ட்விட்டர் பிரபலம் ஆவது எப்படி? இதோ சில டிப்ஸ்! – ட்விட்டர் பிரபலத்தின் வாழ்க்கை எப்படிப்பட்டது?

நாம் எல்லோருக்கும் பிரபலமாக வேண்டும் என்கிற ஒரு ஆசை இருக்கிறது. அப்படி ஒரு ஆசை இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.  ஆனால் அந்த பிரபலம் என்கிற நிலையை நாம் நேர்மையாக அடைய முயலுவதில்லை. நேர்மையாக அடைய வேண்டும் என்றால் ரொம்ப காலமாக, அதற்காக ரொம்ப உழைக்க வேண்டி வரும் என்கிற ஒரு சோம்பேறித்தனம் வந்து விடுகிறது. அதனால் நாம் குறுக்குவழியில் சென்று பிரபலம் ஆகி விடலாம் என்று சில இளைஞர்கள்  இளைஞிகள் (நாம்) நினைக்கின்றனர். அவர்கள் தேர்ந்தெடுக்கும் களம் சமூக வலைதளங்களில் எந்த செயலியில்  பிரபலங்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று தொலாவி பார்த்துவிட்டு கடைசியில் அவர்கள் (நாம்) ட்விட்டரில் வந்து நிற்கிறார்கள்.  ட்விட்டர் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணதும், டுவிட்டர் தானாக வந்து பிரபலங்களின் பட்டியலை காமிக்கவும் அந்த பிரபலங்களை நாம் பின்பற்றுகிறோம். அடுத்ததாக அதில் எந்த பிரபலங்கள் அதிக  பாலோயர்களை வைத்திருக்கிறார்களோ அந்த பிரபலங்களின் ரசிகன் நான் என்ற குறிப்பை பயோவில் குறிப்பிட வேண்டும். 

இதெல்லாம் செய்த பிறகு நாம் எந்த நடிகரின் ரசிகர் என்று குறிப்பிட்டி இருக்கிறோமோ அந்த நடிகர் பற்றிய தகவல்களை அல்லது அவர்கள் நடித்ததில் ரொம்ப நல்ல காட்சிகளை பற்றி குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிடும் போது அதன் நடிகர்களின் ஐடியை டேக் செய்து குறிப்பிட வேண்டும். இப்படி செய்யும்போது ஒரு சில நடிகர்கள் லைக்கோ அல்லது ரீட்டிவிட்டோ செய்வார்கள். அப்படி ஒரு நடிகரின் லைக்கோ ரீட்வீட்டோ கிடைத்த பிறகு அந்த நடிகரின் மற்ற ரசிகர்கள் எல்லாம் உங்களுக்கு லைட் போட போட கொஞ்சம் கொஞ்சமாக பாலோயர்கள் அதிகமாவார்கள். அப்படி உழைப்பை கொட்டிய போதும் உங்களுக்கு லைக்ஸ் கிடைக்கவில்லை பாலோயர்கள் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அடுத்த கட்ட முயற்சிகளில் இறங்க வேண்டும். ஏதாவது ஒரு பென்சில் ஸ்கெட்ச் ஆப்பை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த நடிகர்கள் அல்லது டுவிட்டரில் அடிக்கடி ஆக்டிவாக இருக்கும் நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை எடுத்து அதை பென்சில் ஸ்கெட்ச் ஆப்பில் பொருத்தி பென்சில் ஓவியம் போல மாற்றிவிட்டு “இதை நானே என் கைப்பட வரைந்தேன்… விடிய விடிய… உங்களுக்காக…” என்று சொல்லிவிட்டு அந்த பிரபலங்களின் ஐடியை டேக் செய்ய வேண்டும். 

