வாடகை கார சேவை மூலம் ஏற்கனவே உலகின் பல நாடுகளில் பிரபலமடைந்த உபர் நிறுவனம், தற்போது இந்தியாவில் மீண்டும் வாடகை ஆட்டோ சேவையை துவங்கியிருக்கிறது. ஏற்கனவே இந்தச் சேவையை அளித்து வந்த உபர் நிறுவனம், கடந்த மார்ச் 2016 ஆம் ஆண்டு ஆட்டோ சேவையை மட்டும் தற்காலிகமாக நிறுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சேவையை மீண்டும் தற்போது துவங்கியிருக்கிறது உபர் நிறுவனம்.
பெங்களூரு மற்றும் புனேவில் மட்டும்
இப்போதைக்கு இந்த ஆட்டோ சேவை பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தலைநகரமாக கொண்டு செயல்படும் உபர் மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே வாடகை போக்குவரத்து சேவை வழங்குவதில் எப்பொழுதும் போட்டி இருக்கும். ஆட்டோ சேவை வழங்குவதில், உபர் நிறுவனத்தை ஓலா வென்று விட்டதாகவே தெரிகிறது. வாடகை ஆட்டோ சேவை வழங்கும் திட்டத்தைக் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை மற்றும் பெங்களுருவில் அறிமுகம் செய்த ஓலா நிறுவனம், இன்று எழுபத்து மூன்றுக்கும் அதிகமான நகரங்களில் 1.2 லட்சம் ஆட்டோக்களுடன் தனது சேவையை வெற்றிகரமாக விரிவுபடுத்தி உள்ளது.
இது குறித்து பேசிய உபர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ‘இந்தியாவின் போக்குவரத்து சூழல், ஆட்டோவை சார்ந்து எப்படி உருவாகிறது என்பதை கண்டறிவதற்காக, உபர் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது’ என்று தெரிவித்தார். ஆனால் ஆட்டோ சேவை இயங்குவதை இந்தியாவின் பல நகரங்கள் பெரிதும் விரும்புவதாகவும், ஆகவே தங்கள் ஆட்டோ சேவையை மீண்டும் பெங்களூரு மற்றும் புனேவில் தொடங்குவது உற்சாகம் அளிக்கும் ஒன்று என்று மேலும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முந்தைய முயற்சியில் உபர் நிறுவனம் தனது ஆட்டோ சேவையை புதுடெல்லி, கோவை, இந்தூர் மற்றும் புவனேஷ்வர் ஆகிய நகரங்களில் செயல்படுத்தியது. ஆனால் அப்பொழுது அந்த முயற்சி பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ‘ஒரு ஆரம்ப கட்ட முயற்சியாக பெங்களூரு மற்றும் புனேவில் அறிமுகம் செய்யப்படும் இந்தச் சேவை, எங்களது மற்ற சேவைகளை போலவே, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நகரங்களுக்கும் விரிவு செய்யப்படும்.’ என்று உபர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அம்சங்கள்
உபர் வாடகை காரில் பயணிகள் அனுபவித்த அனைத்து வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் உப்பர் ஆட்டோவில் இருப்பதை உறுதி செய்துள்ளதாக உப்பர் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் பயணிகள் தங்கள் கட்டணத்தை பணமாக மட்டுமல்லாமல், பேடிஎம், கடன் அட்டை மற்றும் பற்று அட்டை ஆகியவற்றின் மூலமாகச் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சேவையில் தங்களோடு இணைந்து பணியாற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகாரம் பெற்ற பிறகே உபர் செயலியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மேலும் அவர்கள் முறையான அரசு ஆவணங்களையும் சமர்ப்பித்தாக வேண்டுமென்றும் உபர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தியாவில் வலுவான வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தி வரும் உபர் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் நிறுவனம், இந்நிறுவனம் ஓலா மீதும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த உங்கள் சைக்கிள் அங்கேதான் இருக்கிறதா என்று ஒரு எட்டு பார்தது வாருங்கள். அதையும் உபர், ஓலா நிறுவனங்கள் தங்களோடு இணைத்திருக்கப் போகிறது.
Be the first to comment on "ஆட்டோ சேவையை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது உபர்"