“பிரபாகரனின் போஸ்ட்மார்டம்” புத்தகம் ஒரு பார்வை!

ஒருவரின் தற்கொலைக்குப் பின் என்னவெல்லாம் நடக்கும்?

எழுதியவர் – மயிலன் ஜி சின்னப்பன் 

பதிப்பகம் – உயிர்மை

மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக “நான் பிழைக்கனும்” என்ற உணர்வு மேலோங்கி போட்டியடித்துக் கொண்டு அலைந்து திரியும் இந்த உலகில் முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத மனிதர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதுபோன்ற தற்கொலை செய்திகள் நம் தன்னம்பிக்கையையும் அடியோடு ஆட்டிப் படைத்துவிடுகின்றன. இதுபோல தற்கொலை செய்தியால் நீங்கள் வாடுபவர் என்றால், தற்கொலை எண்ணம் உங்களுக்கு அதிகம் வருகிறது என்றால் நீங்கள் கண்டிப்பாக இந்தப் புத்தகம் படிக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. அதே சமயம் இந்தப் புத்தகத்தை அரசாங்கம் உடனே தடை செய்ய வேண்டும் என்றும், இளகிய மனம் கொண்டவர்கள் இந்தப் புத்தகத்தை படிக்காதீர்கள் என்றும், இந்தப் புத்தகம் தற்கொலைக்கு எதிரான புத்தகம் என்று சொல்வதைக் காட்டிலும் காரணம் சொல்லப்படாத தற்கொலைகளின் கதைகளை விளக்கிய புத்தகம் என்றும் சொல்லத் தோன்றுகிறது.

காரணம் இந்தப் புத்தகம் மனதிற்கு அவ்வளவு நெருக்கமாகவும் இருக்கிறது, அதே சமயம் தீராத மன உளைச்சலையும் தருகிறது. இந்தப் பிரபாகர் தற்கொலையை வைத்து எத்தனை கட்டுக்கதைகள், எத்தனை பொறாமைகள், எத்தனை சந்தோசங்கள் என்று ஒரு அப்பாவி இளைஞனின் தற்கொலையை வைத்து இந்த முகமூடி அணிந்த மனிதர்கள் எல்லாம் எத்தனை ஆட்டம் ஆடுகிறார்கள் என்பதை மிக நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புத்தகம் தான் “பிரபாகரனின் போஸ்ட்மார்டம்”. புத்தகத்தில் மொத்தம் இரண்டு பாகங்கள் இருக்கின்றன. முதல் பாகத்தில் வரும் நிறைய கேரக்டர்கள் குறிப்பாக பிரபாகரனையும் மனம் திருந்திய அன்வரையும் மகாமட்டமாக இறக்கி வைக்கும் எழுத்தாளரின் வரிகள் எரிச்சலூட்டின. அதே சமயம் ஒவ்வொருவர் பார்வையில் எதெல்லாம் கீழ்மை என்பதை விளக்கிய எழுத்தாளரின் வரிகள் பாராட்டும்படியும் இருந்தன. இரண்டாம் பாகத்தில் வரும் கதாபாத்திரங்களின் விவரிப்பும் இறுதியில் “நான்” என்ற தலைப்பின் கீழ் வரும் வரிகளும் அவ்வளவு உணர்வுபூர்வமாக இருக்கின்றன.

புத்தகத்தை விரித்து எழுத்தாளர் சரவணன் சந்திரன் அவர்களின் முன்னுரை படிக்கத் தொடங்கிய தருணத்தில் இருந்தே இந்தப் புத்தகம், “இந்தப் பாழாப்போன மனித வாழ்க்கையைப் பற்றி சாட்டையால் விமர்சிக்கிறது” என்பதை உணர முடிந்தது. புத்தகத்தைப் படிக்கும்போது அய்யய்யோ நாம இந்தப் பிரபாகர் பயல போல இருக்குறோமா, இல்லை பாஸ்கராக இருக்கிறோமா, இல்லை அன்வராக இருக்கிறோமா என்ற கேள்விகள் எழத் தொடங்குகின்றன. புத்தகத்தின் கடைசிப் பக்கங்கள் நீங்கள் பிரபாகராக இருப்பதற்கோ பாஸ்கராக இருப்பதற்கோ இல்லை அன்வராக இருப்பதற்கோ நீங்கள் அய்யய்யோ என்ற வார்த்தையைப் பயன்படுத்த தேவையில்லை என்பதை உணர்த்துகிறது.

