தொழில் தொடங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்! – பகுதி 2

Things we need to know before starting a business! - part 2

7.சூழல் பழகு

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொழில் நகரங்களுக்கும் ஒரு முகமுண்டு. குறிப்பிட்ட தொழில் ஆதிக்கம் செலுத்தும். அது சார்ந்த துணை தொழில்கள் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும். அரசாங்கத்தின் பங்களிப்பு காற்பங்கு தான் இருக்கும். தனிமனிதர்களின் முயற்சியும் உழைப்புமே நகரத்தை வளர்த்திருக்கும். முதன்மைச் சங்கங்கள் ஆட்சி செலுத்தும். கூடவே முக்கிய சங்கங்கள் பல இருக்கும். கிளைச்சங்கங்களும், துணைத் தொழில் சங்கங்களும் என்று இருந்தாலும் கட்டாயம் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாது இருக்கும். சாதிய ஆதிக்கம் வழி நடத்தும். கட்சிப் பார்வைகள் கண்கொத்திப் பாம்பாய் வழி காட்டும். காரியங்களைச் சாதிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். பதவியில் இருப்பவர்களின் சுற்றமும் நட்பும் வளர்ந்து விடுவார்கள். 

அறிவிக்கப்படாத புரோக்கர்களாக இருப்பார்கள். ஏற்றுமதி துறை என்றால் கட்டாயம் டெல்லியில் மாத வாடகையில் அறைகள் இருக்கும். உள்நாட்டு வணிகமெனில் சென்னை தான் முக்கிய கேந்திரம். மறைமுகமாக முக்கிய கட்சியின் அறிவிக்கப்படாத உறுப்பினராக இருந்தாலும் சாதிக்கத் தெரிந்த அளவிற்கு மற்ற கட்சியினருடன் சுமூக உறவையே வைத்திருப்பார்கள். ஊருக்குள் புதிதாக வங்கிகள் கிளை திறந்தால் கட்டாயம் இவர்கள் தான் திறந்து வைப்பார்கள். கூடவே தன் பங்குக்குக் கணக்கு தொடங்கி கச்சிதமாகக் குறுகிய காலக் கடன் பெற்று விடுவார்கள். ஒவ்வொரு வங்கி மேலாளர்களையும் சுத்தப்படுத்தி வைத்திருப்பார்கள். வங்கி மேலாளர் மாறுதலாகிச் செல்லும் வரைக்கும் மேலிருந்து ஓலை வராத அளவிற்குக் கட்ட வேண்டிய மீதப் பணத்தையும் கடனாக அளித்து அதனை வரிசைப்படுத்தி வங்கியிலேயே வைத்திருப்பார்கள். அவர் செல்லும் வரைக்கும் கடன் கச்சிதமாக வரவில் ஏறிக் கொண்டேயிருக்கும். சென்ற பிறகு தான் சுயரூபம் தொடங்கும். தொடரும். புதிதாக வந்தவர் தண்ணீர் இல்லாத காட்டுக்குள் சிக்கித் தடுமாறுவார். அவரையும் சங்கத்து உறுப்பினராக மாற்றிவிடுவார்கள். 

அரசாங்கம் அறிவிக்கும் புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே இவர்கள் பார்வைக்கு வந்து விடும். சிட்கோ எந்த இடத்தில் தொடங்கப் போகின்றது? என்பதனை உணர்ந்து ஊருக்கு வெளியே 100 ஏக்கர்களை வளைத்து விட இரண்டு வகையில் லாபம் கிடைக்கும். எளிய விலையில் வாங்கிய நிலம் திட்டத்தின் அடிப்படையில் எகிறும் விலையில் சந்தை மதிப்பு கூட வங்கியில் அடைமானம் வைத்து விட்டால் போட்ட முதலீடு மொத்தமாக வந்துவிடும். இதில் யார் முட்டாள்? யார் புத்திசாலி? முற்பட்ட, பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போலவே இங்கும் மூன்று பிரிவுகள் உண்டு. சங்க , சாதிய, அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். இவர்களுடன் ஒட்டி உறவாடிக் கிடைத்த வரைக்கும் லாபம் என்று தக்க வைத்துக் கொள்பவர்கள்.

 ஆனால் எந்நாளும் அடிமையாய் வாழ்ந்து பழகிய மூன்றாம் வகுப்பினர் பெயர் முதலாளிகள் அல்ல. அவர்கள் வேலைக்குச் செல்லாமல் மொத்தக் குடும்பத்தினரும் சேர்ந்து உழைத்து நிறுவனம் என்ற பெயரில் மாதச் சம்பளம் கிடைத்தால் போதும் என்று வாழ்பவர்கள். மேலே இருக்கும் இரண்டு வகையினரும் கடைசியில் கைவைத்து நொடித்துப் போய் இருக்கும் நிறுவனத்தை விலைபேசி மீண்டும் வேலைக்குச்சா செல்லும் பரிதாப ஜீவன்கள். இவர்களுக்கு அரசாங்கத்திற்குத் தொடர்பில்லை. ஆனால் அரசாங்கம் உருவாக்கும் ஒவ்வொரு கொள்கையும் இவர்களைத்தான் உடனே தாக்கும். சங்கத்தில் உள்ள அனைவரும் வருடச் சந்தாக் கட்டி சங்கப் பொறுப்பில் உள்ளவர்கள் சந்தித்த பிரபல்ய புகைப்படங்களை, வாங்கிய விருதுப் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தொழிலுக்கு, தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு, தொழில் நகர விரிவாக்கத்திற்கு என்ன சாதித்தார்கள் என்று எவரும் கேட்கவும் முடியாது. அவர்களே மீண்டும் மீண்டும் பதவியில் வந்து அமர்வதைத் தடுக்கவும் முடியாது.

