பொன்னீலன் அவர்களின் கல்வித் துறையில் இருந்து விடை பெறுகிறேன் புத்தகம் ஒரு பார்வை!

Kalvi turaiyil irunthu vitai perukiren Book Review

இது புத்தகம் பற்றிய விமர்சனமோ அல்லது விளம்பரமோ இல்லை. இந்த புத்தகம் எப்படிப்பட்ட உணர்வுகளை எப்படிபட்ட நற்கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு தருகிறது என்பதை பகிரும் எண்ணத்தில் எழுதப்பட்டவை. “கலைகளில் உயர்ந்த கலை கற்பிக்கும் கலை. வகுப்பறையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் ஆசிரியரின் எல்லா நடவடிக்கைகளும் மாணவர்கள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. எனவே ஆசிரியர் தேர்ந்த கலைஞராக தன் ஒவ்வொரு அசைவையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.” இந்த வரிகள் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் உள்ள வரிகள். இந்த வரிகளுக்கு தகுந்தது போல கற்பிக்கும் கலையை ஒரு உன்னதமான கலையாக நினைத்துக்கொண்டு ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள், கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்க வேண்டும். ஏனென்றால் இந்த புத்தகத்தில் பொன்னீலன் அவர்கள் தன்னுடைய பள்ளிக் கல்வி முதல்  பள்ளி ஆசிரியராக இருந்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரியாக வளர்ந்த பிறகு பள்ளிக் கல்வித் துறையில் இருந்து வெளியேறிய தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பான்மையான பகுதிகள் பற்றி இந்த புத்தகத்தில் விரிவாகப் பேசுகிறார். 

“பாதை தேடி…” என்ற கட்டுரையில் தொடங்கி “என் கல்வி அன்னையே…” விடைபெறுகிறேன் என்ற கட்டுரையில் முடி வருகிறது இந்த புத்தகம். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மட்டுமில்ல மாணவர்கள் இளைஞர்கள் என்று எல்லோருமே இந்தப் புத்தகத்தை கண்டிப்பாக ஒரு முறையாவது படிக்க வேண்டும். ஏனென்றால் இந்த புத்தகம் நம்பிக்கையான வார்த்தைகளை தருகிறது, நம்பிக்கையை விதைக்கிறது. 19 வயதில் பட்டம் படித்து கல்லூரியில் இருந்து வெளியே வந்து நிறைய சாதிக்கலாம் என்று கனவு கண்ட போது அடுத்தடுத்து அவருடைய வீட்டில் நடந்த துர் சம்பவங்கள் அவரை எப்படி உலுக்கியது, அவர் அதிலிருந்து எப்படி புத்தகங்கள் வாசிப்பின் மூலம் மீட்டுக்கொள்வது, எழுதுவது, எந்த வேலையையும் விடாமல் கிடைத்த இடங்களிலெல்லாம் வேலை தேடி செல்வது, நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டது, யாராவது உதவுவார்களா என்று ஏக்கத்துடன் நாட்களை கடத்தியது என்று  தன்னுடைய இளமைகால பயணங்கள்… ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க சொல்லி அறிவுறுத்திய நண்பர்கள், ஆசிரியர் தொழில் மீது ஆர்வத்தைத் தூண்டிய நண்பர்கள்,  தன்னை போன்ற நல்ல பண்புகள் உள்ள இளைஞர்களுடன் வாடகை அறைகளில் தங்கி இருந்தது,  அவர்களுடன் கொண்டாட்டமாக இளமையை கழித்தது,  அவர்களுடன் சண்டை போட்டது, இப்படி இளமைக்கால நண்பர்கள் தொடங்கி தன்னுடைய  வாழ்நாள் முழுக்க எத்தனை நண்பர்களை சந்தித்தது, அந்த நண்பர்கள் எல்லாம் எவ்வளவு தூரம் பொன்னீலன் அவர்களுக்கு உதவினார்கள், அவர்கள் கல்வித்துறையில் எப்படிப்பட்ட பணிகளை ஆற்றினார்கள் அவர்களிடமிருந்தது தான் என்னென்ன கற்றுக்கொண்டார்… எத்தனையோ ஆசிரியர்களை பார்த்த மாணவர்கள் முன்பு, ஒரு புதிய ஆசிரியராக நின்ற தருணம் எப்படி இருந்தது? மாணவர்கள் உலகம் எப்படிப்பட்டது தன்னை விட உயர்ந்த நிலையிலிருக்கும் கல்வி அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வார்கள்? தொடர்ச்சியை பேணாத கல்வித்துறையே, தொடர்ச்சியின்றி உன்னால் எதையாவது சாதிக்க இயலுமா? அரசியல்வாதிகளால் தான் எப்படி பிரச்சினைக்கு உள்ளானேன்? போலீஸ்காரர்கள் எப்படி குடைச்சல் கொடுத்தார்கள்? உலகில்  கல்வி நிலை, புத்தகங்களின் மதிப்பு அதிகம் இருக்கக்கூடிய நாடுகளுக்கு பயணம் சென்று வந்த அனுபவம்… தொழில் பக்தி இல்லாமல் வெறும் சம்பளத்திற்காக மட்டும் பொழுதுபோக்காக ஆசிரியர் பணி செய்தவர்கள், ஆசியர்களின் சோம்பேறித்தனம், நேர்மையான ஆசிரியர்களின் தொடர் முயற்சிகள், மனதுக்கு நெருக்கமான மாணவர்களிடம் இருந்து விடைபெற்ற தருணங்கள் என்பதைப் பற்றியெல்லாம் விளக்கும் வரிகள் பொன்னீலன் அவர்களுடன் நாம் நேரில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருப்பதுபோல ஒரு உணர்வைத் தருகிறது. இந்த புத்தகத்தில் 205 கட்டுரைகள் இருந்தாலும் அதில் “புத்தகங்கள் கசந்தது” என்ற கட்டுரையை படிக்கும்போது உண்மையிலேயே நமக்கு மனம் கனத்து விடுகிறது. பள்ளி ஒன்றிற்கு புதிய ஆசிரியராக சென்றபோது மாணவ மாணவிகளை பார்த்து “தம்பிகளே தங்கைகளே” என்று பேசத் தொடங்கியது அந்த வார்த்தைகளைக் கேட்டதும் மாணவர்கள் நெஞ்சை நிமிர்த்தி அமர்ந்தது போன்ற நெகழ்ச்சி தருணத்தையும் பகிர்ந்துள்ளார். 

