மனதுக்கு பிடித்தவர்களுடன் இரவில் உலா வருவது எவ்வளவு இனிமையான அனுபவம்? நீங்கள் இதை அனுபவித்து இருக்கிறீர்களா?

“இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்” என்ற ஒரு பிரபலமான பாடல் உள்ளது.  பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் பணக்கார நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து மது அருந்திவிட்டு இஷ்டத்துக்கு ஆடிப்பாடி மகிழ்ந்த விட்டு தாறுமாறாக காரை ஒட்டி சாலையோரம் பிரித்துக் கொடுக்கும் ஏழையை சாகடிப்பது பற்றி இங்கு நாம் கூறவில்லை. 

இங்கு நாம் குறிப்பிட போகும் இரவு என்பது வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் அய்யய்யோ நெஞ்சு அலையுதடி என்ற பாடலில் தனுஷ் டாப்ஸியும் இரவில் புல்லட்டில் உலா போவார்கள்.  அந்த மாதிரியான ஒரு இனிமையான இரவு உலாவல் பற்றி தான் இங்கு குறிப்பிட போகிறோம். 

முழுக்க முழுக்க அந்த பாடலை இரவிலேயே எடுத்து இருப்பார் இயக்குனர் வெற்றிமாறன். அந்த பாடலில் பாலம், ஆறு, நகர வீதி, பேருந்து பயணம், ஹோட்டல் போன்ற அனைத்து இடத்திற்கும் தனுஷ்சும் டாப்சியும் அந்த இரவு நேரத்தில் உலா வருவார்கள். அப்படி அவர்கள் உலாவலின் போது சில பொறுக்கிகளின் தொந்தரவும் இருக்கவே செய்யும். அதனை தனுஷ் சாதுரியமாக சமாளிப்பார்.  அந்த ஒரு நாள் இரவு பயணத்துக்குப் பிறகு தான் தனுஷ் மீது டாப்ஸிக்கு காதல் வரும் தனுஷ்சை முழுமையாக நம்ப ஆரம்பிப்பார். 

இதேபோல இயக்குநர் வசந்தபாலனின் அங்காடித்தெரு படத்திலும் இரவு மிகச் சிறப்பான ஒன்றாக காட்டப்பட்டிருக்கும்.  கதைகளை பேசும் விழி அருகே என்ற பாடலில் இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம் என்ற வரி கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும்.  அந்தப் பாடல் இசைக்கும் வரிகளுக்கும் தகுந்தபடி அருமையாக இயக்குனர் வசந்தபாலன் காட்சிகள் அமைத்திருப்பார். சாலையோரம் இருக்கும் நீரில் விளையாடுவது பேருந்தில் உரசி செல்வது இரவில் யாரும் இல்லாத பொழுது பேங்கின் வாசற்படிகளில் சிறு குழந்தைகள் போல தாவித் தாவி விளையாடுவது,  பூங்காக்களுக்குள் சுற்றி திரிவது போன்று அந்த காதலர்கள் அந்த ஒரு இரவை மிக அழகாக கொண்டாடி இருப்பார்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு எந்த அதிகார பலமோ, மிரட்டலான உடலமைப்போ, பணபலமோ எதுவுமே இருக்காது. இருந்தபோதிலும் எதையும் எதிர்பார்க்காமல் அவர்கள் அந்த இரவை மனமார ரசித்து கொண்டாடிருப்பார்கள். 

இதேபோல  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில்  என்னாச்சு ஏதாச்சு என்ற ஒரு பாடல் வரும். அந்த பாடலை முழுக்க முழுக்க இரவு நேரத்தில் எடுத்திருப்பார்கள். ஜீவியும் கயல் ஆனந்தியும் ஒரு சர்க்கஸ் கூடாரம் ஒன்றில் ஆடிப்பாடி மகிழ்வது போல் அந்த பாட்டு படமாக்கப்பட்டிருக்கும்.  படம் பலவித பட்ட விமர்சனங்களை பெற்றாலும் படத்தில் ஒரு நல்ல விஷயம் என்றால் அது இந்த பாடல் தான்.  கேட்பதற்கு அவ்வளவு இனிமையாகவும் பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாகவும் இருக்கும். 

