப்படி விருந்துக்குச் செல்லும் போது காரில் தான் செல்வேன் நான் எப்போதும் என்னை தாழ்த்தி காட்ட மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற போதிலும் இரவு நேரத்தில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருகிறார். இப்படி ஐடி பெண்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்று  இயக்குனர் தாமிரா காட்டியிருந்தார். கலாச்சார காவலன் என்கிற ஒரு பார்வையுடன் பார்த்தால் இந்த படத்தின் வில்லி ரம்யா பாண்டியன் தான். கொஞ்சம் கூட தமிழ் பெண் என்கிற ஒரு உணர்வே இல்லாமல்  குடும்பத்தை பற்றி பெரிதாக கவலை படாமல் சுயநலமாக தன்னுடைய சந்தோஷத்தை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு வாழக்கூடிய ஒரு பெண்ணாக நடித்து இருப்பார் என்று கலாச்சார காவலன் பார்வையில் சொல்லலாம். இந்தக் கலாச்சார காவலனின் பார்வை தான் பொது சமூகத்தின் பார்வையாக இருக்கிறது. 

இதேபோல இயக்குனர் நலன் குமாரசாமி,  ஐடி துறையில் ஒரு பெண் வேலை வாங்குவது எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானது, அவர் அந்த மாதிரி ஒரு நல்ல சம்பளத்திற்கு வேலையில் சேருவதற்காக எத்தனை கம்பெனிகளில் ஏறி இறங்க வேண்டும் என்பதை தெளிவாக காட்டி இருப்பார். இயக்குனர் ராம் தன்னுடைய முதல் படமான கற்றது தமிழ் படத்தில் ஐடி துறையில் பணியாற்றும் பெண் கலாச்சாரத்திற்கு எதிரான டச் மீ ஹியர் இஃப் யூ டேர் என்ற வாசகத்துடன் ஒரு டீ சர்ட் அணிந்து இருக்கிறார். அது தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்று அந்த படத்தின் நாயகன் அந்த டி ஷர்ட்டில் எழுதி இருக்கும் வாசகத்திற்கு ஏற்ப நடந்து கொள்வான்.  பிறகு அதே நாயகன் தன் தலையில் அதிர்ச்சியில் கையை வைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்பான். இப்படித்தான் நம் தமிழ் சமூகத்தில் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள்.  உணர்ச்சிவசப்பட்டு செயலில் இறங்குவதுதான் அவர்களுடைய பலம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இயக்குனர் ராம் தன்னுடைய தரமணி படத்தில் ஐடி துறையில் பணியாற்றும் இரண்டு பெண்களை காட்டியிருப்பார். ஒன்று அபூர்வ சௌமியா என்கிற கிராமத்து பெண்.  இன்னொன்று ஆல்தியா ஜான்சன் என்கிற நகரத்தில் பிறந்து வளர்ந்த பெண். அபூர்வ சௌமியா என்கிற கிராமத்து பெண்  தமிழகத்தில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்யும் போது அவர் அணிந்து கொண்டிருக்கும்  உடையைப் பற்றி “தமிழ்நாட்டிலேயே ஐடி கம்பெனிக்கு நீளமான டாப்ஸ்  அணிந்துகொண்டு ஜடை போட்டு கொண்டு வரும் ஒரே பெண் நம்ம ஊரு சௌமியா தான்” என்று ஒரு வசனம் வரும். அவர் கம்பெனி மூலமாக அயல்நாட்டிற்கு ஐடி துறை சார்ந்த வேலைக்கு செல்லும்போது அங்கு சென்றதும் தன்னுடைய உடையை மாற்றிக் கொள்கிறார். தன் காதலனிடம் ஸ்கைப்பில் பேசும்போது குட்டி டிரவுசர் அணிந்து கொண்டு பேசுகிறார். அதை பார்க்கும்போது ஹீரோ என்னடி டிரஸ் இது என்று சொல்ல, இது தமிழ்நாடு இல்ல அமெரிக்கா இங்க இந்த மாதிரி டிரஸ் போட்டுட்டு போனா “பே” ன்னு பாக்க மாட்டாங்க என்று அபூர்வ சௌமியா சொல்லுவாள். இதேபோல ஆல்தியா ஜோன்சன் தன்னுடைய முதல் காட்சியிலேயே  தொடை தெரியும் அளவுக்கு  ஒரு உடையுடன் நிற்கிறார். அந்த இடத்திலிருந்து ஆல்தியாவுடன் நண்பராக பழகி காதலாக மாறும் ஹீரோ  லிஃப்டில் பயணிக்கும்போது இதுவரைக்கும் போடுற இந்த டவுசர இன்னும் கொஞ்சம் கீழ  கீழ வரைக்கும் கவர் ஆகுற மாதிரி போடலாம் இல்ல என்று வசனம் சொல்லுவார். சில காட்சிகள் கடந்த பிறகு ஆண்ட்ரியாவுக்கு, அவருடன் பணியாற்றும் சக  ஆண் பணியாளர் ஒருவர் மாடர்ன் டிரஸ் ஒன்று பரிசாக கொடுக்கிறார்.  இதைப் பார்த்து அந்த ட்ரஸ் எடுத்து அளவு எடுத்து பார்க்கிறார் ஹீரோ. அந்த டிரஸ் ஆண்ட்ரியாவின் தொடை வரைக்கும் மட்டுமே இருக்கிறது. மார்பகம் அக்குள் இவற்றையெல்லாம் வெளியில் காட்டும்படி இருக்கிறது.  உடனே ஹீரோவுக்கு கோபம் வந்துவிடுகிறது. சொல்லு உன்னுடைய டிரஸ் சைஸ் எப்படி அவனுக்கு தெரியும்? என்று தொடர்ந்து எரிச்சலோடு கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார் ஹீரோ. 

