சூதுகவ்வும் என்ற தனது முதல் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி. அவர் சில வருடங்கள் கழித்து தன்னுடைய ஆஸ்தான நடிகரான விஜய்சேதுபதியை ஹீரோவாகவும் மடோனா செபாஸ்டின்னை ஹீரோயினாகவும் நடிக்க வைத்து தன்னுடைய இரண்டாவது படமான காதலும் கடந்து போகும் படத்தை எடுத்தார். கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்கான இந்த படம் ரிலீசான சமயத்தில் பெரிதும் கண்டுகொள்ளப்படவில்லை. படத்திற்கு போதிய விளம்பரம் இல்லாததால் படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவான சில பாடல்கள் அந்தப் படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்கச் செய்தது.
அப்படம் தியேட்டரை விட்டு கிளம்பிய பிறகுதான் அந்த படத்தை பற்றி நிறைய பேர் பேசவே ஆரம்பித்தார்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான காலகட்டம்தான் காதலும் கடந்து போகும் படம்.
வேலையின் அவசியம்:
இந்த படத்தில் மடோனா செபாஸ்டினும் விஜய் சேதுபதியும் எதிரெதிர் வீட்டில் எதிரும் புதிருமாக இருப்பார்கள். மடோனா செபாஸ்டின் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்க திடீரென அவருடைய வேலை பறிபோகிறது. அதேபோல விஜய்சேதுபதி தான் பணியாற்றிய ரவுடி கும்பல் தன்னையும் ஒருநாள் பெரிய தாதாவாக மாற்றிவிடும் என்று காத்திருக்கிறார். இருவருமே தங்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப் போகும் என்பது அறியாத அப்பாவிகளாக வாழ்ந்து வருகிறார்கள். மடோனா செபாஸ்டின் தன்னுடைய திறமைக்கு ஏற்ற ஒரு வேலையை தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறார், அப்படி அவர் இன்டர்வியூக்கு போகும் இடங்களில் பல அவமானங்களை சந்திக்கிறார். ஒரு சிலர் பாட சொல்கிறார்கள் ஒரு சிலர் நடனமாட சொல்கிறார்கள் இன்னொருத்தன் படுக்க வரியா என்று கேட்கிறான்.
இப்படி கம்பெனி கம்பெனிகளாக அலைந்து திரிந்த போதும் தனக்கேற்ற சரியான வேலை கிடைக்கவில்லை என்பதால் கையில் இருக்கும் காசை எல்லாம் தொலைத்துவிட்டு சாப்பிடுவதற்கு கூட காசு இல்லாமல் பட்டினி கிடந்து ஒருநாள் மயங்கி விழுந்து கிடக்கிறார். ஒருபக்கம் நான் கம்பெனியில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி தன் வீட்டினரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் செலவுக்கு காசு இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் அந்த ஏரியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சேல்ஸ் மேனாக பார்ட் டைம் ஜாப்க்கு செல்கிறார் மடோனா. அப்போது அங்கு வரும் எதிர்வீட்டு விஜய்சேதுபதி அவரைப் பார்த்து நீ என்ன இங்க இருக்க நீ ஒழுங்கா படிச்ச படிப்புக்கு வேலை தேடி அந்த வேலையை பாரு என்பார். தன் கண் முன்னே வேலை கிடைக்காததால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் ஒரு பெண்ணிற்கு உதவும் மனப்பான்மையுடன் விஜய்சேதுபதி நடந்துகொள்கிறார்.
படுக்க வரியா என்று தன் எதிர் வீட்டுப் பெண்ணான மடோனாவிடம் கேட்ட அந்த ஆணை தேடிச் சென்று அடித்து நொறுக்குகிறார். இன்னொரு பக்கம் அந்தப் பெண் கேட்டுக்கொண்டாள் என்பதற்காக படிக்காத தன்னை படித்த பட்டதாரியாக காட்டிக்கொள்ள மிகுந்த சிரமம் படுகிறார் விஜய் சேதுபதி. அந்தப் பெண்ணிற்கு எப்படியாவது ஒரு நல்ல வேலை கிடைத்து விட வேண்டும் என்று மனதார நினைக்கும் விஜய் சேதுபதி தன்னால் என்னென்ன காரியங்கள் எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து ஒரு இன்டர்வியூவில் கால நேரத்தை மாற்றி அமைக்கிறார். அவருடைய முயற்சி வீண்போகவில்லை. மடோனாவிற்கு அவர் எதிர்பார்த்த மாதிரியே ஒரு நல்ல கம்பனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. இப்படிப்பட்ட விஜய்சேதுபதியை தான் இதே படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி இந்த கதிர் ஒரு தருதலை எதற்குமே ஆகாதவன் என்று திட்டி தீர்ப்பார். அப்படி திட்டு வாங்கியதால்தான் ஒரு வேலை என்பது எவ்வளவு முக்கியம் என்பது விஜய்சேதுபதிக்கு புரிந்திருக்கிறது. பொட்ட புள்ள தானே பேசாம கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷன் சம்பாதிச்சு போடறது தின்னுகிட்டு நல்லா சொகுசா இரு என்று மற்ற ஆண்களை போல மட்டம் தட்டாமல் ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன யாராக இருந்தாலும் அவருக்கு நல்ல சம்பளத்தில் ஒரு வேலை என்பது அத்தியாவசியமான ஒன்று. ஆக வேலையின் அத்தியாவசியத்தை இந்த படத்தில் முதன்மையான நல்ல விஷயமாகப் பார்க்கலாம்.