ஆடுகளம், அங்காடித்தெரு, திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற மூன்று படங்களிலும் இடம்பெற்றிருக்கும் இந்த இரவு நேர காதல் உறவு பாடலுக்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. மூன்று பாடல்களுக்கும் அவர்தான் இசையமைப்பாளர். ஜீவி பிரகாசால் இரவை அவ்வளவு இனிமையானதாக மாற்ற எப்படி முடிந்தது? அந்த குணம் யாரிடமிருந்து வந்தது என்று கொஞ்சம் யோசித்து பார்த்தால் ஏ.ஆர்.ரகுமான் இடம் போய் நிற்கிறது. 

ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ஆரம்ப காலம் முதல் இரவில் தான் தன்னுடைய பாடல் உருவாக்கும் பணிகளை, இசையமைக்கும் முறையை பின்பற்றி வருகிறார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரகுமான் குறித்து லிங்கா படத்தில் குறிப்பிட்டிருக்கிறார். “நாம நைட்டுல வேலை செய்வோம் என்று ஏ.ஆர்.ரகுமான் மாதிரி” என கொஞ்சம் கிண்டலாக சொல்வார்.  ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடும் பாடகிகள் அத்தனை பேரும் தாங்கள் அளித்த பேட்டியில் ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு நாங்கள் இரவில்தான் பாடி கொடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.  ஏ ஆர் ரஹ்மானின் தீவிர ரசிகர்களுக்கு இந்த தகவல் ஒன்றும் அவ்வளவு புதுமையான தகவலாக இருக்காது. சரி இப்பொழுது ஜீவியின் அந்த இரவுகளை பற்றி பார்த்து விட்டோம். அதற்கடுத்தது மேலும் இந்த இரவு நேர உலாவளை வேறு எந்த படைப்பாளிகள் அழகாக காட்டி இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம். 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா படத்தை நாம் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க போவதில்லை. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதிலும் குறிப்பாக,  அடடா மழடா, சுத்துதே சுத்துதே பூமி என்ற இந்த இரண்டு பாடல்களும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். 

சுத்துதே சுத்துதே பூமி இந்த பாடல் முழுக்க முழுக்க இரவில் நடைபெறுவது போல் எடுத்திருப்பார் லிங்குசாமி. கொட்டும் மலை அருவியில், மலை குன்றுகளில், ஓடைக்கு அருகில் அந்த காதலர்கள் இரவை ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்வார்கள். அமைதியான முறையில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நீரும், தாமரைப் பூக்களும் அந்தத் தருணத்தை மிக அழகாக மாற்றி விடுகிறது. அவர்களை சுற்றி மின்மினிப்பூச்சிகள் வலம் வர இந்த மாதிரி ஒரு இரவை நாம் நம்முடைய மனதுக்கு பிடித்தவருடன் கொண்டாடித் தீர்க்க மாட்டோமா என்று ஏங்க வைத்து விடுகிறது. 

இதே யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இயக்குனர் ராமின் பேரன்பு படத்தில் ஒரு அருமையான பாடல் இடம்பெறும்.  செத்து போச்சு மனசு என்பதுதான் அந்தப் பாடல்.  அந்த பாடலின் பெரும்பாலான பகுதிகள் இரவு நேரத்தில் காட்சியாக்கி இருப்பார் இயக்குனர் ராம். அப்போது நடிகர் மம்முட்டி தன்னுடைய காரில் அந்த திருநங்கையை ஏற்றிக் கொண்டு செல்லும் போது அந்தத் திருநங்கை கார் கண்ணாடியை இறக்கி விடுவார். அப்போது அந்த இரவு காற்று காருக்குள் புகும். சரியாக அந்த நேரம் பார்த்து பாடகியின் “என் மீதினில் வீசும் காற்று” என்ற வரி ஒலிக்கும். இதே இயக்குனர் தன்னுடைய இரண்டாம் படமான தங்க மீன்கள் படத்தில், இரவு எவ்வளவு அழகானது என்பதை விளக்கும் விதத்தில் காட்சிகள் வைத்திருப்பார். தங்க மீன்கள் படத்தில் இயக்குனர் ராமின் மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக தீவிர மன உளைச்சலில் இருக்க, ஏங்க எங்கயாச்சும் என்னைய வெளியே கூட்டிகிட்டு போங்க என்று கூறுகிறார். இயக்குனர் ராம் தன்னுடைய மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவரை சைக்கிளின் முன்புறம் அமர வைத்து காடும் வாய்க்கால் பாலமும் ரயில் செல்லும்  பாதையிலும் தன் சைக்கிளை ஓட்டிச் சென்று  நிலா வெளிச்சத்தில் வரும் அந்த இரவு காற்றை தன் மனைவியின் மீது பட வைத்தது மனைவியின் மன உளைச்சலை தீர்த்து வைப்பார். 

