தற்போதைய தமிழ் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் தடைசெய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் என்று பட்டியலிட்டால் அவற்றில் சன் டிவியின் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சியும் சொப்பனசுந்தரியும் மற்ற தொலைக்காட்சிகளின் இன்ன பிற நிகழ்ச்சிகளும் அடங்கும்.
மற்ற நிகழ்ச்சிகளுடன் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சியை ஏன் ஒப்பிட வேண்டும், மற்ற நிகழ்ச்சிகளைப் போல அந்த நிகழ்ச்சியில் ஆபாசம் இருக்கிறதா? அடிதடி இருக்கிறதா? நடிப்பு இருக்கிறதா? முதலைக் கண்ணீர் இருக்கிறதா? இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதா? கருணை மட்டுமே நிறைந்த நிகழ்ச்சியை ஏன் மற்ற நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட வேண்டும்? நல்லது நடந்தால் உங்களுக்குப் பொறுக்காதா? இவ்வளவு பேசுறியே நீதான் ஒரு நல்ல நிகழ்ச்சிய நடத்தேன் பார்ப்போம்? இப்படி பலதரப்பட்ட கேள்விகள் இந்நிகழ்ச்சியை ஆதரிப்போரிடம் இருந்து எழுந்தாலும், ஆம் இதுவும் மற்ற நிகழ்ச்சிகளைப் போல அபத்தமான நிகழ்ச்சியே என்பது தான் ஒரே பதில்!
உங்களோட கருணை சாவைவிட கொடூரமானது :
கபாலி படத்தில் கூண்டுக்குள் அடைபட்ட பறவையை திறந்துவிட்டு உன்னோட கருணை சாவ விட கொடுமையானது என்று நாயகன் வசனம் பேசுவார். கருணை என்கிற பெயரில் செய்த உதவியை விளம்பரப்படுத்தி நீங்கள் செய்த உதவியை கூண்டாக்கி அந்தக் கூண்டுக்குள் அப்பாவி ஏழைகளை அடைத்து இவர்களை நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் என்று பெருமை பேசிக் கொள்கிறோம். இப்படி தான் பலரை சாவடிக்கிறோம், அதற்கு உதாரணம் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சி!
விஷால் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் வசதி இல்லாத ஏழைகளை கூட்டி வருகிறார்கள். அவர்களும் வந்து தங்கள் கஷ்டங்களை சொல்லி அழுகிறார்கள். அந்நிகழ்ச்சிக்கு வரும் சிறப்பு விருந்தினர் அவர்கள் கூறும் கஷ்டங்களை கேட்டு கண்ணீர் வடிக்கிறார். இது வரை ஓகே. இதற்குப் பிறகு அரங்கேறும் கூத்து தான் ஒட்டுமொத்த நிகழ்ச்சிக்கும் கெட்ட பெயரை வாங்கித் தருகிறது.
வசதியில்லாத அந்த மக்களுக்காக தன்னால் முடிந்த உதவி என்று நடிகர் நடிகைகள் தங்கள் கை பணத்தை கொடுத்தால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு நிகழ்ச்சி கலகலப்பாக இருக்க வேண்டும் கமர்சியல் கருமாந்திரத்தை நுழைத்து, “உதவி”, “கருணை” போன்ற வார்த்தைகளின் மதிப்பைக் குறைக்கிறார்கள்.
கருணை உள்ளம் கொண்டு உதவி செய்வது பாராட்டத் தக்க விஷியம் தான். ஆனால் அந்த உதவியை விளம்பர படுத்தி காசு பார்ப்பது கேவலமான செயல். அறியாமையில் உங்களை நாடி வரும் மனிதர்களை வைத்து அனுதாபம் தேடி அவர்களுடைய சுய மரியாதையை சுக்கு நூறாக உடைத்து, எங்களிடம் வந்து கையேந்துங்க என்று சொல்லும் நிகழ்ச்சி எப்படி கருணை மிக்க நிகழ்ச்சியாக இருக்கும்? எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் மிகச் சில மனிதர்களில் நடிகர் விஷாலும் ஒருவர். ஆனாலும் இது போன்ற நிகழ்ச்சிகளை அவர் தவிர்ப்பது நல்லது.
Be the first to comment on "ஆபாச நிகழ்ச்சிகளை விட விஷாலின் ” சன் நாம் ஒருவர் ” நிகழ்ச்சி அபத்தமானதா?"