பத்திரிக்கை அல்லது மாத இதழை வெற்றிகரமாக நடத்துவது எப்படி? – வாசக எழுத்தாளர்களின் நிலை என்ன?

How to run a magazine or monthly magazine successfully_ - What is the status of text writers_

வாசக எழுத்தாளர்கள் என்ற வார்த்தையை பெரும்பாலானோர் கேள்வி பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலானோருக்கு பத்திரிகைகள், இதழ்கள் படிக்கும் பழக்கம் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு “வாசகர்” என்றால் “எழுத்தாளர்” என்றால் “வாசக எழுத்தாளர்” என்றால் சரியான அர்த்தம் புரிய போவதில்லை. தினசரி இதழ்களில், வார இதழ்களில் தங்களுடைய பெயருடன் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவை வெளிவர வேண்டும் என்ற ஆவலுடன்  வேலை மெனக்கெட்டு வீட்டில் இருப்பவர்களிடம் எல்லாம் திட்டு வாங்கிக் கொண்டு மூளையை கசக்கிப் பிழிந்து படைப்புகள் எழுதி அனுப்பிவிட்டு இந்த வார இதழில் அந்தப் படைப்பு வருமா? அல்லது அடுத்த வார இதழில் அந்த படைப்பு வருமா? என்று ஒவ்வொரு வாரமும் காத்து கொண்டே இருக்கும் அப்பாவிகள் தான் இந்த “வாசக எழுத்தாளர்கள்”. 

ஏதோ ஒரு படத்தில் எம். எஸ் பாஸ்கர் கவிதை எழுதுகிறேன் என்று எந்நேரமும் வானத்தைப் பார்த்துக் கொண்டு கன்னத்தில் பேனாவை வைத்து தட்டிக் கொண்டு யோசித்துக் கொண்டே இருப்பார். படைப்புகள் எழுதி எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார். திடீரென்று ஒருநாள் அவருடைய படைப்பு பத்திரிகையில் வந்திருக்கும். அதை அவருடைய நண்பர்கள் உறவினர்கள் எல்லோரிடமும் காட்ட, அது ஒரு பெரிய சாதனையை போல அவர்கள் நினைப்பார்கள். ஆனால் அவர் எழுதி அனுப்பிய அந்த ஒரு கவிதைக்கு வெறும் இருபது ரூபாய்தான் கொடுத்திருப்பார்கள். அந்த 20 ரூபாய் சன்மானத்திற்காக 200 ரூபாய்க்கு மேல் செலவு செய்து தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு ட்ரீட் வைப்பார் அந்த அப்பாவி வாசக எழுத்தாளர். 

இப்படிப்பட்ட வாசக எழுத்தாளர்களின் நிலை குறித்து இயக்குனர் வசந்தபாலன் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்ட கருத்துகள்: 

வாசகர் கடிதம் என்கிற நிலையிலிருந்து தான் என்னுடைய படைப்புலகம் தொடங்கியது. எங்கள் ஊரில் விருதை ராஜா என்கிற ஒரு தீவிர வாசகர் இருந்தார். அவர் பத்திரிகைகளுக்கு ஜோக், கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவைகளை தொடர்ந்து எழுதி அனுப்பிக் கொண்டே இருப்பார். அவருடைய தொடர் வாசிப்பையும் கடினமான உழைப்பையும் பார்க்கும்போது அவர் கூடிய விரைவில் பெரிய பணக்காரர் ஆகி விடுவார் என்று நினைக்கத்தோன்றும். ஆனால் பல வருடங்கள் அவர் சைக்கிளிலேயே தான் எங்கு போனாலும் சென்று வந்துகொண்டிருந்தார். இதற்கு என்ன காரணம் என்று யோசித்த போதுதான் அவர் எழுதி அனுப்பும் படைப்புகளில் தேர்வாகி  பிரசுரமாகும் படைப்புகளுக்கு  சொற்ப தொகையை சன்மானமாக வழங்குவார்கள் என்று தெரிந்தது. இந்த மாதிரி இருந்தால் நம்மால் காசு சம்பாதிக்க முடியாது, காசு சம்பாதிக்க வேண்டும் என்றால் அதைவிட பெரிய மீடியம் ஒன்றிற்கு நாம் வர வேண்டும் என்று முடிவெடுத்து, நான் சினிமாவிற்கு வந்து விட்டேன். இப்படி அந்த நிகழ்ச்சியில் “வாசக எழுத்தாளர்” குறித்து இயக்குனர் வசந்தபாலன் கருத்து தெரிவித்திருந்தார். தேர்வாகுமா? தேர்வாகாதா? என்று எழுதி அனுப்பிவிட்டு அந்த மாதிரியான வாசக எழுத்தாளர்கள் ஆவலோடு காத்திருக்க எதிர்பாராத தருணத்தில் அவர்கள் எழுதி அனுப்பியது தேர்வாகி இருக்கும். ஆனால் அப்படி தேர்வான படைப்புகளுக்கு பல மாதங்கள் ஆனாலும், வருடங்களே ஆனாலும் சில பத்திரிகைகள் சன்மானம் என்ற ஒன்றை அனுப்ப மாட்டார்கள். அது குறித்து அந்த பத்திரிக்கைக்கு கடிதம் எழுதி அனுப்பினால்  அவர்கள் எந்த மாதிரியான பதில் தருகிறார்கள் என்று பாருங்கள். 