ஒரு சில பிரபலங்கள் அது தெரியாமல் வாவ் என்று சொல்லிவிட்டு லைக்கும் செய்து விடுவார்கள். ஆனால் எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆக, அப்படியும் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள், பாலோயர்கள் கிடைக்கவில்லை என்றால் கவலைப்படாதீர்கள்.  உங்களுக்கு அடுத்த கட்ட வழி ஒன்று இருக்கிறது. ஆம், உங்கள் ட்விட்டர் ஐடி பெயரையே முற்றிலுமாக மாற்றி விட வேண்டும். யட்சி, ராட்சசி, காட்டுச்சிறுக்கி,  பிரியமானவள், இதயமானவள் போன்று பெயரை மாற்றிக்கொண்டு ஏதாவது ஒரு சினிமா நடிகையின் புகைப்படத்தை புரொபைலில் வைக்க வேண்டும். இப்படி நீங்கள் (நாம்) பெண்களோட பெயரையும் பெண்களின் புகைப்படத்தையும் வைத்தால் மட்டும் போதாது. அதைவிட ஒரு அதி புத்திசாலித்தனம் வேண்டும்.  ஆம் டுவிட்டரில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் இளையராஜா ஏ.ஆர். ரகுமான் சண்டை, விஜய் அஜித் சண்டை, கமல் ரஜினி சண்டை, பாஜக திமுக சண்டை  போன்ற நாட்டுக்குத் தேவையான இந்த மாதிரியான மிக முக்கியமான சண்டைகளில் கண்டிப்பாக நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி எல்லா சண்டைகளிலும் போய் முன்னே நின்று நாம் நம்முடைய புரட்சிகர கருத்து தெரிவிக்கும்போது “அடடே ஒரு பெண் தேடி வந்து இவ்வளவு கருத்தாக பேசுகிறதே” என்று உங்களுக்கு பாலோயர்கள் அதிகம் ஆவார்கள். இப்படி பாலோயர்கள் அதிகமாகும் போது உங்களுக்கு கடின உழைப்பு என்றால் என்ன என்பது பற்றியும்,  விடாமுயற்சி என்றால் என்ன என்பது பற்றியும் நன்கு தெரிய ஆரம்பித்திருக்கும். இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் ஜெயித்த குதிரையைப் போல் உணர்வீர்கள். ஜெயித்த குதிரை அப்படியே நின்று விடலாமா தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்தானே? இந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்? 

சட்டென கவிஞர்களாக மாறிவிட வேண்டும். அதிக பாலோயர்கள் இல்லாமல்,  டுவிட்டரின் எதோ ஒரு மூலையில் கவிஞன் ஆக வேண்டும் பிரபல வார இதழ்களில் என்னுடைய வரிகள் என் பெயருடன் பிரசுரமாக வேண்டும் என்ற ஆர்வத்துடன்  கிறுக்குத் தனமாக ஏதாவது தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பான். ஒரு நாளைக்கு அவன் போடும் 20 டுவிட்களில் கண்டிப்பாக ஐந்து டுவிட்கள் வரை நன்றாக இருக்கும்.  ஆனால் அந்த 20 ட்விட்டுகளும் யாராலும் லைக் செய்யப்படாமல் அனாதையாக கிடக்கும். இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அந்த இருபது டுவிட்களில் மிக நன்றாக இருக்கும் ஐந்து டிவிட்களை எடுத்து பெண் பெயரை வைத்திருக்கும் நம்முடைய ஐடியில் போட்டு “நான் யோசித்தது” என்று  இன்று டிவிட் செய்தால் லைக்ஸ் பிய்த்துக் கொண்டு போகும். 

அதேபோல பிரபல பாடலாசிரியர்களின் கவிதைகளை பாடல் வரிகளை யாராவது தொடர்ந்து ட்விட்டரில் பதிவு செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களிடம் இருந்து காப்பி பேஸ்ட் செய்து நம் ஐடியில் போட்டு லைக்ஸ்களை அள்ளி பாலோயர்களை கூட்டலாம். இந்த வளர்ச்சியும் உங்களுக்கு போதவில்லை என்றால் நீங்கள் அடுத்த கட்டமாக ட்விட்டரில் பெரும்பாலும் கலாய்க்கப்படும் விஜய் டிவி புரோமோ வீடியோக்களுக்கு போக வேண்டும்.   அங்கு சென்று பாண்டியன் ஸ்டோர்ஸ், செந்தூரப்பூவே,  பாரதி கண்ணம்மா போன்ற சீரியல் புரோமோக்களின் கீழ் நீங்கள் (நாம்) எதாவது நக்கலாக கமெண்ட் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது உங்களுக்கு அதிக லைக்ஸ்களும் பாலோயர்களும் அதிகமாவார்கள். இந்த வளர்ச்சியும் உங்களுக்கு போதவில்லை என்றால் நீங்கள் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி வரும் தருணத்தில் பயங்கர ஆக்டிவாக செயல்பட வேண்டும். பிக் பாஸ் ப்ரோமோக்கள் விஜய் டிவி ஐடியில் தினமும் எத்தனை மணிக்கு, எத்தனை முறை போடுகிறார்கள் என்ற குறிப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.  அந்த நேரங்களில் நாம்  ஓட்டப்பந்தயத்தில் ஓட தயாராக இருக்கும் சாகச வீரன் போல் நக்கலாக கமெண்ட் செய்ய காத்திருக்க வேண்டும். அப்படி அந்த வீடியோக்கள் வந்த அடுத்த செகண்ட் நம்முடைய கமெண்ட் பதிவிட்டால் லைக்ஸ்கள் பிய்த்துக்கொள்ளும். 

