சினிமாவைப் பற்றி கொஞ்சம்…
இது ஒரு இலக்கணம் இல்லாத தொழில். காரணம் ஒரு படத்தை இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று யாராலும் கற்றுத்தர முடியாது. இது ஒரு அனுபவம். வாழ்க்கையைப் போன்றது சினிமா. தானே உணர்ந்து கற்றுக் கொண்டால் தான் முடியும்.
அதுமட்டுமில்லாது ஒரு படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று கணித்து இருப்போம். ஆனால் அது ஓடாது. அதே போல் இந்தப் படம் எல்லாம் ஓடாது என நினைத்த படங்கள் வெற்றி அடையும். இப்படி யாராலயும் நிர்ணயிக்க முடியாத தொழில். அதீத திறமையும் நேர்மையும் ஒழுக்கமும் கொண்டவர்களால் மட்டும் தான் தொடர் வெற்றிப் படங்கள் தர முடியும்.
இங்கு தொடர்ந்து பணியாற்ற அனைவரையும் புரிந்துகொண்டு சூழலுக்குத் தகுந்தாற்போல செயல்பட வேண்டும்.
இயக்கத்தைப் பற்றி கொஞ்சம்…
நாம் பார்த்த வாழ்க்கையில் அனுபவித்த சில சம்பவங்களை மையமாக வைத்து படமாக எடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்தால் உங்களால் ஒரே ஒரு படம் தான் பண்ண முடியும். ஆக நீங்கள் தொடர்ந்து வெற்றி படங்கள் இயக்க வேண்டும் என்றால் புத்தக வாசிப்பு பழக்கம் அவசியமாகிறது. சமூகத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். சமூக அவலங்களை சமரசம் இல்லாத அறத்துடன் பார்க்க வேண்டும்.
எப்படிபட்ட புத்தகங்களை படிக்க வேண்டும்?
படிக்க படிக்க மனதிற்குள் காட்சிகளாக விரியும் நாவல்களை, சிறுகதைத் தொகுப்பை படிக்க வேண்டும். திரைக்கதைக்கு என்று தனியாக மெனக்கெடாமல் படிப்பதையே ஒரு படம் பார்ப்பதை போன்ற அனுபவத்தை உண்டாக்கும் எழுத்தாளர்கள் நம் மண்ணில் இருக்கிறார்கள்.
முதலில் சுஜாதாவில் இருந்து த்ரில்லர் எழுத்தாளர் ராஜேஷில் இருந்து புத்தக வாசிப்பை தொடங்க வேண்டும். அதை அடுத்து ஜெயகாந்தன், புதுமைபித்தன், சுந்தர ராமசாமி, ராஜநாராயணன், அசோகமித்ரன் என்று புத்தக வாசிப்பை படிப்படியாக தொடர வேண்டும். இந்தப் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் உங்கள் சிந்தனைத் திறனும் கற்பனைத் திறனும் பெரிய அளவில் அதிகரிக்கும். சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் உங்களை அறியாமலே நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கி இருப்பீர்கள். உங்களை அறியாமலே நீங்கள் இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்டிருப்பீர்கள். அதே போல் சொந்தமாக கதை எழுதி இயக்க வேண்டும் என்று எல்லா படங்களுக்கும் நினைத்தால் உங்களுக்கு தோல்வி தான் மிஞ்சும்.
உதவி இயக்குனர் வாய்ப்பு பெறும் முறைகள்:
- நீங்கள் திரைத்துறையில் அனுபவசாலியாக இருக்க வேண்டும்.
- உலக சினிமா அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.
- இலக்கிய அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் எதாவது இரண்டு மொழிகளை நன்கு தெரிந்து இருக்க வேண்டும்.
- குடும்பச் சூழல் ஒத்துப் போக வேண்டும்.
- பல திட்டுக்கள் விழுந்தாலும் செய்யும் தொழிலில் கவனமாக இருக்கும் திறமை வேண்டும்.
- நல்ல கற்பனைத் திறனும் கவனிக்கும் திறனும் இருக்க வேண்டும்.
இப்படி பலவித தன்மைகள் இருக்க வேண்டும். அப்படி பல தன்மைகள் இருந்தால் இயக்குனரை நீங்கள் நெருங்கி விடலாம்.
எப்படி எல்லாம் அணுகலாம்?
- தெரிந்தவர் (தயாரிப்பாளர் அல்லது உதவி இயக்குனர்கள் பரிந்துரையின் பேரில்) மூலம் இயக்குனரை அணுகலாம்.
- உங்களின் திறமையை நிரூபித்து ( குறும்படம் எடுத்து அது எதாவது ஒரு போட்டியில் கலந்து பரிசு வென்றிருக்க வேண்டும் ) சொந்த முயற்சியால் நேரடியாக இயக்குனரை அணுகி வாய்ப்பு பெறலாம்.
- இயக்குனர்கள் சிலர் தங்கள் இணைய தள பக்கங்களில் உதவி இயக்குனர்கள் தேவை என்று தங்கள் ஈமெயில் முகவரியுடன் பதிவிட்டிருப்பார்கள். அந்த ஈமெயில் முகவரிக்கு நீங்கள் உங்கள் ரெசுயூமை அனுப்பி வாய்ப்பு பெறலாம்.
இங்கு உள்ள தகவல்கள் மிக மிக அடிப்படையான தகவல்கள் மட்டுமே. நீங்கள் யூடுப்பில் சர்ச் பண்ணி பாத்தாலும் வளைச்சு வளைச்சு இந்தத் தகவல்களைத் தான் சொல்லி இருப்பார்கள்.
very thank you.