நெடுந்தூர பயணங்களுக்கு நாம் யாரை நம்புகிறோமோ இல்லையோ, கண்ணை மூடிக்கொண்டு கூகுள் வரைபடத்தை நம்பத் துவங்குகிறோம். சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு முதல் தடவை செல்பவர்கள் கூட எந்தச் சிக்கலும் இன்றி கூகுள் வரைபடத்தை நம்பி பயமின்றி பயணிக்கலாம். மக்களின் உணர்வுகளோடு ஒன்றி விட்ட கூகுளின் இந்தச் சேவை அடிக்கடி நிறைய மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்படும். அந்த வகையில் தற்போது ப்ளஸ் கோட்ஸ் (Plus Codes) என்ற புதிய சேவையைக் கூகுள் நிறுவனம் தனது வரைபட செயலியில் இணைத்துள்ளது.
ப்ளஸ் கோட்ஸ் என்றால் என்ன?
உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான நகர்ப்புற மக்கள் பெயரில்லா தெருவில் அதாவது சரியான முகவரி இல்லாத தெருக்களில் தான் வசித்து வருகின்றனர். அது போன்ற சரியான முகவரி இல்லாத, பெயர் இல்லாத தெருக்களை கூகுள் வரைபட செயலியில் கண்டுபிடிப்பது சவால் நிறைந்த ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் தற்போது ப்ளஸ் கோட்ஸ் என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. ப்ளஸ் கோட்ஸ் மூலம் பெயரில்லாத, முகவரியில்லாத தெருக்களை கூட மிகத் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.
ப்ளஸ் கோட்ஸ் மூலமாக உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும், எந்த மூலையில் உள்ளவர்களுக்கு வேண்டுமானாலும் முகவரி அளிக்க முடியும் என்பதே இதன் சிறப்பு.
கூகுள் வரைபடத்தில் ப்ளஸ் கோட்ஸின் பங்கு என்ன?
ப்ளஸ் கோட்ஸ் என்பது இரண்டு கூறுகளை உள்ளடக்கியது. முதல் கூறில் ஆறு முதல் ஏழு எழுத்துக்கள் மற்றும் எங்களின் கலவை, இரண்டாவது கூறில் நகரத்தின் பெயர் இடம் பெற்றிருக்கும். கல்லூரிகளில் பெயர் குழப்பத்தைத் தவிர்க்க, ரோல் நம்பர் என்ற ஒன்றை நமக்கு ஒதுக்குவார்கள் அல்லவா? ரோல் நம்பரைக் கொண்டு பெயரைக் கண்டுபிடிக்கலாம் அதே போல பெயரைக் கொண்டும் ரோல் நம்பரைக் கண்டுபிடிக்க முடியும். கிட்டத்தட்ட ப்ளஸ் கோட்ஸின் பங்கும் அதுதான். ப்ளஸ் கோட்ஸை கொண்டு நீங்கள் முகவரியைக் கண்டுபிடிக்கலாம், பகிரலாம்.
என்ன சிறப்பம்சங்கள்?
1 ) ஓப்பன் சோர்ஸ் (Open Source) தொழில்நுட்பத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருப்பதால் ப்ளஸ் கோட்ஸ் தனது சேவையை இலவசமாக வழங்குகிறது.
2 ) ப்ளஸ் கோட்ஸ் சேவையை இணையத் தொடர்பு இல்லாமலும் பயன்படுத்த இயலும்
3 ) மிக எளிமையான பயன்பாடு
4 ) பிரத்தியேகமான ஒன்றாக இல்லாமல் இருப்பதால் தாள்களில், போஸ்டர்களில் என எதில் வேண்டுமானாலும் ப்ளஸ் கோட்ஸை அச்சிட முடியும்.
5 ) நாடுகளுக்கான குறியீட்டு எண் போன்ற எதுவும் ப்ளஸ் கோட்ஸில் இல்லாத காரணத்தால், நாடுகள் தாண்டி எல்லைகள் தாண்டி ப்ளஸ் கோட்ஸ் உதவியுடன் பயணிக்க இயலும்
6 ) + குறியீட்டின் காரணமாக கூகுள் தேடலிலும், கூகுள் வரைப்படத்திலும் ப்ளஸ் கோட்ஸை எளிமையாக அடையாளம் காண முடியும்
யாரெல்லாம் பயன்படுத்தலாம்
1 ) அரசாங்கங்கள் மற்றும் நகராட்சிகள்
2 ) அவசர சேவைகள்
3 ) மனிதாபிமான மற்றும் பேரழிவு நிவாரண அமைப்புக்கள்
4 ) போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் பயன்பாட்டு வழங்குநர்கள்
5 ) நிதி நிறுவனங்கள்
6 ) சிறு வணிகங்கள்
ஒரு உதாரணம்
சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரிக்கான ப்ளஸ் கோட்ஸ் இவ்வாறாக இருக்கிறது
M4GX+RG
இந்த ப்ளஸ் கோட்ஸை கூகுள் தேடலாகவோ அல்லது கூகுள் வரைபடத்திலோ கொடுத்து பார்த்தால் சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரிக்கான முழு முகவரியையும் தெரிந்து கொள்ளலாம்.
Be the first to comment on "ப்ளஸ் கோட்ஸ் – கூகுள் வரைபடத்தின் புதிய அறிமுகம்"