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் உருவான மனதை உருக்கும் “கனவே கனவே” என்ற காதல் பாடலும் இரவு நேர உலாவலை அவ்வளவு அழகாக காட்டி இருக்கும். ஒரே ஒரு ஆறு. அந்த ஆற்றில் ஒரு சிறிய படகில் தன்னுடைய காதலியும் விக்ரமும் இருப்பார்கள். அந்த இரவில் ஆற்றிற்குள் குதித்து குளிப்பார் விக்ரம். நான்கரை நிமிடப் பாடலில் பாதிக்கும் பெரும்பாலான பகுதி இரவிலேயே படமாக்கப்பட்டிருக்கும். பார்ப்பதற்கும் அனிருத்தின் குரலில் அந்த வரிகளை கேட்பதற்கும் அவ்வளவு இனிமையாக இருக்கும். இது மாதிரி ஒரு இரவு நேர உலாவள் தன்னுடைய காதலியுடன் அமைய வேண்டும் என்று நிறைய இளைஞர்கள் கனவு கண்டதுண்டு. 

ஒரு நாள் கூத்து படத்தில் இடம்பெறும் “அடியே அழகே” பாடலின் முடிவில் நாயகி ஒரு போட்டோவை காட்டி இந்த மாதிரி இடத்துல மனசுக்கு பிடிச்சவங்க கூட இருந்தா எப்படி இருக்கும் என்று வசனம் சொல்லுவார்.  பௌர்ணமி நிலவு, கடற்கரை படகு… இதில் படகோட்டி ஒரு மூலையில் அமர்ந்து இருக்க காதலனும் காதலியும் படகில் நின்றபடி அந்த நிலவை ரசிப்பது போல் இருக்கும். அதே படத்தில் வேறு ஒரு காட்சியில் தன்னுடைய காதலி ஆசைப்பட்ட அந்த இடத்திற்கு நிஜத்தில் கூட்டிச் செல்வார் காதலன். மிக கவித்துவமான காட்சி அது. கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் தோல்வியடைந்த எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தைப் பார்ப்போம். இந்த படத்திற்கு உயிராக இருந்த மறுவார்த்தை பேசாதே என்ற பாடலில், தனுசும் மேகா ஆகாசும் கருப்பு உடை அணிந்தபடி கடற்கரை பாலத்தில் படுத்து வானத்தை ரசிப்பார்கள்.  உப்பளத்தில் நின்றுகொண்டு தன் காதலியை நினைத்து உருகி பாடுவார் தனுஷ். எந்த நெரிசலும் வாகன சிற்பங்களும் இல்லாத அந்த அமைதியான இரவில் ரயில்வே பாலங்களில் ரயில்வே படிக்கட்டுகளில் தன்னுடைய காதலியை ஒரு தேவதையை  போல ஏந்திக்கொண்டு அந்த இரவு நேரத்தில் உலா வருவார் தனுஷ்.   இப்படி இந்த பாடலின் பெரும்பாலான பகுதி இரவு நேரத்திலேயே படமாக்கப்பட்டிருக்கும். 

