டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் இளைஞர் இளைஞிகள் படும் அவஸ்தைகள் என்னென்ன? 

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு வரை அரசாங்க பணி என்பது ஜாதி அடிப்படையில் இருந்தது.  யார் அதிக நிலபுலம் வைத்திருக்கிறார்களோ யார் அதிக மக்களை தனக்கு கீழ் பணி அமர்த்தி வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு சலாம் போடும் வேலையாட்களாக மாறினார்கள். அதிகாரத்தோடு அதிகாரத்தை இணைத்து கொண்டார்கள். இப்படி அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் நாம் இருந்தால் நாம் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தலாம் என்ற ஒரே நோக்கத்தோடு அரசாங்கப் பணியில் அவர்களாகவே சலாம் போட்டு போய் சேர்ந்து கொண்டார்கள். 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முறையான அரசாங்கம் அமைந்த பிறகு, அரசு பணியில் சில ஊழியர்களை நியமிக்க அரசு முடிவெடுத்தது. அப்போது யார் எல்லாம் ஓரளவுக்கு கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்களோ? அவர்களுக்கு அரசு பணியில் சேர்வதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிப்பு வந்தது. அப்போது நல்ல வசதியுடன் ஜாதி செல்வாக்குடன் இருந்த மனிதர்களில் சிலர் கல்வி அறிவு பெற்றிருக்க அவர்களுக்கு மிக சுலபமாக அரசாங்கப் பணி கிடைத்து விட்டது. இப்படி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பும் சரி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் சரி… அரசாங்கப் பணி என்பது யாரெல்லாம் பொருளாதார நிலையிலும் சாதி நிலையிலும் அதிக செல்வாக்குடன் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் மிக எளிதில் கிடைத்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையை மாற்ற அரசாங்கம் அரசு பணி தேர்வாணையம் என்ற ஒன்றை அமைப்பதன் மூலம் பணம் கட்டி அரசுப்பணி வாங்கும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அது இன்றுவரை ஒழிந்ததாக தெரியவில்லை. இந்த தேர்வாணையம் வருவதற்கு முன் படித்த இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே போனார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் எல்லோருமே அரசுப்பணி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றுதான் விரும்பினார்கள். அதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களுடைய சான்றிதழ்களை பதிவு செய்துவிட்டு அரசுப் பணிக்காக காத்திருந்தனர். அப்படி காத்திருந்து காத்திருந்து வாழ்க்கையை தொலைத்த இளைஞர்கள், நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக் கொண்டிருக்காமல் சுயமாக தொழில் செய்ய முனையுங்கள் அல்லது தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்லுங்கள் என்று பலவிதமான அறிவுரைகள் நிறைய பேர் சொன்னார்கள். அதன் காரணமாகவே நாடு முழுக்க குறிப்பாக தமிழ்நாட்டில் நிறைய தனியார் தொழிற்சாலைகள், தனியார் கம்பெனிகள் போன்றவை முளைக்க ஆரம்பித்தன. அரசுப் பணிக்காக காத்திருந்த இளைஞர்கள் எல்லாம் அந்த மாதிரி தனியார் கம்பெனிகளில் போய் தஞ்சம் அடைந்து கொண்டனர். இப்படி நல்ல சம்பளம் தரக்கூடிய தனியார் கம்பெனிகளில் வேலை வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் எங்கள் கல்லூரிகளில் வந்து சேருங்கள். உங்களுக்கு முறையான கல்வி அளித்து முறையான பயிற்சி அளித்து நல்ல கம்பெனியில் வேலை வாங்கித் தருவது எங்களுடைய பொறுப்பு என்று பல கல்வி நிறுவனங்கள் விளம்பரம் செய்ய ஆரம்பித்தன. 

குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் அந்த மாதிரி விளம்பரங்களை தமிழ்நாடு முழுக்க செய்தன. லோக்கல் சேனல்கள் தமிழ்நாடு முழுக்க ஒளிபரப்பும் பிரபலமான சேனல்கள் என்று அனைத்து வித தொலைக்காட்சிகளில், வெவ்வேறு அலைவரிசையில் ஓடிக்கொண்டிருக்கும் ரேடியோக்களில் தொடர்ந்து வேலை வேண்டுமா? கேம்பஸ் இன்டர்வியூவில் எங்கள் கல்லூரியில் பயின்று இத்தனை பேர் செலக்ட் ஆகி இருக்கிறார்கள், எங்கள் கல்லூரியில் சேர்ந்தால் உங்களுக்கு வேலை கண்டிப்பாக கிடைக்கும் என்று விளம்பரம் செய்து மாணவர்களை பொறியியல் பக்கம் திசை திருப்பிவிட்டு நல்ல வருமானம் பார்த்தது பொறியியல் கல்லூரிகள். 

ஆனால் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனவர்கள் கிட்டத்தட்ட ஐநூறு பேராகப் தான் இருப்பார்கள். ஆனால் அந்த கல்லூரியில் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிப்பார்கள். இதில் வெறும் 500 மாணவர்கள் மட்டும் நல்ல கம்பெனிகளில் வேலைக்கு அமர்ந்து விட்டார்கள் என்றால் மீதி உள்ள மாணவர்கள் என்ன செய்வார்கள்? ஏதாவது ஒரு டப்பா கம்பெனியில் போய் அஞ்சுக்கும் பத்துக்கும் வேலைக்கு சேர்ந்து விடுகிறார்கள்.  ஆனால் அந்த சம்பளம் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வாடகை கொடுப்பதற்கும் மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்கும் இருசக்கர வாகனங்களை பராமரிப்பதற்குமே சரியாக இருக்கும். இதில் எப்படி அவர்கள் வருமானத்தை வீட்டிற்கு கொடுப்பார்கள்?  அதுமட்டுமில்லாமல் அந்தக் குறைந்த வருமானத்திற்காக அந்த டப்பா கம்பெனிகள் அவர்களை கசக்கிப் பிழிந்து எடுக்கும், ஊர் ஊராக அலைய விட்டுக் கொண்டே இருக்கும். 

இப்படி வந்து டப்பா கம்பெனியில் சிக்கிக்கொண்டு அஞ்சுக்கும் பத்துக்கும் அலைந்து திரிவதை விட, ஒரு இரண்டு வருடங்கள் பொறுமையாக அமர்ந்து டிஎன்பிசி தேர்வுக்கு படித்து அதில் வெற்றி பெற்று அரசாங்க பணியை வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர் அந்த மாதிரியான இளைஞர்கள். இந்த முடிவை வீட்டில் சொன்னால் அவர்கள் அவ்வளவு எளிதில் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வேலை பார்த்துக் கொண்டே ஓய்வு நேரங்களில் படிக்கலாமே என்று அறிவுரை சொல்வார்கள். ஆனால் அப்படி வேலை செய்துகொண்டே இன்றைய காலகட்டத்தில் அரசுப் பணித் தேர்வுக்கு படிக்க முடியாது முழுக்க முழுக்க அந்த தேர்வில் கவனம் செலுத்தினால் மட்டுமே அரசு பணியில் மிகக் குறுகிய காலத்தில் தேர்வாக முடியும் என்று சொல்லி புரிய வைத்து, அதிக வெற்றியாளர்களை தந்த கோச்சிங் சென்டர்களை நோக்கி அந்த இளைஞர்கள் ஓடுகிறார்கள். கோச்சிங் சென்டர் அவ்வப்போது இலவசமாக பயிற்சி வழங்குவதற்காக தேர்வுகள் நடத்துகின்றன. அதை பயன்படுத்திக்கொண்ட இளைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அதைத் தவிரவிட்ட இளைஞர்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் அலைந்து திரிந்து மிச்சம் செய்து வைத்த பணத்தை கட்டி கோச்சிங் சென்டரில் சேர்கிறார்கள். 

