நடிக்க தெரியாத நடிகர் சிம்பு! –  இளைஞர்களுக்கு ஏன் இவரை ரொம்ப பிடித்திருக்கிறது? 

நடிகர் சிம்புவின் படங்கள் எப்போது தொடங்கும் எப்போது முடியும் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாத சூழல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.  அப்படியிருந்தும் சிம்புவை அவருடைய ரசிகர்கள் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் சிம்புவுக்கு ஆதரவாகப் பேசி கொண்டாடி வருகின்றனர்.  ஒரு தரப்பு மக்களுக்கு இந்த மாதிரியான ரசிகர்களை பார்க்கும்போதுதான் குழப்பமாக இருக்கும், இவர்களுடைய மனநிலை என்ன? தொடர் வெற்றிப் படங்களும் கொடுப்பதில்லை தனது படங்களின் ஷூட்டிங்கிலும் பங்கெடுப்பதில்லை. அப்படி இருந்த போதிலும் இந்த நடிகருக்கு மட்டும் எப்படி இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்? படம் எப்போது ரிலீசாகும் என்று தெரியாவிட்டாலும் திடீரென்று ரிலீசாகும் நாளன்று தியேட்டர் நிரம்பி வழிகிறது என்கிற கேள்விகள் அடுக்கடுக்காய் எழுந்துகொண்டே இருக்கின்றன. 

சிம்புவிடம் அவர்களுக்குப் பிடித்த விஷயம் என்னவாக இருக்கும்?  என்ற கேள்வி எழுப்பினால் அதற்கு பல பதில்கள் கிடைக்கும். காரணம் சிம்புவிடம் எல்லாமே இருக்கிறது.  எல்லாமே என்றால் அவருடைய  பன்முகத் தன்மைகளை குறிப்பிடுகிறோம். சினிமாவில் சிம்புவுக்குத் தெரியாத விஷயம் தான் என்ன? சிறு வயதிலேயே அப்பாவின் துணையோடு சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். ஆரம்ப காலகட்டங்களில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொண்டு ஆர்வக்கோளாறு தனமாக இருந்தாலும் பிற்காலத்தில் அந்தப் பட்டம் வேண்டாம் என்று வெறும் பெயரை மட்டும் வைத்துக்கொண்ட சிம்பு வானம், விண்ணைத்தாண்டி வருவாயா, சிலம்பாட்டம்,  இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா  போன்ற  அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த மாதிரியான படங்களில் நடித்திருக்கிறார். இப்படி தன்னுடைய நல்ல நடிப்புத் திறமையைக் காட்டிய சிம்பு, பாடகராகவும் பல உள்ளங்களை வென்றிருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகிய படங்களுக்கு அவர் பாடியதை காட்டிலும் தன்னுடைய நண்பர்களின் படங்களுக்கு ரசிகர்களின் ஆல்பம் பாடல்களுக்கு அவர் எந்தவித எதிர்பார்ப்புமின்றி  நிறைய முறை பாடி கொடுத்திருக்கிறார். அதில் ஒரு சில பாடல்களுக்கு மட்டும் பணம் வாங்கிக் கொண்டு மற்ற பாடல்கள் எல்லாம் நட்பு ரீதியாக இலவசமாக பாடி கொடுத்திருக்கிறார். அப்படி அவர் பாடிய பாடல்களின் மூலம் ஓரளவுக்கு மக்கள் கவனத்தைப் பெற்ற படைப்புகள் பல இருக்கின்றன. 