 இது திருப்பூருக்கு மட்டுமல்ல. கரூர், நாமக்கல், ஓசூர், சிவகாசி எல்லா நகரத்திற்கும் பொருந்தும். இப்படித்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ப.சிதம்பரம் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது கண்ணியவான்கள் அவரைப் போய்ப் பார்த்தார்கள். “வீட்டுக்கு நான்கு கார்கள் வைத்திருக்கும் உங்களை விடச் சைக்கிள் வைத்திருப்பவர்கள் எனக்கு முக்கியம்” என்று டீ கூடக் கொடுக்காமல் அப்படியே திருப்பி அனுப்பி வைத்தார். அரசாங்கம் யாருக்கு உதவ வேண்டும்? இங்கிலாந்து மதர் கேர் நிறுவனம் சமீபத்தில் ஐபி கொடுத்து நாமத்தைச் சாற்றியது. உத்தேசமாக ஆயிரம் கோடி என்கிறார்கள். முழுமையான விபரங்கள் வெளியே வரவில்லை. 50 கோடி முதல் 500 கோடி வரைக்கும் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள் ஒரே நாளில் பாதிக்கப்பட்டார்கள். பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனத்தின் இழப்பு 500 கோடி என்று எடுத்துக் கொள்ளவும்.

 அவர் கடைசியில் சார்ந்திருந்த துணை நிறுவனங்கள் தலையில் கட்டி விட்டு 50 கோடியில் தன் நட்டக் கணக்காகக் கொண்டு வந்து நிறுத்துவார். வாய்ப்பிருந்தால் வங்கியில் அவரின் தனிப்பட்ட செல்வாக்கு மூலம் வேறு வகையில் பெற முயல்வார். ஆணால் பணியாற்றிய துணை நிறுவனங்கள் பாதிக்கப்படும். மூடிவிட்டு வேலைக்குச் செல்வார்கள். கடந்த 30 வருடங்களில் இப்படித்தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. வென்றவர்கள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள் அனைவரும் ரத்தச் சகதியில் நடந்து தான் இந்த இடத்தை அடைந்துள்ளனர். அரசாங்கத்தின் கொள்கைகளைக் கண்டு அலறுபவர்கள், எங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று கதறுபவர்கள் லாபத்தில் நட்டம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஆனால் போட்ட முதலீடு முழுவதும் காணாமல் போய் தெருவிற்கு வந்து விட்டோம் என்று சொல்ல வேண்டியவர்கள் எவரும் கதறுவதில்லை. 

கதறினாலும் கேட்கக் காதுகள் இல்லை என்பதே எதார்த்தம். தொழிலில் சில நடைமுறைகள் சூழல் பொறுத்து மாறிக் கொண்டேயிருக்கும். எதிர்பாராத லாபம். லாபம். லாபத்தில் நட்டம். நட்டம். முதலுக்கே மோசம். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்பவன் முதலாளி.  எதையும் ஏற்க மறுப்பவர்கள் வாழ்நாள் முழுக்க தொழிலாளி. இதுவரையிலும் தமிழகத் தொழில் நகர வளர்ச்சியில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு மிக மிகக் குறைவு. வரி வசூலிப்பவர்களாக, அந்நிய செலாவணியைக் களவாணி போலக் களவாடிச் செல்பவர்களாகத்தான் இருந்துள்ளார்கள். தேர்தல் அறிவிப்பு வந்த உடனே கட்சி நிதி என்ற பெயரில் அலுங்காமல் வசூலித்துக் கொடுப்பவர்கள் சங்கங்களின் தங்கங்களாக இருக்கும் வரையிலும். இனியும் அப்படித்தான் இங்கே தொடரும்.