இந்த புத்தகத்தில் இருக்கும்  மிக அருமையான வரிகள் சில: 

 1. இளமையில் நல்ல நண்பர்கள் அமைவது பெரும் பேறு. 
 2. ஆசிரியரின் தலையாய பண்பு தன்னம்பிக்கையோடு இருத்தல், அடுத்து அதற்குத் தேவையான தயாரிப்பு, மாணவர்களைத் நம்புதல், அவர்களுடன் இணக்கமாக இருத்தல். 
 3. ஆசிரியர் தவறு செய்தால் அதை சரி செய்வது கடினம். ஆசிரியர் தவறு செய்தால் எல்லாம் தவறாகிப் போகும். திருத்துவது சிரமம். அவர் அமர்ந்திருக்கும் பீடம் அப்படி. 
 4. ஆசிரியர் அறிந்தவை, உணர்ந்தவை, அவருடைய மனதில் நிறைந்து வார்த்தைகளாகவும், பார்வைகளாகவும் அதை தாண்டி உணர்வுகளாகும் மாணவர்களின் உள்ளே ஊடுருவ வேண்டும். தொடக்க நிலையில் உள்ளுணர்வால் மாணவரை தொட இயலாத ஆசிரியரின் பேச்சும் செயலும் வெறும் பாவனையே. 
 5. புத்தகங்கள் எதற்காக? மனப்பாடம் செய்வதற்காக அல்ல! அவற்றில் ஆசிரியர் விளக்கம் சொல்லி மாணவர்களை வாசிக்க வைத்து அவற்றில் மாணவர்களை ருசி ஊட்டுவதற்காக தான். ருசி கண்ட மாணவர்கள் புதிய புதிய புத்தகங்களை தேடி வாசித்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்வார்கள். பாடப்புத்தகங்கள் என்ற வகை ருசி மாதிரிகளே. 
 6. கம்யூனிஸ்டுகள் நல்லவர்கள். கடவுள் எதிர்ப்பாளர்களாக அவர்கள் இருப்பதால், அவர்களால் இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்பது சிலரது நம்பிக்கை. 
 7. கல்வி என்பது ஒவ்வொரு மாணவனிடமும் இருக்கும் தனித்த உள்ளாற்றலைச் சமூகத்துக்குப் பயன்படும் விதத்தில் மலர்விக்கத் தேவையான தூண்டுதலை உருவாக்கும் கலை. 
 8. மனிதர்களுக்கு பஞ்சம் இல்லாத நாடு நம் நாடு. எந்த ரகத்தினரை வேண்டுமானாலும் எளிதாக பொறுக்கி எடுத்துக் கொள்ளலாம். 
 9. பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால் இன்றைய தலைமுறைகளின் பெயர்களில் பாரம்பரியத்துக்குரிய எந்த அடையாளத்தையும் காணமுடியவில்லை. ரமேஷ் சுரேஷ் தினேஷ் என்று தமிழரை சமீபகாலத்தில் கடுமையாக பீடித்திருக்கும் வடமொழி வியாதியின் அறிகுறிகள் பரவி வருகிறது. வடக்குக்குத் தெற்கு அடிமையாகும் முதல் அடையாளம் இது. 
 10. பாடங்களை கரும்பலகையில் எழுதி மாணவர்களை மனப்பாடம் செய்யச் சொல்லி தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்கும் முறையால் மாணவர்களின் எந்த ஆற்றலும் மலர்ச்சி பெற்றது. 
 11. எல்லா விதமான போராட்டங்களின் உள்ளேயும் மிக உயர்ந்த மனித மாண்புகளை காப்பவர் தான் மனிதர். மனித மாண்புகள் மறக்கப்படும் இடத்தில் மனிதம் மிருகம் ஆகிவிடுகிறது. 