அதேபோல பல திறமையான இளைஞர்களை அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக நடிகர் சந்தானம் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ்.  சந்தானம் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் நிகழ்ச்சியில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி கொண்டிருக்க, டான்ஸ் மஸ்டர் சதிஷ் கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் தன்னுடைய நடனத் திறமையை காட்டி கொண்டிருக்க, இவர்கள் இருவரையும் பெரிய வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்துடன் தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து பணியாற்ற வைத்தார். இன்று இருவருமே தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்களாக இருக்கின்றார்கள். இப்படி நல்ல நடிகர், நல்ல பாடகர், நல்ல டான்ஸர்,  நல்ல திறமைசாலிகளுக்கு ஆதரவாளராக இருப்பவர் என்று சிம்புவுக்கு சினிமா உலகில் நல்ல பெயரும் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான ஊடகங்கள் சிம்புவை காட்டும் விதம் சிம்பு பொறுப்பற்றவர் சினிமாவை நம்பி இருக்கும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளிகள் இவர்களுடைய கஷ்டங்களைப் புரிந்து கொள்ளாதவர் என்கிற ஒரு பார்வையை உருவாக்கி வைத்து இருக்கிறது. இதற்கு காரணமும் அவரே தான்.  பல தயாரிப்பாளர்களை, பல இயக்குனர்களை  தவிக்கவிட்டதன் பெயரில் ஏற்பட்ட அவப்பெயர்கள் அவை. மன்மதன் படத்திலிருந்து அந்த விவகாரம் தொடங்கியது. தன்னிடம் கதை சொன்ன இயக்குனருக்கு சரியாக படம் இயக்கத் தெரியவில்லை என்று கதையைத் தானே வாங்கிக் கொண்டு தானே இயக்கி எடுத்த படம் மன்மதன். அந்த படத்தில் காதலித்து ஏமாற்றும் பெண்களை கொல்வது சரி என்பதுபோல் சிம்பு காட்டியிருக்க, அப்போது முதல் சிம்புவுக்கு தொடங்கியது கெட்ட காலம். ஒரு பக்கம் இயக்குனர்களை மதிக்காமல் அவரே கதைக்குள் நுழைந்து கதைகளை மாற்றியமைத்து ஒட்டுமொத்த படத்தையும் சிதைத்து விடுகிறார் என்று இயக்குனர் தரப்பில் இருந்து பல இயக்குனர்கள் குறை சொல்லத் தொடங்கினார்கள். அப்படி இருந்தபோதும் கௌதம் வாசுதேவ் மேனன், பாண்டிராஜ்,  ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற இயக்குனர்கள் சிம்புவை நம்பி அவரிடம் சென்றனர்.  இதில் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா படம் சரியான முறையில் அமைந்து வெற்றிப்படமாக அமைந்து விட்டது  ஆனால் அவர் இரண்டாவது முறையாக சிம்புவுடன் கூட்டணி சேர்ந்த போது  நிறைய மன உளைச்சல்களுக்கு ஆளானது பற்றி பல பேட்டிகளில் அவரே குறிப்பிட்டிருக்கிறார். சரியான நேரத்திற்கு வந்தால் சிம்புவை வைத்து மிக அழகான படங்கள் நிறைய எடுக்க முடியும், ஆனால் ஏன் சிம்பு இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை என்று கௌதம் சொன்னார். அதேபோல இயக்குனர் பாண்டிராஜ் “ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் தொடங்கியது ஆனால் படம் செல்ல செல்ல சிம்பு படத்தின் மீது ஆர்வம் காட்டாமல்  படத்தை புறக்கணிப்பது போல நடந்துகொண்டார்” என்று  சொன்னார். 

