பெண்களின் மார்பகங்கள் தமிழ் சினிமாவில் வர்ணிக்கப்படும் விதம்! – ஒரு பார்வை!

How women's breasts are portrayed in Tamil cinema!

தனக்கென பெரிய அளவில் ரசிகர் படை வைத்திருக்கும், குறிப்பாக பெண் ரசிகர்கள் வைத்திருக்கும் விஜய் அவர்களின் படங்களில், பெண்களின் மார்பகங்களை எப்படி எல்லாம் காட்டி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். விஜய் நடித்த “வேட்டைக்காரன்” படத்தில் அவருடைய தோழி ஒருவர்  சிக்னலில் நின்று கொண்டிருக்கும் காரருகே சென்று ஆதரவு இல்லங்களுக்கு டொனேஷன் கேட்பார். அப்போது காரில் இருக்கும் ஒரு ரவுடி பணத்தைச் சுருட்டி அந்தப் பெண்ணின் ஜாக்கெட்டுக்குள் துணிப்பான். அந்த விஷயம் தெரிந்த விஜய் அந்த ரவுடியை தேடிப் பிடித்து அடித்து வெளுத்து வாங்குவார். அதே விஜய் தான் வில்லு படத்தில் நயன்தாராவின் மார்பகத்தில் பந்தை அடித்து விளையாண்டவர். அதே விஜய் தான் போக்கிரி படத்தில் அசினின் மார்பகத்தில் பேஸ்கட் பாலை கொண்டு போய் இடித்து விளையாண்டவர். இந்த இரண்டு படங்களுக்குமே பிரபுதேவா தான் இயக்குனர் என்பதால் விஜய்யை காட்டிலும் பிரபுதேவாவின் மீதுதான் இந்த குற்றச்சாட்டுகள் அதிகம் எழுகின்றன. அதாவது ஹீரோ இந்த மாதிரியான காரியங்களை செய்தால் அது கவனக்குறைவாக அல்லது தவறுதலாக செய்யப்பட்டதாக இருக்கும் அல்லது அது ஒரு ஜாலிக்காக விளையாட்டுக்காக உரிமையுடன் செய்த விஷயமாக இருக்கும் என்றும் பொருள் எடுத்துக் கொள்ளனுமாம். இதே விஜய், பிரபுதேவாவின் இயக்கத்தில் வெளிவந்த வில்லு மற்றும் போக்கிரி படங்களில் நாயகியின் புட்டத்தில் கை வைத்து விட்டு அதை ரொமான்ஸ் என்று  காட்டுவது போல் நடித்து இருப்பார். இது ஒரு பக்கம் இருக்க, ஏ. ஆர். முருகதாஸ் என்கிற சமூக பொறுப்புணர்வு மிக்க ஒரு இயக்குனரின் “கத்தி” படத்தில்  சமந்தாவின் புட்டத்தில் பந்தை தூக்கி எறிவது போல் ஒரு அபத்தமான காட்சி. 

முன்னணி நடிகர்களின் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் இருக்க,  தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் என்று கருதப்படும் விஜய் மில்டனின் படத்திலும், இப்படி ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது என்பதை நினைக்கும் போது தான் வருத்தமாக இருக்கிறது. விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்த “10 எண்றதுக்குள்ள என்கிற” படத்தில் விக்ரம் கவனக்குறைவாக சமந்தாவின் மார்பகத்தில் கை வைத்து விடுவது போல் ஒரு காட்சி. அந்தக் காட்சியில் விக்ரமின் கை சமந்தாவின் மார்பகத்தில் பட்டதும் ஆட்டோ ஹாரன் அடிப்பது போல “பாம்” என்கிற சத்தத்தை வைத்து இருந்தார் இயக்குனர் விஜய் மில்டன். 