இந்த தரமணி படத்தை பார்க்கும்போது ஐடி துறையில் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் இப்படிதான் அறைகுறை ஆடைகளுடன் சுற்றுவார்களா?  அந்த படத்தில் வரும் ஆண்ட்ரியாவை போல அதிகம் சம்பாதிக்கிறேன் என்று தலைக்கனத்துடன் சுற்றுவார்களா?  தன்னை விட குறைவாக சம்பாதிக்கும் ஆண்களை நாயை பார்ப்பதுபோல பார்ப்பார்களா?  சிகரெட் பிடிப்பவர்களா? மது அருந்துவார்களா? தன் தோழியுடன் இரவு நேரம் பப்புக்குச் சென்று தன் தோழியுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு  கண்முன் தெரியும் எல்லா ஆண்களையும் பார்த்து நாய்கள் என்று சொல்வார்களா? ஆண்கள் என்று கூட பார்க்காமல் நடுவிரலை தூக்கி காட்டுவார்களா? என்ற பல கேள்விகள் இந்த சமூகத்தில் பல வருடங்களாக இருந்து வருகிறது. 

ஆனால் அவர்களுக்கெல்லாம் ஐடி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு எப்படிப்பட்ட பாலியல் தொந்தரவுகள் ஏற்படும் என்பதை விளக்கிய காட்சிகள் கண்ணுக்கு தெரிவதில்லை.  தன்னுடன் பணியாற்றும் பெண் தன்னிடம் வயது வித்தியாசமின்றி ஜாலியாக பழகுகிறாள், மாடர்ன் உடை அணிந்து வருகிறாள்,  கலாச்சாரம் பற்றி கவலைப்படாதவளாக இருக்கிறாள் என்று ஐடி துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சில ஆண்கள் நினைத்துக் கொண்டு,  ஆண் தேவதை ரம்யா பாண்டியனை அவருடைய  மேலதிகாரி தவறான உறவுக்கு வலுக்கட்டாயமாக அழைக்கிறான்,   காதலும் கடந்து போகும் படத்தில் என் கூட ஒரு நாள் சந்தோசமாக இரு உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்கிறான்,  தரமணி படத்தில் தன்னுடன் உறவாட மறுத்த ஆண்ட்ரியாவை அடுத்த நிமிடம் வேலையை விட்டு தூக்குகிறான் மேலதிகாரி. ஒருபக்கம் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் மன உளைச்சலில் இருக்கும் ஆண்தேவதை ரம்யா பாண்டியன்… இன்னொரு பக்கம் திடீரென்று வேலையை விட்டு தூக்கியதால் இன்னொரு கம்பெனியில் சரியாக வேலையே வாங்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் ககபோ யாழினி… மறுபக்கம் ஹச் ஆர் ஆக இருந்து மாதம் 80000 சம்பளம் வாங்கிய போதும் திடீரென்று வேலையை இழந்ததால் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் தன் மகனுடன் ரயில்வே ஸ்டேஷனில் தனிமையில் அமர்ந்து இருக்கும் ஆல்தியா… இப்படி ஐடி துறை பெண்கள் என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதையும் தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. ஆனால் அவற்றை இந்த பொது சமூகம் பெரிதாக கவனிப்பதில்லை. ஐடியில் வேலை செய்யும் பெண்கள் இரவு பகல் என்ற வித்தியாசம் இல்லாமல் ஆண்களுடன் நெருங்கிப் பழகுகிறார்கள், மது அருந்துகிறார்கள், புகை பிடிக்கிறார்கள், பீட்சா பர்கர் என்று மேலைநாட்டு உணவுகளை அதிக மாக உண்கிறார்கள்…  இப்படி உடலைக் கெடுத்துக் கொண்டு  இருக்கும் பெண்களை எப்படி திருமணம் செய்து கொள்வது என்கிற ஒரு கேள்வியும் நிறைய ஆண்களிடம் இருக்கிறது.  ஒன்று வேலையை விட்டு விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது திருமணத்திற்கு பிறகு இந்த மாதிரியான வேலைக்கு செல்லக் கூடாது என்கிற கண்டிப்பை ஏற்றுக் கொண்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சில ஆண்கள் சொல்கின்றனர். அப்படிப்பட்ட ஆண்களை ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் “இந்த மாதிரி மண்ணாங்கட்டி மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்” என்று ஒரே அடியில் இறக்கி வைத்து விடுகிறார்கள். அந்த மாதிரியான பெண்கள் ஐடி துறையில் வேலை செய்யும் மாப்பிள்ளையை அல்லது ஐடி துறையில் வேலை செய்யும் சக பணியாளரை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான துணிச்சலான பெண்கள் மிக குறைவு. வேறு தொழில் செய்யும் ஒரு ஆணை திருமணம் செய்துகொண்ட பெண்கள் திருமணத்திற்கு பிறகு வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வீட்டிலேயே தங்கி விடுகிறார்கள். 

