சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா?
சாப்பாடு முக்கியம்… அப்புறம் எனக்குப் பசிக்குமல்ல சாப்புடக்கூடாது… என்ற சிறுவனை நாம் அவ்வளவு எளிதாக மறக்கப் போவதில்லை. இவன் போன்ற வெள்ளந்தி சிறுவன் ஒருவன் பசி தாங்காமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தால் நம் மனம் என்ன பாடுபடும்?
பேருந்து நிலையங்கள் கோவில் வாசல்கள் போன்ற இடங்களில் கண்முன்னே பல சிறுவர்கள் கையேந்தி திரிகிறார்கள். அவர்களுக்கு ஆதரவளிக்க யார் இருக்கிறார்கள்? என்ற கேள்வி நம் மனதில் எழுந்தாலும் நம்ம வேலைய பார்ப்போம் என்று பெருமூச்சுடன் அந்த இடத்தைவிட்டு கடந்து வருகிறோம். அதே முகநூலில் வாட்சப்பில் இதுபோன்ற சிறுவர்களின் வீடியோவுக்கு sad எமோஜியை அமுத்துகிறோம்( நமக்குள் எவ்வளவு போலித்தனம்). அதே போல ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று எதாவது வழங்கினால் அதை உடனே போட்டோ எடுத்து விளம்பரம் செய்துகொள்கிறோம். அப்படி போட்டோ எடுத்து விளம்பரம் செய்வது குறித்து ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் சிறுவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வளவு அனுதாபத்துக்கு உரியவராகப் போய்விட்டாமா? என்று நினைக்க கூடும் தானே? ஆனால் அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்தித்திருக்கிறோமா? ஒருவேளை நம்முடைய மகனோ மகளோ இதுபோன்ற ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு அடுத்தவரின் விளம்பரத்துக்கு உதவும் அனுதாப பொருளாக மாறினால் என்ன ஆகும்? என்று நாம் சிந்திருக்கிறோமா? எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் புத்தகம் படித்த பிறகு நமக்கு இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கிறது. கூடவே குற்ற உணர்வும் உண்டாகிறது.
அள்ளி அரவணைக்க அம்மா என்றொருத்தி இல்லாத… பசியால் அலைந்து திரிந்த… வெள்ளந்தி சிறுவர்களே திருக்கார்த்தியல் புத்தகத்தின் நாயகர்கள். மொத்தம் பதினோரு சிறுகதைகளை உடைய இந்த தொகுப்பு ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் படைப்புகளை நினைவூட்டுகிறது. அவ்வளவு வலிகள்!
செந்தமிழ், சிவா, சுரேஷ், பானி, தனம், தமிழ் ஐயா என்று பதினோரு கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நிஜமனிதர்கள். இந்த நிஜமனிதர்களின் கதைகளிலயே செந்தமிழின் கதை நம்மை வெகுவாக உலுக்கி எடுக்கிறது. தனிமனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜெகத்தினை எரித்திடுவோம் என்று பசி மிகுந்த குரலில் உரக்க கத்துவான் செந்தமிழ், உலகெங்கும் பசியால் வாடி உயிரிழக்கும் ஒட்டுமொத்த சிறுவர்களுக்கான குரல் அது!
டாக்டர் அக்கா சிறுகதையில் வரும் சிறுவன் மிக அழகாக இருக்கும் டாக்டர் அக்காவுடன் நட்பு கொண்டாடும் இடங்கள் so sweet என்று நம் மனதை வெகுவாக கவர்கிறது.
பெரிய நாடார் வீடு சிறுகதையில் ஒரு வீட்டைப் பற்றி மிக அழகாக வருணித்திருப்பார் எழுத்தாளர். இதே கதையில் மின்மினிப்பூச்சி திருடர்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பார். ஆகச்சிறந்த திருடர்கள் கூட இப்படி ஒரு யுத்தியை தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள்! வாவ் என்று பிரமிக்க வைக்கிறது மின்மினிப்பூச்சி திருடர்கள் வரும் இடங்கள்.
இது போல புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் சிரிக்க வைத்து, அழ வைத்து, சிலிர்க்க வைத்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது.
மொத்தத்தில் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும்…
* இதுபோன்ற கதைகளை இன்னும் நிறைய படிக்கனும் என்ற புத்தக வாசிப்பு ஆர்வம் அதிகமாகும்.
* ஜவுளிக்கடை, டீக்கடை, ஒயின்ஷாப், பேக்கரி, வாட்டர் கேன் கடை, கல்லூரி ஹாஸ்டல் மெஸ் இன்னும் பல இடங்களில் தென்படும் குழந்தை தொழிலாளர்கள் மீது குறைந்தபட்ச அக்கறையாவது காட்ட வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்.
* உணவை வீணாக்க கூடாது என்ற எண்ணம் பிறக்கும். அதை உங்களை அறியாமல் நீங்கள் பின்பற்றவும் செய்வீர்கள். கல்லூரி மெஸ், ஹோட்டல், திருமண மண்டபங்கள் இன்னும் பல இடங்களில் உள்ள குப்பைத்தொட்டி அருகே “தனிமனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை எரித்திடுவோம்” அல்லது ” குப்பைத் தொட்டி என்பது குப்பைகுளை கொட்ட மட்டுமே… குழந்தையும் உணவையும் வீசும் இடமல்ல அது ” என்று எழுதி வைக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்.
* ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்குப் பண்டிகை நாட்களில் சென்று அவர்களுக்குப் பிடித்த உணவுகளை கேட்டு வாங்கித் தர தோன்றும். அந்த இடங்களில் செல்பி எடுத்து நான் எவ்வளவு கருணை மிகுந்தவ(ள்)ன் தெரியுமா என்று பீத்திக் கொள்வது தவறு என்று நினைக்கத் தோன்றும்.
பதிப்பகம் : வம்சி பதிப்பகம்
விலை : ரூ. 170
Be the first to comment on "தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை!"