கிட்டத்தட்ட தாத்தாவாக மாறிப்போன அப்பாவுக்கு மகனாகப் பிறந்து, மார்பகப் புற்றுநோய் வந்ததால் அம்மாவை இழந்து, ரூம் மேட் பூங்குன்றனின் தற்கொலையை கடந்து, தவறே செய்யாமல் செருப்படி வாங்கி, ஈகோ பைத்தியத்தால் தனிமைப்படுத்தப்பட்டு… இப்படி எத்தனை அடிகளைத் தான் அந்த பிரபாகரின் பிஞ்சு நெஞ்சு தாங்கும்… போய் வா பிரபா… இந்தப் பிரபாவின் கேரக்டர் சமீபத்தில் காரணம் சொல்லாமல் தற்கொலை செய்துகொண்ட நம் எல்லோருடைய மனதையும் கலங்கடித்த எம்.எஸ்.தோனி பட புகழ் நடிகர் சுசாந்த் சிங்கை நினைவுபடுத்தியது. அதே சமயம் காரணம் சொல்லி தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றிய வரிகளும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பற்றிய வரிகளும் செம. எத்தனை ஆண்டுகால ஆராய்ச்சி என்று தெரியவில்லை… ஒவ்வொரு வரியும் அவ்வளவு நுணுக்கமாக உள்ளன. இந்த எழுத்தாளர் நிஜ வாழ்க்கையில் மூளை மற்றும் தண்டுவட சிறப்பு நிபுணர் என்பதால் மனித மூளைகள் எந்தெந்த கட்டத்தில் எப்படியெல்லாம் யோசிக்கிறது என்பதை இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்ய முடிகிறது போல.   

புத்தகத்தை கையில் எடுத்துவிட்டால் முழுவதும் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டீர்கள். பிரபாகரின் சாவுக்கு என்ன தான் காரணம் என்ற கேள்வி புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தாவிக்கொண்டே இருக்கிறது.

நான், பிரபாகர், சதாசிவம், தாமோதரன், மயில்சாமி, பாஸ்கர், மணி, அன்வர், பிரபாகர் அப்பா, நாஸியா, லீமா, ஆர்யா, தனபாக்கியம், பவித்ராவின் அம்மா என்று அத்தனை கதாபாத்திரங்களின் கீழ்மைகளும் அதற்கான அவர்களின் மனநிலைகளும் விளக்கப்பட்டது செம. மகரந்த தீபம், தற்காதல் போன்ற வார்த்தைகள் ரசிக்கும்படி இருந்தன.

இந்தப் புத்தகம் மருத்துவ மாணவர்களின் இளமைக்காலம் எப்படி சித்ரவதைக்கு உள்ளாகிறது, மாணவர்களுக்குள் ஈகோ எப்படி வேலை செய்கிறது, அதிகாரம் அவர்கள் மீது பாய்கிறது, அதிகாரம் செலுத்துபவர்களின் மனநிலை என்ன, தற்கொலை எப்படியெல்லாம் நடக்கிறது, அதற்கான தூண்டுதல்கள் என்ன, தற்கொலை கடிதங்கள் பயன்தருமா, தற்கொலை சரியா, லட்சியத்தை தீவிரமாகப் பின்பற்றுவதும் மனித உறவுகளை அலட்சியப்படுத்துவதும் சரியா, வாழ்க்கை முழுவதும் வெற்றியாளனாகவும் நற்பெயருடனும் வாழ நினைத்து பல சுகங்களை இழப்பது சரியா என்பதை அப்பட்டமாக விளக்கியுள்ளது. குறிப்பாக மயில்சாமியை விமர்சிக்கும் வரிகள் எல்லாம் அதிகார வர்க்கத்தின் மீதான சாட்டையடி.

கீழே இருப்பவை புத்தகத்தில் இருக்கும் மிக முக்கியமான வரிகள் – தயவு செய்து பொறுமையாகப் படியங்கள்.  