இப்போது நீங்கள் மேதாவி என்கிற ஒரு நிலையை அடைந்திருப்பீர்கள். இந்த நிலைக்கு வந்தபிறகு,  டுவிட்டரில் இருக்கும் பத்திரிகைகளின் ஐடிகள் பக்கம் போக வேண்டும். அங்கு போனதும் நீங்கள் ஒரு சமூக ஆர்வலர் போல் இந்த சமூகத்தை நீங்கள்தான் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பது போல் ஒவ்வொரு செய்தியின் கீழும் கமெண்ட் செய்ய வேண்டும். இந்த சமூகமே உங்களை நம்பித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் (நாம்) பேசாவிட்டால் இந்த சமூகம் அப்படியே திகைத்து நின்று விடும் என்கிற புரிதலுக்கு நீங்கள் வருவீர்கள். இப்போது நீங்கள் உங்களுடைய அந்த பெண் ஐடி பெயரை நீக்கிவிட்டு பொறுக்கி பையன்,  அஞ்சாதவன், மரணம் வென்றவன் என்று உங்கள் பெயரை அதிரடியாக மாற்ற வேண்டும். இப்படி மாற்றிக் கொண்ட பிறகு நீங்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், இளைஞரணி தலைவர் போன்றவர்களின் ஐடிகளுக்கு கீழே சென்று தாறுமாறாக கமெண்ட் செய்யவேண்டும். அப்போது உங்களுக்கு லைக்ஸ் பாலோயர்கள் அதிகமாவார்கள். அதற்குப் பிறகு டுவிட்டரில் எந்நேரமும் மூழ்கி கிடக்கும்  நடிகைகளின் கிளாமர் ஃபோட்டோ ஷூட்களுக்கு கீழே சென்று அதிரடியாக கமெண்ட் செய்ய வேண்டும். அதேபோல பெண் பத்திரிகையாளர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் சென்று வம்பு இழுக்க வேண்டும். இப்போது நீங்கள் தான் இந்த உலகத்தையே மாற்ற பிறந்தவர்கள், உலகையே வெல்ல பிறந்தவர்கள் என்பது போல உணர்வீர்கள். அன்றைய இரவு நீங்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும்போது விடியற்காலையில் உங்கள் வீட்டில் போலீஸ் நிற்பார். எதுவும் சொல்லாமல் தரதரவென போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து கொண்டு செல்வார்கள்.  காதில் ங்கொய் என்ற சத்தம் கேட்கும் வரை பளார் பளார் என அறை கொடுத்து பாராட்டுவார்கள். ஏன் அடித்தோம் ஏன் வீட்டிலிருந்து தரதரவென இழுத்துக் கொண்டு வந்தோம் என்பதை எல்லாம் போலீஸ்காரர்கள் பொறுமையாக விளக்குவார்கள். கருத்து சுதந்திரம் இருக்கிறது தானே… ஃபேக் ஐடி தானே… அப்படி இருக்கையில் நம்மை எல்லாம் எப்படி இவர்கள் கண்டுபிடிப்பார்கள்?  என்ற சிந்தனையுடன் நாம் போட்ட  அரசியல்வாதிகளுக்கு எதிரான கமெண்ட்டுகள் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான கமெண்ட்கள் நடிகைகளுக்கு எதிரான கமெண்டுகள் எல்லாம் கண்முன் வந்து செல்லும். இதில் எந்த கமெண்ட்க்காக யார் புகார் கொடுத்தார்கள்?  என்பதை சொல்லாமலேயே பொடனியில் அடி கொடுத்து போடா என போலீஸ்காரர்கள் துரத்தி விடுவார்கள்.

