இவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் அரசுப்பள்ளியில் தான் படிக்கிறார்களா?

Tamil Nadu Celebrities Child Education

இந்தியா முழுக்க கல்வி வியாபாரமாகிவிட்டது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதில்லை. அனைவருக்கும் இலவசமான கல்வி வேண்டும். அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும், பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இப்படி புரட்சியாகப் பேசுகிறார்களே அவர்கள் எல்லாரும் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் தான் படிக்க வைக்கிறார்களா? தமிழ்டா, தமிழன்டா, தமிழ் எங்கள் உயிர் மூச்சு, தமிழைப் படிங்க தமிழில் படிங்க என்று புரட்சி பேசுபவர்களின் பிள்ளைகள் தமிழ்வழிக்கல்வியில் தான் படிக்கிறார்களா?

கலைஞர் குடும்பம்:

முதலில் இந்தக் கேள்வி கலைஞர் குடும்பத்திடம் கேட்க வேண்டும். தமிழ் தமிழ் என்று கரகரத்த குரலில் வாழ்நாள் முழுக்க பேசிய கலைஞரின் பிள்ளைகள், பேரன்கள், கொள்ளு எள்ளு பேரன்கள் படித்தது படிப்பது எல்லாம் அரசுப்பள்ளிகளில் தானா? அதுவும் தமிழ்வழிக்கல்வியில் தான் படித்தார்களா? அவருடைய பரம்பரையில் உள்ள பிள்ளைகளுக்கு பிழைகள் இல்லாமல் தமிழ் எழுத தெரியுமா, திக்காமல் தமிழ் வாசிக்கத் தெரியுமா? இவர்களுடைய எதிர்கட்சி பக்கம் கேள்வியே எழுப்ப தேவையில்லை. சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை படித்து அந்தக் கோஷ்டி மிகத் தெளிவாக இருக்கிறது.

புரட்சி “தமிழன்” சத்யராஜ்:

இவருடைய தமிழ் ஆர்வத்தைப் பற்றியும் அரசியல் ஞானத்தைப் பற்றியும் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. மகாநடிகன் படத்தில் தமிழ் பேசி அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை கலாய்த்து தள்ளியிருப்பார். இன்னொரு படத்தில் (இங்கிலீஷ் காரன் என்று நினைக்கிறேன்) ஸ்டைலாக ஆங்கிலம் பேசித்திரியும் இளம்பெண்களை வாய்க்காலில் எட்டி உதைத்து தள்ளியவர் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் தான் படிக்க வைத்தாரா? அவருடைய உறவினர்கள் நண்பர்கள் எல்லாம் என்ன செய்தார்கள்?

தேசிய அரசியல்வாதி விஜய் டி ராஜேந்தர்:

இயக்குனர் ராமை போலவே இவரும் தமிழ் படித்த பட்டதாரி. நான் பச்ச தமிழன்டா, என் மகன் உலக மகா யோக்கியன் சிம்புவும் தமிழன்டா என்று உடலில் ட்ரம்செட் வாசித்து ஆர்ப்பாட்டம் செய்யும் தேசிய அரசியல்வாதி தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் தான் படிக்க வைத்தாரா?

இயக்குனர் சமுத்திரக்கனி:

பசங்க 2 மற்றும் சாட்டை, அப்பா உள்ளிட்ட படங்களில் அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் என்று அன்பாக அறிவுறுத்திய இயக்குனர் சமுத்திரக்கனி தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் தான் படிக்க வைத்தாரா? அதுவும் தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைத்தாரா? அவருடைய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள், உறவினர்களின் பிள்ளைகள் எல்லாம் அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் தான் படிக்கிறார்களா?

இயக்குனர் பாண்டியராஜ் மற்றும் சுசூந்திரன்:

பசங்க பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு படத்தை இயக்கிய பாண்டியராஜ் தன்னுடைய பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில்  தான் படிக்க வைக்கிறாரா? பசங்க 2 படத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பிள்ளைகள் எல்லாம் அரசுப்பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று ஒரு சட்டம் போடனும் என்று வசனம் வைத்திருந்தாரே அவருடைய பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கின்றன?