8. தரம் பழகு

பிறந்த குழந்தைக்கான ஆடைகள் எடுக்க “விலை குறைவாக இருக்கும்” என்ற பெண்களிடம் பெயர் பெற்ற ஜவுளிக்கடைக்குத்தான் தான் போக வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றி உள்ளே சென்று ஆடைகளின் விலையைப் பார்த்த போது சிரித்துவிட்டுத் திரும்ப வெளியே அழைத்து வந்து விட்டேன். இரண்டு ஜட்டியுடன் கூடிய இரண்டு குழந்தை சட்டைக்கு ரூ 500 போட்டு தள்ளுபடி என்று ரூ 400 போட்டு இருந்தனர். லாபத்துடன் கூடிய அதிகபட்ச விலை ரூ 120 என்பது இந்த அளவுக்கு விலை வைக்கக் காரணம் அங்குள்ள செலவீனங்கள். பண்டிகை தினங்கள், முக்கிய கொண்டாட்ட நாட்கள் தவிர பெரும்பாலான ஜவுளிக்கடைகளின் வியாபார லாபத்தை ஈடுகட்டப் பலவிதங்களில் சமாளித்து சந்தையில் நிற்க வேண்டிய தேவையுள்ளது. ஆண்கள் பயன்படுத்தும் சட்டை மற்றும் பேண்ட் பிட்டுகள், ரெடிமேட் சமாச்சாரங்களில் எந்தக் கடையும் அதிகம் லாபம் வைக்க முடியாது என்பதனை கவனித்துப் பார்த்தால் தெரியும்.

 காரணம் வட மாநிலங்களில் அளவு கடந்து உற்பத்தியாகும் துணிகளை 120 நாள் கடனில் கொண்டு வந்து பிரபலக் கடைகளில் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் குழந்தைகளின் ஆடைகள், பெண்களுக்கான பிரத்யோக ஆடைகளின் சந்தை ஒப்பீட்டளவில் குறைவு. விலைகள் வானுயர உள்ளது. மக்கள் “ஷாப்பிங் அனுபவம்” பெறக் குளிர்சாதனச் சுக வசதிகள் பெற்று மயக்கத்தில் தங்கள் பணத்தை தாங்களாகவே விரும்பிக் கொடுத்து வருகின்றார்கள். காதர்பேட்டையில் குறிப்பிட்ட கடை அடையாளம் கண்டு அங்கே சென்ற போது ரூ 400க்கு ஒரு வருடம் ஒரு குழந்தை போடும் 12 வகையான பலவிதமான தரமான ஆடைகளை எடுக்க முடிந்தது. என்னைப் பாராட்ட மனமின்றி மகளிடம் நான் எடுத்த விலை எப்படி? பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். சபாநாயகர் என்பவர் எப்போதும் அரசியல் சாசனத்தில் தனி அதிகாரம் பெற்றவர் தானே? •••••• இன்று வந்த செய்தித்தாளுடன் ‘சொமாட்டோ’ விளம்பரத்தாளும் வந்து சேர்ந்தது. 

என்னிடம் காட்டாமல் மறைத்துக் கொண்டு ரகசியமாக “பெண்கள் நலக் கூட்டணி” அமைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதில் எது வாங்கினாலும் ரூ 5 என்று சொல்லி இன்றே “எங்கள் செயலியைத் தரவிறக்கம் செய்யுங்கள்” என்று ஆசை காட்டியிருந்தனர். கோபி மஞ்சுரியன், சில்லி சிக்கன், சிந்தாமணி ஆம்லேட், மசாலா ப்ரை, ஸ்மோக்கி லாலி பாப் (2 துண்டு) என்று எல்லாமே ஐந்து ரூபாய். இதுவொரு சிறப்புத் தள்ளுபடி என்று சொல்லியிருந்தார்கள். விலை குறைவு என்றதும் நாம் சம்மதிப்பேன் என்று மேல் சபையில் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றி சபாநாயகர் ஒப்புதல் கொடுத்து ஜனாதிபதியான என்னிடம் கொண்டு வந்தனர். திமுக குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களிடம் வாங்கப்பட்டதாக சொல்லப்பட்ட 2 கோடி கையெழுத்துப் போல அதை வேறு பக்கம் நகர்த்தி வைத்து விட்டு ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்று விட்டேன். வந்ததும் எங்கள் வீட்டு சபாநாயகர் கேட்டார். “தரமான பொருட்கள் தகுதியான விலையில் தான் விற்கவேண்டும். அது தான் வியாபாரம். 

தரம் அதிகமாக விலை குறைவாக இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது. அது வியாபாரத்தில் வாய்ப்பில்லை. தரம் குறைவு. அதிக விலை என்றால் அதற்குப் பெயர் கொள்ளை”, போன்ற தத்துவ முத்துக்களை உதிர்த்தால் டெல்லி கலவரம் போல மாறும் என்பதால் எளிமையாகப் புரிய வைத்தேன். “ஒரு முட்டை இன்று 5 ரூபாய். கோழிக்கறி 200 ரூபாய். தொடைக்கறி 300 ரூபாய் என்கிற நிலையில் இருக்கும் போது இவர்கள் இப்படிக் கொடுக்கக்கூடாது. கொடுக்கவும் முடியாது. ஆசைகளைத் தூண்ட வேண்டும் என்பது வியாபார யுக்தியாக இருந்தால் நீ விட்டில் பூச்சி” என்றேன். “நீங்களும் எப்போது தான் புரியும் பேசப்போறீங்கன்னு பார்க்கத்தான் போகிறேன்?” என்று கலவரம் முடிந்த பின்பு புதிய ஐபிஎஸ் ஆபிசர் டெல்லி கலவரப்பகுதிகளை வந்து பார்வையிட்ட மாதிரி என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார். நான் என்ன செய்யட்டும்?

9. தரம் என்பது விளம்பரம்.