வாசக எழுத்தாளரின் கடிதம்: 

வணக்கம். நான் உங்கள் இதழின் வாசக எழுத்தாளர். தங்களுடைய மாத இதழில்  சிறுகதைகள் எழுதி உள்ளேன். தமிழகம் முழுக்க வெளியாகும் முக்கியமான மாத இதழாக உங்கள் இதழும் இருந்து வருகிறது. வியாபாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நீங்கள் தேர்ந்து எடுத்து பிரசுரிக்ககூடிய படைப்புகளுக்கு தர்மப்படி தகுந்த சன்மானம் வழங்க வேண்டும். ஒரு சில மாத இதழ்கள் எதேனும் படைப்புகள் தேர்ந்து எடுத்து பிரசுரித்தால் அதற்குரிய, சன்மானமாக நல்ல புத்தகத்தையோ அல்லது பணத்தையோ அனுப்பி வைக்கிறார்கள். இத்துடன் தங்கள் இதழில் என்னுடைய இத்தனை சிறுகதைகள் வெளியாகி உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன். நன்றி.

இதழ் நடத்துபவர்களின் பதில் கடிதம்: 

அன்பிற்குரிய வாசகர்க்கு, வணக்கம்.

எங்கள் இதழில் எழுதும் யாருக்கும் மதிப்பூதியம் வழங்குவதில்லை.மேலும் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்கு மட்டும்தான் படைப்புகளை வெளியிடுகிறோம். லாபநோக்கம் கருதி எழுதுவோர்க்கு எங்கள் இதழில் இடமில்லை. மேலும் எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு  (120 மாதங்களுக்கு ) மேல் வெளியிட ஏராளமான கதைகள் உள்ளன. இனிமேல் இதுபோன்ற கடிதங்களை தவிர்த்து விடவும்.

படைப்பாளிகளுக்கு மதிப்பூதியம் வழங்குவதில்லை என்று சொல்லும் இந்த இதழ்கள் இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கோ கிடைப்பதில்லை. அவை மாதம் 30 ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது.  படைப்பாளிகளுக்கு உழைப்பு ஊதியம் வழங்கவில்லை என்றால் நீங்கள் எதற்கு உங்கள் இதழை விலை வைத்து வெளியிடுகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பினால் அதற்கு அவர்கள் எந்த பதிலும் தர மாட்டார்கள். சரி விட்டு விடுங்கள்.  இந்த மாதிரி இதழ்கள் கேவலமான பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கின்றன. ஆனால் ஒரு சில வாசக எழுத்தாளர்கள் உண்மையிலேயே சன்மானத்தை எதிர்பார்க்காமல் வெறும் ஊக்குவிப்பிற்காக மட்டுமே இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகின்றனர். இப்படிப்பட்ட தொடர் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு சில இதழ்கள் சரியான மரியாதை தருவதில்லை என்று சொல்லவேண்டும். 

