மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரையில் அதிமுகவின அதிகாரப்பூர்வ நாளேடாக நமது எம்ஜிஆரும், அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ஜெய டிவியும் செயல்பட்டு வந்தன. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட பல்வேறு உட்கட்சி பூசல்களின் காரணமாக, இப்போது நமது எம்ஜியாரும், ஜெய டிவியும் சமீபத்தில் ஆர்க்கே நகரில் வெற்றி பெற்ற, சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் வசம் உள்ளன.
சேனல் மற்றும் நாளிதழ்
இதைத் தொடர்ந்து ஜனவரி 8 , 2018 அன்று கூடவிருக்கும் சட்டசபை கூட்டத்தொடரின் செயல்பாடுகள் குறித்து அதிமுகவின அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் கூடி விவாதித்தனர்.இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக அதிமுகவுக்கு எனத் தனியாக ஒரு தொலைக்காட்சி சேனலும், நாளிதழும் ஆரம்பிக்கப்பட இருப்பதாக ஓபிஎஸ்-ஈபிஸ் கூட்டாக அறிவித்தனர்.
90 நாட்களுக்குள்
அடுத்த தொண்ணூறு நாட்களுக்குள் தொலைக்காட்சி சேனலும், நாளேடும் வெளிவரத் தொடங்கும் என்று அந்தச் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது அம்மா, அம்மா
தொலைக்காட்சி சேனலின் பெயரும், நாளேட்டின் பெயரும் கூட முடிவு செய்யப்பட்டு விட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நாளேட்டுக்கு நமது அம்மா என்றும், தொலைக்காட்சிக்கு அம்மா என்றும் பெயர் சூட்டப்பட இருப்பதாகத் தெரிகிறது.
இதுபோன்ற அறிவிப்புகளைத் தொடர்ந்து, நடக்கவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரின் மீதும், புதிதாகத் தொடங்கவிருக்கும் தொலைக்காட்சி சேனல் மீதும், நாளேட்டின் மீதும் மக்களின் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
Be the first to comment on "புதிய தொலைக்காட்சி சேனல், புதிய நாளிதழ் தொடங்குகிறது அதிமுக"