ஜெயலலிதாவும் ரம்யா கிருஷ்ணனும்! – கம்பீரமான பெண்கள்!

Jayalalithaa and ramya krishnan are the bold ladies

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் எனக்கு நடிக்க வேண்டும் போல் இருக்கிறது என்று பல நடிகைகள் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். குறிப்பாக நடிகை திரிஷாவை சொல்லலாம். திரிஷாவுக்கு ஜெயலலிதா உருவம் வைத்து ஓவியங்கள் கூட உருவாகின.   

அதேபோல இயக்குனர்களும் அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதில் போட்டி போட்டுக்கொண்டு அலைந்தனர்.   இயக்குனர் ராம் கோபால் வர்மா, இயக்குநர் ஏ.எல். விஜய், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் பிரசாத் முருகேசன் ஆகியோர் ஜெயலலிதாவிடம் தங்களுக்கு பிடித்த விஷயத்தை மையமாக வைத்து படங்களை எடுக்க முனைந்தனர். இதில் கௌதம் வாசுதேவ் மேனனும் இயக்குனர் பிரசாத் முருகேசனும் இணைந்து ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் என்கிற படத்தை வெற்றிகரமாக படமாக்கி லாப வெற்றியையும் அனுபவித்துள்ளனர். ஏஎல் விஜய், ராம் கோபால் வர்மா போன்ற இயக்குனர்களின் படைப்புகள் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. 

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த  குயின் என்கிற வெப் செரியஸ் ஓரளவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்குப் பின்னர் வரும் ஜெயலலிதா குறித்த படங்களெல்லாம் ஓடுமா என்பது சந்தேகமே. காரணம் ரம்யா கிருஷ்ணனை தாண்டி வேறு ஒரு நடிகையை அந்த கம்பீரமான  கேரக்டரில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 

கம்பீரமும் ரம்யா கிருஷ்ணனும்: 

இவருடைய முதல் படம் எது என்பது திரைத்துறையில் பல ஆண்டுகளாக இருப்பவர்களுக்கு கூட இன்னும் சரியாக தெரியவில்லை. இவர் தெலுங்கு தேசத்தில் பிறந்தவரா கன்னட தேசத்தில் பிறந்தவர் மலையாள தேசத்தில் பிறந்தவரா எங்கு பிறந்தவராக   வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இவரைப் போன்ற ஒரு  ஆத்மார்த்தமான நடிகையை இனி காண முடியுமா என்பது சந்தேகமே. 

அவருடைய ஆரம்ப காலத்திலிருந்து பார்த்தால் எல்லா நடிகைகளைப் போலவே சின்ன சின்ன படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டு பிறகு, கிளாமர் ரோல்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு கன்னடம் சினிமாக்களில் அவருடைய கிளாமருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.   இப்போதும் கூட  யூடியூபில் ரம்யா கிருஷ்ணன் என்று அடித்தால் அவர் நடித்த கிளாமர் காட்சிகளும் அவர் நடனமாடிய கிளாமர் பாடல்களும் தான் முன்னே வந்து நிற்கின்றன. 

தொடர்ந்து  கவர்ச்சி பாதையிலேயே பயணித்து இருந்தால் அவருடைய அழகுக்கும் உயரத்திற்கும்  காந்த குரலுக்கும் இன்னும் ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருப்பார்கள். அப்படி மட்டும் நடந்திருந்தால் அவர் நடிகை சில்க் ஸ்மிதாவின் புகழ்ச்சியை ஓரங்கட்டும் அளவிற்கு  மிகப்பெரிய பிரபலமாக மாறி இருப்பார். ஆனால் அவர் அதை செய்யவில்லை. நல்ல கதைக்களம் கொண்ட  திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார். 

மற்ற நடிகைகளைப் போல  நான் நடித்தால் பெரிய பெரிய நடிகர்களுடன் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து இருந்தால் ஒருவேளை அவர்  இன்னும்  பல உச்சங்களைத் தொட்டு இருக்கலாம்.   ஆனால் அவர் அந்த மாதிரி ஈகோ கேரக்டராக ஹெட்வெயிட் கேரக்டராக இயல்பிலேயே இல்லை என்பதால் எந்த கேரக்டராக இருந்தாலும் அது மனதுக்கு பிடித்து விட்டால் போதும்  பெரிய டைரக்டர் சின்ன டைரக்டர் என்ற வித்தியாசமெல்லாம் இல்லாமல் நடித்துத் தள்ளியிருக்கிறார். 