ஜெயமோகனின் சிந்து சமவெளி படத்தில் நாயகன் சிறுகதைகள் எழுதி எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்புவார். அவர் எழுதிய எல்லா கதைகளும் பிரசுரத்துக்கு தேர்வாகாமல் “உங்கள் படைப்பு தேர்ந்தெடுக்கப்படவில்லை” என்று பதில் கடிதத்துடன் அவருக்கே திருப்பி அனுப்பப்படும். படத்தின் கிளைமேக்ஸில் நாயகனின் சிறுகதை முத்திரை சிறுகதையாக பிரசுரிக்கப்படும். இப்போது சொல்ல வருவது என்னவென்றால்… ஆசையுடன் கனவுகளுடன் படைப்புகள் எழுதி அனுப்பும் பிரபலம் இல்லாத சிபாரிசு இல்லாத நபர்களின் படைப்புகளை சில வார/மாத இதழ்கள் கண்டுகொள்வதில்லை என்பதுதான். முன்னொரு காலத்தில் எழுதி அனுப்பும் படைப்புகள் வெளியாகாவிட்டால் சிந்து சமவெளி படத்தில் காட்டப்படுவது போல் பதில் கடிதத்துடன் எழுதியவருக்கே அஞ்சல் வழியில் திருப்பி அனுப்பப்படும். இப்போது படைப்புகளை இந்த மெயில் ஐடிக்கு அனுப்புங்கள் என்று பத்திரிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன. அப்படி மெயிலில் அனுப்பபடும் படைப்புகள் உண்மையில் கண்டுகொள்ளப்படுகிறதா என்பது சந்தேகமே. காரணம் மெயில் அனுப்பும் படைப்பாளிகளுக்கு எந்தவொரு பதிலும் சில பத்திரிக்கைகள் தருவதில்லை. உங்கள் படைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது அல்லது உங்கள் படைப்பு தேர்வாகவில்லை என்று எதாவதொரு பதிலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பினால்,  நாம் மெயிலில் அனுப்பிய படைப்புகளை ஆசிரியர் குழு படித்துப் பார்த்து முடிவெடுத்திருக்கிறது என்ற ஆறுதலாவது கிடைக்கும். (ஒரு சில இணைய இலக்கிய இதழ்கள்/குழுக்கள் நன்றாக இருக்கும் அல்லது மோசமாக இருக்கும் எந்தவொரு படைப்புக்கும் உரிய பதிலை தருகிறார்கள்)

ஆனால் அப்படி சில பிரபல பத்திரிக்கைகளில் இருந்து எந்தவொரு பதிலும் வருவதில்லை. அதனால் நாம் அனுப்பிய படைப்புகளை கொஞ்சமாவது மதித்து படித்துப் பார்க்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. உங்கள் (ஆசிரியர் குழு) பார்வையில் படைப்பு எவ்வளவு அமெச்சூர்டாக/கேவலமாக இருந்தாலும் தயவுசெய்து “உங்கள் படைப்பு தேர்வாகவில்லை” என்ற பதிலை தாருங்கள் என்பதுதான் நல்லதொரு படைப்பாளியாக முன்னேற முயலும் அப்பாவி/ஆர்வக்கோளாறு மனிதர்களின் ஏக்கம்/வேண்டுகோள். 

இப்படி இதற்கு சன்மானம் கூட  தேவையில்லை. அது இரண்டாம் பட்சம்தான். ஆனால் தேர்வாகவில்லை என்றால் தயவு செய்து தேர்வாகவில்லை என்பதை சுட்டிக் காட்டுங்கள். அந்த படைப்பை விடுத்து வேறொரு படைப்பை புதிதாக தொடங்குவோம் என்று பலரும் பலவிதமான வார்த்தைகளில் அவர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால் அந்த மாதிரியான பத்திரிக்கைகள் அது குறித்து எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள். உண்மையில் இந்த அப்பாவி வாசக எழுத்தாளர்கள் தான் நிறைய பத்திரிகைகளை, இதழ்களை இன்னும் உயிர்ப்புடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது அந்த இதழ்களில் தேர்வாகும் தங்களுடைய படைப்புகளை சமூக வலைதளங்களில், “இந்த மாதிரி இதழ்களில் என்னுடைய படைப்பு வெளி வந்திருக்கிறது” என்று வெளிப்படுத்துகின்றனர். அதே போல அக்கம் பக்கம் சுற்றத்திலும் இந்த இதழை பற்றி பேசுகின்றனர்.  இதன் மூலம் அந்த இதழுக்கு இலவச விளம்பரங்கள் கிடைக்கிறது. மாத சம்பளத்திற்காக அல்லது  பார்ட் டைம் வேலையாக சில பிரபல எழுத்தாளர்கள் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்ட கதைகள் போன்றவை உண்மையில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அது மாதிரியான கட்டுரைகள், கதைகள் எந்த அளவுக்கு வாசகர்களை கவர்ந்துள்ளது, அது உண்மையிலேயே நன்றாக இருந்ததா பயனுள்ளதாகவும் புதுமையாகவும் இருந்ததா என்பதைப் பற்றி, அந்த பிரபல எழுத்தாளர்கள் இதழாசிரியர்கள் தெரிந்து கொள்ள… வாசகர்கள் தேவைப்படுகிறார்கள். வாசகர் கடிதம் என்கிற ஒரு பகுதி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. 

