காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக வாக்காளர்களைக் கவரும் வகையில் நடந்து, சைக்கிளில் சென்று, அட்டையில் செய்த எரிவாயு உருளையைத் தலையில் சுமந்து மலூர் பகுதியில் பேரணியாக சென்றார். மலூர் , ஹாஸ்கோட், தேவனஹள்ளி , மற்றும் தொத்தபலாபூர் ஆகிய இடங்களில் நேற்று(திங்கட்கிழமை) பேரணியாகச் சென்றார். வழி நெடுகிலும் ராகுலுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. மலூர் பகுதியில் அவரது ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கு முன்பாகவே அங்கே மக்கள் கூடியிருந்தனர். சாலையின் இரு மருங்கிலும் , கட்டிடங்களின் உச்சியிலும் மக்கள் ராகுலை காணக் குழுமி இருந்தனர்.
நடந்தும் சைக்கிளில் சென்றும் வாக்காளர்களைக் கவர்ந்த ராகுல் காந்தி
பேரணியின் போது தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராகுல் காந்தி, யாரும் எதிர்பாராத நேரத்தில் அனைவரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தனது வாகனத்தில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் அவருக்காக ஒரு சைக்கிளும் கொண்டு வரப்பட்டது. பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் ராகுல் அதிலேறி பயணம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் பெண் ஆதரவாளர்கள் சிலர், அட்டையில் செய்த எரிவாயு உருளையைத் தலையில் சுமந்து பேரணியில் நடந்து சென்றனர். எரிவாயு உருளையின் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் ராகுலும் ஒரு போலி எரிவாயு உருளையைத் தலையில் சுமந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது, அதன் மீது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெருக்கல் குறி வரையப்பட்டிருந்தது
பேரணியின் முடிவில் தனது வாகனத்துக்குத் திரும்பி மைக்கை பிடித்த ராகுல், சட்டெனத் தனது மனதை மாற்றிக்கொண்டு மீண்டும் கீழிறங்கி மக்களைச் சந்தித்தார். பிறகு மூவர்ண நிறம் பூசப்பட்டிருந்த மாட்டு வண்டியில் ஏறி தனது பேச்சைத் தொடங்கினார். பிரதமர் மோடி, எடியூரப்பா மற்றும் பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்துப் பேசிய ராகுல், பெட்ரோல் மற்றும் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்தும் பேசினார். மேலும் பிரதமர் மோடி தொடர்ந்து ரெட்டி சகோதரர்கள் போன்ற குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வதாகவும் குற்றம் சாட்டிப் பேசினார்.
ஹாஸ்கோட் பகுதியில் கூடியிருந்த மக்கள் ராகுலுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பெரிய மலர் மாலை அணிவிக்க ராகுலின் ஆதரவாளர்கள் காத்திருந்தனர், இருப்பினும் ராகுல் அதை ஏற்க மறுத்துவிட்டார். ஹாஸ்கோட் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் பேசிய ராகுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கர்நாடகாவில் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும் என்றும், வீடற்ற யாரும் கர்நாடகாவில் இருக்க மாட்டார்கள் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் வீடுகள் கட்டி தரப்படும் என்றும் தெரிவித்தார்.
கர்நாடக தேர்தல் களம் தனது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாக்குப்பதிவு மே 12 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 15 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.
Be the first to comment on "நடந்து, சைக்கிளில் சென்று கர்நாடக வாக்காளர்களைக் கவரும் ராகுல் காந்தி"