இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த கதை! – நிஜத்தில் நடந்தது என்ன?

Story of Ilayaraaja and Vairamuthu's split

கவிதை தளத்தில் நன்கு அறியப்பட்ட வைரமுத்து மொழிக்கும் மண்ணுக்குமான தொடர்பை திரையில் விரித்திருக்கும் பாரதிராஜா மூலமாய் திரைக்குள் நுழைய விரும்பினார். அதன் காரணமாய் தான் எழுதிய ” திருத்தி எழுதிய தீர்ப்புகள் ” கவிதை புத்தகத்தை பாரதிராஜாவிடம் கொடுத்து முடிந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார். 

வைரமுத்துவின் கவிதைகளை படித்து வியக்கிறார் பாரதிராஜா. விண்ணப்பம் எழுதி கொடுக்க அலுவலகம் சென்ற அந்த கவிஞருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசிய பாரதிராஜா, ” யோவ்… அட்லாண்டிக் ஹோட்டல் ரூம் நம்பர் 410 க்கு உடனே கிளம்பி வா… ” என்கிறார். 

இளையராஜாவிடம் வைரமுத்துவை அறிமுகம் செய்து வைக்கிறார் இயக்குனர். ” மெட்டுக்கு எழுதுவிங்களா… ” என்று நம்பிக்கையின்றி கவிஞரிடம் கேட்கிறார் இசையமைப்பாளர். கவிச்செருக்குடன் மெட்டை சொல்லுங்கள் முயற்சி செய்வோம் என சொல்கிறார் வைரமுத்து. மெட்டு வாசிக்கப்படுகிறது. சில கணங்கள் யோசித்த வைரமுத்து ” பல்லவியை சொல்லவா இல்ல பாடவா… ” என கேட்க புருவம் குறுக்கிப் பார்த்த இளையராஜா, ” பாடுங்கள் ” என்கிறார். 

பொன்மாலை பொழுது பாடலை கேட்டுவிட்டு வைரமுத்துவை கட்டி அணைத்த இளையராஜா “இவர் சினிமாவில் பல யானைகளை சாய்ப்பார்… ” என்று நம்பிக்கையோடு குறிப்பிட்டதாய் பாரதிராஜா சொல்லி இருக்கிறார். பொன்மாலை பொழுது பாடல் படைத்த வைரமுத்துவை பொன்மாலையாகவே பாவிக்க தொடங்கினார் இளையராஜா. இவர்கள் கூட்டணியில் நாதமும் கவிதையும் காதலிக்கத் தொடங்கின. பிறகு பிறந்ததெல்லாம் அற்புதத்தின் குழந்தைகள். 80 களில் தொடங்கி கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இளையராஜாவும் வைரமுத்துவும் ஆகச்சிறந்த பாடல்களை உருவாக்கினர். 

கண்களில் பூக்கும் காதலை மனங்களில் உறையும் தாபத்தை இதயங்கள் நொறுக்கும் பிரிவை என இவர்களின் இசையும் மொழியும் இயைந்து படைத்தவை யாவும் எல்லோருக்கும் உணர்த்தின. இருவரின் நட்பும் அவர்களின் கனவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதனால் இருவரும் இணைந்து தங்கள் படங்களில் பணியாற்ற வேண்டுமென முன்னணி கலைஞர்கள் அனைவரும் விரும்பினர். அவர்களின் இருவரின் மனங்களும் இணைந்து பாடல் இயற்ற தொடர்ந்தது. உதாரணத்திற்கு மண்வாசனை படத்தின் பொத்திவச்ச மல்லிக் மொட்டு பாடலின் ஒரு இடத்தில் மேளம் நாதஸ்வரம் என்ற மங்கள வாத்தியங்களை ஒலிக்கச் செய்திருந்தார் ராஜா. 

அந்த மெட்டை மட்டும் கேட்டுவிட்டு பாடல் எழுதிய வைரமுத்து இசையுடன் கேட்கும்போது வியந்து போயிருக்கிறார். ராஜா மேளதாளத்தை ஒலிக்கவிட்ட இடமும், வைரமுத்து மாலையிட காத்து அள்ளியிருக்கும் தாலி செய்து நேத்து சொல்லி இருக்கு… என்று எழுதிய இடமும் கச்சிதமாய் பொருந்தி போனதே காரணம் என்று தனது ஆயிரம் பாடல்கள் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார் வைரமுத்து. இப்படித்தான் இருவரும் இசை ஆனார்கள். இசையில் இளையராஜாவும் வரிகளில் வைரமுத்துவும் உச்சம் தொட்டனர். அதனால் வைரமுத்துவுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதுவரை ஒலிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வந்து தேவைப்பட்ட நேரத்தில் திருத்தி தருதலில் பெரும் உதவியாக இருந்த வைரமுத்துவால் குறித்த நேரத்தில் சில பணிகளை செய்ய முடியாமல் போக அதுவே மனக்கசப்புக்கு முதல் காரணமாய் அமைந்ததாக சொல்லப்படுகிறது. 