நுகர்வோர் சந்தையில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் தரம், விலைவாசி, ஆட்சி மாறும் போது உருவாகும் ஏற்ற இறக்கம் போன்றவற்றைப் பட்டியலிட்டுப் பார்ப்பதுண்டு. சென்ற ஐந்தாண்டு ஆட்சி பாஜக ஆட்சியில் மளிகைப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருந்தது. நான் ஒவ்வொரு முறையும் மொத்தக் கடை, சில்லறை விற்பனைக் கடைகள் என்று வீட்டில் உள்ள விலைப்பட்டியலை வைத்து சுய ஆராய்ச்சி செய்து பார்த்ததுண்டு. எங்களால் இருப்பு வைக்க முடியவில்லை. வாங்கும் போதும், விற்கும் போது கணக்குக் காட்ட வேண்டியுள்ளது. எங்களால் லாபம் சம்பாதிக்க முடியவில்லை என்று ஒரு மொத்தக் கொள்முதல் கடைக்காரர் என்னிடம் புலம்பியதைக் கேட்டுள்ளேன். ஆனால் கடந்த ஆறு மாதத்தில் விலைகள் மேலேறிக் கொண்டு இருக்கின்றது என்பதனை கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. இந்த முறை மளிகைச் சாமான்கள் வாங்கிய போது உறுதியாக உணர்ந்து கொள்ள முடிந்தது. ••••• 

இத்துடன் நம் நுகர்வோர் சந்தையில் உள்ள பொருட்கள், அதன் மூலம் இவர்கள் அளிக்கும் தரம், தொடர்பில்லாத விலைகள் போன்றவற்றையும் கவனிப்பதுண்டு. ஆடம்பரப் பொருட்களைக் கண்டு கொள்வதில்லை. இருப்பவன் வாங்குகிறான். அது குறித்து நமக்குத் தேவையில்லை. ஆனால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன்படுத்தும் பொருட்களை வைத்து எந்த அளவுக்கு இங்குள்ளவர்கள் (நிறுவனங்கள்) கொள்ளையடிக்கின்றார்கள் என்பதனை குடும்பத்தினருக்கு அவ்வப்போது காரண காரியத்தோடு புரிய வைப்பதுண்டு. இன்றைய சூழலில் பெண்களுக்கு பாக்கெட் மசாலாப் பொடி என்பது வரப்பிரசாதமாக உள்ளது. அரைத்துப் பயன்படுத்துவது என்பது இனி வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு வாழ்க்கைச் சூழல் மாறியுள்ளது. இந்தச் சூழல் தான் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வணிக லாபத்தைத் தந்து கொண்டிருக்கின்றது. ••••• 

சமீபத்தில் ஆச்சி மசாலா குறித்து இணையத்தில் வெகு வேகமாகப் பல விசயங்கள் பரப்பப்பட்டது. அது சக்தி மசாலாவுக்கு சாதகமான சந்தையை உருவாக்கியதா என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் வீட்டில் எக்காரணம் கொண்டு இந்த இரண்டு மசாலாக்கள் மட்டுமல்ல? எந்த மசாலாக்களையும் வாங்கக்கூடாது என்பது தான் என் கட்டளையாகவும் விருப்பமாகவும் இருக்கும். காரணம் இரண்டுமே தரம் என்பது அதலபாதாளம். வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காகச் சமீபத்தில் வாங்கிய சக்தி மிளகாய்ப் பொடியை அப்படியே உடைத்து மகளிடம் மோந்து பார் என்றேன். மீனில் தடவி நாக்கில் வைத்துப் பார் என்றேன். என்னப்பா காரம் என்பதே இல்லை என்றார். அதாவது மிளகாய்ப் பொடி என்கிற ரீதியில் அதுவொரு பொடி. அவ்வளவு தான். ஒவ்வொரு பொடிகளும் இப்படித்தான் இங்கே நுகர்வோர்க்கு வந்து சேர்கின்றது. •••••

 மிளகாயில் நல்ல காரம், சுமாரான காரம் என்று இரண்டு ரகம் உள்ளது. குண்டு மிளகாய், ஒல்லி மிளகாய், வத்தல் மிளகாய் என்று ரகம் ரகமாக உள்ளது. எந்தத் தரத்தில் வாங்கினாலும் அதற்கான தரம் இருக்கவே செய்கின்றது. கடித்தால் ஓரளவுக்குக் காரமாகத்தான் உள்ளது. ஆனால் மசாலாப் பொடி நிறுவனங்கள் அளிக்கும் எந்தப் பொடியும் அதன் இயல்பான தரத்திற்கு இல்லவே இல்லை. சரி இவர்கள் விற்கும் விலை வாசியைப் பொருத்து இப்படிச் செயல்படுகின்றார்களா? சந்தையில் பயங்கரமான போட்டி நிலவுகின்றது. இதற்கு மேல் தரம் கொடுக்க முடியாதா? என்பதனை வேறு பக்கமாக யோசித்து ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுப் பார்த்த போது வேறொரு உண்மை தெரிந்தது. ••••• 