 1. “பயம், பதற்றம், குற்றவுணர்வு, நிச்சயமின்மை, இருப்பின்மை ஆகிய கருதுகோள்கள் தான் அடுத்த நூற்றாண்டை வழி நடத்தப் போகின்றன”
 2. இது இளைஞர்களுக்கான தேசம் என்றெல்லாம் வாய் வார்த்தைகள் அதிகமும் சந்தைக்கு வருகின்றன. ஆனால் இன்று எல்லாத் துறைகளுமே இளைஞர்களின் மனநலம் என்பதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.
 3. தப்பிக்க வழியேயில்லாத, மாத ’இ.எம்.ஐ’ என்கிற அரக்கனின் கையில் வாழ்வை ஒப்படைத்து விட்ட பிராய்லர் கூட்டமிது.
 4. ஆண்மைக்கு எதிர்ப்பதம் பெண்மை என்பதை விட, கோழைத்தனம் என்பதாகத்தான் இங்கே கையாளப்படுகிறது. அதனாலேயோ என்னவோ, பெண்மை என்பதையும் கோழைத்தனம் என்பதையும் பலர் ஒரே பொருளில் பயன்படுத்துகிறார்கள். ஆம். தற்கொலை ஒரு பொட்டைத்தனம்.
 5. கூடியிருக்கும் பறவைகளின் மீது கல்லெறிந்தால், ஒன்றுக்கு அடி விழும்; ஆனால் அங்கே கையிலிருந்துக் கல் விடுபடும் முன்னரே சாமர்த்தியமான ஒரு பறவைப் பறக்கத் தயாராகும். தேவைத் தலை விரிக்கும் போது தந்திரமான சாமர்த்தியசாலிகள் திடீரென தலையெடுத்து விடுகிறார்கள். அந்த வெடிப்பு, அதுவரையில் பக்கத்திலேயே இருந்தவர்களுக்கு மூச்சு முட்ட வைக்கிறது.
 6. சாவு வீடுகளில் கண்ணுக்கு தெரியாத ஒரு வருகை பதிவேடு வைத்திருப்பார்கள். வராதவனைப் பற்றி விவாதிப்பதற்கு ஒரு குழு இயங்கும்.
 7. எல்லோருடைய கையிலும் அடுத்தவரின் தகுதியை அளந்துச் சொல்லும் துல்லியமான ஒரு கருவி இருக்கிறது.
 8. யாருக்கும் நேரடி உண்மை எதைப்பற்றியும் தெரியாது. ஆனால் சகலமும் அறிந்ததைப் போல புட்டு புட்டு புரளி பேசுவார்கள்.
 9. தத்தளிக்கும் நாட்களில், கரையும் இதோ அதோ என்று போக்கு காட்டி இழுத்தடிக்கும்.
 10. இதற்காகவெல்லாம் ஒருவன் தற்கொலை செய்துக் கொள்வான் என்பது எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது. எதற்காகத்தான் ஒருவன் தன்னைக் கொலை செய்துக் கொள்ள வேண்டும். அப்படியெல்லாம் எதுவும் இருக்கிறதா என்ன? இப்படி எல்லா தற்கொலைகளையும் நாம் நிராகரித்து விடலாம் தானே? எண்ண ஓட்டங்கள் தான் எத்தனை மலிவான ஆயுதங்கள்?
 11. சுற்றியிருக்கும் கண்களனைத்தும் பனிப்புகை படிந்த கண்காணிப்பு கேமராக்கள். ஏதோவொரு விதத்தில் எல்லாமும் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன. பல கண்கள்; பல கோணங்கள்; பல தெளிவுகள்.
 12. ரகசியங்கள் காக்கும் விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் நிஜத்தில் பல மடங்கு இறுக்கமானவர்கள்.
 13. கைப்பேசியை அணைத்து வைப்பதை, உறவுச் சிக்கல்களின் குறியீடாக, இருபத்தியொன்றாம் நூற்றாண்டு விதி வகுத்திருக்கிறது.
 14. ஒருவர் சொல்லும் உண்மையை நாம் ஏற்காமல் விடுவதை விடவும், அவர் வலிந்து ஜோடித்து சொல்லும் ஒரு பொய்யை நாம் நிராகரிக்கும் போது தான், அவர் அதிகம் சீண்டப்படுகிறார் என்பதை, நான் வேறு சில தருணங்களிலும் அவதானித்திருக்கிறேன்.
 15. அந்த மரணத்தின் காரணத்தைத் தேடுவது, அந்த உயிருக்கான அர்த்தங்களுக்கு நான் செய்யும் அடிப்படைத் தர்மம்; தகனத்தோடு தணிய வேண்டிய தத்தளிப்பு அல்ல அது. சுவடேயில்லாமல் போய் விடக்கூடிய அதன் மிச்சங்களைப் பிடித்து வைத்து, ஒரு முறையேனும் உரையாடி விட வேண்டும்.
 16. கற்றுத் தேர்ந்தவனின் ஆயுதம் எத்தனை வன்மையானது என்பதை யோசித்துப் பார்த்து எனக்கு அச்சமாக இருந்தது. உலகின் பெரும்பாலான பேரழிவுகளுக்கு முட்டாள்த்தனங்களை விட இப்படியான மதிநுட்பம் தான் காரணமாக இருந்திருக்கிறது.
 17. வேண்டாததையெல்லாம் இங்கே விவாதமாக்கி குளிர்காய ஆட்கள் இருந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். சிண்டை விட்டுவிட்டு வாலை வைத்து வாதாடிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்.
 18. இறப்பைப் பகடைக் காயாக்கி, சுயத்தைச் செம்மை செய்கிறார்கள். அப்படித்தான் பல கொலைகள் செய்து, குடும்பங்களை கருவறுத்தவனையெல்லாம் இங்கே தியாகியாக்கி வைத்திருக்கிறார்கள். அதே நேரம், இறப்பை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, இறந்தவன் மீது சேற்றை வாரி இரைக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்.
 19. ஒளிந்துக் கொள்வதற்கு பதில், உடைத்து விடுவது மேலானது. 
 20. நான் என் தவறுக்காக வருந்தினேனோ இல்லையோ, உடனடியாக பயந்து விட்டேன் என்பது தான் உண்மை.
 21. வயதுப் பேதமின்றி பெண்களைப் பற்றி ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்; தான் பேசுவதற்கெல்லாம் அக்கறையுடன் செவிக் கொடுக்கும் ஓர் ஆணின் சகல பாவங்களையும் அவர்கள் நொடியில் மன்னித்து விடுவார்கள். சமயங்களில், அவற்றைக் கேட்பதை விட கொடியத் தண்டனை, ஆணின் பாவங்களுக்கு இருக்கவே முடியாது என்பதும், அதே அளவிற்கு உண்மை.
 22. பெண்களின் ரசனையை விட குழப்பமான, ஆய்வுக்குரிய ஒரு விஷயம் இருக்கவே முடியாது.
 23. சொல்வதற்கு எளிய ஆசைப் போல இருந்தாலும், மனிதனின் மனத்தடைகள் அத்தனைச் சுலபத்திலெல்லாம் வளைந்துக் கொடுப்பது இல்லை.