சில பாடல் வரிகளில் இளையராஜா தலையிட்டு மாற்ற சொல்வது அந்த விரிசலை மேலும் பெரியதாக்கி உள்ளது. உதாரணமாக சிந்து பைரவியில் வைரமுத்து எழுதிய பல்லவியை மாற்றிவிட்டு கிராமிய பாடலில் இருந்து இளையராஜா எடுத்துப் போட்ட பல்லவி தான் பாடறியேன் படிப்பறியேன் என்ற பல்லவி. இந்தக் கிராமிய பாடலின் பல்லவியை புதிய வார்ப்புகள் படத்திலும் நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து இளையராஜா வைரமுத்து இடையிலான கருத்து வேறுபாடு அதிகரிக்க ஒருவரின் குறைகளை இன்னொருவர் பெரிதுபடுத்தி பொதுவான நண்பர்களிடத்தில் பேசியதாகவும் அதுவும் இருவருக்கும் இடையிலான விரிசலை இன்னும் வலுப்படுத்தியதாகவும் திரைத்துறையை சேர்ந்த மூத்த கலைஞர்கள் தெரிவிக்கிறார்கள். 

உதாரணமாக வைரமுத்துவிற்கு எப்போதும் ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தான் எழுத வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். அப்போதுதான் ஒட்டுமொத்த படத்துடனும் ஒரு பாடலாசிரியன் என்பவன் பயணிக்க முடியும் என பல இடங்களில் அவரே இதனை தெரிவித்துள்ளார். 

அப்படி இருக்கும்போது இந்த சூழலில் தாய்க்கொரு தாலாட்டு என்ற படத்தில் எல்லா பாடல்களையும் வைரமுத்து எழுதி இருந்த நிலையில் இசைக்கோர்ப்பின் போது மேலும் ஒரு பாடலை சேர்த்து அதனை வாலியை வைத்து எழுதி வாங்கி இருக்கிறார் இளையராஜா. இளையராஜா அப்படி நடந்துகொள்வதற்கு வைரமுத்துவே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. தாய்க்கு ஒரு தாலாட்டு படத்திற்காக புதிய பறவை படத்தில் இடம்பெற்ற இளமைக்காலம் எனும் பாடலை ரீமேக் செய்ய இளையராஜாவும் இயக்குனரும் திட்டமிட்டிருந்தனர். அதற்கான வரிகளை வைரமுத்துவை எழுத சொல்ல பழைய பாடலை போல புதிய பாடல் இல்லை என்றெழுதி வார்த்தை ஜாலம் புரிந்திருக்கிறார். இதனால் கோபம் ஏற்பட்டதாலே வாலியை அழைத்து பாடல் எழுத வைத்ததாக சொல்லப்படுகிறது. இதேபோல இன்னுமொரு சம்பவம் கே. பாலசந்தர் இயக்கிய சிந்து பைரவி படத்திலும் ஏற்பட்டுள்ளது. தென்றலது கண்டதுண்டு திங்களது கண்டது இல்லை மனம் தான் பார்வை என்று வாலி எழுதிய இரண்டு வரிகளுக்காக வாலியின் பெயரை டைட்டில் கார்டில் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தியாகராஜ சுவாமிகள், பாரதியார் ஆகியோருடன் வாலி பேரை சேர்த்து ஒரு கார்டாகவும், வைரமுத்து பெயரை தனி கார்டாகவும் போட்டு சமாளித்து இருக்கிறார் இயக்குனர் சிகரம் பாலசந்தர். கடைசியாக இவையெல்லாம் சேர்ந்து ஒரு நாள் இசைபாடும் தென்றல் பட பாடல் உருவாக்கத்தின் போது நெருடலாக இருந்துள்ளது. 

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது பாடலுக்கு வரியை எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட அது பிடிக்கவில்லை என்று நானே அந்தப் பாடலை எழூதி காட்டுவதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். இதனால் கோபமடைந்த வைரமுத்து அங்கிருந்து வெளியேறிவிட்டாராம். தொடர்ச்சியாய் இன்னும் மனக் கசப்புகளும் ஏற்பட அதன்பிறகு யார் யாரோ சமாதானம் முயற்சி எடுத்தும் இருவரும் இணையவே இல்லை. 

தமிழில் உச்ச கலைஞனாக வலம் வந்த இளையராஜாவை பிரிந்திருந்த நேரத்தில் பாடல் வாய்ப்புகள் அவ்வளவாக வைரமுத்துவிற்கு கிட்டவில்லை. அதனால் கிடைத்த ஒருசில பாடல்களை எழுதி வந்தார். அதனால் மீண்டும் தான் இழந்த புகழை அடைய இசையமைப்பாளர்களின் துணையும் அவசியம் என்பதை உணர்ந்து எக்கச்சக்கமான இசையமைப்பாளர்களை தமிழின் முன்னணி இயக்குனர்களிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். 

அப்படியாக வந்து பின்னர் உச்சம் தொட்டவர் தான் ஏ. ஆர். ரகுமான். ஏ. ஆர். ரகுமானுடன் வைரமுத்து இணைந்து மீண்டும் ஹிட் கொடுக்க தொடங்கிய நேரத்தில் இளையராஜாவுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் இளையராஜாவையும் வைரமுத்துவையும் இணைக்க சில முன்னணி கலைஞர்கள் முயன்று பார்த்தார்கள். அந்த முயற்சிகள் கைகூடவில்லை. 

இளையராஜா வைரமுத்து இருவரும் இணைந்து உருவாக்கியவற்றை வெறும் பாடலாக மட்டுமே கடந்துவிட முடியாது. அதனால் தான் ஒரு தலைமுறையே அந்த இணையின் கலைக்குள் நிலைகுலைந்து கிடந்தது. அவற்றுக்கான சாட்சியாய் 100 கணக்கான பாடல்களை அடுக்கி வைத்துவிட முடியும். 

இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்து 33 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு கட்டத்திற்குப் பிறகு வைரமுத்து தன் பிடியை தளர்த்தீக் கொண்டார். இளையராஜா குறித்து பல இடங்களில் பேசுகையில் அவர் கண்கள் நிறைந்ததே அதற்கு சாட்சி. ஒருவேளை இளையராஜா சம்மதித்தால் வைரமுத்து பேசியிருக்கவும் கூடும். ஆனால் அது நிகழவில்லை. 

இளையராஜாவை பிரிந்தது குறித்து வைரமுத்து எழுதிய கவிதை : 

மனைவியின் பிரிவுக்குப் பிறகு

அவள் புடவையை தலைக்கு வைத்து படுத்திருக்கும் காதலுள்ள கணவனை போல…

நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்… 

திரை உலகில் நான் அதிகம் செலவிட்டது உன்னிடம் தான்… 

மனதில் மிச்சமில்லாமல் பேசி சிரித்தது உன்னோடு தான்… 

பெண்கள் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீ தான்… 

ஈரமான ரோஜாவை எழுதிவிட்டு 

ஆழியாறு அணையின் மீது நடந்துகொண்டிருந்தோம்… 

திடீரென நீ என்னை துரத்தினாய்… 

நான் ஓடினேன்… 

நீ துரத்திக் கொண்டே இருந்தாய்… 

நான் ஓடிக் கொண்டே இருந்தேன்… 

மழை வந்தது நின்றுவிட்டேன்… 

என்னை நீ பிடித்துவிட்டாய்… அப்போது நாம் சேர்ந்துவிட்டோம்… ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம். இப்போது முடியுமா… 

இருவரும் வெவ்வேறு திசையில் அல்லவா ஓடிக் கொண்டிருக்கிறோம்… 

Related Articles

நடிகர்களை நம்பாதிங்க – சத்யராஜ்! ந... கமல், ரஜினி இருவரும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில், " நடிகர்களை நம்பாதி...
பார்க்க வேண்டிய உலக சினிமாக்கள்!... 1.children of heaven2.Life is beautiful3.The way home4.the road home5.cinema paradiso6.run lala run7.mariya full of grace ...
தர்பார் படத்தின் பலம் மற்றும் பலவீனங்கள்... TON தமிழ் என்ற எங்கள் பக்கத்தில் தர்பார் படத்தின் விமர்சனம் பதிவிட்டிருந்தோம். அதன் டைட்டில் "பர்ஸ்ட் ஆஃப் படுத்து தூங்கிட்டு செகண்ட் ஆஃப் மட்டும் பார...
மே 3 – உலக பத்திரிக்கை சுதந்திர தி... உலக பத்திரிக்கை சுதந்திர தினம் ஏன்?மனித உரிமைகள் சாசனம் பகுதி பத்தொன்பதில் உள்ள பேச்சு உரிமை மற்றும் கருத்து உரிமை ஆகியவற்றை நினைவூட்ட 1993 ம் ஆண்...

Be the first to comment on "இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த கதை! – நிஜத்தில் நடந்தது என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*