ஜனவரி 1 2018 முதல் டெபிட் கார்ட் பயன்படுத்தி 2000ரூபாய் வரைக்கும் மேற்கொள்ளப்படும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
எம்டிஆர் (MDR) என்றால் என்ன?
ஒவ்வொரு முறையும் சிறிய அல்லது பெரிய கடைகளில் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிய பிறகு, அதற்கு உண்டான கட்டணத்தை டெபிட் கார்ட் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டிருக்கும். அப்படிச் செலுத்தப்படும் கட்டணம், கடைக்காரரின் வங்கி கணக்கில் சேவைக் கட்டணமாக ஒரு சிறு தொகை பிடித்தம் செய்தது போக வரவு வைக்கப்படும். தங்கள் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கான சேவைக் கட்டணத்தை வங்கிகள் கடைக்காரர்களிடம் வசூலித்துக் கொள்கின்றன. இது வணிக தள்ளுபடி விகிதம்அல்லது Merchant Discount Rate (MDR) என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான கடைகளில் வங்கிகள் வசூல் செய்யும் சேவைக் கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளும் சூழலே நிலவி வருகிறது.
இப்படிப்பட்ட தருணத்தில் தான் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு ஒன்றாம் தேதி முதல் கடைக்காரர்கள் வங்கிகளுக்குச் செலுத்திவரும் எம்டிஆர்(MDR) கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்தத் திட்டம் டெபிட் கார்ட் பயன்படுத்தி இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் பரிவர்த்தனைகள் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கடைக்காரர்கள் மூலம் பெறப்படும் சேவைக் கட்டணத்தை அரசே நேரடியாக வங்கிகளுக்குச் செலுத்திவிடும்.
2018 – 19 நிதியாண்டில் மத்திய அரசால் வங்கிகளுக்குத் திரும்ப செலுத்தப்படும் எம்டிஆர் தொகை 1050 கோடியாகவும், 2019 – 20 நிதியாண்டில் 1462 கோடியை வங்கிகளுக்கு அரசாங்கம் திருப்பி செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 2000 வரை ரூபாய் வரைக்கும் டெபிட் கார்ட் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்பவர்களைக் குறிவைத்து கணக்கிடப்பட்டுள்ளது.
எம்டிஆர் கட்டணம் எவ்வளவு?
ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் சிறிய மற்றும் பெரிய வணிகர்களுக்கான எம்டிஆர் எவ்வளவு என்பதை அறிவித்துள்ளது. அந்த வகையில் ஆண்டு வருமானம் இருபது இலட்சம் வரை இருக்கும் வணிகர்களுக்கு எம்டிஆர் ௦.40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தோராயமாக 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இருபது இலட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் இருக்கும் வணிகர்களுக்கு ௦.9 சதவீதமாக எம்டிஆர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தோராயமாக 1000 என்ற கணக்கில் வசூலிக்கப்படுகிறது.
க்யூ ஆர் கோட் (QR Code) கட்டணம் எவ்வளவு?
அதேபோல QR குறியீட்டின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் சேவைக் கட்டணத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சிறு வியாபாரத்திற்கு ௦.3 சதவீதம், அதாவது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 200 ரூபாயாக நிரனயம் செய்யப்பட்டுள்ளது. பெரு வணிகர்களுக்கு ௦.8 சதவீதம், அதாவது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1000 வசூல் செய்யப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் டெபிட் கார்டு பயன்பாட்டின் மீதான இந்த எம்டிஆர் அறிவிப்பை ஒட்டி வணிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
2014 -15 நிதியாண்டில் 80 கோடி பரிவர்த்தனைகளாக இருந்த டெபிட் கார்ட் பயன்பாடு , இப்போது மூன்று மடங்காக அதிகரித்து 20 கோடியே நாற்பது லட்சம் பரிவர்த்தனைகளாக அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் சென்ற நவம்பர் 2016 வரை 35240 கோடியாக இருந்த டெபிட் கார்ட் கட்டணம், நவம்பர் 2017ல் 47980 கோடியாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Be the first to comment on "இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் சேவைக் கட்டணமின்றி டெபிட் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம்"