 ஒரு சில இதழ்கள் உண்மையிலேயே வாசகர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கும் வகையில் வாசகர் கடிதத்தில் சிறந்த வாசகர் கடிதம் ஆக இருக்கும் சில கடிதங்களுக்கு மதிப்பூதியம் வழங்குகிறார்கள். இந்த மாதிரியான வாசகர்களை நன்றாக மதிக்கத் தெரிந்த இதழ்கள், வாசகர்களுக்கு அவர்களின் படைப்புகளுக்கு தகுந்த சன்மானம் சரியான நேரத்தில் தரக்கூடிய இதழ்கள் எல்லாம் இன்றுவரை வெற்றிகரமாக நடந்து வருகின்றன.  அவர்கள் தங்கள் வாசகர்களை வாசக எழுத்தாளர்களை ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தொடர்ந்து பாராட்டி ஊக்குவித்து,  தங்கள் இதழின் வளர்ச்சியை  சரியாக தக்க வைத்துக் கொள்கின்றன. 

ஒரு சில இதழ்கள், பத்திரிகைகள் ரொம்ப ஆர்வத்துடன் நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டு முதல் ஒரு சில மாதங்கள் நன்றாகவே செயல்படுகின்றன. ஆனால் அவை தொடங்கப்பட்ட வேகத்திலேயே நிறுத்தப்பட்டு விடுகின்றன. காரணம் நஷ்டம் என்றும்,  மக்களிடையே சரியான வரவேற்பு இல்லை என்றும் சொல்கின்றனர். ஆனால் யோசித்துப் பார்த்தால் அது காரணமாக இருக்காது. அவர்கள் தங்களுடைய இதழுக்குக் கிடைத்திருக்கும் வாசகர்களை வைத்து அந்த வாசகர்களுங்கு தகுந்த மரியாதை தந்து ஊக்குவித்து அவர்களை வைத்து மென்மேலும் வாசகர்களை சம்பாதித்து தொடர்ந்து வாசகர்களையும் வாசக எழுத்தாளர்களையும் அரவணைத்து அவர்களை, இதழ் ஆசிரியர்களுக்கும் சாமானிய மக்களுக்கும் இடையில் உள்ள இணைப்பு பாலமாக பயன்படுத்த தெரியாமல் இருப்பதால்தான் அந்த மாதிரி இதழ்கள் எல்லாம் தோல்வியில் போய் முடிகின்றன. 

அதேபோல இந்த பத்திரிகை ஆசிரியர்கள், இதழ் நடத்துபவர்கள் எல்லோரும் ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.  இன்றைய காலகட்டத்தில்  வாசிப்பு என்பதே அரிதான ஒன்றாக மாறிவிட்டது.  அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களுடைய இதழை மதித்து அதில் வரும் கட்டுரைகள் செய்திகளை எல்லாம் படித்து அதை பற்றி எழுதும் வாசகர் கடிதங்கள் எல்லாம் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு கிடைக்கும் “ஊக்குவிப்பு சான்றிதழ்கள்” அவை என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

Related Articles

கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... ஹேராம்நடிகர்கள்: கமல் & ஷாருக்கான் (அகழ்வாராய்ச்சியாளர்கள்), ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, அப்பாஸ்(டாக்டர்),...இயக்கம்: கமல்இசை: இளையராஜ...
மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உரு... கடந்த ஆண்டு மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அப்போதே அதுபற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. அதைப் போலவே சமீபத்தில் தமிழகத்த...
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்! ... இயக்குனர் மணி ரத்னம் மற்றும் இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து லக்ஷ்மி, மா என்று இரண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவன...
முடிஞ்சா முதுகுல குத்திக்க – விருத... 2018ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில் பல தனியார் அமைப்புகள் திரை உலகுக்கு விருது வழங்கும் பணியை தொடங்கி உள்ளனர். அவற்றில் பல இடங்களில் பா. ரஞ்சித்தின்...

Be the first to comment on "பத்திரிக்கை அல்லது மாத இதழை வெற்றிகரமாக நடத்துவது எப்படி? – வாசக எழுத்தாளர்களின் நிலை என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*