இந்த காட்சிகளுக்கு முன்பே இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளிவந்த “7ஜி ரெயின்போ காலனி” என்கிற படத்தில் பெண்களின் மார்பு குறித்து ஒரு காட்சி நல்ல புரிதலுடன் வைக்கப்பட்டிருக்கும். பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் தன் காதலியின் கழுத்தில் செயினை மாட்டி விடலாம் என்று ஹீரோ நினைக்க, ஹீரோவின் கை தவறுதலாக  நாயகியின் மார்பகங்களை தொட்டு விடுகிறது. அப்போது நாயகி அவனை செருப்பை கழட்டி அடித்து “இதே தானடா உங்க அம்மாவுக்கும் இருக்கு அங்க போயி செய்ய வேண்டியதுதானே” என்பார். தமிழ் சினிமாவில் வந்த மிக முக்கியமான காட்சிகளில் இதுவும் ஒன்று. ஆனால் இந்தக் காட்சி கொடுத்த புரிதலை பெரும்பாலான இளைஞர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று வரை பல பேருந்துகளில் பல இளம் பெண்களின் மார்பகங்கள் மீது நிறைய ஆண்களின் கை தடவிக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு சில பெண்கள் அந்த மாதிரி ஆண்களை கன்னத்தில் அறைந்து நல்ல பாடம் புகட்டினாலும், பெரும்பாலான பெண்கள் பிரச்சினையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அந்த கசப்பான பயணத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இன்றும் பல பேருந்து நிலையங்களில் ரயில் நிலையங்களில் தேர் கடைகளில் பெண்கள் நடந்து சென்றால் அவர்களை  இடிப்பது போன்று நெருங்கிச் செல்வது, இன்னும் சிலர் எதையும் யோசிக்காமல் வேண்டுமென்றே பெண்களின் மார்பில் இடித்து விட்டு கண்டும் காணாததுபோல் செல்வது போன்ற  அவலங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. 

பள்ளிக்காலங்களில், கல்லூரி காலங்களில் சக மாணவர்கள் கூட படிக்கும் பெண்களின், பாடம் நடத்தும் ஆசிரியைகளின் மார்புகளின் அளவை வைத்து, “அவளுக்கு மாரே இல்ல… இன்னும் எவனும் பிசையல போல… சப்பை பிகரு…”, “த்தா இவளுக்கு என்னடா இத்தாதண்டி இருக்கு… சரியான பால்பண்ணையா இருப்பாபோல… எவனோ தினமும் பீச்சித் தள்ளுறான்… செம கட்டை…” என்று விமர்சித்ததை எல்லாம் கேட்டுருப்போம். பள்ளிக் காலங்களில், கல்லூரி காலங்களில் பல ஆண்களுக்குள் ரகசியமாக பேசப்பட்டுக் கொண்ட இந்த வார்த்தைகள், இந்த வர்ணிப்புகள் எல்லாம் இப்போது ஆண், பெண், சிறுவர், சிறுமிகள் எல்லோரும் கலந்து இருக்கும் பொது சமூக ஊடகமான சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக “நடிகை தமன்னாவின் மார்பகம்” குறித்து “என்ன ஒன்னுமே இல்ல” என்ற கமெண்டுகள் சமூக வலைதளங்களில் நிறைய வருவதை பார்க்க முடிகிறது.  இன்று நேற்றல்ல பல வருடங்களாக தமன்னாவின் மீது இருக்கும் கேலிக் குற்றச்சாட்டு இவை. அதே சமயம் ரசிகர்களை அந்த அளவுக்குப் பேச வைத்ததில் நடிகைகளுக்கும் மிக முக்கியமான பங்கு உண்டு. “குசேலன்” படத்தில் நடிகை நயன்தாரா தன்னுடைய ரூமில் வந்து மேக்கப் செய்து கொண்ட பிறகு தன்னுடைய மார்பக மேலாடையை விலக்கிக்கொண்டு மார்பின் பெரும்பகுதி வெளியே தெரியும்படி சரி செய்து கொண்டு செல்வார். அந்த காட்சியின் அர்த்தம், நடிகைகள் கண்டிப்பாக தங்களுடைய மார்பகத்தின் பெருவாரியான பகுதியை வெளியே காட்டினால் தான் அவர்களுக்குத்  தொடர்ந்து மார்க்கெட் சரியாமல் இருக்கும் என்று விளக்கப் பட்டிருக்கும். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகை ரீமா சென்,  ஒரு பாடலில் ட்ரான்ஸ்பரண்ட் ஆடையை அணிந்துகொண்டு டான்ஸ் ஆடும் போது அவருடைய மார்பும் முலையும் கிட்டத்தட்ட வெளிப்படையாகவே தெரியும். இந்தக் காட்சியை பற்றி நிறைய பேர் விவாதித்து இருந்தார்கள். ஆனால் அதே ஆயிரத்தில் ஒருவன் படத்தில்  பார்த்திபனின் முன்பு ஒரு பெண் தன் மார்பை அழுத்தி பஞ்சம் காரணமாக, என் மார்பில் பால் இல்லை… ரத்தம் தான் இருக்கிறது… என்பதை உணர்த்தும் காட்சியைப் பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. 

