மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். ஜெயலலிதா இறந்து ஓராண்டு கழித்து அவருக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
சென்னை பெருநகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தமிழக அரசின் கரையோர மண்டல மேம்பாட்டு ஆணையம் ஆகியவை பல்வேறு விதிகளுக்கு உட்பட்டு இந்த நினைவிடத்தைக் கட்ட இருக்கின்றன. இருப்பினும் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே தான் இந்த நினைவுச்சின்னம் அமைய இருக்கிறது.
பிரச்சனைகளுக்கு இடையே அமைக்கப்படும் நினைவுச்சின்னம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதன் மூலம், ஓபிஎஸ்-இபிஎஸ் அணியின் செல்வாக்கு அதிமுக வாக்காளர்களின் மத்தியில் பன்மடங்கு உயர வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சூழல் தான் நாட்டில் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்ற தமிழக மாணவனின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் உயிரிழந்தது கூடத் தெரியாமல் தேர்வறையில் அமர்ந்து அந்த மாணவன் தேர்வெழுதி கொண்டிருந்தான். இந்தக் காட்சி தமிழகமெங்கும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் போதுமான அளவுக்குத் தேர்வு மையங்கள் ஒதுக்காமல் மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைய விட்டதும் கூட பல்வேறு அமைப்புகளால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அடிக்கடி வருகை தருபவர்களாக ஓபிஎஸ் , இபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் நினைவாக அமைக்கப்பட இருக்கும் இந்த நினைவிடம் அவரது ஆதரவாளர்களிடம் ஆளுங்கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் என்பது நிச்சயம்.
Be the first to comment on "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது"