குரங்கணி தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

Nine trekkers were burnt into ashes amidst the raging forest fire

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு
சென்றவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும்,
நான்கு ஆண்களும் ஒரு குழந்தையும் அடக்கம். மீட்கப்பட்ட 27 பேர்களில் பத்து பேர் சிறிய
காயங்களுடனும், எட்டு பேர் பலத்த காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இருக்கிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலையில் மலையேற்றம்

சென்னையைச் சேர்ந்த மலையேற்ற சங்கம் குரங்கணியிலிருந்து போடிக்கு ஒரு மலையேற்ற
பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. மொத்தம் 39 பேர்கள் அடங்கிய இந்த மலையேற்ற குழுவில்
சென்னையில் இருந்து 27 பேர்களும், ஈரோடு மற்றும் திருப்பூரில் இருந்து 12 பேர்களும் கலந்து
கொண்டனர். கலந்துகொண்ட 39 பேர்கள் அடங்கிய குழுவில் 25 பெண்களும், 3 குழந்தைகளும்
அடங்குவர்.

வெள்ளிக்கிழமை இரவு மலையேற்றத்தைத் தொடங்கிய இந்தக் குழு, மறுநாள் காட்டின் கேரள
பகுதியை சென்றடைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலையில் குரங்கணியிலிருந்து கிளம்பிய அந்தக் குழு மாலை வாக்கில் போடியை அடைந்து பிறகு தேனியில் இருந்து சென்னைக்கு செல்வதாகத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அந்தக் குழு குரங்கணியில் காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டது.

களமிறங்கிய விமானப்படை

அடர்ந்த வன பகுதியில் போதுமான தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாததாலும், செல்பேசியில்
சிக்னல் இல்லாத காரணத்தாலும் ஆரம்பக்கட்ட மீட்புப் பணியில் சிறிதளவு சுணக்கம் ஏற்பட்டது.
இருப்பினும் உள்ளூர் வாசிகள் தன்னார்வத்துடன் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். உள்ளூர்
வாசிகளின் உதவியுடனேயே மீட்பு குழுவினர் விரைந்து தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்குச்
சென்றுசேர முடிந்தது.

முதலில் கிடைத்த அறிக்கைகளின் படி, மலையேற்றத்தில் ஈடுபட்டவர்களில்
பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது உள்ளூர் வாசிகள் தங்களது திறன்பேசியில் பதிவு செய்த காணொளியின் மூலம் தெரிய வந்தது. அந்தக் காணொளியில் பெண்கள் வலியாலும் தண்ணீர் கேட்டுத் துடிப்பதும் பதிவாகி இருந்தது. அவர்கள் ஆடைகள் கந்தலாகி கிழிந்திருந்தது. இறந்த உடல்கள் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தன.

‘ பரவலான இந்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாகவே அங்கும் இங்கும்
நெருப்பு பற்றிய வண்ணம் இருந்தது. வனத்துறை அதிகாரிகள் அந்த மலையேற்ற குழுவை
குரங்கணி மலைக்குள் செல்ல அனுமதி அளித்திருக்கவே கூடாது. இது வனத்துறை அதிகாரிகளின் தவறு ‘என்று மீட்பு குழுவில் ஈடுபட்ட அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார். உயர்ந்த தீப்பிழம்புகள் வெளியிடும் தடித்த புகை காரணமாக காட்சிகள் தெளிவற்றதாக
இருக்கின்றன. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மாநில முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உரிய அறிவுறுத்தல்களைக் கொடுத்த வண்ணம் இருந்தனர்.

’15 பேர்கள் இதுவரை மீட்கப்பட்டு இருக்கின்றனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும்
போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறப்பு மருத்துவ குழு ஒன்றும் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது’ என்று தமிழக
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து
இருக்கிறார்.மீட்கப்பட்டவர்களில் சிலருக்கு தீவிர நெருப்பு காயங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

மீட்புப் பணிகள் தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை ஐந்து மணிக்கு மேல் தான் இந்த நிகழ்வு குறித்து பெருமளவுக்கு வெளியே
தெரிய ஆரம்பித்தது. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ‘மீட்பு குழுவுடன் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களும் இணைந்து பணியாற்றும்’ என்று பதிவிட்டு இருந்தார். மதியம் மூன்று மணிவாக்கில் வனத்துறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இருந்து இந்த நிகழ்வு குறித்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மலை அடிவாரத்தில் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி
வைக்கப்பட்டு இருக்கிறது. மீட்கப்படுபவர்கள் முதலுதவி செய்யப்பட்ட பிறகு அருகிலிருக்கும்
மருத்துவமனைகளுக்கு உடனடியாக கொண்டு செல்லப்படுகிறார்கள். மருத்துவமனைக்குச்
சென்று தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார் தேனி மாவட்ட ஆட்சியர்
மரியாம் பல்லவி. கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள்
குரங்கணியில் இருந்து கொழுக்கு மலைக்கு மலையேற்ற பயிற்சி மேற்கொண்டிருந்ததாகத் தெரிய வந்திருக்கிறது.

எஞ்சியிருப்பவர்களை மீட்கத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Articles

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பற்றிய சில ச... காமராஜ் - ஈஸ்வரி என்ற தம்பதிக்கு கடைக்குட்டி மகனாக பிறந்தார். தாய் தந்தை இருவரும் யூனியன் டிஸ்பென்ஸரியில் நர்சிங் அசிஸ்டென்டாக வேலை பார்த்தவர்கள்....
ஏழை மாணவர்கள் மருத்துவர் ஆகி அப்படி என்ன...  நம் இந்திய சமூகத்தில் எப்படியாவது சாதிக்கலாம் என்று ஏகப்பட்ட இளைஞர்கள் தினமும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கோடி கணக்கான இளைஞர்கள் மத...
உங்கள் வீடுகளில் படிக்கும் அறை அல்லது வீ... எல்லோர் வீட்டிலும் சமையலறை, படுக்கை அறை, பூஜை அறை, கழிவறை என்று பல அறைகள் இருக்கும். ஆனால் எத்தனை பேர் வீடுகளில் படிக்கும் அறை இருக்கிறது? படிக்கும் அ...
பொத்துக்கிட்டு வரதுக்குப் பேருதாண்டா ரௌத...  "என்னைய்யா பயந்துட்டிங்களா..."தப்பு பண்ணவனே பயப்படுல... எதுத்து கேக்கறவன் எதுக்குப் பயப்படனும்... "  " ஒரு தடவ தான் சாவு...

Be the first to comment on "குரங்கணி தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு"

Leave a comment

Your email address will not be published.


*