மசாலாப் பொடிகள் எந்த அளவுக்குச் சந்தையில் விற்கப்படுகின்றது என்பதற்கு சில உதாரணங்கள். (கரம் மசாலா 50 கிராம் ரூ 35, பிரியாணி மாசாலா 20 கிராம் ரூ 12, சிக்கன் மசாலா 50 கிராம் ரூ 27) அதாவது உத்தேசமாக ஒரு கிலோ மசாலா என்பது இன்று சந்தையில் விற்கப்படுவது (மிகவும் குறைவாகக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும்) ரூ 550. ஆனால் இவர்கள் கொடுக்கும் மிளகாய்ப் பொடியை பாக்கெட் உடைத்து அப்படியே கண்ணில் தடவிக் கொண்டால் கூட ஒன்றும் செய்யாது என்கிற நிலையில் உள்ளது. •••• 

மிளகாய் வாங்கி காய வைத்து அறவுக்கூலிக் கொடுத்து, கழிவு நீக்கி, எடை குறைவு கணக்கில் எடுத்துக் கொண்டு மொத்தமாகக் கணக்குப் போட்டுப் பார்த்த போது சில உண்மைகள் புரிந்தது. 7 கிலோ வாங்கும் போது .750 கிராம் காணாமல் போய்விடுகின்றது. அறவுக்கூலியோடு ஆறே கால் கிலோவுக்கு மொத்தச் செலவு 1430 ரூபாய் வருகின்றது. ஒரு கிலோவுக்கு ரூபாய் 227 வருகின்றது. 100 கிராம் ரூ 23 என்கிற அளவுக்குத்தான் வருகின்றது. கண்ணில் நீர் வரும் அளவுக்கு (இயல்பான தரத்தில் உள்ள மிளகாய்) உள்ளது. அதாவது ஒரு கிலோ தரமான மசாலாப் பொடி 230 ரூபாய். இதற்கு மேல் ஐம்பது சதவிகிதம் (அனைத்து செலவீனங்கள், லாபம், விளம்பரங்களின் செலவு) என்று வைத்துக் கொண்டாலும் 345 ரூபாய் வருகின்றது. விளம்பரங்களுக்குக் கொண்டு போய் கொட்டிக் கொடுத்து, தரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பிரபல்ய முகத்தைப் பார்த்தால் இவர்கள் வாங்கி விடுவார்கள் என்று நம்பி இவர்கள் செய்துகொண்டிருக்கும் தொழில் என்பது வேறுவிதமாகவே தெரிகின்றது. இவர்கள் அடிக்கும் கொள்ளை என்பது நாளுக்கு நாள் அளவுக்கு அதிகமாகப் போய்க் கொண்டேயிருக்கிறது. உள்ளூர் சந்தையை ஆதரிக்க வேண்டும் என்பவர்கள் அவர்கள் அளிக்கும் தரத்தையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். •••••

 இதில் மற்றொரு கிளைப் பிரிவையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மசாலாப் பொடி அறைக்கும் இடங்களில் சிந்தும் பொடிகளை ஒன்றாகச் சேர்த்து வைத்துள்ளார்கள். அதனைத்தான் தெருவோர மீன் மற்றும் கோழிக்கடைகள் மிகக்குறைவான விலைக்கு வாங்கிக் செல்கின்றார்கள். அதுவொரு கலவையான பொடி. அத்துடன் அவர்கள் சேர்க்கும் பல சமாச்சாரங்களைக் கொண்டு சுடச்சுட, வண்ண வண்ண நிறத்தில் உங்களுக்குப் பொறித்துக் கொடுக்கின்றார்கள். உண்ணும் போது சுவையாக இருப்பது போலத் தோன்றும். நாளாக உள்ளே சென்றது அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும். இது பயமுறுத்தல் அல்ல. இன்று கோழி மற்றும் மீன் பொறித்து விற்கும் (தெருவோரக்கடைகள்) சந்தையென்பது இன்று சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. இதே போல 5 ரூபாய் டீ 5 ரூபாய் வடை என்பது எளிய மக்களுக்கு விருப்பமானதாக, தேவையாகவும் உள்ளது. அதற்குப் பின்னால் உள்ள சந்தைகளும் கொடூரமாகவே உள்ளது. இதற்கெல்லாம் எங்கே சார் நேரம் இருக்கிறது? என்று சொல்லாதீர்கள். உணவு தான் மருந்து. மருந்து தான் உணவு. வெளிநாடு என்றால் வாய்ப்பில்லை. உள்ளூர் தானே? வீட்டுக்காரம்மாவுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் தான் உங்கள் ஆரோக்கியத்திற்கான மருத்துவர். நாம் தான் முழித்துக் கொள்ள வேண்டும். 