இதை தொடர்ந்து “அடங்காதவன் அன்பானவன் அசராதவன்” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் ஒன்று சேர்ந்து சிம்புவின் மீது புகார் அளித்தனர். சிம்புவுக்கு நல்ல திறமை இருக்கிறது அவர் மீது எங்களுக்கு மரியாதையும் இருக்கிறது. ஆனால் அவர் ஏன்  இப்படி தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் சிக்கலில் தள்ளி விடுகிறார் என்பதுதான் புரியவில்லை. இப்போது கூட அவர் சரியான நேரத்திற்கு நடிக்க வந்தால் நாங்கள் படம் எடுக்கத் தயார் என்று இருவரும் ஒருசேர கோரியிருந்தனர். அதைத் தொடர்ந்து சிம்புவின் மிக நெருங்கிய நண்பரான வெங்கட்பிரபு சிம்புவை வைத்து  மாநாடு என்கிற ஒரு அரசியல் படம் எடுக்கப் போவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் அப்படி அறிவிப்பு பண்ண சில நாட்களிலேயே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவரும் சிம்பு மாநாடு படத்திற்கு சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை என்று புகார் அளித்தனர்.  இதை தொடர்ந்து சிம்பு இந்த மாதிரி எதுவும் இனி நடக்காது என்று உறுதியளித்து, மாநாட்டில் கலந்துகொண்டார். இதற்கிடையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்குநர் சுந்தர் சி போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மிக குறுகிய காலகட்டத்தில் படத்தை சிறப்பாக நடித்து முடித்துக் கொடுத்துவிட்டு வந்தார். எத்தனை இயக்குனர்கள் சிம்பு மீது தொடர்ந்து புகார் அளித்து கொண்டிருக்க இந்த இரண்டு இயக்குனர்களிடம் மட்டும் சிம்பு எப்படி தன்மையாக நடந்துகொண்டார் என்பது ரசிகர்களுக்கும் சினிமா உலகில் இருப்பவர்களுக்கும் கூட ஆச்சரியமாக இருக்கிறது.  ஒரு பக்கம் பீப் சாங் பாடியதால் அவர் மீது வழக்குகள் பாய்ந்தது.  இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்களை மதிக்காததால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ரெட் கார்டு வந்தது. இதற்கிடையில் சந்தானம் நடித்த இரண்டு படங்களுக்கு இசை அமைப்பாளராக மாறினார். பெரியார் குத்து என்கிற ஆல்பம் பாடலை  தந்தார். “கார்த்திக் டையல் செய்த எண்” என்ற குறும்படத்தை சில மணி நேரங்களுக்குள் நடித்து முடித்தார்.  தன்னுடைய படங்களை தொடர்ந்து கேலி செய்து விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன்,  முதன்முறையாக படம் இயக்கப் போகிறார் என்றதும் முதல் ஆளாக போன் செய்து வாழ்த்தினார் சிம்பு, என்கிற சில நல்ல தகவல்களும் சிம்புவை பற்றி வந்து கொண்டுதான் இருக்கின்றன. 

இப்படி சிம்புவை பற்றி கலவையான தகவல்கள் பரவிக் கொண்டே இருக்க, பேரன்பு, தங்க மீன்கள் போன்ற அற்புதமான படங்களை இயக்கிய ராம், சிம்புவை வைத்து “சிகப்பு ரோஜாக்கள்” படம் பாகம் 2 படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வருகிறது. அதே போல ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அஞ்சாதே, பிசாசு போன்ற படங்களை இயக்கிய மிஷ்கின் சிம்புவுடன் இணைந்து படம் செய்கிறார் என்கிற தகவல் வருகிறது. 

இது எப்படி சாத்தியம்? ராம் மற்றும் மிஸ்கின் இருவருமே கொஞ்சம் ஸ்டிரிக்டான படைப்பாளிகள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது அப்படியே திரையில் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். ஆனால் சிம்புவோ  கதையில் இந்த மாதிரி மாற்றம் செய்யுங்கள், இந்த சீனை இப்படி எடுக்க வேண்டாம் என்றெல்லாம் வாதிடக் கூடிய நடிகர் என்பதால் சினிமா ரசிகர்கள் எல்லோருமே ஆச்சரியமாக பார்த்தனர். இந்த படங்கள் கண்டிப்பாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக எடுக்கப்படுமா அல்லது செல்வராகவன் சிம்புவை வைத்து”கான்” படம் எடுக்க இருந்து, பிறகு அதை கைவிட்டது போல இந்த படங்களும் கைவிடப்படுமா என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. இப்படி சிம்புவை பற்றி சில தயாரிப்பாளர்கள் சில இயக்குனர்கள் குறை சொல்லிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் லக்ஷ்மி மேனன் வரலட்சுமி போன்ற நடிகைகள் சிம்பு ஸ்பாண்டனியஸ் ஆன நடிகர் என்று பாராட்டுகின்றனர். இன்னொரு பக்கம் இயக்குநர் சுந்தர் சி என்னுடைய படங்களில் சிம்பு  எந்த குறையும் வைக்கவில்லை, சூட்டிங்கிற்கு வருவார், சொன்னதை செய்தார், படத்தை சீக்கிரம் முடித்துக் கொடுத்து விட்டு கிளம்பினார் என்று சிம்புவை பாராட்டுகிறார். 