 இந்த மாதிரியான பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க, ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் தமிழ் கலாச்சாரப்படி எளிமையாக அழகாக வாழும் சில இளம்பெண்களை தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக்குகிறார்கள்,  அவர்கள் வீட்டிலும் கூட பெரும்பான்மையாக ஆங்கிலத்திலேயே உரையாடுகிறார்கள், தமிழ் எழுதுவதற்கு அவ்வளவு சிரமப்படுகிறார்கள், ஐடி கம்பெனியில் வயது வித்தியாசமின்றி ஆண்களை பெயர் சொல்லி அழைப்பது போல பொது சமூகத்திலும்  ஆண்களை மரியாதை இல்லாமல் பெயர் சொல்லி அழைக்கிறார்கள் என்று அவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால் அவர்களுக்குத் தெரிவதில்லை ஐடி துறையில் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் அதிகமான சதவீதத்தினர் கிராமத்துப் பெண்கள் தான் வேலை செய்கிறார்கள், ஐடி துறை வந்த பிறகுதான் அங்கு பணியாற்றும் பல இளைஞர்கள் இளைஞிகள் சமூக வலைதளங்களில்,  தொழில்நுட்பங்களில் தமிழ்  இடம் பெற முக்கிய காரணமாக இருந்தார்கள், கம்பெனிகளில் வயது வித்தியாசமின்றி ஆண்களை பெயர் சொல்லி அழைத்தாலும் வீட்டிற்கு வந்தால் சொந்த ஊருக்கு வந்தால் அவர்கள் அந்த ஊருக்கு தகுந்தபடி தான் நடந்து கொள்கிறார்கள்  என்பதை இந்தப் பொது சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த மாதிரியான மனிதர்கள் முடிந்தவரை “ஆண்தேவதை”, “காதலும் கடந்து போகும்”, “தரமணி” இந்த மூன்று படங்களை திரும்பத்திரும்ப பொறுமையாக பார்க்கவும். 

காதலும் கடந்து போகும் படத்தில் வரும் “பறவை பறக்குது” என்கிற பாடலைத் திரும்பத் திரும்ப பாருங்கள். அதில் ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை அழகாக காட்டியிருப்பார்கள்.  ஒரு சில ஆர்வக் கோளாறு பெண்கள் வேண்டுமானால் கற்றது தமிழ் படத்தில் வருவது போல பொது சமூகம் நினைப்பதுபோல டீசர்ட்டில் கண்டபடி வாசகம் அடித்துக்கொண்டு சுற்றலாம். ஆனால் பெரும்பான்மையாக  ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் பலர் காதலும் கடந்து போகும் “யாழினி”கள் தான். 

Related Articles

பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லை ... ஜம்முவில் பாகிஸ்தான் படை வீரர்களின் குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர் மற்றும் பொதுமக்கள் ஐந்து பேர் உயிர் இழந்தனர். எல்லை பாதுகாப்பு கோட...
இவ்விடம் உங்கள் பணம் நல்ல முறையில் குட்ட... நீங்கள் அன்றாடம் வேலைக்குச் சென்று திரும்பும் எளிய வாழ்க்கையை வாழும் ஒரு சாமானியர். சிறுக சிறுக மயிலிறகுகளைச் சேமித்து வைத்திருப்பவர். ஒரு பெரிய புத்த...
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பிர... * பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன்; இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து - நடிகர் ஜி.வி...
உங்கள் வாழ்க்கையைச் சுற்றி எத்தனை விசாரண... விசாரணை, உறியடி இந்த இரண்டு படங்களுமே மிக சின்ன படங்கள். ஆனால் வீரியமான கதைக்களம் கொண்ட படங்கள். "அதிகாரத்தை எதிர்த்து கேள்வி எழுப்புதல்" என்பது தான் ...

Be the first to comment on "ஐடி துறை பெண்கள் கலாச்சார சீரழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்களா? –  பொது சமூகம் என்ன சொல்கிறது? "

Leave a comment

Your email address will not be published.


*