ஆம்புலன்ஸ் அலறல் சத்தம் கேட்டாலே நான் ஆண்டவனை வேண்டிக் கொள்ளும் தன்மை உடையவன் என்பவர்களும், நான் ரொம்ப சாப்ட்டான கேரக்டர்ப்பா… நான் ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆன கேரக்டர்ப்பா,  இதுக்கு மேல என்னை நானே கஷ்டப்படுத்த விரும்பல என்பவர்களும்… 

 தயவு செய்து இந்த புத்தகத்தை படிக்க வேண்டாம். அப்படியே இந்த மாதிரியான மனிதர்கள் இந்த புத்தகத்தை படிக்க விரும்பினாலும் தயவு செய்து தனிமையில் அமர்ந்து படிக்க வேண்டாம். இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் முழுக்க முழுக்க இந்த புத்தகத்திற்குள் மூழ்கி கிடக்காமல் அவ்வப்போது புத்தகத்தில் இருந்து வெளியே வந்து மனதை மனநிலையை சரி செய்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கலாம். ரோட்ல எதாச்சும் விபத்துனா மொத ஆளா ஓடிப்போய் காப்பாற்றும், சாதி மதம் எதுவும் பாராமல் செல்வாக்கான பொணமோ அனாதை பொணமோ எதுவாக இருந்தாலும் தன் தோளில் தூக்கிச் சுமக்கும் மறுத்துப் போன இதயர்களுக்கு இந்தப் புத்தகம் ரொம்பவே பிடிக்கும். 

Related Articles

ஹாலிவுட் படத்தில் ஒல்லிப்பிச்சான்! ̵... இவனெல்லாம் ஒரு ஆளா என்று இளக்காரம் பேசிய மனிதர்களை அடேங்கப்பா என்று வியக்க வைத்துள்ளார் நடிகர் தனுஷ். ஹாலிவுட்டிற்கு சென்ற தமிழ் நடிகர் என்றதும் அவரை ...
குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூ... 1.குழந்தைத் தொழிலாளர்கள் –குட்டி, வாகை சூடவாஇந்தியாவில் பல ஆண்டுகளாக மாறாமல் சில விஷியங்கள் உள்ளது. அவற்றில் முதன்மையானது குழந்தைத் தொழிலாளர்கள் ப...
மே 3 – உலக பத்திரிக்கை சுதந்திர தி... உலக பத்திரிக்கை சுதந்திர தினம் ஏன்?மனித உரிமைகள் சாசனம் பகுதி பத்தொன்பதில் உள்ள பேச்சு உரிமை மற்றும் கருத்து உரிமை ஆகியவற்றை நினைவூட்ட 1993 ம் ஆண்...
இந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் ̵...  குழந்தைத் தொழிலாளர்கள் –காக்கா முட்டை, குட்டி, வாகை சூடவா, மெரினா, கோலிசோடா, காதல் கொண்டேன், பாலாஜி சக்திவேல் படங்கள் – காதல், கல்லூரி, வழக்கு எண...

Be the first to comment on "“பிரபாகரனின் போஸ்ட்மார்டம்” புத்தகம் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*