நிதானம்:
இரண்டாவதாக இந்தப் படத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் நிதானம் சம்பந்தப்பட்ட காட்சிகள். இன்னும் சில மணி நேரங்களில் இன்டர்வியூ தொடங்கப் போகிறது என்பதால் தான் பயணித்துக் கொண்டிருக்கும் கால் டாக்சி டிரைவரிடம் இன்னும் கொஞ்சம் வேகமா போங்க என்று கேட்டுக்கொள்வார் மடோனா. அதற்கு அந்த கால்டாக்சி டிரைவரோ இதுக்கு மேல இந்த வண்டி வேகம் போகாதுங்க, வண்டி ஓனருங்க அப்படி செட் பண்ணி வைத்திருக்கிறார்கள் என்று சொல்வார். அப்போது அந்த கால் டாக்ஸியில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன என்ற மரியான் பட பாடல் ஓடிக்கொண்டிருக்கும். அந்தப் பாடலை அப்போதைய சூழலுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத மடோனா எரிச்சலாகி அண்ணா தயவு செய்து இந்த பாட்ட நிறுத்துறீங்களா என்று கேட்கிறார். நல்ல பாட்டு தானே என்று சொல்லிவிட்டு அந்த பாடலை கால் டாக்சி டிரைவரும் நிறுத்துகிறார். இந்த காட்சியில் வாழ்க்கையில் நிதானம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை மிக அழுத்தமாக காட்டியிருப்பார் நலன் குமாரசாமி. இதேபோல மடோனா செபாஸ்டின் மயக்கம் போட்டு விழுந்து கிடக்க அவரை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவார் விஜய்சேதுபதி. அப்போது வெயிட்டிங் ஹாலில் தன் அருகில் அமர்ந்திருக்கும் இளைஞனிடம் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்பார் விசே. அதற்கு அந்த இளைஞன் எனக்கு தூக்கம் இன்மை நோய் என்று சொல்வான். அந்த இளைஞனை மேலும் கீழுமாக ஒரு மாதிரி பார்க்கும் விஜய் சேதுபதி இப்படி எல்லாம் தூக்கத்தை தொலைத்துவிட்டு நாயா பேயா அலைஞ்சு ஓடி ஓடி சம்பாதிச்சு என்னடா பண்ணப் போறீங்க இந்த வாழ்க்கையை கொஞ்சம் நிதானமாக வாழ்ந்து தொலைங்கடா என்று சொல்வது போல் இருக்கும் அந்த காட்சி.
நிதானத்தின் அவசியத்தை உணர்த்தும் இந்தப்படமும் நிதானமாகவே நகர்கிறது. அதனால்தானோ என்னவோ படம் ரொம்ப ஸ்லோவா இருக்கு என்று உணர்ந்த ரசிகர்கள் இந்தப் படத்தை ரிலீஸ் ஆன டைமில் கொண்டாட தவறிவிட்டார்கள். இந்த படத்தின் கதை உருவாக்கம் ப்ரிபுரோடக்சன் ஷூட்டிங் போஸ்ட் புரோடக்சன் என அனைத்து பணிகளும் மிக நிதானமாகவே நடைபெற்றுள்ளது.
அதனால் தான் படம் மிக மெதுவாக உருவாகி மிக சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் தடுமாறி தோல்வியடைந்துள்ளது. இயக்குனர் நலன் குமாரசாமி கூட மிக நிதானமான ஆள் தான். காசுக்காக வருடத்திற்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று அரைகுறை கமர்சியல் படம் எடுத்து வைக்காமல் மனதுக்கு நெருக்கமான கதைகளை தேர்ந்தெடுத்து மிகப் பொறுமையாக தன்னுடைய படங்களை செதுக்கிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
திருட்டு:
விஜய் சேதுபதி வசித்துவரும் வசிப்பிடத்தில் புதிதாக தொடங்கப்பட்டு இருக்கிறது ஒரு சூப்பர் மார்க்கெட். அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்த அந்த ஏரியா சிறுவர்கள் அங்கு உள்ள பொருட்களை திருடி விடுகிறார்கள். அந்த சிறுவர்கள் திருடியதை கண்டுபிடித்த அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஓனர் அந்த சிறுவர்களை பிடித்து கண்டபடி திட்டிக் கொண்டும் போலீசிடம் பிடித்து கொடுப்பேன் என்றும் மிரட்டிக் கொண்டு இருக்கிறார். அப்போது அந்த இடத்திற்கு வரும் விஜய்சேதுபதி என்ன பிரச்சினை என்பதை விசாரிக்கிறார். இதுதான் பிரச்சினை என்றதும் அந்த சிறுவர்கள் திருடிய பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டு ஓனரை கடைக்கு