 12. மனித குலத்தை எய்ட்ஸ் அழித்துக் கொண்டிருப்பது போலத் தான் தாவரத்தை பார்த்தீனியம் எனும் விஷப்பூண்டு இன்று அழித்துக் கொண்டிருக்கிறது. அது வளரும் இடத்தில் வேறு எதுவும் வளர முடிவதில்லை. இப்படியே போனால் இன்னும் பத்தாண்டுகளில் தமிழர்களுக்கே உரிய அற்புதமான மூலிகைகள் பல பூண்டற்றுப் போகும். 
 13. பல பள்ளிகளில் முறையான நூலகம் இல்லை. இருக்கும் நூல்கள் ஒழுங்குபட அடுக்கிப் பயன்படுத்தப்படும் நிலையில் இல்லை. பயன்படுத்தப்படும் நிலையில் இருந்தாலும், பொருத்தமான நூல்கள் இல்லை. நூலின் முக்கியத்துவம் தெரிந்த பள்ளி தலைவர்களும் குறைவு. ஆய்வு அதிகாரிகளும் அதுபற்றி கவலைப்படுவதில்லை. தமிழ் ஆசிரியர்கள் எத்தனைபேர் தமிழில் கையெழுத்து போடுகிறார்கள் என்று பார்க்கத் தோன்றியது. பார்த்தேன். சுமார் 40% தமிழாசிரியர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு இருந்தார்கள். சங்கடமாக இருந்தது. நடைமுறை பயிற்சியில் ஆங்கிலச் சொற்களை தவிர்க்கும் பழக்கம் பல தமிழாசிரியர்களிடம் இல்லை.  பிற மொழிக் கலப்பை தவிர்த்து தமிழை ஒரே வடிவம் ஒரே தொனியில் தமிழகம் முழுவதும் தமிழ் பயிற்சி கொடுத்து தமிழரை இணைக்க வேண்டியவர்கள் தமிழாசிரியர்கள். தமிழ் ஆசிரியர்கள் தாங்கள் முதன்மையான தமிழ் பண்பாட்டுத் தூதுவர்கள் என்பதை ஆழ்ந்து உணர வேண்டும். இல்லையேல் வருங்காலத்தில் தமிழுக்கு வகுப்பறையில் மட்டுமல்ல வாழ்விலும் இடம் இல்லாமல் போய்விடும். 
 14. ஒரு வேலை விஷயமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்ட ஒரு அன்னையைச் சந்திக்கச் செல்வது போன்ற துடிப்பு இலங்கையை நெருங்க நெருங்க எனக்கு ஏற்பட்டது. சம்பந்தமில்லாமல் கண்கள் கசிந்து கொண்டிருந்தது. ஒருவிதமான பதட்டம், ஏக்கம். என்னால் என்னை நிதானபடுத்திக் கொள்ள முடியவில்லை. இலங்கையோடு எங்களுக்கு இருந்த வரலாற்று தொடர்புகள் மனதில் தெரிந்து கொண்டே இருந்தன. நீலக் கடலின் உள்ளே மரகத குமிழி போல அல்லது கண்ணீர் துளி போல இலங்கை தெரிந்தது. முழுவதும் பச்சையால் போர்த்தப்பட்டிருந்தது. கொழும்பு விமான நிலையத்தில் இறங்கினோம். அந்த மண்ணில் என் பாதம் பட்ட போது மீண்டும் எனக்கு அழுகை வந்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். 
 15. சாதி ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவுக்கே உரியவை. அவை உழைப்பவரையும் உழைப்பை இழிவுபடுத்துபவை. அவர்கள் அந்த இழிவுகளில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் அமுக்கி வைக்க முயற்சிப்பவை.  உழைக்காமல் பிழைப்பவரை உயர்படுத்துபவை.  அற்புதமான சமயங்களில் எல்லாம் கறை ஏற்படுத்தியவை. மனிதர்களுக்குள்ளே சண்டை மூட்டுபவை. இந்தக் கறைகளை துடைத்து மனிதர்கள் இடையே சகோதரத்துவத்தை வளர்க்கும் முயற்சிகளின் தொடக்கங்கள் பள்ளிகளில் இருந்து தான் தொடங்க வேண்டும். 