இன்றைய பள்ளிக்கல்வி பற்றி ஜீனியஸ் எனும் படத்தை இயக்கி இருக்கும் சுசூந்திரன் தன்னுடைய பிள்ளைகளை எந்தப் பள்ளியில் படிக்க வைக்கிறார்? அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைக்கிறாரா?

இயக்குனர் ராம்:

தங்கமீன்கள் எனும் அற்புதமான படத்தை இயக்கிய ராம் அந்தப் படத்தில் தனியார் பள்ளி தரும் அழுத்தத்தால் தன் பிள்ளை படும் துன்பத்தை பார்க்க முடியாமல் அரசுப்பள்ளியில் சேர்த்துவிடுவார். நிஜ வாழ்க்கையில் தன் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். தமிழ் படித்த அவர் தன் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைக்கிறாரா?

நீயா நானா கோபிநாத்:

பல கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அப்படி இருக்கிறோம் இப்படி இருக்கிறோம் என்று நம்முடைய வாழ்க்கை முறையை பேசும் கோபி, நீயா நானா நிகழ்ச்சியில் பலமுறை கல்வி பற்றி பேசும் கோபி தங்களுடைய பிள்ளைகளை எங்கு படிக்க வைக்கிறார்? விஜய் டிவியில் சேருவதற்கு முன் ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது, கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டேன் என்று சொன்ன கோபி தான் பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் சுமக்க கூடாது என்பதற்காக தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறாரா? அல்லது கஷ்டபடனும் அப்பத்தான் அவன் வாழ்க்கைல உருப்படுவான் என்று அரசுப்பள்ளியில் தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைக்கிறாரா?

இயக்குனர் அருண்பிரபு புருசோத்தமன்:

யாராலும் மறக்க முடியாத படம் அருவி. அதிலும் குறிப்பாக சொல்வதெல்லாம் சத்யம் நிகழ்ச்சியில் உயர்சாதியினர் தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள் என்பது பற்றி பேசியிருப்பார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய உதவி இயக்குனர்கள், நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் தங்களுடைய பிள்ளைகளை எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி:

தமிழ் ஆர்வம் மிக்க துடிப்பான இளைஞர். பல இடங்களில் தனக்கு தமிழார்வம் அதிகம் இருக்கிறது என்று கூறிக்கொள்பவர். இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா என்றவர். அம்மாவா ஆடுமாடே ம்மான்னு தான கூப்டுது, நீங்க மட்டும் ஏன்டா இங்கிலீஸ்ல மம்மி டாடினு பேசிட்டு திரியுறிங்க என்ற கேள்வி எழுப்பியவர். பாரதியை பிடிக்கும் என்று பாரதி மீசையை முறுக்கிக் கொண்டு இருக்கும் ஆதி தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தில் தமிழ் பேசினாலும் அபராதம் விதிக்கும் பள்ளியைப் பற்றி பேசியிருப்பார். அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் அவர்களுடைய பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் தான் படிக்க வைக்கிறார்களா? இதே கேள்வி கருத்து பேசும் நடிகர் விவேக்கிடமும் கேட்கிறோம்.

கமல்ஹாசன்:

எதற்கெடுத்தாலும் சுயபுராணம் பேசும் நம்மவர் தன் பிள்ளைகளை தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைத்தாரா? ஒரு நிகழ்ச்சியில், நான் அமெரிக்காவில் படித்தவள் என்பதால் தமிழ் அவ்வளவாக தெரியாது என்று ஸ்ருதி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

செந்தமிழன் சீமான்:

நாளைய முதல்வர், நாளைய பிரதமர், நாளைய அமெரிக்க ஜனாதிபதி, தமிழைக் காக்க வந்த கடவுள் சீமான் தமிழை வைத்து அரசியல் செய்யும் நபர்களில் மிக முக்கியமானவர். அவருடைய தம்பிகள், உறவினர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் தான் படிக்கிறார்களா?

ஏழாம் அறிவில் தமிழனின் மகத்துவத்தை சொன்ன சூர்யாவின் பிள்ளைகள், ஏ.ஆர்.முருகதாசின் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் தான் படிக்கிறார்களா?

ஆளப்போறான் தமிழன் என்று பாடல் எழுதிய பாடலாசிரியரின் (உறவினர்) பிள்ளைகள், அந்த வரிக்கு இசையமைத்தவரின் பிள்ளைகள், அதை இயக்கியவரின் உறவினர், உதவி இயக்குனர், தெரிந்தவர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் தான் படிக்கிறார்களா?

