மின் சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உலகம்
முழுவதும் மின் சக்திக்கு உண்டான மாற்று என்ன என்பதை அடிப்படையாக வைத்து பல்வேறு
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது போன்ற ஆய்வுகளில் ஒன்று, சூரிய சக்தியை
மின் சக்திக்கு மாற்றாகப் பயன்படுத்துவது.
சூரிய சக்தியில் இயங்கும் நாட்டின் முதல் யூனியன் பிரதேசம்
நூறு சதவீதம் சூரிய சக்தியில் இயங்கும் முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை பெற்று
இருக்கிறது டையு. பெருமளவில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அங்கே நிறுவியதன் மூலம்
பெருமளவுக்கு மின் தடை ஏற்படுவது குறைக்கப்பட்டுள்ளது. சூரிய மின் உற்பத்தி நிலையங்கள்
நிறுவுவதற்கு முன்பு, டையுவில் மின் தடை காலங்களில் குஜராத் அரசாங்கம் மின்சாரம் தந்து
உதவியது.
42 சதுர கிலோமீட்டர்கள் அளவில், கிட்டத்தட்ட 50 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின் உற்பத்தி
நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் 13 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. அவற்றில்
மூன்று மெகாவாட் அளவிற்கான மின்சாரம் கூரை மீது அமைக்கப்பட்டிருக்கும் சூரிய தகடுகள்
மூலமும், எஞ்சிய பத்து மெகாவாட் மின்சாரம் மற்ற சூரிய தகடுகளில் இருந்தும் கிடைக்கின்றன.
குஜராத் அரசை இனி சார்ந்திருக்க தேவையில்லை
டையு மற்றும் டாமனின் மின்சார துறையின் நிர்வாக பொறியாளர் மிலிந்த் இங்கில் கூறும் போது
‘சூரிய மின் சக்தியை உருவாக்கத் தொடங்கிய பிறகு, மின்சாரத்திற்காக குஜராத் அரசைச்
சார்ந்திருக்கும் நிலை மாறியுள்ளது. டையுவின் மொத்த ஜனத்தொகையான 56000 பேருக்கும்
சேர்த்து 7 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. சூரிய மின் நிலையங்களின் மூலம்
நாளொன்றுக்கு எங்களால் 10 . 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடிகிறது’என்று தெரிவித்தார்.
குறைந்தது மின் கட்டணம்
சூரிய மின்சாரத்தால் டையுவில் பெருமளவுக்கு மின் கட்டணம் குறைந்தும் இருக்கிறது. முன்பு ௦-
50 யூனிட் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 1 . 20 ரூபாயும்
, 50 – 100 யூனிட் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 1 . 50
ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சூரிய மின் உற்பத்தி நிலையங்களின் மூலம்
மின்சாரம் பெற தொடங்கிய பிறகு விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. 1 – 100 அளவுக்கு
மின்சாரம் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 1 . 01 ரூபாய் மட்டும்
வசூலிக்கப்படுகிறது.
Be the first to comment on "நூறு சதவீதம் சூரிய சக்தியில் இயங்கும் முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை பெறுகிறது டையு"