டிசம்பர் 12ம் தேதி என்ன விசேசம் என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ரஜினி! இந்தப் பெயரைக் கேட்டாலே நம் மனதுக்குள் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உண்டாகி விடுகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவருடைய படத்தின் முதல்நாள் முதல் காட்சியை தாரை தப்பட்டையுடன் கொண்டாடி வருகின்றனர். அவ்வளவு வசீகரம்! தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பகுதியில் இருந்து வந்து இன்று தமிழகத்தின் முதல்வர் பதவியை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் காந்தக் குரல் நாயகன். எப்படி இந்த மனுசன் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இருக்கிறார்? என்ற கேள்வி நாம் அனைவர் மனதிற்குள்ளும் எப்போதும் எழுந்துகொண்டே இருக்க கூடிய கேள்வி.
அவர் தொடர் வெற்றியாளராக இருக்க முதல் காரணம் குரு மரியாதை. ஆரம்ப காலகட்டத்துலயே சிகரத்துடன் கை கோர்த்ததால் தொடக்கத்திலயே உச்சிக்குச் சென்ற நாயகன். இன்று வரை அவருடைய அட்வைஸைப் பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் ரஜினி பேசும் தமிழை பல பேர் மாற்ற முயல, சிகரமோ ரஜினி… யாருக்கும் உன்ன மாத்திக்காத… உன்னோட ஸ்டைல் தான் உன் பலமே… என்று அவர் சொன்ன அறிவுரையை இன்று வரை கடைபிடிப்பதே அவருடைய முதல் வெற்றிக்கு காரணம்.
இரண்டாவது சக போட்டியாளரை மதித்தல். கமலஹாசன் என்ற யானை எதிரில் இருப்பதாலே ரஜினியும் பெரிய மனிதராகத் தெரிகிறார் என்பது அப்பட்டமான உண்மை. (பெரிய மனுசன எதிர்க்கும் போது தான் நாமளும் பெரிய மனுசனாகுறோம்… – பேட்ட ஆடியோ லான்ச்சில் விஜய் சேதுபதி சொன்ன வசனத்தை இத்துடன் பொருத்திக் கொள்ளுங்கள். ) ஒருமுறை கூட ரஜினி தன் சக போட்டியாளரை புறணி பேசியதில்லை என்பதே அவர் இன்று வரை வெற்றியாளராக இருப்பதற்கு இன்னொரு காரணம்.
இப்பொழுது அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். அரசியலைப் பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? ஒரு மண்ணும் தெரியாது… என்று மட்டம் தட்ட துவங்கி உள்ளனர். ஆனால் ரஜினி எந்த நேரத்தில் எதை செய்வார் என்று யாராலும் கணிக்க முடியாது. அவ்வகையில் அரசியலிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவரைப் போல பல நடிகர்கள் இன்று குட்டிக்கதை சொல்லத் துவங்கியுள்ளனர். குட்டிக்கதை சொல்பவர்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் ஆக முடியாது. எப்போதுமே சூப்பர்ஸ்டார் ஒருத்தர் தான். சூப்பர்ஸ்டார் பல இடங்களில் சுவாரஸ்மான குட்டிக் கதைகள் கூறி இருக்கிறார். அவற்றில் முக்கியமான குட்டிக்கதை இங்கே பகிரப் பட்டு உள்ளது.
திமுக இலவசங்களை அள்ளித்தந்து ஆட்சி நடத்திய காலத்தில் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடந்தது. அந்நிகழ்ச்சியில், இலவசங்களை பற்றி ரஜினி சொன்ன குட்டிக்கதை இது.
” ஒருத்தன் சென்னைல இருந்து மதுரைக்கு போகணும். அவன் கைல பஸ்ஸுக்கு முந்நூறு ரூபா போக, மீதி ஒரு ஐம்பது ரூபா இருந்துச்சு. பஸ் ஏறதுக்கு முன்னாடி இந்த ஐம்பது ரூபாய்க்கு சாப்பிட்டுட்டு போகலாம்னு அவன் ஒரு ஹோட்டல்ல நுழைஞ்சான். அந்த ஹோட்டல் போர்டுல நீங்க எவ்வளவு வேணாலும் சாப்பிட்டுக்கலாம் காசு தர தேவையில்லை, நீங்க சாப்பிட்டுதுக்கு உங்க பேரன் வந்து பணம் கொடுத்தா போதும் என்று எழுதியிருந்த வாசகத்த பார்த்த அவன் ஆச்சிரியமானான். ஹோட்டல் முதலாளியிடம் இந்த போர்டில் இருப்பது உண்மை தானா, நான் எவ்வளவு வேணாம் ப்ரீயா சாப்பிடலாமா என்று வினவினான். ஹோட்டல் முதலாளி உங்க பேரன் வந்து காசு கொடுத்தா போதும், நீங்க எவ்வளவு வேணா சாப்பிடலாம் என்று உறுதிப்படுத்தியதும், குஷியானவன் ஐம்பது ரூபாய்க்கும் மீறி அதிக பணத்திற்கு சாப்பிட்டு முடித்து ஏப்பமிட்டான். இப்போது அந்த முதலாளி அவனிடம் வந்து பில்லை நீட்டினார். அதிர்ச்சியடைந்த அவன், என்னங்க இது என் பேரன் வந்து பணம் கொடுத்தா போதும்னு சொன்னிங்க இப்ப பில்ல நீட்டுரிங்க என்று கேள்வியெழுப்ப, நீங்க சாப்பிட்டதுக்கு உங்க பேரன் தந்தாலே போதும்ங்க…ஆனா இது உங்க தாத்தா இந்த ஹோட்டல்ல சாப்பிட்டதுக்கான பில்லு. பேரன் நீங்க தானே கட்டியாகனும் என்று ஆணித்தரமாக சொல்லிவிட என்ன பன்றதுனு தெரியாம கைல இருந்த காசு, மோதிரம், வெள்ளி அருணாக்கயிறுனு எல்லாத்தையும் கழட்டிக்கொடுத்துட்டு வெளிய வரும் போது ஒன்னுமில்லாம வந்தானாம் “. இது மாதிரி இலவசங்களை நம்பினா நமக்கும் இந்த நிலைமை தான் ஏற்படும் என்று மேடையிலயே துணிச்சலாக அசத்தியவர் ரஜினி.
Be the first to comment on "40 ஆண்டுகளாக இந்தக் குதிரை வெற்றிகரமாக ஓடுகிறதே எப்படி? – தலைவர் பிறந்த நாள் (Dec12)"