விரைவில் வருகிறது மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்காக ஒரு ரோபோ

supermarket

தொட்டதெற்கெல்லாம் ரோபோக்கள் வந்துவிட்டன. பாட்டுப்பாட ரோபோ, பரிமாற ரோபோ, தூங்கவைக்க ரோபோ என்று ரோபோக்கள் பலவிதம். பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடியிலிருந்து, பொருட்கள் சுமந்து வருவதற்கு இப்போது அமெரிக்காவில் ஒரு ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த ரோபோவின் பெயர் ரோபோமார்ட்.

ரோபோமார்ட்

மளிகை பொருட்கள், வேகவைத்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என்று அமெரிக்கர்களின் வீட்டுப் பக்கத்திலிருக்கும் பல்பொருள் அங்காடியிலிருந்து, மொத்த விற்பனையாளர்கள், பெரிய விற்பனையாளர்கள் சார்பாக அவர்கள் வீட்டுக்கே கொண்டுவந்து சேர்க்கிறது ரோபோமார்ட். இதன் நிறுவனரான அலி அகமது என்பவரின் பத்து ஆண்டுக்கால கனவின் விளைவே ரோபோமார்ட். இது தன்னைத்தானே இயக்கிக்கொள்ளும், சக்கரத்தில் இயங்கும் ஒரு மளிகைக்கடை.

எதற்காக ரோபோமார்ட்

இன்று உலகம் முழுவதும் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு விற்பனையாகும் வியாபாரம் பலசரக்கு. அவற்றில் அழுகும் பொருட்கள் அறுபது சதவீதத்திற்கும் அதிகமாக விற்பனை ஆகின்றன. ஆனால் அவற்றில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே இணையத்தில் மளிகை வியாபாரம் நடைபெறுகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், பொருட்களை அழுகாமல், சேதாரம் இல்லாமல் மக்கள் கைக்கு கொண்டு சேர்க்கும் மனித வளம் பற்றாக்குறையே காரணம். அப்படியே மனித வளம் உருவாகினாலும், அவர்களுக்கான செலவும் மிக அதிகம். மொத்த விற்பனையாளர்களுக்கு இது மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்தச் சவாலை போக்கும் வண்ணம், ஓட்டுநர் இல்லாமல் தன்னைத்தானே இயக்கிக்கொள்ளும் நடமாடும் மளிகைக்கடை ஒன்றை உருவாக்குவது என்ற எண்ணத்திற்கு ரோபோமார்ட்டின் நிறுவனரான அலி அகமது வந்து சேர்கிறார்.

எப்படி இயங்குகிறது?

ரோபோமார்ட் என்ற செயலியை திறன்பேசியில் முதலில் தரவிறக்கிக்கொள்ள வேண்டும். நுகர்வோர் அருகிலிருக்கும் ரோபோமார்ட்டை தேடும் விதமாக, செயலியில் ஒரு பொத்தானை மட்டும் அழுத்தினால் போதும். அவர்கள் வீட்டுக்கு அருகேயிருக்கும் ரோபோமார்ட் உங்கள் வீடுதேடி வரும். வீடுதேடி வந்த ரோபோமார்ட்டை திறந்து, அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொள்ளலாம். அதற்கு உண்டான ரசீதை அவர்களுக்கு அனுப்பியவுடன், ரோபோமார்ட் தான் வந்த வழியே மீண்டும் கிளம்பி சென்றுவிடும். இப்போதைக்கு இந்த ரோபோ சேவை அமெரிக்காவில் மட்டும் செயல்பட்டு வருகிறது.

ரோபோமார்ட்டை உருவாக்குவதற்கு முன்பு, அதுகுறித்து நீண்ட ஆராய்ச்சியை அமெரிக்க மக்களிடம் மேற்கொண்டதாக அலி அகமது தெரிவித்தார்  இருபத்து ஆறு வயது முதல் நாற்பத்து நாலு வயது வரை உள்ள அமெரிக்க பெண்களிடம் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பில், அவர்களில் எண்பத்து ஐந்து சதவீதமானோர் இணையத்தில் பழங்களோ, காய்கறிகளோ வாங்குவதில்லை என்று தெரிவித்தனர். அதற்குப் பிரதான காரணம், அப்படி இணையத்தில் வாங்கப்படும் பொருட்களின் விநியோக செலவு மிக அதிகம் பிடிப்பதாக தெரிவித்தனர். ரோபோமார்ட் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில், ஒரு வாரத்திற்கு இரண்டு தடவைக்கும் மேல் அதை உபயோகப்படுத்த இருப்பதாக அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இப்படியொரு ரோபோமார்ட் அறிமுகம் செய்யப்பட்டால் எப்படியிருக்கும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். முதல் ஒருமாதம் மக்கள் தங்கள் வீட்டு வாசலில் ரோபோமார்ட்டின் வருகைக்காகக் காத்துக்கொண்டு இருப்பார்கள். அடுத்த மாதத்திலிருந்து, மக்களை ரோபோமார்ட்கள் விடாமல் துரத்திக்கொண்டிருக்கும், மளிகை பாக்கி வசூலிக்க.

Related Articles

நீர்நிலைகளில் வாத்துகள் நீந்துகையில் ஆக்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபாரதக் காலத்தில் இண்டர்நெட் இருந்தது என்று கூறி சர்ச்சையை உண்டாக்கியவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி உள்ள...
ஜோதிடம் நம் வாழ்க்கையில் எந்த மாதிரியான ... உலகம் எவ்வளவு வேகமாக இயங்கினாலும் எவ்வளவு வேகமாக மாறினாலும் விஞ்ஞானம் எவ்வளவோ தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்தாலும் எல்லாமே இயந்திர செயல்பாடுகள் என்று ம...
கணவர் இறப்புக்கு பிறகும் பொட்டு வைத்திரு... கணவர் இறந்த பிறகு அவரது ஓய்வூதியத்தை தன் பெயருக்கு மாற்றச் சென்ற 77 வயது பெண், அரசு அலுவலகத்தில் அவமதிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் சர்ச்சையை உண...
கைதிகளுக்காக வானொலி நிலையம் அமைத்துத் தந... தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்து சிறை வாழ்வை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்த அரசு சார்பிலும், தனியார் அமைப்பு சார்பிலும் நாடு முழுவதும் பல்வே...

Be the first to comment on "விரைவில் வருகிறது மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்காக ஒரு ரோபோ"

Leave a comment

Your email address will not be published.


*