கொள்ளையடிக்கும் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள்! – படித்திருந்தும் ஏமாறும் இளைஞர்கள்!

TNPSC

தமிழகத்தில் பால்வாடி முதல் பட்டப்படிப்பு வரை அத்தனையும்  வியாபாரம் தான். பஸ் கண்டக்டர் டிக்கெட்டை தருவது போல பணத்தை வாங்கிக்கொண்டு சர்வ சாதாரணமாக டிகிரி சர்டிபிகேட்டை தருகிறது தனியார் கல்லூரிகள். தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில் இருக்கிறதோ இல்லையோ தனியார்  இன்ஜினியரிங் காலேஜ் இருக்கிறது என்பது போய் இப்போது இந்த வரிசையில் ஐஏஎஸ் கோச்சிங் சென்டர், டிஎன்பிஎஸ்சி கோச்சிங் சென்டர் என்று இந்த கோஷ்ட்டியும் காலிப்பெட்டியை திறந்து வைத்து வசூலிக்க தொடங்கிவிடுகிறது.

இந்த முறை டிஎன்பிஎஸ்சி?

பத்தாம் வகுப்பை தகுதியாக வைத்து டிஎன்பிஎஸ்சி  நடத்தும்  குரூப்4 மற்றும் விஎஓ தேர்வுகள் இந்த முறை ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே தேர்வாக நடக்க இருக்கிறது. இதில் 9351 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 20.83 லட்சம் பேர். கணக்கு போட்டால் ஒரு பணிக்கு 222 பேர் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள். இந்த 20.83 லட்சத்தில் 1லட்சத்திற்கும் மேல் பொறியியல்  பட்டதாரிகள்.[நம்ம பசங்க எல்லா இடத்துலயும் இருக்காங்க! தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் இன்ஜினியர் என்பது போல் ஆகிவிட்டது! ஏசப்பா!]. இளநிலை பொறியியல் பட்டதாரிகள் மட்டுமல்ல இந்த வரிசையில், முதுநிலை பட்டதாரிகள், வழக்கறிஞர்கள் என்று எல்லோரையும் கணக்கு போட்டால் பத்துலட்சத்தை தாண்டுகிறது.

யாருக்கெல்லாம் லாபம்?

என்னதான் நம்ம ஆட்கள் படித்திருந்தாலும் எந்நேரமும் ஆன்லைனில் குடித்தனம் நடத்தினாலும் டிஎன்பிஎஸ்சிக்கு எப்படி அப்ளை செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விசியம். ஆக, கம்யூட்டர் சென்டர்களுக்கு நல்ல லாபம்!

இரண்டாவது அரசாங்கத்துக்கு நல்ல லாபம்!

மூன்றாவது கோச்சிங் சென்டர்களுக்கு நல்ல லாபம்!

நான்காவது அந்த கோச்சிங் சென்டர்களுக்கு விளம்பர போஸ்டர்கள் அடித்து தரும் பிரிண்டிங் கம்பெனிகளுக்கு நல்ல லாபம்!

தேர்வுக்கு படிக்க மெட்டீரியல் வாங்கி ஜெராக்ஸ் போட வேண்டும் என்பதால் ஜெராக்ஸ் கடைக்கு நல்ல லாபம்!

கொள்ளையடிக்கும் கோச்சிங் சென்டர்கள்:

டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு அடுத்த கணம், வாங்கம்மா வாங்க… 3 மாசத்துல உங்களுக்கு கவர்மெண்ட் வேலை வாங்கித் தரேன் என்று கலர் கலராக போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டி வைக்கிறார்கள். அதை பார்த்துவிட்டு நம்மாட்களும் மூன்று மாசத்துக்கு பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று கண்ணை மூடிக்கொண்டு காசை கட்டிவிட்டு வகுப்பில் சேர்கிறார்கள். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களை விதவிதமாக ரகரகமாக வேறொரு மெட்டீரியலாக தயார் செய்து, அந்த மெட்டீரியலுக்கு தனி கட்டணம் விதிக்கிறார்கள். அடுத்ததாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் தேர்வு வைக்கிறார்கள். அந்த தேர்வு வினாத்தாள்களுக்கும் ஐம்பது ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள்.

