தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எதாவது ஒரு தொழிற்சாலையை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ரத்த ஆறு ஓடுகிறது என்று சாயப்பட்டறைகளின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தவிக்கிறார்கள். புகழூர் காகித ஆலை நிலத்தடி நீரை உறிஞ்சித் தள்ளுகிறது என்று அப்பகுதி விவசாய மக்கள் வருந்துகிறார்கள். இது போதாது என்று மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என்று வரிசை கட்டி நிற்கிறது. இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிப் போகுமே தவிர மனிதர்கள் வாழும் பகுதியாக இருக்காது. சமீபத்தில் வெளியான மெர்க்குரி திரைப்படம் ஒரு விழிப்புணர்வு படம். கொடைக்கானல் பகுதியில் உள்ள தெர்மோமீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை தந்த பாதிப்புகளால் மக்கள் எவ்வாறு எல்லாம் பாதிக்கப் படுகிறார்கள் என்று கூறப் பட்டிருந்தது. அந்த கொடைக்கானல் மெர்க்குரி தெர்மோமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலை பற்றி பார்ப்போம்.
அமெரிக்காவில் சிஸ் போராக் பான்ஸ் என்ற மெர்க்குரி தயாரிப்பு நிறுவனம் இருந்து வந்தது. மெர்க்குரி தயாரிப்பதால் அதன் சுற்றுப்புறம் பாதிக்கப்பட்டு உள்ளது என்ற என்றதால் அந்த நிறுவனத்திற்கு அந்த நாட்டில் தடை விதிக்கப் பட்டது. தடை விதித்ததும் இளிச்ச வாய நாடான
இந்தியாவிற்கு ( India is not a dustbin – இந்தியா குப்பைத் தொட்டி அல்ல… எவ்வளவு வேஸ்ட்டா… எலக்ட்ரிக்கல் வேஸ்ட், எலக்ட்ரானிக் வேஸ்ட், நியூக்ளியர் வேஸ்ட், மெடிக்கல் வேஸ்ட்,… எல்லா குப்பையும் போட்டு மக்களை சாகடிக்கிறேங்களேடா… என்ற எஸ்.பி. ஜனநாதனின் புறம்போக்கு எனும் பொதுவுடைமை படத்தின் வசனத்தை நினைத்துக் கொள்ளுங்கள்) 1982ல் வருகிறார்கள். அவர்களை இந்துஸ்தான் யுனிலிவர் லிமிட்டெட் எனும் மெர்க்குரி தெர்மோமீட்டர் தயாரிக்கும் நிறுவனம் உபசரித்து மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இருபத்தி ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் 1987ல் மெர்க்குரி தெர்மோமீட்டர் தயாரிக்கும் பணியை செய்கிறார்கள். இதில் சுமார் ஆயிரத்து இருநூறு பேர் பணியாற்றி வந்தனர். அந்தத் தொழிற்சாலையிலோ 28 டிகிரி முதல் 450 டிகிரி பாரன்ஹீட் வரை கொதி நிலையில் பணியாளர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி பணி ஆற்றியதால் அவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு, வயிற்று வலி, உடல் நடுக்கம், பார்வைக் கோளாறு, கல்லீரல் பாதிப்பு, மன நல பாதிப்பு உள்ளிட்ட பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. அவர்களில் பாதி பேர் இன்னமும் மருத்துவம் பார்க்க முடியாமல் நோயுடன் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல இடங்கள் இருந்தும் ஏன் கொடைக்கானலை அவர்கள் தேர்ந்து எடுத்தார்கள் என்பதற்கு காரணம் இருக்கிறது. மெர்க்குரி திரவக் கழிவுகள் உராய்வு படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம். அதற்கு குளிர்ச்சியான பகுதிகள் தேவை. அது மட்டும் அல்லாது அங்கு உள்ள மலைவாழ் மக்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதே காரணம்.
அமெரிக்காவில் இருந்து வந்து இறங்கிய நிறுவனம் இங்கு மெர்க்குரி
தெர்மோமீட்டர் செய்துவிட்டு அதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கழிவுகள் மட்டும் இந்தியாவிலயே தேங்கிக் கொண்டது.
இதனை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த பல சமூக அமைப்புகள் ( பழனி மலை பாதுகாப்புக் குழு) போராட்டத்தை முன் வைத்தது. நிறுவனமோ கழிவுகளின் அளவை இருபது மடங்கு குறைவாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அளித்து உள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி இந்த தொழிற்சாலை மூடப்பட்டது. மூடப்பட்ட பிறகும் இந்த ஆலை பத்தாயிரம் டன் பாதரசக் கழிவுகளை அப்படியே விட்டுச் சென்றது.
இந்த தொழிற்சாலையால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய குழு ஒன்றை அரசின் சார்பில் அமைக்கப் பட்டது. ஆனால் அந்த ஆய்வின் முடிவோ மக்களுக்கு இந்தத் தொழிற்சாலையால் எந்த பாதிப்பும் இல்லை என்று முடிவு தெரிவித்து உள்ளது. சமூக ஆர்வலர்களின் முயற்சியால் இரண்டாம் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவை இதோ அதோ என்று இன்னமும் இழுத்து அடிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையோ கேள்விக்குறி. இப்படி தமிழகத்தின் வளம் செழிந்த பகுதிகளில் எல்லாம் புதிது புதிதாக தொழிற்சாலைகள் முளைக்கத் தொடங்கி விட்டது. தொழிற்சாலைகள் தொடங்குவதால் வேலை வாய்ப்பு பெருகுவது, பொருளாதாரம் முன்னைறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு உழைத்துக் கொட்டுவதோடு மட்டும் அல்லாமல் உடல் நலனையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் இந்தியர்கள். முதலில் உடல் நலம். பிறகு தான் மற்றவை எல்லாம் என்பதை புரிந்து கொண்டு மக்களுக்கு ஆபத்து இல்லாத தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்குமா அரசு? தற்போதைய சூழலை பார்த்தால் அதற்கு எல்லாம் சாத்தியமே இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. பாதிக்கப் பட்டவனுக்கு உறுதுணையாக இருக்காமல் பாதிப்பு அடையச் செய்தவனை காவல் காத்துக் கொண்டு வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆட்சி நடத்தி வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் முதல் பத்தியில் குறிப்பிட்டு உள்ள திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களும் போராட்டக் களத்தில் இறங்கப் போகிறார்கள் என்ற செய்திகள் சமூக வலை தளங்களில் பரவிக் கொண்டு இருக்கிறது.
Be the first to comment on "தமிழ்நாடு எனும் சுடுகாடு – மூடப்பட வேண்டிய தொழிற்சாலைகள்!"