நற்றிணையில் திருமாவுண்ணி பற்றிய பாடல் ஒன்று இருக்கிறது. திருமாவுண்ணியை அவள் காதலன் கைவிட்டுவிடுகிறான். அந்தப் பிரிவு அவளை எவ்வளவு பாதிக்கிறது என்பதை அவனுக்குக் காட்ட அவள் ஒரு மரத்தடியே நின்றுகொண்டு தன் முலை ஒன்றை அறுத்துக்கொள்கிறாள். நாச்சியார் திருமொழியில் கண்ணன் மேல் கொண்ட காதல் தீயின் தகிப்பைக் கடக்க, அவன் தன் முன் வந்ததும் தன் முலைகளை வேரோடு பறித்து அவன் மார்பில் எறிவேன் என்கிறாள். சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் தன் முலை ஒன்றைப் பிய்த்தெடுத்து மதுரையை எரிப்பேன் என்று சூளுரைக்கிறாள். உடலெனும் வெளி என்கிற புத்தகத்தில் எழுத்தாளர் அம்பை குறிப்பிட்டிருக்கும் வரிகள் இவை. தமிழ் இலக்கியங்களில் பெண்களின் மார்பகங்கள்  எப்படி வர்ணிக்க பட்டது, பெண் உடல் மீது நடக்கும் ஆதிக்கம் எப்படிப்பட்டது என்பதை மேற்கண்ட இந்த வரிகளின் மூலமாக விளக்கி இருந்தார். 

முலைகள் சதுப்பு நிலக் குமிழிகள் பருவத்தின் வரப்புகளில் மெல்ல அவை பொங்கி மலர்வதை அதிசயித்துக் காத்தேன் எவரோடும் ஏதும் பேசாமல் என்னோடே எப்போதும் பாடுகின்றன விம்மலை காதலை போதையை…. மாறிடும் பருவங்களின் நாற்றங்கால்களில் கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை தவத்தில் திமிறிய பாவனையையும் காமச்சுண்டுதலில் இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும் சிசு கண்ட அதிர்வில் குருதியின் பாலையும் சாறெடுக்கின்றன ஒரு நிறைவேறாத காதலில் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகளாய்த் தேங்கித் தளும்புகின்றன. – கவிஞர் குட்டி ரேவதி அவர்களின் “முலைகள்” கவிதை தொகுப்பில் இருக்கும் வரிகள் இவை.  ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில் படைப்புகளில் கூட பெண்களின் உருவமும் முக்கியமான ஒரு உறுப்பும் எப்படி எல்லாம் வர்ணிக்கப் படுகிறது என்பதை சுட்டிக் காட்டும், பல ஆண்களின் படைப்புலக பார்வையில் இருந்து முற்றிலும் விலகி நிற்கும் வரிகள் இவை. 

பெண்களின் உருவத்தை நிறத்தை அவர்களின் உறுப்புகளை வைத்து கேலி செய்யும் விதத்தை முற்றிலும் மாறுபட்டு காட்டிய படம் என்றால் அது இயக்குனர் அருண் ராஜா காமராஜாவின் “கனா” படம் என்று சொல்லலாம். அந்த படத்தில்  ஐஸ்வர்யா பவுலிங் போடும்போது, பேட்டிங் பிடிக்கும் ஆண்… எனக்கு எந்த பால் மீது கவனம் செலுத்துவது என்றே தெரியவில்லை என்று சொல்வான். அப்போது சுற்றியிருக்கும் ஆண்களே அந்த  டபுள் மீனிங்கில் பேசும் அந்த ஆணை சரமாரியாக அடித்து நொறுக்குவார்கள். “இன்னும் எத்தனை நாளைக்கு டா இந்த மாதிரி சில்லரை தனமாவே பேசிட்டு இருக்க போறீங்க” என்பதுதான் அந்த சண்டைக் காட்சியின் பொருள். 