10.பேரம் பேசாதீர்கள் 

வங்கிகள் ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் வணிகத்தைப் பற்றிப் பேசினால் உங்களுக்கு எரிச்சல் வரக்கூடும். எப்போதுமே கட்சி சார்ந்த “கண்ணாடியை” மாட்டிக் கொள்ள நினைக்கும் தமிழர்கள் அதனை தங்களின் கௌரவம் என்று கருதுகின்றார்கள். ஆனால் கட்சிகளை தன் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டு காரியத்தில் கண்ணாக இருக்கும் முகேஷ் அம்பானி தற்போது இந்தியச் சந்தையை படிப்படியாக தன் வசம் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அவர் தற்போது செய்து கொண்டிருக்கிற காரியத்தைக் கவனித்துப் பாருங்களேன். 9 லட்சம் கோடி மதிப்பு கொண்ட இந்திய நிறுவனமும், 2018- 2019 ஆம் ஆண்டு 6.23 லட்சம் கோடி வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்த நிறுவனமும், இந்திய அரசு வருடந்தோறும் வசூலிக்கும் மொத்த வரித் தொகையில் 5 சதவிகிதத்தை அரசுக்குச் செலுத்தும் நிறுவனமாகவும், ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் முகேஷ் அம்பானி டெலிகாம் துறையைப் போல ரீடெய்ல் துறையில் தற்போது அதிகக் கவனம் செலுத்திக் கொண்டு வருகின்றார். 

இன்றைய மதிப்பில் 12,000 கோடி மதிப்புள்ள வீட்டில் வசிக்கும் அம்பானியின் மூத்த மகன் தென் இந்தியா பக்கம் பார்வை செலுத்தியுள்ள இந்த நேரம் முக்கியமானது. அவர் இப்போது கவனம் செலுத்தும் உள்நாட்டு (Retail) வணிகத்துறை “ஜியோ மார்ட்” சேவையின் சார்பாகக் கோவையில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் கோவையின் சுற்றுப்புறத்தில் இந்தக் கடைக்குச் சொந்தமான 29 கடையையும் 152.5 கோடி கொடுத்து வாங்கி 7.86 லட்சம் கடையின் ஷேர்களையும் கைப்பற்றியுள்ளார். தென் இந்தியா என்பது இனி உள்நாட்டு வர்த்தகத்தில் அவரின் முக்கிய இலக்கு என்பது தெளிவாகின்றது. 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வருடம் 415 கோடி வியாபாரம் செய்துள்ளது. இப்போது அதன் வருட வர்த்தக மதிப்பு 487 கோடி.  

இந்தியா முழுக்க இருக்கும் ரிலையன்ஸ் கடைகளின் எண்ணிக்கை 10,415. இதன் வியாபார மதிப்பு வருடத்திற்கு 1.3 லட்சம் கோடி. நீங்கள் இணையத்தில் பொங்குவதற்கு முக்கியக் காரணம் ரிலையன்ஸ் ஜியோ காட்டிய பாதை தான் என்பதை மறுக்க முடியாது. ஜிபி என்ற ஜிலேபியைத் தட்டு நிறைய வைத்துக் கொடுத்தார். தின்று கொண்டே அம்பானி ஒழிக என்று கத்த முடிகின்றது. இவர் இந்தியர்களுக்கு ஜிலேபியைக் கொடுத்த பலன் என்ன தெரியுமா? ஏர்டெல் அரசுக்குக் கட்ட வேண்டிய தொகை 53 ஆயிரம் கோடி எனவும் வோடபோன் 35 கோடியும் என்று தெருவில் கொண்டு வந்து நிறுத்தியது. உச்சநீதிமன்றம் கதறி மிரட்டிய பின்பு மத்திய அரசு பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கின்றது. “எதிரியின் ஆயுதத்தை அழிப்பது முதல் கடமை” என்று ஜியோ தொடங்கியது. வணிகமும் போரும் அறநெறிகளுக்கு அப்பாற்பட்டது. லாபம் மட்டுமே ராஜ மகுடம். ரிலையன்ஸ் ராஜபாட்டை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. 

ஏர்டெல் வேண்டா வெறுப்பாகப் பாதிக்கட்டியுள்ளது. வோடாபோன் இனி சந்தையில் தாக்குப்பிடித்து நிற்க முடியுமா? என்ற நிலையில் வந்து உள்ளது. சந்தையில் என்ன தாக்கத்தை உருவாக்கியது?  2019 டிசம்பர் ஏர்டெல் வாடிக்கையாளர் 11,000 பேர்கள் வெளியேறினர். வோடாபோன் 32 மில்லியன் பேர்கள் வெளியேறினர். ரிலையன்ஸ்ல் 83,000 (82.308) பேர்கள் சேர்ந்துள்ளனர். தற்போது ஜியோவுக்கு 28 கோடி வாடிக்கையாளர் உள்ளனர். Retail & Telecom இரண்டு துறைகளை ரிலையன்ஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பங்குச் சந்தையில் தனியாகப் பட்டியலிடப் போகின்றார் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. அந்த நிறுவனம், இணைய வர்த்தகத்தில் களமிறங்கும் பட்சத்தில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்குப் போட்டி உருவாக வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் Exxon Mobil Corp. 