மாணவர்களைப் பொருத்த வரையில் கல்வி நிலையங்கள் ஒரு ஒடுக்குமுறை நிர்வாக நிறுவனங்களாகவே பெருமளவில் அமைந்து வருகின்றன. மாணவர்கள் தம் சுய ஆற்றலையும் சுய அன்பையும் அழகையும் பெருமளவிற்கு இழப்பது கல்வி நிறுவனங்களில் தான்.  ஒவ்வொன்றும் அதன் கட்டமைப்பில் ஒரு அச்சு வடிவங்கள் அமுக்கி மாணவர்களை வார்த்து வெளியே தள்ளுகின்றன. பெண் ஆண் வேறுபாட்டை போக்கில் சமத்துவத்தை வளர்க்க வேண்டிய இடமும் பள்ளியே. 

இந்த புத்தகத்தில் தன்னுடைய நண்பர்கள், நல்லாசிரியர்கள், எழுத்தாளர்கள், வாசிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூகப் போராளிகள் என்று பலதரப்பட்ட மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார். கிட்டத்தட்ட அந்த மனிதர்களின் பேரைப் பட்டியலிட்டால் அவை ஐநூற்றுக்கும் அதிகமான மனிதர்களின் பெயர்களை காட்டும். இந்த சின்ன புத்தகத்தில் இவ்வளவு தகவல்கள், இவ்வளவு அனுபவங்கள், இவ்வளவு நல்ல மனிதர்கள் பற்றிய குறிப்புகள், சாதனையாளர்கள் பற்றிய குறிப்புகள், போராளிகள் பற்றிய குறிப்புகள் போன்றவை கிடைக்கிறது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி தன்னுடைய 36 அரை ஆண்டுகள் பள்ளிக்கல்வித்துறை அனுபவத்தை ஒட்டு மொத்தமாக திரட்டி ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். இந்த நூல் பல பள்ளிகளில் பணி செய்யும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களுக்கும் கல்வி அலுவலர்களுக்கும் பயன்படுமானால் மகிழ்ச்சி அடைவேன்  என்ற பொன்னீலனின் விருப்பம் கண்டிப்பாக இனிவரும் காலங்களில் நிறைவேறும்.  நீண்ட கால வரலாற்று புத்தகத்தை படித்தது போலவும் பல ஊர்களை சுற்றி பார்த்தது போலவும் பிற மனிதர்களை பற்றி தெரிந்து கொண்டது போலவும் இதை எழுதிய எழுத்தாளருடன் இத்தனை விஷயங்களை பேசி தொடர்ந்து பயணித்தது போன்ற உணர்ச்சியை தருகிறது இந்தப் புத்தகம். 

Related Articles

ராஜஸ்தானில் புழுதி புயலுக்கு 27 பேர் பலி... ராஜஸ்தான் மாநிலம் அல்வர், பரத்பூர் மற்றும் தோல்பூர் மாவட்டங்களை நேற்று (புதன்கிழமை) புழுதி புயல் கடுமையாகத் தாக்கியது. இதில் 27 பேர் பலியாகியும், 100 ...
அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது... 43வது சென்னை புத்தக திருவிழா 2020ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடங்கியது. தொடங்கி வைக்க தமிழக முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமி வந்தார். அடுத்த வருட புத்தக திர...
பாட புத்தகங்கள் பொதுவா நல்ல புத்தகங்களா ... சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் எது மிக தாழ்ந்த சாதி என்ற வினாவை கேட்டிருந்தது சமூக வலை தளங்...
ஐபிஎல் அட்டவணை 2018... போட்டி எண் தேதி போட்டி நேரம் இடம்1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...

Be the first to comment on "பொன்னீலன் அவர்களின் கல்வித் துறையில் இருந்து விடை பெறுகிறேன் புத்தகம் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*