இந்த மாதிரி செய்திகளை படிக்கும் போது சிம்புவின் ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரு குழப்பமான மனநிலை உருவாகும். சிம்பு குழப்பமாக இருக்கிறாரா அல்லது சிம்புவை சுற்றி இருப்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்களா என்று  சினிமா வட்டாரம் அரசல்புரசலாக பேசிக்கொண்டது.  இந்த நிலையில்தான் இயக்குனர் பார்த்திபன் சிம்புவை குறித்து ஒரு வார்த்தை சொன்னார், “சுயம்பு” என்பதுதான் அந்த வார்த்தை.  சுயம்பு என்றால் “யாருக்கும் அடங்கிப் போகாதவர், யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்க முடியாது, அவர் தன்னைத் தானே இயக்கிக் கொள்ள நினைப்பவர்” என்று அர்த்தம். நான் கடவுள் படத்தில் நடிகர் ஆர்யாவை சுயம்பு என்று காட்டியிருப்பார் இயக்குனர் பாலா. கிட்டத்தட்ட சிம்புவும் நான் கடவுள் ருத்ரா மாதிரி தான். அவருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்பவர். யார் நல்லவர்கள் என்று தெரிகிறதோ அவர்களுக்கு இறங்கி வந்து மனதார உதவி செய்யக் கூடியவர். ஒரு பக்கம் சிம்பு காமவெறி பிடித்த மனிதர் சிம்பு யாரையும் மதிக்க தெரியாத மனிதர் என்று பேசிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சிம்பு தீவிரமான ஆன்மீகவாதி என்கின்றனர். சிம்புவே கூட  ஒரு நிகழ்ச்சியில் முதலில் எனக்கு கடவுள், பிறகுதான் அம்மா என்று சொல்லியிருந்தார். அவரை பற்றிய பெரும்பாலான மக்கள் தவறாக பேச இதுவும் ஒரு காரணம். அவர் தீவிர ஆன்மிகப் பற்று கொண்டிருப்பதாக இருப்பதே அவருக்கு எதிராக அமைந்து விடுகிறது. அதே போல இப்படி சிம்பு சுயம்புவாக இருப்பதால்தான் பல துடிப்பான இளைஞர்களுக்கு சிம்புவை பிடித்திருக்கிறது. 

Related Articles

பூமிகா திரைவிமர்சனம் – பூமிய மனுசங... இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பூமிகா.  நேரடி ஓடிடி ரிலீசாக இந்த படம் வெளியாகியுள்ளது. ஒ...
பார்க்க வேண்டிய உலக சினிமாக்கள்!... 1.children of heaven2.Life is beautiful3.The way home4.the road home5.cinema paradiso6.run lala run7.mariya full of grace ...
இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் சேவைக் கட்ட... ஜனவரி 1 2018 முதல் டெபிட் கார்ட் பயன்படுத்தி 2000ரூபாய் வரைக்கும் மேற்கொள்ளப்படும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்க மத்திய அரசு முன...
அஜீத்திற்குப் போட்டியாளராக நடிக்கும் ரங்... அமிதாப் பச்சன், டாப்சி ஆகியோர் இணைந்து நடித்த படம் 'பிங்க்'. தேசிய விருது உள்பட பல விருதுகளை இப்படம் வென்றுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது தமிழில் ரீமே...

Be the first to comment on "நடிக்க தெரியாத நடிகர் சிம்பு! –  இளைஞர்களுக்கு ஏன் இவரை ரொம்ப பிடித்திருக்கிறது? "

Leave a comment

Your email address will not be published.


*