ஜனவரி 31, 2018 அன்று வானில் மூன்று அதிசயங்களை நிகழ இருக்கின்றன. வானியல் ஆய்வாளர்கள் இந்த நிகழ்வை ‘சூப்பர் ப்ளூ மற்றும் ப்ளட் மூன்’ என்று வர்ணனை செய்கிறார்கள். அதாவது இந்த மாத இறுதியில் வானில் ஒரே நாளில் சூப்பர் மூன், ப்ளூ மூன் மற்றும் முழு சந்திர கிரகணம் நிகழ்வதை வானியல் ஆராச்சியாளர்கள் அப்படிக் கூறுகின்றனர்.
அதிசயங்களின் ஆண்டு 2018
2018 ஏற்கனவே அதிசயங்களின் ஆண்டாகப் பெயர் பெற்றிருக்கிறது. மேலும் இந்த மூன்று நிகழ்வுகளும் அந்தப் பெயரை உறுதி செய்து இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் வரும் பிப்ரவரி மாதத்தில் ஒரு பௌர்ணமி கூட இல்லை என்பதும், மார்ச் மாதம் 31 ஆம் தேதி மற்றுமொரு ப்ளூ மூன் தோன்றும் என்பதும் கூடுதல் ஆச்சரியங்கள். அது என்ன சூப்பர் மூன், ப்ளூ மூன் மற்றும் பிளட் மூன் என்கிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள்.
சூப்பர் மூன் என்றால் என்ன?
சூப்பர் மூன் அடிப்படையில் ஒரு பௌர்ணமி நிலவாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது. பௌர்ணமி நிலவைக் காட்டிலும், தன் சுற்று வட்ட பாதையில் பூமிக்கு அருகில் வந்து சென்றால் அது சூப்பர் மூன். இந்த ஆண்டின் முதல் நாள், அதாவது புத்தாண்டு அன்றே வானில் சூப்பர் மூன் தோன்றியது.
வழக்கமான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் பதினான்கு சதவீதம் பெரியதாகவும், முப்பது சதவீதம் கூடுதல் பிரகாசம் கொண்டதாகவும் இந்த சூப்பர் மூன் காட்சியளிக்கும். ஆனால் இந்தத் தோற்ற மாற்றத்தை நாம் வெறும் கண்களால் கண்டுபிடிக்க இயலாது. வரும் ஜனவரி 31 ஆம் தேதி பதினான்கு மடங்கு பெரிதான, முப்பது சதவீதம் கூடுதல் பிரகாசமான நிலவைக் காண தயாராகுங்கள்.
ப்ளூ மூன் என்றால் என்ன?
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வானில் ப்ளூ மூன் தோன்றும். ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமியை ப்ளூ மூன் என்று அழைப்பார்கள். இரண்டாவதாக வரும் பௌர்ணமிக்கு இந்தச் சிறப்பு பெயர். ஜனவரி மாதம் மட்டுமல்லாமல், மார்ச் மாதத்திலும் இரண்டு பௌர்ணமிகள் தோன்ற இருக்கின்றன. ஆக, மார்ச் மாதத்தின் இரண்டாவது பௌர்ணமி ப்ளூ மூனாக தோற்றம் தர இருக்கிறது.
பிளட் மூன் என்றால் என்ன?
முழு சந்திர கிரகணத்தையே பிளட் மூன் என்று அழைக்கிறார்கள். சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியன நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படும். பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்து, அதை முழுவதுமாக மறைக்கும்.
ஏற்கனவே தமிழ் படங்களில் அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் தான் பேய் பழி வாங்கும். மூன்று அதிசயங்களை ஒரே நாளில் என்று வேறு சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
Be the first to comment on "வானில் மூன்று அதிசயங்களைக் காண தயாராகுங்கள்"