கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தின் சேவையை அடிக்கடி பயன்படுத்தும் பயணிகள், மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல் காரணமாக அங்கு வந்து செல்லும் பயண அனுபவத்தை வெறுப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் பெங்களூரு மெட்ரோவால் முன்மொழியப்பட்டிருக்கும் சேவைகள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், விமான நிலையத்திற்குச் செல்லும் பயண நேரம் பாதியாக குறையும் என்றும், இருபத்து ஐந்து நிமிடங்கள் வரை பயணிகள் சேமிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல் வடிவம் பெற்றால் எப்படி பயண நேரம் குறைக்கப்படும் என்றும், பயணிகள் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
1) ரயில் நிலையங்களில் செக் இன் செய்துகொள்ளும் வசதி
2) ரயில் நிலையங்களிலும், ரயிலிலும், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த அட்டவணை காண்பிக்கும் தகவல் பலகை வசதி.
3) பயணமூட்டைகளை கையாளத் தானியங்கி முறை
4) ரயில் நிலையங்களிலும், விமான நிலையத்திலும் தள்ளுவண்டி மற்றும் போர்ட்டர் வசதி
5) பயண மூட்டைகள் மற்றும் கூடுதல் சுமைகள் வைத்துக்கொள்ளத் தனியே ஒரு முன்பதிவு பெட்டி வசதி
6) ரயில் நிலையங்களையும் விமான நிலையங்களையும் இணைக்கும் விதத்தில் வாக்கலேட்டர் (Walkalator) உருவாக்குவது
வேகமும் செலவினங்களும்
சராசரியாக மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையிலும் , அதிகபட்சம் 90 முதல் 95 கிலோ மீட்டர் செல்லும் வகையிலும் இந்த மெட்ரோ ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மகேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்திற்கு உண்டாகும் செலவினங்கள் குறித்துப் பேசிய அவர் இதற்குத் தேவைப்படும் மொத்த தொகையான 5950 கோடியில், அரசாங்கத்தின் பங்களிப்பாக 1000 கோடி போக மீதமுள்ள தொகையை கடன் மற்றும் பாத்திரங்கள் மூலம் வசூலிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.தனியார் நிதி நிறுவனங்கள் பல கடன் தர முன்வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இசைவான பயண அனுபவத்தைப் பயணிகளுக்கு தரும் பட்சத்தில், உலக தரத்திலான சேவைகளை வழங்குவதற்காக பெங்களூரு மெட்ரோ பெருமை கொள்ளலாம்.
Be the first to comment on "விமான நிலையத்தில் உயர்தர வசதிகளை அறிமுகப்படுத்துகிறது பெங்களூரு மெட்ரோ"