இதை “திரையில் அரசை விமர்சித்து பெற்றோரை விமர்சித்து தமிழைப் பற்றி பேசும் நடிகர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் தான் படிக்க வைக்கிறார்களா” என்று சுருக்கமாக எழுதியிருக்கலாமே ஏன் வழவழவென்று இவ்வளவு நீளம் என்று தோன்றலாம். ஆனால் அவர்கள் பேசிய விஷியத்தை சுட்டிக்காட்டுவது அவசியமாகத் தோன்றியது. சரி திரைத்துறையில் இருப்பவர்கள் தான் இப்படி முகமூடி அணிந்து திரிகிறார்கள் என்றால் தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களின் பாடலாசிரியர்களின் பட்டிமன்ற பேச்சாளர்களின் தமிழ் செய்தி வாசிப்பாளர்களின், தமிழ் ஊடக நண்பர்களின் பிள்ளைகள், பேரன்கள் பேத்திகள் அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் தான் படிக்கிறார்களா?  சரி அதைவிடுங்கள். சினிமா துறையினர் அப்படித்தான் என்று அவர்களை அப்படியே விட்டுவிடுவோம். அதே சமயம் இவர்களில் ஒருசிலர் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைப்பவராக இருக்கலாம். அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிப்போம்.

ஆட்சியர் சகாயம், ஆட்சியர் உதயச்சந்திரன், ஆட்சியர் இறையன்பு:

அரசுப்பள்ளிகளில் மட்டுமே தமிழ் வாழ்கிறது என்றவர் சகாயம். ஆனால் அவர் தன்னுடைய பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் தான் படிக்க வைக்கிறாரா?

தற்போதைய பாடத்திட்டத்தை பலருக்கு பிடித்தமான வகையில் மாற்றி அமைத்த, பள்ளிக்கல்வித் துறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்த ஆட்சியர் உதயச்சந்திரன் தன் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் படிக்க வைக்கிறார்?

ஆட்சியரும் இலக்கியவாதியுமான இறையன்பு பற்றியும் அவருடைய புத்தகங்கள் பற்றியும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. அவருக்கும் அதே கேள்வி தான்?

இப்படி முக்கிய பொறுப்பில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவை அன்பை பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அதிகாரிகள் அனைவரும் கருத்து பேசுகிறார்களே ஒழிய பின்பற்றுவதாக தெரியவில்லை.

அதை முடிந்தவரை அவர்கள் பின்பற்றினால் அவர்கள் சொல்லும் கருத்து மதிப்புடையதாக இருக்கும். ஆனால் இதெல்லாம் நடக்குமா? டவுட்டு தான்!  வெறும் கண்துடைப்பு வேலையை செய்து இன்னும் எவ்வளவு நாள் நம்மை ஏமாற்ற போகிறார்களோ? ஏமாறுவோம்! பழக்கப்பட்டதுதானே! ஏமாறுவோம்!!!

Related Articles

இந்த சமூகம் எதை கற்றுக்கொடுக்கிறது? நாமெ... மாரடைப்பு, சாலை விபத்து, தற்கொலை இந்த மூன்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் அதீத மன உளைச்சல். இப்படி மன உளைச்...
96 ராமை போல் திருமணம் செய்யாமலே வாழ்வது ... 96 படம் சமீபத்தில் வெளியாகி விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ரசிகர்களின் பலத்த  ஆதரவை பெற்றது. வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றியை ர...
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் ... தமிழகத்தில் கல்வி என்ன நிலைமையில் இருக்கிறது என்றும் அரசுப்பள்ளிகள் எப்படி இருக்கிறது என்றும் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் எப்படி இயங்கி வருகிறார்க...
இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் சேவைக் கட்ட... ஜனவரி 1 2018 முதல் டெபிட் கார்ட் பயன்படுத்தி 2000ரூபாய் வரைக்கும் மேற்கொள்ளப்படும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்க மத்திய அரசு முன...

Be the first to comment on "இவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் அரசுப்பள்ளியில் தான் படிக்கிறார்களா?"

Leave a comment

Your email address will not be published.


*