புத்தக வாசிப்பு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மிக அரிதாக இருக்கும் போது இந்த நிலையில் கிண்டிலில் புத்தகங்கள் வாசிப்பது சரியா? தவறா? நன்மையா? தீமையா? என்று பேசுவது முட்டாள்தனம், நேர விரயம் என்று சிலர் சொல்வார்கள். இருந்தாலும் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவோம். கிண்டில் 2007ஆம் ஆண்டு முதல் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட அமேசான் கிண்டில் விளைவிக்கும் நன்மைகள் தீமைகள் இரண்டையும் பார்ப்போம்.
அமேசான் கிண்டிலால் கிடைக்கும் முதல் நன்மை என்னவென்றால் புத்தகத்தின் விலை மிகக் குறைவான விலைகளில் கிடைப்பதுதான். பேப்பரில் பிரிண்ட் எடுக்கும் வேலை, அட்டைப்படங்கள் தயார் செய்யும் வேலை போன்ற அச்சுப் பணிகள் கிண்டிலில் புத்தகம் வெளியிடுவதற்கு அவசியமில்லை என்பதால் சில எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் மிக குறைவான விலைக்கு தரமான புத்தகங்களை தருகின்றனர். இது சரியான வருமானம் இல்லாதவர்கள் வாசிப்பு பழக்கத்தை தொடர பெரிய அளவில் உதவுகிறது.
அடுத்ததாக கிண்டிலில் உள்ள புத்தகங்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் இதற்கு நெட் கனெக்சன் போன்ற தேவைகள் எதுவும் இல்லை. கிண்டிலில் எதற்காக உங்களுக்கு நெட் கனெக்சன் தேவைப்படும் என்றால் நீங்கள் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் போது அதில் உங்களுக்கு புரியாத ஒரு வார்த்தை இருக்கிறது என்றால் அந்த வார்த்தையை கிளிக் செய்து டிரான்ஸ்லேட் என்கிற ஒரு ஆப்ஷனை அழுத்தினால் போதும் நமக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் தெரிந்து விடும். அதேபோல எந்தெந்த வரிகள் எல்லாம் மிக முக்கியமானதாக தெரிகிறதோ அவற்றையெல்லாம் தனியாக குறிப்பு எடுத்துக் கொள்ளும் வகையில் நோட் வசதி உள்ளது.
அடுத்ததாக இந்த கிண்டிலில் நீங்கள் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதனால் புத்தகங்களை சுமந்து செல்லும் பிரச்சினை, புத்தகங்களை வீட்டில் அடுக்கி வைப்பதற்கு அல்லது பயணங்களின்போது எடுத்துச் செல்வதற்கு போதுமான வசதி இல்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த அமேசான் கிண்டில் பல புத்தகங்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்க உதவுகிறது. இவற்றையெல்லாம் விட ஒரு முக்கியமான வசதி கிண்டிலில் இருக்கிறது என்றால் அது நம்மிடம் இருக்கும் ஒரு புத்தகத்தை கிண்டில் மூலமாக வேறொரு நபருக்கு பரிசாக அனுப்பலாம் என்பது தான். ஆனால் அந்த நபரும் கிண்டிலில் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் நம்மிடம் புத்தகங்கள் வாங்கி சென்று விட்டு பல நாட்கள் அதைத் திருப்பிக் கொடுக்காமல் அல்லது எங்காவது தொலைத்து விட்டு முற்றிலுமாக அந்தப் புத்தகத்தை மறந்துவிடும் மனிதர்களிடமிருந்து நம்முடைய புத்தகங்களை நாம் காப்பாற்றலாம்.