96 படம் முழுக்க முழுக்க இரவை கொண்டாடி தீர்த்த படம் என்று சொல்லலாம். தன்னுடைய ஆதிக் காதலியை ஒரே காதலியை சந்திக்கும் ராம்,  ஜானு உடைய விருப்பத்திற்கு ஏற்றபடி அந்த இரவில் அந்த விலையுயர்ந்த காரை நிறுத்திவிட்டு நடந்து சென்று நள்ளிரவில் முடி வெட்டிக் கொள்ளுதல், கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளுதல்,  யாருமில்லா அந்த பாலத்தில் மின் விளக்குகளின் வெளிச்சத்தில் இருவரும் ஜோடியாக நடந்து வருதல் போன்ற காட்சிகள் இரவு நேர உலாவல் எவ்வளவு அழகானது என்பதை காட்டி இருக்கும்.  அதிலும் குறிப்பாக அவர்கள் அந்த மின் விளக்குகளுக்கு நடுவே இரண்டு பறவைகள் போல் நடந்து வரும் காட்சியில் காதலே காதலே என்ற பாடல் ஒலிக்கும் போது அடடா இந்த இரவு தான் இவ்வளவு அழகானதா என்று சிலிர்க்க வைத்துவிடுகிறது. “நள்ளிரவும் எங்க நம்ம இசைஞானி மெட்டமைச்ச பாட்டா பொங்கி வழிஞ்ச…”  என்ற யுகபாரதியின் வரிகளுக்கு ஏற்ப இளையராஜா இல்லாவிட்டால் அந்த இரவு எப்படி அழகான இரவாக இருக்கும்.  இளையராஜாவும் கமல்ஹாசனும் இணைந்து விருமாண்டி படத்தில் இடம்பெற்றிருக்கும் “உன்ன விட” என்ற பாடல் முழுக்க முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்டிருக்கும்.  தன் காதலனும் காதலியும் அந்த சின்ன டிவிஎஸ் வண்டியில் காட்டுப்பாதைக்குள்  உலா வரும் காட்சிகள் இதற்குமுன் பார்த்த இரவு நேர காட்சிகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.  இரவில் நம்மை யாரும் கவனிக்கப் போவதில்லை என்பதால், பகலில் அணிந்திருக்கும் விதவிதமான முகமூடிகளை எல்லாம் களைந்துவிட்டு  உண்மையான  அகத்துடன் உண்மையான குணத்துடன் தன்னுடைய மனதுக்கு பிடித்தவர்களுடன் இரவில் உலா வருவது என்பது நம் வாழ்க்கையை மேலும் மேலும் அழகாக்கி கொண்டே போகிறது. 

Related Articles

பல படங்களுக்கு முன்னோடியாக இருக்கும் அமை... வாங்கறதும் கொடுக்கறதும் தான் கௌரவம்னா உலகத்துக்குலயே கௌரவமானவன் வட்டிக்கடைக்காரன் தான்... என்னப் பொறுத்தவரைக்கும் கட்டிக்கப் போற பொண்ணுக்கிட்ட மன...
மக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளப... (ஆகஸ்டு 29, 2018) இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டமும், விஷாலின் பிறந்தநாளும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. இது ஒருபுறமிருக்க யாரும் எதிர்பார...
மக்ஸிம் கார்க்கியின் பொன்மொழிகள்!... ஒவ்வொன்றுக்கும் அளவுண்டு, தானத்திற்கு மட்டுமே அளவில்லை. ஆசை பேராசையாக மாறும்போது அன்பு வெறியாக மாறும்போது அங்கே அமைதி நிற்காமலே விலகிச் சென்றுவ...
தத்தகிட தித்தோம் – உறியடி 2 விமர்ச... கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த மூன்று வேலையில்லாத இளைஞர்கள் ஒரு பக்சான் என்ற கெமிக்கல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள். அந்தக் கெமிக்கல் கம்பெனியில்...

Be the first to comment on "மனதுக்கு பிடித்தவர்களுடன் இரவில் உலா வருவது எவ்வளவு இனிமையான அனுபவம்? நீங்கள் இதை அனுபவித்து இருக்கிறீர்களா?"

Leave a comment

Your email address will not be published.


*