“இரவே முதலிரவே” சிறுகதையில், 

நிறைய ஆண் எழுத்தாளர்களின் கதைகளில் பெண்களின் அழகை பற்றி வர்ணிக்கையில் கண்டிப்பாக மார்புகளின் அளவை பற்றி கனத்த மார்ப்பு பெருத்த மார்பு திரண்ட மார்பு என்றெல்லாம் எழுதியிருப்பார்கள். ஒருவர் கூட “சிறிய மார்புகள் கொண்ட இளம்பெண்” என்று எழுதி பார்த்ததில்லை. ஓவியங்களில் கூட ஒரு பெண் என்றால் பெருத்த மார்புகளை உடைய பெண்ணாக தான் வரைந்து வைத்திருப்பார்கள். அது ஏன் ஒரு பெண்ணை பற்றி குறிப்பிட்டால் கண்டிப்பாக அவளுடைய மார்பை பற்றியும் குறிப்பிட்டே தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு உண்டு. அந்த வகையில் ஆண் எழுத்தாளர்களின் வர்ணிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட  சிறிய மார்புகள் கொண்ட பெண்ணின் இந்தக் கதையில், பெண்ணுக்கு மார்பகம் அவளை மேலும் கூடுதலாக காட்டுகிறது என்கிற பொது சமூக பார்வைக்கு பயந்து அந்த கதையின் நாயகியான இளம்பெண் சிறிய அளவில் இருக்கும் தன் மார்பகத்தை பெரிதாக காட்டிக் கொள்ள நிறைய முயற்சிகள் செய்வார். (பாய்ஸ் படத்தில் பெண்கள் தங்களின் மார்பை பெரிதாக காட்டிக்கொள்ள அதற்கென தனியாக ஒரு உடற்பயிற்சியை செய்கிறார்கள் என்பதை நகுலிடம் ஒரு பெண் விளக்குவது போல் காட்சி இருக்கும்.) அந்த வரிகளை எல்லாம் படிக்கும் பொழுது மார்பகம் தன் குழந்தைக்கு பாலூட்ட கூடிய ஒரு முக்கியமான உறுப்பு என்பதைத் தவிர, அதை  அழகு என்று வர்ணிப்பதில் என்ன இருக்கிறது?  என்ற கேள்விகள் எழுகிறது. மாரின் அளவுக்கும் அழகுக்கும் என்ன இருக்கிறது? ஆண்கள் தான் பெண்களின் மாரின் அளவை வைத்து அழகை தீர்மானிக்கிறார்களா? இல்லை பெண்களுமே மாரின் அளவு குறித்து ஏதேனும் கவலை கொள்கிறார்களா என்ற கேள்வி இந்த சமூகத்தில் தொடர்ந்து எழுந்து வருகின்றன.  

Related Articles

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குற... பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். பசிக்கும் போது பயமில்...
பக்கத்துல இருக்கறவங்க மேலயும் அக்கறை காட... நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று தற்போது திரைக்கு வந்துள்ள படம் டூலெட். இயக்குன...
வங்கி மோசடி புகாரில் சிக்குகிறார் பஞ்சாப... விஜய் மல்லையா ஆரம்பித்து வைத்த வங்கி மோசடி நாடெங்கும் பரவி இன்று நிரவ் மோடி வரை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தினமும் வங்கி மோசடி குறித்த செய்திகள் நா...
தமிழகத்தின் தற்போதைய சூழலுக்கு தகுந்த பட...  தயாரிப்பு: பென் ஸ்டுடியோஸ் & ஸ்டோன் பெஞ்ச்இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்இசை: சந்தோஷ் நாராயணன்ஒளிப்பதிவு: திருஎடிட்டிங்: ...

Be the first to comment on "பெண்களின் மார்பகங்கள் தமிழ் சினிமாவில் வர்ணிக்கப்படும் விதம்! – ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*