அதேபோல இந்த புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களும் புத்தகங்களை மின்னூல் வடிவில் தயார் செய்யும் பதிப்பகங்களும் அவ்வப்போது ஒரு சில புத்தகங்களை சலுகை விலையில் அல்லது இலவசமாக வெளியிடுவார்கள். அந்த நாட்களை நாம் சரியாக கவனித்தால் போதும் நிறைய புத்தகங்களை இலவசமாக கிண்டிலில் தரவிறக்கமும் செய்து நிறைய படித்து நிறைய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
இப்படி கிண்டிலில் புத்தகங்கள் படிப்பதன் மூலம் நிறைய பயன்கள் வாசகர்களுக்கு கிடைக்கிறது. அதேசமயம் இந்த கிண்டில் எழுத்தாளர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம். எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் பல வருடங்களாக படைப்புக்கான ராயல்டி தொகை குறித்த சண்டைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பக்கம் உங்கள் புத்தகங்கள் எதுவும் சரியாக போவதில்லை அப்படிப்பட்ட சூழலில் புத்தகங்களைப் பதிப்பித்து விற்கும் எங்களுக்கு லாபம் கிடைக்காத போது உங்களுக்கு எப்படி ஊதியம் கொடுப்பது என்று பதிப்பாளர்கள் புலம்புகிறார்கள். இன்னொரு பக்கம் பதிப்பாளர்கள் புத்தகங்கள் எவ்வளவு விற்பனை ஆகிறது என்ற கணக்கு எல்லாம் சரியாக வெளிக்காட்டாமல் கிடைக்கும் தொகைகளில் நிறைய தொகையை ஏமாற்றி விடுகிறார்கள் என்று எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். கிண்டில் வந்த பிறகு இந்த மாதிரியான பிரச்சினைகள் ஓரளவு குறைந்து விட்டன. படைப்புச் சுதந்திரத்தை விரும்பும் எழுத்தாளர்கள் தங்களுடைய ஆத்மார்த்தமான படைப்புகளை எந்த பதிப்பகத்திடமும் கொண்டு செல்ல விரும்பாமல் தாங்களாகவே அமேசான் கிண்டிலில் பதிப்பாளர்களாக மாறிவிடுகிறார்கள்.
அப்படி அவர்கள் புத்தகங்களை அமேசான் கிண்டிலில் பதிப்பிக்கும் போது அவர்களுடைய புத்தகங்கள் இந்திய அளவில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது, புத்தக வகைகளில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது, தங்கள் புத்தகங்ளை ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் வாசிக்கிறார்கள், ஒரு மாதத்திற்கு எவ்வளவு பேரு வாசிக்கிறார்கள், எவ்வளவு பக்கங்கள் வாசித்திருக்கிறார்கள் போன்ற தகவல்களையெல்லாம் கிண்டில் எழுத்தாளர்களுக்கு மாதம் மாதம் சரியாக காட்டிவிடுகிறது. அதேபோல மாதம் மாதம் புத்தகம் ஈட்டிக் கொடுத்த வருமானத்தை அவர்களுடைய அக்கவுண்டில் சரியாக தந்துவிடுகிறது அமேசான் கிண்டில். இதன் மூலம் எழுத்தாளர்கள் தங்களுடைய புத்தகங்களின் நிலையை புரிந்து கொண்டு மேலும் மேலும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு நிறைய படைப்புகள் எழுத தொடங்குகிறார்கள். படைப்புச் சுதந்திரம் ஓரளவுக்கு நன்கு விரிந்து இருக்கிறது என்றால் அதற்கு அமேசான் கிண்டில் மிக முக்கியமான காரணம். இருந்தாலும் பல எழுத்தாளர்கள் இன்னும் கிண்டிலுக்கு மாறவில்லை. ஆனால் கிண்டிலை எப்படி சரியாக எழுத்தாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு எழுத்தாளர் முன்னோடியாக இருக்கிறார். அவர் கானகன், உப்பு நாய்கள் போன்ற நாவல்களை எழுதிய லக்ஷ்மி சரவணகுமார்.