எரிபொருள் சந்தையைப் பெரிய அளவில் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. அதே போல அமெரிக்க டெலிகாம் துறையை AT&T Inc என்கிற நிறுவனமும், அமெரிக்காவின் ரீடெயில் வியாபாரத்தை Amazon நிறுவனமும் பெரிய அளவில் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் எரிபொருள், டெலிகாம், ரீடெயில் என மூன்று பெரிய வியாபாரச் சந்தையையும், நம் ரிலையன்ஸ் தான் பெரிய அளவில் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆக தன் வியாபாரத்தை மேலும் வளர்ப்பதில் ரிலையன்ஸுக்கு பெரிய தடை ஒன்றும் இருக்காது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45 % பங்குகளை வைத்திருக்கும் போதே உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார் முகேஷ் அம்பானி. இதே போல ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனங்களையும் பட்டியலிட்டு ஒரு கணிசமான பங்கைக் கையில் வைத்துக் கொண்டால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இன்னும் எவ்வளவு அதிகரிக்கும். ஜியோ நிறுவனத்துக்குத் தற்போது 28 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நேரடியான ரீடெய்ல் கடைகள், நாடு முழுவதும் உள்ள 6,500 நகரங்களில் 10,000-க்கும் அதிகமான இடங்களில் உள்ளன. இவை அனைத்தும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப் போகின்றார்கள். அமேசான் “நம்ம கடை” என்பது போல ஜியோமார்ட் தற்போது “நாட்டின் புதிய கடை” என்கிற டேக்லைன் உடன் அறிமுகம் செய்துள்ளது. பெரு நகரம் முதல் சிறிய கிரமங்கள் வரையில் இருக்கும் மக்களை அடையவும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், பிராண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய மக்கள் என அனைவரையும் ஒரே கோட்டில் கொண்டு வரப் போகின்றார்கள். “இங்கே பேரம் பேசாதீர்கள்” என்ற கலாச்சாரத்திற்கு நாம் மாறப் போகின்றோம். 11. குணநலன்கள் இதுவரையிலும் எதார்த்த உலகத்தையும், நாம் எதிர்பார்க்கும் தொழில் உலகத்தையும் பார்த்தோம்.  “இருட்டு இருந்தால் வெளிச்சம் வந்தே தீரும்” என்பதனை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும்.  

சமூக மாற்றங்கள் நம் சிந்தனைகளை மாற்றும். எதார்த்த உலகம் எரிச்சலுட்டும்.  ஆர்வத்தை மட்டுப்படுத்தும். நம் திறமைகள் வீணாகப் போகின்றதே என்ற அங்கலாய்ப்பும் இருக்கத்தான் செய்யும்.  வழிகாட்ட ஆளில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை. தொழில் உலகம் என்பது பயணம். முடிவில்லாத பயணம். அது உங்கள் வாழ்நாளில் சாத்தியப்படலாம். உங்கள் தலைமுறைக்கு வழிகாட்டியாகவும் மாற வாய்ப்புண்டு. கற்றுக் கொள்ள தயங்காதீர்கள். தொழில் முனைவோர் கீழ்க்கண்ட குணநலன்களைப் பெற்றிருத்தல் அவசியம். தாங்கள் ஒரு தொழிலை நிறுவி வெற்றி பெறச்செய்யும் சாதனையில் ஈடுபட்டிருகிறோம் என்ற எண்ணம் மனதின் அடித்தளத்தில் இருக்க வேண்டும். சிறு தொழிலைத் தொடங்கி நடத்தும்போது தங்களுக்கென்று பொருள் ஈட்டுவதுடன் வேறு பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுத்து உதவ முடியும். இது தவிரத் தொழில் மூலம் இயற்கையின் வளங்களை நுகர்வோர்க்கு வாழ்க்கை வசதிகளாக மாற்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பையும் ஏற்கின்றனர். தொழிலில் ஈடுபட விரும்புவோர் மற்றவர்களை விடச் சிறப்பான சில குணநலன்களைப் பெற்றிருத்தல் அவசியம்.