உள்ளே அனுப்ப முயல்கிறார். அதற்கு அந்த ஓனர் அந்த சிறுவர்களைப் பார்த்து இனிமே நீங்க இந்த பக்கமே வரக்கூடாது என்று மிரட்டுகிறார். இந்த பக்கமே வரக்கூடாது என்ற வார்த்தை விஜய்சேதுபதியை கோபத்துக்கு உள்ளாக்குகிறது. சட்டென்று ஓனரை முறைத்துப் பார்த்து திருடாதன்னு சொல்லு ஆனா இனிமே வராதன்னு சொல்லாத எங்க ஏரியால கடையை போட்டுட்டு எங்களை வராதன்னு சொல்லுவியா என்று மிரட்டுவார். சட்டென்று அந்த ஓனரின் முகம் சுருங்கி விடும். இப்போது விஜய் சேதுபதி அந்த சிறுவர்கள் பக்கம் திரும்புகிறார். அவர்களை பிடித்து முதுகில் சாத்து சாத்து என்று சாத்துகிறார். இனிமேல் திருடுவியா திருடுவியா என்று அவர்களை திட்டுகிறார். தான் ஒரு வேலை இல்லாதவன் என்ற போதிலும் பணக்கார திமிர் பிடித்தவனை எதிர்த்து கேள்வி கேட்கும், தனக்கு தெரிந்த வேண்டபட்டவர்களின் மகன்கள் என்ற போதிலும் அவர்கள் செய்த தவறுக்கு அவர்களை தண்டித்த விஜய்சேதுபதியின் குணம் அவரை ஹீரோவாக காட்டுகிறது.
ரவுடி தொழில் வேண்டாம்:
தான் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு ரவுடிக் கும்பலில் அப்பாவியான ஒரு இளைஞன் வந்து வேலைக்கு சேர்வதை பார்க்கிறார் விஜய் சேதுபதி. பார்த்தா நல்ல பையன் மாதிரி தெரியுற உனக்கு எதுக்கு இந்த வேலை என்று அவனிடம் எரிந்து விழுகிறார். ரொம்ப பயந்த சுபாவம் ஆன வெகுளியான அந்த இளைஞனை தன்னுடனே வைத்துக் கொள்கிறார் விஜய் சேதுபதி. நீ நினைச்சுகிட்டு இருக்கிறமாதிரி இந்தத் தொழில் ரொம்ப சந்தோஷமான தொழில் கிடையாது, உதாரணத்துக்கு நீ என்னைய பாரு என் கூட இருந்து நான் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பிரச்சினைகளை சந்திக்கறேங்கிறத நீ என்னைய வெச்சு தெரிஞ்சுக்கோ என்று அந்த இளைஞனை தன்னுடனே எங்கு போனாலும் அழைத்துச் செல்கிறார். பாக்சிங் கூடத்துக்குள் நுழைந்து சண்டை போட முயலும் போது அந்த இளைஞன் பயந்து பின்வாங்குகிறான். அப்போது விஜய் சேதுபதி அந்த இளைஞன் மீது மேலும் கோபம் அடைகிறார். உனக்கு கண்டிப்பா இந்த தொழில் செட் ஆகாது என்று அவனிடம் அறிவுறுத்துகிறார். இந்த வேலையை விட்டு போ இந்த வேலையை விட்டு போ என்று அவனை அடிக்கடி துரத்திக் கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த இளைஞன் அவரை விட்டு விலகுவதாக இல்லை.
என்னடா உனக்கு தெரியும் இந்த வேலையை பத்தி… அவங்க செஞ்ச தப்புக்கு உன்னைய மாதிரி அப்பாவிங்கள ஜெயிலுக்கு அனுப்புவாங்க. நீ ஜெயிலுக்கு போயிட்டு வந்தா உன்னைய தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்கனு நினைக்கிறியா… ஒன்னுத்துக்கும் இல்லாம ஆக்கிடுவாங்க டா… போயி ஏதாவது பெட்ரோல் பங்கு அந்த மாதிரி ஏதாவது நல்ல வேலையை செய்யி… என்று அவனை அடித்து துரத்துவார். கடைசி கிளைமாக்ஸில் அந்த இளைஞனும் சரி அவனை பெட்ரோல் பங்க்கில் போய் வேலை செய் என்று சொன்ன விஜய் சேதுபதியும் சரி இருவருமே ஒரே பெட்ரோல் பங்கில் தான் வேலை செய்கிறார்கள்.
இப்படி பெண்களுக்கு வேலையின் அவசியம், நிதானம், திருட்டு, ரவுடி தொழில் போன்ற முக்கியமான விஷயங்களை மிகப் பொறுமையாக அழகாக படமாக்கி நம் ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி.
“வாழ்க்கையில ஒரு சில வாய்ப்புகள் ஒரு முறை தான் சார் வரும். அந்த வாய்ப்பை விட்டு விட்டால் அப்புறம் லைஃப் ஃபுல்லா அந்த வாய்ப்பை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருப்போம்.”
Be the first to comment on "காதலை தாண்டி “காதலும் கடந்து போகும்” படத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில காட்சிகள்!"