பெண்களுக்கு எதிரான, குறிப்பாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வரம்பு மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து நாடெங்கிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
முன்னோடியான மாநிலங்கள்
மக்களின் எண்ணங்களை மதித்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தது. தற்போது அந்த மாநிலங்களைப் பின்பற்றி ஹரியானாவும்
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சட்ட மசோதாவை கொண்டு
வந்திருக்கிறது.
ஹரியானாவில் புதிய சட்டம்
ஹரியானாவில் நிகழ்ந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்களை தொடர்ந்து அம்மாநில முதல்வர்
லால் கத்தர் கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி பாலியல்
வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள்
அமைக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு நீதி விரைவாகக் கிடைக்க வழிவகை செய்யப்படும்
என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து ஹரியானா சட்டப்பேரவை ஒருமனதாக 12 வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கும் குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில்
குற்றவியல் சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு
இருக்கிறது.
ஐபிசி 1860, குற்றவியல் நடைமுறைக் கோட் 1973 மற்றும் பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ்
குழந்தைகள் பாதுகாப்பு போன்ற முந்தைய சட்டங்களை திருத்தும் வகையில் இந்த புதிய சட்ட
மசோதா வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஹரியானா சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் ” 2012 ஆம் ஆண்டைத் தொடர்ந்து
இந்த ஆண்டு ஜனவரி மாதம், பாலியல் வன்புணர்வு குற்றங்கள் மிக அதிக அளவில்
ஹரியானாவில் நிகழ்ந்துள்ளன” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் கிரண் சவுத்ரி பேசுகையில் “பாலியல் வன்புணர்வு குற்றங்களில் குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்க, பாதிக்கப்பட்டவர்கள் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்ற வரம்பு இருக்கக்கூடாது. பாலியல் வன்புணர்வு என்பது கொலையை விடக் கொடூரமானது”என்று தெரிவித்தார்.
தண்டனைகள் கடுமையாக்கப்படும் போது குற்றங்கள் குறைகின்றனவா என்பதைப்
பொறுத்திருந்து பார்ப்போம்.
வணக்கம். உயிர்க்கொலையில் உடன்பாடு இல்லை எனினும்,இந்த தண்டனைக்குப் பயந்தாவது இனி வன்புணர்வு செய்ய அஞசுவார்களா என்ற நப்பாசை உள்ளது.