அங்கு போனால் அந்த இளைஞர்களை விட வயதில் பெரியவர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் நான் பத்து வருடமாக இந்த தேர்வுக்கு படித்துக் கொண்டு வருகிறேன். அவ்வப்போது வேலை காரணமாக படிப்பதை இடை இடையில் நிறுத்தி விடுவதால் இவ்வளவு வருடங்கள் கடந்து விட்டது என்று அவர்கள் புலம்புவார்கள். அதைக் கேட்கும்போது அந்த இளைஞர்களுக்கு உள்ளூர ஒரு பயம் எடுத்துக் கொள்கிறது. தனியாக ரூம் எடுத்து தங்கி முழுக்க முழுக்க படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த இளைஞர்கள் வீட்டில் இருந்து ஒதுங்கி கோச்சிங் சென்டர் அருகே இருக்கும் பகுதிகளில் ரூம் எடுத்து தங்குகிறார்கள். தூங்கும் நேரம் தவிர மீதி எல்லா நேரங்களும் கையில் புத்தகங்களோடு அலைகிறார்கள். தினமும் கோசிங் சென்டர் போய் தேர்வுகள் எழுதுகிறார்கள். அப்படிப்பட்ட காலகட்டங்களில் அவர்களிடம் எந்த வருமானமும் இல்லை என்பதால் அவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தான் காசு கேட்பார்கள். வீட்டில் உள்ளவர்களோ கிடைத்த வேலையை விட்டுவிட்டு கிறுக்கனாட்டம் கவர்மெண்ட் வேலைக்கு படிக்கிறேன்னு வருஷக்கணக்குல சுத்திகிட்டு திரியுறான் என்று புலம்பியபடியே பணத்தை அனுப்புவார்கள். அப்படி தன்னுடைய பெற்றோர்களையும் கஷ்டப்படுத்தி தன்னையும் வருத்திக் கொண்டு விடிய விடிய படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்று விடுவோம் என்று ஆசையாக காத்திருந்தால்  கடைசியில் ஒரு மதிப்பெண்கள் அல்லது இரண்டு மதிப்பெண்களில் அவர்களுக்கான வேலை பறிபோய் விடுகிறது. 

கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் அந்த தேர்வு நாளுக்காக காத்திருந்து, பல சுக துக்கங்களை, பண்டிகை நாட்களை, பிறந்த நாள் போன்ற சிறப்பு நாட்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த அந்த இளைஞர்கள் இப்போது அந்தத் தோல்வியால் முற்றிலும் மனமுடைந்து போகிறார்கள். இந்த சமயத்தில் வீட்டில் உள்ளவர்கள் இதுக்கு பேசாம கிடைத்த வேலையை செஞ்சுட்டு இருந்திருந்தால் இந்நேரம் நல்ல சம்பளம் வந்திருக்கும் என்று அறிவுரை சொல்வார்கள். இவ்வளவு நாட்கள் கோச்சிங் சென்டரில் காசு கட்டியது தனியாக ரூம் எடுத்து தங்கி அதற்கு காசு கட்டியது அத்தனையும் வீண் என்று புலம்பித் தள்ளுவார்கள். 

இப்படி ஒரு மதிப்பெண்ணில் அரசு வேலையை தவறிவிட்ட மாணவர்கள் அடுத்த தேர்வு வரை காத்திருந்து முழுக்க முழுக்க கடந்த வருடம் போலவே படிப்பில் கவனம் செலுத்தலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு வேலையை பார்த்துக் கொண்டே ஓய்வு நேரங்களில் படிக்கலாமா என்று சிந்தித்து குழம்பிப் போகிறார்கள் சிலர். ஒரு மார்க் தானே இன்னும் ஒரு வருஷம் கஸ்ட்ட பட்டு உட்கார்ந்து படி கண்டிப்பா கிடைக்கும் என்று அறிவுறுத்துவார்கள். இன்னும் சிலர் இதை விட பெரிய கோச்சிங் சென்டர் போ உனக்கு சீக்கிரம் கிடைத்துவிடும் என்பார்கள். இன்னும் சிலர் இப்படியே கோச்சிங் சென்டர் கோச்சிங் சென்டர்களாக அலைந்து கொண்டிருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதில்களை, மெட்டீரியல்களை கொடுத்து குழப்பி விடுவார்கள். கோச்சிங் சென்டர் போய் ஏமாந்தது போவதும் இனி சுயமாக வீட்டில் உட்கார்ந்து படிக்கலாம் என்று முடிவெடுத்தால் என்ன இந்த பையன் படிச்சி முடிச்சிட்டு வீட்ல உட்கார்ந்துட்டு இருக்கான்… கேட்டா பரிட்சைக்கு படிக்கிறன்னு சொல்றான்… என்று வீட்டிற்கு வந்து செல்பவர்கள் எல்லாம் கருத்து சொல்லிவிட்டுப் போவார்கள்.  இன்னும் உனக்கு வேலைக்கு கிடைக்கலையா? எப்ப தான் நீ வேலைக்கு போவ, வேலைக்குப் போற ஐடியா இருக்கா இல்லையா என்று திரும்பத் திரும்ப இந்த கேள்வியை கேட்டுக் கொண்டே இருப்பார்கள். 