வீட்டிற்கு வந்து சோர்வாக அமர்ந்து போனை எடுத்து நோண்டினால்  நம் கை அனிச்சையாக ட்விட்டர் பக்கம் போகும். அப்போது நம்முடைய பாலோயர்களின் எண்ணிக்கையைப் பார்ப்போம். இத்தனை பேர்கள் இருக்கிறார்கள். நாம் இத்தனை முறை ஐடி பெயரை மாற்றி இருக்கிறோம், எவ்வளவு கமெண்ட்டுகள் நேரத்திற்கு ஏற்ப மாற்றி மாற்றி போட்டிருக்கிறோம் இவர்களில் ஒருவர் கூடவா  இது பேக் ஐடி என்று யோசிக்காமல் இருந்திருப்பார்கள் என்று சிந்திக்கத் தொடங்குவோம்.  பாலோயர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் 50,000 பாலோயர்களில் கிட்டத்தட்ட 500 பாலோயர்கள் மட்டுமே ஒரிஜினல் ஐடியாக இருக்கும். மீதி எல்லாம் நடிகர்களின் நடிகைகளின் அரசியல் தலைவர்களின் உலகப் புரட்சி தலைவர்களின் போட்டோக்களை வைத்திருக்கும் ஃபேக் ஐடிகளாக த்தான் இருக்கும். 

நீங்கள் இப்படி ட்விட்டரில் வந்து பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் நேரம் செலவழித்து மூளையை கசக்கி பிழிந்து தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்து வாழ்க்கையை தொலைக்க,  உங்களுடன் படித்தவன் உங்களை விட மூன்று மடங்கு சம்பாதிக்கக்கூடிய திறமைசாலியாக மாறி இருப்பான்.  

நீங்கள் வசித்துக்கொண்டிருக்கும் ஏரியாவில் உங்களுக்கே தெரியாமல் அவன் பிரபலமாக மாறி இருப்பான். சமூக சேவைகளில் ஈடுபடுவது,  இயற்கைச் சீற்றத்தின் போது வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமமாக பிரித்துக் கொடுப்பது, அனாதை இல்லங்கள் முதியோர் இல்லங்கள் போன்றவற்றிற்கு மாதமாதம் சரியான முறையில் துணிகளை, நிதியை சேகரித்துக் கொண்டு  சென்று கொடுப்பது போன்ற பணியில் நேர்மையாக செயல்பட்டுக் கொண்டிருப்பான்.  அவனை பிரபல வார இதழ்கள் பத்திரிகைகள் போன்றவை பேட்டி எடுத்து பாராட்டி எழுதும். இப்போது நீங்கள் உங்களுடன் படித்த அந்த இளைஞனை வியப்பாகப் பார்த்து விட்டு, அந்த ட்விட்டர் அக்கவுன்ட்டை டெலிட் செய்து விட்டு மீண்டும் ஒரு புதிய ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்து அதில் உங்களுடைய புகைப்படத்தை வைத்து பல நல்ல கருத்து பதிவர்கள், செய்தி இணையத் தளங்கள் போன்றவற்றை மட்டும் பாலோவ் செய்துவிட்டு உங்களுடைய பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருப்பீர்கள். இதுதான் ஒரு டுவிட்டர் பிரபலத்தின் வாழ்க்கை. 

Related Articles

தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடா? அவர... ஆன்மீகத்தில் உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கிறதா? இவர் எழுதிய புத்தகத்தை படியுங்கள்! ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண...
எதிர்பார்ப்பை கிளப்பிய வசந்த் ரவியின் ரா... இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் வசந்த் ரவி. அவருடைய இரண்டாவது படத்தில் (ராக்கி) இயக்குனர் இமயம் பாரதிராஜாவோடு இணைந்த...
“ஜிப்ஸி” புத்தகத்தை எத்தனை ப... கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிப்ஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தார் இயக்குனர் ராஜூமுருகன். குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கியவர் இயக்...
நீங்கள் எத்தனை வயது வரை உயிரோடு இருப்பீர... சாகற நாள் தெரிஞ்சிடுச்சுனா வாழ்ற நாள் நரகமாயிடும். சிவாஜி படத்தில் ரஜினி பேசிய வசனம் இது. வசனமாக இதை ரசித்தாலும், நம்முடைய ஆயுட்காலம் பற்றி தெரிந்துகொ...

Be the first to comment on "ட்விட்டர் பிரபலம் ஆவது எப்படி? இதோ சில டிப்ஸ்! – ட்விட்டர் பிரபலத்தின் வாழ்க்கை எப்படிப்பட்டது?"

Leave a comment

Your email address will not be published.


*