 1. தொழில் தாகம் தொழிலைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற தணியாத தாகம் வேண்டும்.
 2. சிரித்த முகம் நகல்வல்லர் அல்லரார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்(று) இருள். பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற்காலத்திலும் இருளில் கிடப்பதாகும். எல்லாத் தொழிலிலும் பொதுமக்களுக்குடன் நெருங்கிப்பழகும் அவசியம் ஏற்படும். ஆகவே, தொழில் முனைவோர் பொது மக்களிடம் சிரித்துப் பழகுகின்ற பழக்கத்தையும், குணத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பாக ஏற்கனவே தொழில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரும்பிப் பழக வேண்டும். 
 3. மனதில் உறுதி இருக்க வேண்டும் முன் வைத்த கால் பின்வைக்காதே என்பதை மனதில் கொள்ள வண்டும். தொழிலின் தொடக்கக் காலத்தில் பல தடைகளை எதிர்கொள்ள நேரிடும். அச்சமயங்களில் மனம் தளராத உறுதி கொள்ள வேண்டும்.
 4. முயன்றால் முடியும் தொடங்கும் தொழில் வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை. மனமுண்டானால் வழி உண்டாகும். போன்ற பழமொழிகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். 
 5.  5 எதையும் தாங்கும் இதயம் தொழிலில் வெற்றியும் தோல்வியும் இயற்கை. தோல்வியைக்கண்டு துவளாத மனம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் தொழில் துறையின் வெற்றிக்குத் தேவையான ஒன்று.
 6. தலைமைப் பண்பு எந்தத் தொழில் அமைப்பானாலும் அதன் தலைமை நிர்வாக, முக்கியமானவர். நமக்குப் பொருள் விற்பவர்கள் ஆகிய பலர் கூட்டாக ஈடுபடுகின்றனர். அவர்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்கின்ற அறிவும் திறனும் வேண்டும். புகை வண்டியின் வேகம் அதன் இன்ஜினின் வேகத்தைப் பொறுத்தது என்பதை மனதில் கொள்ளுங்கள். 
 7. காரியத்தில் கண் தொழில் தொடங்கி நடத்தும்போது சிறு தொழிலாகப் பதிவு செய்தல், பஞ்சாயத்து, நகராட்சி போன்றவற்றின் அனுமதி பெறுதல், வங்கிக்கடன் பெறுதல், மின் இணைப்புப் பெறுதல், விற்பனை வரி பதிவு செய்தல், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறுதல் போன்ற பல அரசு அனுமதிகளைப் பெற, வேண்டியவற்றைத் தாமதமின்றிச் செய்ய வேண்டும். இம்முயற்சியில் பல நேரங்களில் சத்தியச் சோதனை வரும். வரும்போது நேர்மைக்காகப் போராட வேண்டும் என்பதைக்கொஞ்சம் ஒதுக்கி வந்து விட்டுக்காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும். 
 8. பொறுப்பேற்றல் தொழில் நடத்தும்போது பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். தரமான பொருள்களைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்தல், ஊழியருக்கு நியாயமான ஊதியம் வழங்குதல், அரசு விதிகளை நிறைவேற்றுதல், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துதல், வரி செலுத்துதல் போன்ற பல பொறுப்புகளை விரும்பி நிறைவேற்ற வேண்டும். 
 9. உழைப்பு தொழில் முனைவோர் காலநேரம் பாராது கடினமாக உழைக்க வேண்டும். காரியம் கை கூடும் வரை மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது உழைத்திட வேண்டும். 
 10. முடிவெடுத்தல் தொழில் உலகம் கடல் போல் பரந்துபட்ட ஒன்று. இதில் நாள்தோறும், கணந்தோறும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. அவற்றின் தாக்கங்களினால் தங்கள் தொழிலுக்கு ஏற்படும் விளைவுகளையும், அதைச் சமாளிப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். 
 11. விழிப்புணர்வு தொழில் உலகம் கடல் போல் பரந்துபட்ட ஒன்று. இதில் நாள்தோறும் , கணந்தோறும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. அவற்றின் தாக்கங்களினால் தங்கள் தொழிலுக்கு ஏற்படும் விளைவுகளையும், அதைச் சமாளிப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். 
 12. தொலைநோக்கு தாங்கள் ஈடுபட்டுள்ள தொழிலின் எதிர்கால வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொலைநோக்குப் பார்வை அவசியம். அதற்கேற்பச் செயல்பட வேண்டும். 
 13. நன்மதிப்பு தொழிலில் வெற்றிபெற நன்மதிப்பு (Goodwill) பெரிதும் உதவுகிறது. நற்பணிகளுக்கு நன்கொடை கொடுத்தல், கல்வி மருத்துவ நிறுவனங்கள் நடத்துதல், ஆக்கப்பணிகளுக்குத் துணை நிற்றல், எளிமையாக, நேர்மையாக வாழ்தல், போன்றவற்றால் இந்த நன்மதிப்பைப்பெற முடியும். 
 14. திசை திரும்பாமை எடுத்த தொழிலில் கவனமாக இருக்கவேண்டும். வெற்றி பெறும் வரை வேறு திசையில், தவறான பாதைகளில் கவனம் செலுத்தக் கூடாது. வெற்றியினால் கர்வமும், திசை திருப்பமும் புகாவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு தொழிலில் கவனம் கொள்வது வெற்றிக்கு வழி வகுக்கும். 

நன்றி: ஜோதிஜி

Related Articles

பெண்களை தரக்குறைவாக பேசி நெட்டிசன்களிடம்... போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் "நேர்கொண்ட பார்வை". சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச். வினோ...
அசீஃபா பானுவின் மரணத்துக்கு நீதி வழங்கப்... ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்துக்கு உட்பட்ட ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி அச...
உலக சினிமா “பெண் இயக்குனர்கள̶்... 1.Lee jeong hyang (The way home) 1964இல் தென்கொரியாவில் பிறந்தார்.  அங்கிருக்கும் ஜோன் பல்கலைக்கழகத்தில் பிரஞ்ச் இலக்கியம் படித்த பின் திரைப்பட கலைகள...
பனை மரத்தைப் பற்றிய முழுத்தகவல்கள்!... பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை,ஆண் பனை பெண் பனை கூந்தப்பனை தாளிப்பனை குமுதிப்பனை சாற்றுப்பனை ஈச்சம்பனை ...

Be the first to comment on "தொழில் தொடங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்! – பகுதி 2"

Leave a comment

Your email address will not be published.


*