அவர்களையாவது “போய் தொலைங்க” என்று விட்டு விடலாம். ஆனால் இன்னும் ஒரு சிலர் எங்க பிள்ளை உஷாரப்பா…  ஒரு வருசம் தான் படிச்சுது… ஒரு வருஷத்திலேயே வேலை வாங்கிடுச்சு என்றும், அந்த காலத்திலெல்லாம் நாங்க எவ்வளவு சுலபமா அரசு வேலை வாங்கினோம், நீங்க என்னடானா இவ்வளவு வசதி இருந்தும் அரசு வேலை வாங்குறதுக்கு இந்த முக்கு முக்குருக்கீங்க என்று சிலர் கமெண்ட் அடிப்பார்கள். அவற்றைக் கேட்கும் போதுதான் எரிச்சலாக இருக்கும். இப்படி வீட்டுக்கு வருபவர்கள் போவோர்கள், வெளி பகுதிகளில் கடைகளில் கோவில்களில் பார்ப்பவர்கள், விசேஷ வீடுகளில் பார்க்கும் சொந்தக்காரர்கள் அனைவரும் விதவிதமாக அந்த இளைஞர்களை அவமானப்படுத்தி கொண்டே இருப்பார்கள். உனக்கு எல்லாம் எங்க போயி அரசு வேலை கிடைக்க போகிறது என்பது போலவே அவர்கள் பார்ப்பார்கள். அதாவது அரசு வேலைக்காக படிக்கிறேன் என்று சொல்லும் அந்த இளைஞர்கள் வேலைக்கு போக பிடிக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடைய பார்வை. இத்தனை அவமானங்களையும் தாங்கிக் கொண்டு அந்த இளைஞர்கள் வீட்டில் இருந்தும் சரியாக படிக்க முடியாமல், கோச்சிங் சென்டரும் போக முடியாமல், வேலைக்கும் செல்ல முடியாமல் அங்கே இங்கே என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து படித்து வேலை வாங்கி விட்டால் இவ்வளவு நாட்கள் அவமானப்படுத்தியவர்கள் எல்லாம், “பரவால்ல நான் கூட உன்ன என்னமோ நினைச்சேன்… எப்படியோ தக்கி முக்கி வேலை வாங்கிட்ட…” என்று வெற்றி பெற்ற அந்த இளைஞனைப் பார்த்து பொறாமையுடன் கடந்து செல்வார்கள். 

Related Articles

பர்சு பத்திரம் மக்களே! – அவனே ஸ்ரீ... சர்டிபிகேட் U/A , காலம் : 172.53 நிமிடங்கள் தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் & வெளியீடு : Screen scene entertainment  ராவணன் மற்றும் அனுமன...
அபிநந்தனை வாழ்த்தி வரவேற்ற இந்திய பிரபலங... மார்ச் 1, 2019 இரவு எட்டு மணி முதல் நடந்த சம்பவங்களை இந்தியர்கள் எளிதில் மறக்ககூடியது அல்ல. அப்படிப்பட்ட ஈர்ப்பை பெற்றிருந்த அபிநந்தனை பலர் வாழ்த்தி வ...
கவுண்டமணியின் 49-O திரைப்பட வசனங்கள்!... " பிரச்சினை இல்லாத விவசாயி எவன் இருக்குறான்... " " எவன தலைவராக்குறதுனு உங்களுக்கும் தெரியல... தலைவன்னா எப்டி நடந்துக்கனும்னு அவனுக்...
#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்... நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி ...

Be the first to comment on "டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் இளைஞர் இளைஞிகள் படும் அவஸ்தைகள் என்னென்ன? "

Leave a comment

Your email address will not be published.


*