எந்தெந்த புத்தகங்களை கிண்டிலில் எவ்வளவு விலைக்கு விற்க வேண்டும்? வாசகர்களை எப்படி கிண்டலுக்கு அழைத்து வர வேண்டும்? எந்தெந்த நேரங்களில் எந்தெந்த புத்தகங்களை சலுகை விலையில் தர வேண்டும்? எந்த நேரங்களில் புத்தகங்களை இலவசமாக தரவேண்டும்? இவற்றையெல்லாம் கிட்டத்திட்ட ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் செய்து தனக்கென அமேசான் கிண்டில் வாசகர்களை வைத்திருக்கிறார் லட்சுமி சரவணகுமார். இதன் மூலம் அவருக்கு மாதா மாதம் கிட்டத்தட்ட 10,000 ரூபாய்க்கும் அதிகமான தொகை கிடைக்கிறது. இது எழுத்தாளருக்கு கிடைத்த வெற்றி.
இப்போது கிண்டிலில் புத்தகங்கள் படிப்பதால் புத்தகங்கள் பதிப்பிப்பதால் ஏற்படும் குறைகள் தீமைகள் போன்றவற்றை பார்ப்போம். புத்தகம் வாசிக்கும் அனுபவமே மாறிவிட்டது இந்த கிண்டில் வந்த பிறகு. இதற்கு முன்னர் ஒரு புத்தகங்களை ஆசையாக வாங்கும் போது அதனை முகர்ந்து பார்த்து முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்து எல்லா பக்கங்களையும் காற்றில் சிறகடிக்க வைத்து ரசித்து ரசித்து புத்தகங்களை படித்தார்கள். புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர்களிடம் ஆவலாக அந்த புத்தகங்களில் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால் இவையெல்லாம் அமேசான் கிண்டிலில் கிடைக்கவில்லை. அதேபோல காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கும் புத்தகம் தரும் உணர்வை கிண்டிலில் உள்ள புத்தகம் தருவதில்லை. தீவிர புத்தக வாசிப்பாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 50 பக்கங்களாவது புத்தகம் வாசிப்பார்கள். அப்படி ஒரு நாளைக்கு ஐம்பது பக்கங்களை கிண்டிலில் படிப்பதன் மூலம் அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களை தொடர்ந்து கிண்டிலில் படிப்பதன் மூலம் கண்கள் எரிய ஆரம்பித்து விடுகின்றன. அதுமட்டுமில்லாமல் கிண்டில் புத்தகங்களை இடைவெளி விடாமல் தொடர்ந்து படித்து விட்டு தலையை உயர்த்தி சுற்றி இருக்கும் பொருட்களைப் பார்த்தால் அவையெல்லாம் கருப்பாக தெரிகின்றன. இப்படி ஒரு விதத்தில் கிண்டில் வாசகர்களின் கண்களை பாதித்து விடுகிறது.
கிண்டிலில் உள்ள இன்னொரு குறைபாடு என்றால் அது எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கிண்டிலில் புத்தகங்களை இலவசமாக தரக்கூடிய நாட்களை ஒரு சில நபர்கள் நன்கு கவனித்து வருகிறார்கள். அவர்கள் அந்த மாதிரியான நல்ல தரமான புத்தகங்கள் இலவசமாக அமேசான் கிண்டிலில் வெளியாகும் போது அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த நாளே அமேசான் கிண்டிலில் உள்ள அந்த புத்தகங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பிடிஎஃப் ஆக மாற்றி அதை டெலிகிராம் போன்ற ஊடகங்களில் ஏற்றி வியாபாரம் செய்தும் இலவசமாக சுற்ற விட்டும் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனாலேயே சில எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் கிண்டிலில் புத்தகங்களை வெளியிடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்த மாதிரி கிண்டிலில் உள்ள புத்தகங்களை முழுக்க முழுக்க காப்பி செய்யும் முறையை தடை செய்ய பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் ஒரு சில எழுத்தாளர்கள் தங்களுடைய புத்தகங்களில் உள்ள வரிகளில் இரண்டு வரிகளுக்கு மேல் காப்பி செய்ய வேண்டும் என்றால் அந்த ஆத்தர் இடம் பர்மிஷன் வாங்க வேண்டும் என்ற விதியுடன் புத்தகங்களை வெளியிடுகிறார்கள். ஆனால் அந்த மாதிரியான விதிதான் எப்படிப்பட்டது என்று நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு இன்று வரை தெரியவில்லை. அது தெரிந்து விட்டால் கிண்டில் இன்னும் தமிழ் இலக்கிய உலகிற்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்.