சரி, இவ்வளவு வசூலிக்கிறார்களே, கோச்சிங் எப்படி என்று கேட்டால் அது அதற்குமேலே இருக்கிறது. புத்தகத்தில் இருப்பதை அப்படியே வரிவரியாக படித்துக்காட்டுகிறார்கள். புத்தகத்தில் இருப்பதையே மறுபடியும் ஒருமுறை கைப்பட எழுத வைக்கிறார்கள். இதெல்லாம் ஒருநாள் வகுப்பில் சில மணி நேரங்கள் தான். மீதி நேரங்கள் வகுப்பு எடுக்கும் ஆசிரியரின் சுயபுராணங்களும், வெட்டிக்கதைகள் தான் அரங்கேறுகிறது. இப்படியே காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். கண்ணை மூடி திறப்பதற்குள் மூன்று மாதம் முடிந்துவிடுகிறது. இப்படித்தான் பெரும்பாலான கோச்சிங் சென்டர்கள் புரூடா வேலை செய்து வருகிறது. இது அத்தனையும் வேஸ்ட்! கால விரயம்! பண விரயம்!

இதற்கு மாற்று வழி?

இருக்கிறது. மாவட்ட மைய நூலகம்!. ஒரு சில மாவட்ட மைய நூலகங்கள் சனி, ஞாயிறுகளில் முற்றிலும் இலவசமாக பயிற்சி வழங்குகிறது. மாவட்ட மைய நூலக பயிற்சி வகுப்பிலும் ஆசிரியரின் சுயபுராணங்கள் அரங்கேற வாய்ப்புண்டு. அங்கும் வெட்டிக்கதைகள் பேசி கால விரயம் செய்யாமல் இருப்பது நம் கையில் தான் உள்ளது. தனியார் கோச்சிங் சென்டரில் தட்டிக்கேட்க முடியாத சில ஏமாற்று வேலைகள் இங்கு நடந்தால் தாராளமாக தட்டிக்கேட்கலாம். கேட்க வேண்டும்! ஏனென்றால் நூலகத்தை முழுவதுமாக பயன்படுத்த வேண்டியது நம் கடமை! உரிமை!

இந்த பயிற்சி வகுப்புகள்  ஒருசில மாவட்டங்களில் தான் செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியது போல எல்லா மாவட்டங்களிலும் இந்த இலவச போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை. பல கோச்சிங் சென்டர் ஏறி இறங்கி ஏமாந்து போன இளைஞர்கள் ஒன்றுதிரண்டு உங்கள் மாவட்ட மைய நூலகத்தை அணுகி, உங்களுக்கு தேவையானதை கேட்டு வாங்குங்கள்!

ஏமாந்தது போதும்:

மெத்த படித்த அறிவு ஜீவிகள், ” நம்முடைய அறிவைப் பயன்படுத்தி , மத்தவங்கள காப்பாத்தணும் என்றில்லாமல், மத்தவங்கள ஏமாத்துணும்என்ற கொள்கையை பின்பற்றி வருவதால் நம்முடைய அறியாமையை பயன்படுத்தி நன்றாக சம்பாதித்துக்கொள்கிறார்கள்! நாம் படித்திருந்தும் ஏமாந்துகொண்டே தான் இருக்கிறோம்.

Related Articles

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண் ... கடந்த 2007ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில் நாட்டில் 53.2 சதவீத குழந்தைகள் ...
மார்ச் மாதமே மண்டைய பிளக்கும் வெயிலா? &#... சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நூறு டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருக்கிறது. மார்ச் மாதமே இந்த நிலைமை என்றால் மே மாதங்களில் என்னென்ன பாடுபட போகிறோமோ? ...
ப. திருமாவேலன் எழுதிய பெரியோர்களே தாய்மா... அறச்சீற்றம் கொண்ட இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் " பெரியோர்களே தாய்மார்களே!" - பெரியோர்களே தாய்மார்களே பு...
திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இ... முந்தைய காலத்தை விட இந்தக் காலத்தில் தான் சாதி பாகுபாடும் ஆதிக்கமும் வன்முறையும் அதிகம் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தெருப்பலகைகளில...

Be the first to comment on "கொள்ளையடிக்கும் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள்! – படித்திருந்தும் ஏமாறும் இளைஞர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*