நியூசிலாந்தைப் போலவே தமிழகத்திலும் ஒரு செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதி

SAM

கணினி அறிவியலில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை செயற்கை நுண்ணறிவு. டெர்மினேட்டர், பவர் ரேஞ்சர்ஸ் மற்றும் பேசஞ்சர்ஸ் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் இந்தத் தொழில்நுட்பத்தை பற்றி ஏற்கனவே நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.மனிதர்களைப் போலவே சிந்தித்துச் செயல்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்குவதே இந்தத் தொழில்நுட்பத்தின் நோக்கம். அதன் ஒரு வடிவமாக நியூசிலாந்தில் நாற்பத்து ஒன்பது(49) வயதாகும் நிக் கெரிட்ஸ்ன் என்ற  விஞ்ஞானி, சேம் என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதியை உருவாக்கியிருக்கிறார்

இந்த அரசியல்வாதி ஊழல் செய்வாரா?

சேம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் மிக எளிது. நியூசிலாந்து நாட்டின் குடியிருப்புகள், கல்வி, அந்நாட்டின் சட்டதிட்டங்கள், குடியேறும் விதிமுறைகள் குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சோதனை முயற்சியாக சேம் அங்கே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் 2020 வாக்கில் சேம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்குக்கூடத் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் என்று நிக் கெரிட்ஸ்ன் வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு செயற்கை நுண்ணறிவு இயந்திரம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதி.

எப்படி இந்த அரசியல்வாதியைத் தொடர்புகொள்வது?

பேஸ்புக் மெசஞ்சர் மூலமாகவும், http://politiciansam.nz/என்ற சுட்டியின் மூலமாகவும் சேம்மை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

செயற்கை நுண்ணறிவு ஆபத்தானதா?

செயற்கை நுண்ணறிவு நுட்பம் வட கொரியாவை விட ஆபத்தானது என்று டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் மிகச் சமீபத்தில் கூறியிருந்தார். இவர்கூறும் அளவிற்கு இந்தத் தொழில்நுட்பம் ஆபத்தானதா என்றால், இதுகுறித்தும் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது. கணினி முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது, மனிதர்களின் வேலைவாய்ப்பு இதனால் பறிபோகும் என்று மட்டுமே பேசப்பட்டது. அது நடந்தும்கூட. ஆனால் கணினிகளால் மனிதர்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தால் அதனால் மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோவது மட்டுமல்லாமல், ரோபோக்கள் வீதியில் இறங்கி மனிதர்களைத் தாக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்கிறார் எலன் மஸ்க். எதிர்ப்புக்கு நிகராக செயற்கை நுண்ணறிவுக்கு ஆதரவும் பெருகிவருகிறது. சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பயப்படத் தேவையில்லை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதி

வேடிக்கைக்காகத் தமிழகத்தில் இப்படி ஒரு செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதி உருவாக்கப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்பெயர் குணா. இனி குணா எப்படி மக்களின் சந்தேகங்களை தீர்த்துவைக்கிறார் என்று பார்ப்போம்

மக்கள் : சென்னை மழையைச் சமாளிக்க என்ன திட்டம் இருக்கிறது?

குணா : நல்ல கேள்வி. அடுத்த கேள்வி

மக்கள்: ஊழலை ஒழிக்க என்ன மாதிரியான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன?

குணா: அதற்கு பதினோரு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

மக்கள்: டெங்கு கொசுக்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டனவா?

குணா: தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது

மக்கள்: அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?

குணா: செயற்குழுவைக் கூட்டி நல்ல முடிவை அறிவிப்போம்

உண்மையில் தமிழகத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதியை உருவாக்குவது மிகவும் எளிது இல்லையா?

Related Articles

நீரஜ் சோப்ரா என்ன சாதி என்று தெரிந்துகொண... நீரஜ் சோப்ரா - இனி இந்தப் பெயரை நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கப் போவதில்லை. 2021ம் ஆண்டிற்கான... இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்த டோக்கியோ ஒலிம்பிக் ...
“பர்த்டே செலிபிரேசன் வீடியோ லின்க்... கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளம் முழுக்க அதிகம் பேசப்பட்ட வார்த்தை "link bro" என்பது தான். இலங்கையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் உல்லாச வீடிய...
உலக புகழ்பெற்ற முதல் நடிகர் சார்லி சாப்ள... வசனங்கள் இல்லாத காலத்திலயே உலகம் முழுவதும் புகழோடு விளங்கியவர் சார்லி சாப்ளின். சிரிப்பு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தார். அவர் நடித்த படங்களின்...
H1B விசா வைத்திருப்பவர்களை இந்தியா அன்ப... சென்னை ஜெமினி சர்க்கிளில் ஒரு காட்சி. பல லகரங்கள் மதிக்கப்படும் ஒரு உயர்தர காரில் இருந்து அந்தப் பெண் இறங்கினார். கையில் தனது திருமண ஆல்பத்தை கொண்டிரு...

Be the first to comment on "நியூசிலாந்தைப் போலவே தமிழகத்திலும் ஒரு செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதி"

Leave a comment

Your email address will not be published.


*