அதேபோல இந்த கிண்டில் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்களின் வாழ்க்கையையும் பதிப்பகங்களை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும் சீரழித்து விடுகிறது. இப்படியே தொடர்ந்தால் நாளுக்கு நாள் பதிப்பகங்கள் குறைந்து கொண்டே வரும். கடைசியில் புத்தகம் அச்சிடும் தொழில் பெரிதளவு பாதிக்கப்படும். புத்தகங்கள் பேப்பர் வடிவில் வருவது முற்றிலும் குறைந்து விடும்.
கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கிண்டிலில் உள்ள புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றால் நீங்கள் மொபைலில் கிண்டில் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு கிண்டில் டிவைசை தனியாக பணம் கொடுத்து வாங்க வேண்டும். ink display – glass free – build in light தன்மைகள் கொண்ட கிண்டில் டிவைசுகளை வாங்க வேண்டும். இந்தக் கிண்டில் டிவைஸ்களில் கிண்டில், கிண்டில் பேப்பர் வெய்ட், கிண்டில் ஒயாசிஸ், கிண்டில் வோயேஜ் என்று நான்கு வகைகள் உள்ளன. இப்படிப்பட்ட கிண்டில் டிவைஸ்கள் ஆறாயிரம் ரூபாயிலிருந்து 30,000 ரூபாய் வரை கிடைக்கின்றன அவற்றின் விலைக்கேற்ப ஒளி அமைப்பு, தொடு திரையின் அளவு போன்ற டிஸ்பிளேயின் தன்மைகள், பேட்டரி சார்ஜ், வைபை வசதி, போன்றவை மாறுபடுகின்றன.
நீங்கள் யாருக்கேனும் காஸ்ட்லியானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ள ஒரு பொருளை “கிப்ட்”டாக வழங்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள கிண்டில் டிவைஸ் வாங்கி கொடுங்கள். ஆசிரியர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை, வசனகர்த்தாக்கள் தொடங்கி வழக்கறிஞர் வரை கிட்டத்தட்ட எல்லோருமே கிண்டிலுக்கு மாறி வருகிறார்கள். அவர்களுடைய வீடுகளில் அவர்களுடைய பிள்ளைகள் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான தொகை உள்ள கிண்டில் பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு வாசிப்பு அனுபவம் மிக எளிமையாக கிடைத்துவிடுகிறது. இந்த அளவுக்கு வசதி இல்லாதவர்கள் 15 ஆயிரம் 20 ஆயிரம் போட்டு நல்ல கேமரா குவாலிட்டி, நல்ல கேம் விளையாட வேண்டும் என்பதற்காக மொபைல் வாங்காமல் 6000 ரூபாய்க்கு நல்ல பேட்டரி சார்ஜ், கேமரா வசதி, மெமரி வசதி போன்ற அம்சங்கள் உள்ள மொபைலை வாங்கி விட்டு மீதி 10,000 – 15,000 ரூபாய்க்கு கிண்டில் டிவைஸ் வாங்கினால் உண்மையில் அது உங்கள் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்.
Be the first to comment on "கிண்டிலில் புத்தகங்கள் படிப்பது நன்மை தருகிறதா? தீமை தருகிறதா? – ஒரு பார்வை!"