பரபரப்பான சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய நான்கு சேனல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சீரியல்கள் எல்லாம் மக்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை பார்ப்போம்.
மேலே குறிப்பிட்ட நான்கு சேனல்களிலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒரு நாளைக்கு எட்டுக்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பபடுகின்றன. அத்தனை சீரியல்களும் படுமொக்கையாக இருக்கின்றன. காலங்காலமாக பார்த்து சலித்துப் போன கதையை புதிய நடிகர்களை வைத்து திருப்பி எடுத்து புதிது போல காட்டிக்கொண்டிருக்கிறார்கள் சீரியல் இயக்குனர்கள். அதிலும் முக்கியமாக இந்த ‘மாமியார் கொடுமைகள்’ என்ற டாப்பிக்கை எந்த சீரியல் இயக்குனர்களும் விட்டுவைப்பதாக தெரியவில்லை. குறிப்பாக விஜய் டீவியில் ஒளிபரப்பபடும் பாரதி கண்ணம்மா, தேன்மொழி பிஏ ஊராட்சி மன்ற தலைவர், ஆயுத எழுத்து போன்ற சீரியல்களை சொல்லலாம்.
பாரதி கண்ணம்மாவை எடுத்துக் கொள்வோம். அந்த தொடரில் கண்ணம்மா கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறாள். மருமகள் கர்ப்பமாகவில்லை என்றதும் மாமியார் உடனே அவளை மட்டம்தட்ட ஆரம்பிக்கிறாள். தன் மகனுடன் சேர்ந்து வாழவிடாமல் அவளுடைய தாய்வீட்டுக்கே துரத்தி அடிக்கிறாள். இதுபோன்று தொடர்ந்து பல தொந்தரவுகளை தன் மருமகளுக்கு தருகிறாள். கண்ணம்மாவும் அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அந்தக் காலத்து அடிமை பெண்களைப் போல மாமியாரை எதிர்த்துப் பேசாமல் அப்பாவியாகவே இருக்கிறார்.
ஆயுத எழுத்து நாடகத்தை எடுத்துக் கொள்வோம். அதில் கலெக்டராக இருக்கும் இந்திரா சக்தி என்பவனை காதலிக்கிறாள். கல்யாணமும் செய்து கொள்கிறாள். கல்யாணத்துக்குப் பிறகு தான் இந்திராவுக்குத் தெரிய வருகிறது சக்தி தனது எதிரியான காளியம்மாவின் மகன் என. அந்த இடத்தில் இந்திரா தாலியை அறுத்து எரிந்திருந்தால் நாடகம் வேற லெவலில் இருந்திருக்கும். ஆனால் இந்திராவோ காதலனுக்காக வேலையிழந்து புகுந்த வீட்டிற்குச் சென்று மாமியாரின் கட்டளைப்படி சாணி அள்ளுகிறாள், மாமியாரின் நம்பிக்கைக்காக பூ மிதிக்கிறாள். இந்தக் காலத்து படித்த பெண்கள் இப்படியா இருக்கிறார்கள்? போடி மயிரு என்று வீட்டைவிட்டு வெளியேறுவது தவறா?
தேன்மொழி பிஏ என்ற நாடகத்தை எடுத்துக்கொள்வோம். அதில் தேன்மொழி தாழ்ந்த சாதியை சேர்ந்தவள். அவள் எலக்சனில் நின்று ஊராட்சி மன்ற தலைவராகிறாள். அவளை சாதி ஓட்டுக்காக திருமணம் செய்துகொள்கிறான் நாயகன். மருமகள் தாழ்ந்த சாதி என்பதால் அவளை வீட்டினீ ஒரு ஓரத்தில் தங்க வைத்து தினமும் பழையசோறாகப் போடுகிறாள். எந்தக் காலத்தில் இருக்கிறார் இந்த நாடகத்தின் இயக்குனர்?
இன்னும் எத்தனை நாளைக்குடா இதே மாதிரி நாடகம் எடுப்பிங்க என்று கேட்க தோன்றுகிறது. இது மாதிரி கதைகளை தான் குடும்ப பெண்கள் விரும்புகிறார்கள் என நினைத்துக்கொண்டு அந்த இயக்குனர்கள் எல்லாம் பெண் அடிமைத் தனத்தை வளர்க்கும் நாடகங்களைத் தான் திரும்ப திரும்ப எடுத்து தொலைகிறார்கள். இதனால் சமூகம் இம்மியளவு கூட முன்னேறாது என்பதை அந்த இயக்குனர்கள் ஏனோ புரிந்துகொள்வதில்லை. இது போன்ற நாடகங்கள், “பாரு… அந்த மருமக எவ்வளவு கொடுமைய தாங்கிட்டு எவ்வளவு அடக்க ஒடுக்கமா இருக்கா… அவ பொண்ணு நீயும் தான் இருக்கியே… அடங்கிப் போறது தான் பொம்பளைக்கு அழகு” என்ற பழைய கண்றாவி கருத்தை தான் மீண்டும் மீண்டும் திணித்துக்கொண்டிருக்கிறது.
Be the first to comment on "தமிழ் சீரியல்களில் மாமியார் கொடுமைகள்!"