ஜெயகாந்தனிடம் பத்து கேள்விகள்!

10 questions to Writer jeyakanthan

எழுத்து துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? 

நான் வரவில்லை. எங்கோ போய்க்கொண்டிருந்த வழியில் எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பியதில்லை. என்னை பத்திரிக்கைகள் ஆதரிக்கவில்லை என்று புலம்பியதும் இல்லை. நான் கல்லூரியிலோ உயர்நிலை பள்ளியிலோ படித்தவனில்லை. அங்கே எழுத்தையோ இலக்கியத்தையோ கற்பதற்கு. நான் நடை பாதையில் குழாயடியில் சில நாட்கள் வேலைக்குப் போன சிறிய தொழிற்சாலைகளில் பொதுவான நடைமுறை வாழ்க்கையில் தான் இலக்கியத்தை கற்றேன். பிறகு அங்கே தான் எழுத்தும் இலக்கியங்களம் பிறக்கின்றன என்று அறிந்தேன். அறிந்ததை வாழ்க்கை எனக்கு அறிவித்ததை திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். வந்தவன் தான் போவான். நான் வந்தவனும் இல்லை, போகிறவனும் இல்லை. 

ஓர் எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியும் என்று நம்புகிறீர்களா? 

பிழைப்பு என்றாலே ரொம்ப சிரமமான காரியம் தான். என்ன பிழைப்பு என்பது அலுப்புக் குரல். இலக்கணப் படி பார்த்தால் பிழைப்பு என்பது குற்றம் என்றும் பொருள்படும். எழுத்தை வெறும் பிழைப்பாக கொள்வது ஒரு குற்றமே. பிழைக்க முடியுமா என்பதல்ல. கூடாது என்பது என் கொள்கை. என்னை பொறுத்தவரை எழுதுவதற்கு எனக்கு காசு தருகிறார்கள். ஆனால் நான் எழுதுவதே காசுக்காக அல்ல. கல்லடி கிடைத்தாலும் நான் எழுதுவேன். எழுத்து காசு தராவிட்டால் தான் என்ன? பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல. அது என் ஜீவன். 

தனித் தமிழில் எழுதுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

அதில் யாரும் எழுதுவதே இல்லையே. எழுத வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். ஏதோ ஆசைக்கு ஒரு கடிதம், ஒரு கட்டுரை எழுத சிலர் முயலலாம். கதை எழுத முடியாது. கதை என்பது இன்றைய வாழ்வின் பிரச்சினை. இந்த இருபதாம் நூற்றாண்டு தமிழனுக்கு பிரச்சினை தமிழின் தனிமையல்ல. 

தங்கள் மனத்தைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? விமர்சகர் யர்? 

கவர்ச்சி என்பதே ஒன்றின் வளர்ச்சி பற்றிய பிரச்சினை. சின்ன பிள்ளைக்கு மண் பிடிக்கும். வாலிபனுக்கு பெண் பிடிக்கும். வயது முதிர்ந்தால் அவரவர் வளர்ச்சிக்கு ஏற்ப கவர்ச்சிகள் பேதப்படும். அதே போல எனது ரசனை வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருவரை பிடித்திருந்தது. பிடிக்கிறது. ஏதோ நீங்கள் கேட்டதற்காக சொல்வது என்றால் டால்ஸ்டாய் என்பேன். இந்த கவர்ச்சிக்கு காரணம் கேட்பீர்களா? என் வளர்ச்சி தான். விமர்சகரா? நான் அறிந்தமட்டில் அப்படி ஒருவர் இங்கே இல்லையே ஐயா? 

நீங்கள் ஏன் தொடர் கதைகள் எழுதுவது இல்லை? 

நான் தான் தொடர்ந்து கதை எழுதி வருகிறேனே! தொடர் கதை என்று இலக்கியத்தில் ஒரு பிரிவு கிடையாது. மேல் நாட்டின் மிகப் பெரிய எழுத்தாளர்களின் நாவல்களை கூட சில பத்திரிக்கைகள் வசதிக்காக அவ்விதம் பிரசுரித்தது உண்டாம். எனினும் அவை தொடர் கதைகள் என்பதற்காக பாராட்டப்படவில்லை. இங்கேயோ அது பெரும்பான்மை வாசகரை மயக்கும் ஒரு தந்திரமாகவே கையாளப்பட்டு வருகிறது. பத்திரிக்கைகளோ வாசகரோ என்னிடம் அதை எதிர்பார்க்கவில்லை. எனக்கும் அதில் பழக்கமோ விருப்பமோ இல்லை. 

ஜனரஞ்சகமாக எழுதக் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

ஆம். ஜனங்கள் வளர்ந்து கொண்டே இருப்பவர்கள். வளர்ந்து கொண்டிருக்கும் ஒன்றின் அருகே குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக்கு சமமாகப் போய் நின்று விட்டால் நாளைக்கு நாம் குறைந்து விடப் போகிறோம் என்று அர்த்தம். ஜனங்களை விட்டு ஒதுங்கி விடவும் கூடாது. கலந்து விடவும் கூடாது. எப்போதும் ஓர் அடி முன்னால் சென்றால் தான் ஜனங்களை இழுத்துச் செல்லவும் முடியும். அவர்கள் எதை வேகமாக விரும்பி ஏற்கிறார்களோ அதை அவர்கள் அதே வேகத்தோடு வீசியும் எறிகிறார்கள். ஜனரஞ்சகம் என்ற பெயரால் என் எழுத்துக்கள் எறியப்பட வேண்டாம் என்றும் நான் நினைக்கிறேன். 

தாங்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் பங்கு கொண்டிருக்கிறீர்களா? அதனால் உங்கள் எழுத்து பாதிக்கப் படுகிறதா? 

நான் ஒரு கம்யூனிஸ்ட். வாழ்க்கையின் எத்தனையோ பாதிப்புகளினால் தான் எழுத்தே உருவாகிறது. பாதிக்கட்டுமே! 

ஓர் எழுத்தாளன் என்ற முறையில் தமிழ்ப்பட உலகைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன? 

நான் தமிழ்ப் படம் பார்த்து மூன்று வருசம் ஆகிறது. ஓர் எழுத்தாளன் என்ற முறையில் அபிப்பிராயம் சொன்னால் வேண்டாம் சார் விடுங்கள்! 

திரைப் படங்கள் எதற்கேனும் எழுத உத்தேசிக்கிறீர்களா? 

எழுத உத்தேசமில்லை. எடுக்க உத்தேசம் உண்டு. அப்போது ஒரு வேளை எழுதலாம். 

உங்கள் மாத வருமானம் என்ன? அது போதுமானதாக இருக்கிறதா? இல்லையென்றால் பற்றாக் குறைக்கு என்ன செய்து சமாளிக்கிறீர்கள்? 

வாழ்க்கை ஐம்பது ரூபாயிலும் இரேக்கிறது. நூறு ரூபாயிலும் ஆயிரம் ரூபாயிலும் இருக்கத் தான் செய்கிறது. நான் வாழ்க்கை வண்டியில் எல்லா கிளாஸ்களிலும் பிரயாணம் செய்திருக்கிறேன். இன்றைக்கு எனக்கு ரூ 350 ல் தாங்குகிறது. நாளைக்கு முடியாவிட்டால் வேறு கிளாசுக்கு இறங்கி விடுகிறேன். முடிந்தால் உயரே போவது. ஆனால் கடன் வாங்க மாட்டேன். பொருளாதார வாழ்க்கை என்பது வாழத் தெரிந்தவர்களுக்கு ரொம்ப சாதாரணமானது. பொருளாதார வீழ்ச்சியும் சரி உயர்வும் சரி ஓர் எழுத்தாளனின் வீழ்ச்சியோ உயர்வோ ஆகாது. அவை யாவும் அனுபவங்கள் அல்லவா? எனக்குப் பிரச்சினை என்னுடைய ஆன்மிக வாழ்க்கையும் பிறருடைய சமூக வாழ்க்கையும் தான். பிரச்சினைகளுக்கு பற்றாக்குறை ஏது? 

Related Articles

வேல ராமமூர்த்தியின் பட்டத்து யானை நாவலில... ரணசிங்கம் என்ற நாயகன் வழியாக ரத்தம் சொட்ட சொட்ட ஒரு சரித்திர நாவலை நம்முள் பதிய வைக்கிறார் எழுத்தாளர் வேல ராம மூர்த்தி. அந்தப் புத்தகத்தில் உள்ள உவமைக...
நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலையில் நடந்தத... க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். அக்னிதேவி font style ஐ வித்தியாசமாக காட்ட தொடங்கியவர்கள் படம் முழுக்க வித...
நீரஜ் சோப்ரா என்ன சாதி என்று தெரிந்துகொண... நீரஜ் சோப்ரா - இனி இந்தப் பெயரை நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கப் போவதில்லை. 2021ம் ஆண்டிற்கான... இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்த டோக்கியோ ஒலிம்பிக் ...
“ஒத்த செருப்பு சைஸ் 7” படம் ... முன் திரையீட்டுக்காட்சியில் "ஒத்த செருப்பு அளவு 7" திரைப்படைத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. பரிசோதனை முயற்சியான திரைப்படங்கள் மக்களைச் சென்று சேர்வதற்...

Be the first to comment on "ஜெயகாந்தனிடம் பத்து கேள்விகள்!"

Leave a comment

Your email address will not be published.


*