அவர் நினைத்திருந்தால் ரஜினி கமல் போன்ற பெரிய ஹீரோக்களுடன் ஹீரோயினாக டூயட் ஆடி இருக்கலாம்.  அவர் அதையெல்லாம் விரும்பவில்லையா இல்ல அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லையா என்பதுதான் ஆச்சரியம். தன்னுடைய நடிப்புத் திறமையை பெரும்பாலும் கன்னடம் தெலுங்கு மலையாளம் போன்ற சினிமாக்களில் தான் அவர் அதிகம் காட்டியுள்ளார் என்று  ஒரு தோற்றம் உள்ளது. இப்படி தென்னிந்திய மொழிகள் முழுக்க தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்திருந்த ரம்யாகிருஷ்ணன் திடீரென்று தமிழக கிராமங்களைச் சார்ந்த  சிறு தெய்வங்களின்  கதை சார்ந்த படங்களில் நடிக்கத் தொடங்கினார். 

இதற்கு முன்பு வரை கிளாமரான ரோல் ஜாலியான ரோல் என்று நடித்து வந்தவர் எப்படித்தான் அந்த சாமி வேடங்களுக்கு கன கட்சிதமாக பொருந்தினார் என்று இன்றும் புரியவில்லை. அவருடைய கிளாமருக்கு எப்படி தனி ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அதே போல அவருடைய சாமி படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

நிறைய நடிகைகள் சாமி வேடம் போட்டு விட்டனர் ஆனால் ஒருவர்கூட ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக வரவில்லை. இப்படி கிளாமர் ஜாலி பக்தி என்று தனித்தனி முகங்கள் காட்டிக்கொண்டிருந்த ரம்யாகிருஷ்ணன், படையப்பா படத்தில் அவர் ஒரு முகத்தைக் காட்டி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே மிரட்டிவிட்டார். ரஜினி போன்ற மாஸ் நடிகருக்கு எதிரியாக நடிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை. ரஜினி நாயகன் என்றால் வில்லனாக ஆட்டோமேட்டிக்காக ரகுவரன் தான் கண் முன் வந்து நிற்கிறார். அப்படிப்பட்ட ரஜினிக்கு சரிசமமாக போட்டி போட்டு நடித்து தனது கம்பீரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். ரஜினிக்கு வில்லியாக இவ்வளவு சிறப்பாக எந்த நடிகையும் நடிக்க வில்லை. மன்னன் பட விஜயசாந்தி நீலாம்பரிக்கு கீழ தான். சந்திரமுகி ஜோதிகா ஓரளவுக்கு நீலாம்பரியை நெருங்கி வந்தார். ஆனால் நீலாம்பரியை தாண்டவில்லை. 

அதைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்தார். ஆனால் ஒன்று கூட நீலாம்பரி அளவுக்கு வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. பழையபடி சின்ன சின்ன படங்களில் கூட சின்ன சின்ன வேடங்களில் கூட நடிக்க ஆரம்பித்தார். இப்படியே அவர் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்க கடைசியில் அவர் விஜயகாந்த் படத்தில் ஐட்டம் சாங்குக்கு ஆடவும் சிம்புவுடன் குத்தாட்டம் போடவும் தயங்கவில்லை. 

வெள்ளித்திரை கொஞ்சம் கொஞ்சமாக அவரை விலக்க  அவர் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார். சின்னத்திரை தொடர்களிலும் தன்னுடைய கம்பீரமான நடிப்பாற்றலை அவர் வெளிப்படுத்தினார். சாமி படங்களின் மூலம் குடும்ப பெண்களின் மனம் கவர்ந்த ரம்யா கிருஷ்ணன் சீரியல் மூலமாக மீண்டும் குடும்ப பெண்களின் மனம் கவர தொடங்கினார். இனி ரம்யாகிருஷ்ணன் அவ்வளவுதான் தொடர்ந்து டிவி நடிகையாகவே தான் சுற்றிக் கொண்டே இருக்கப் போகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. 

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் வெளியானது பாகுபலி. சிவகாமி என்ற கேரக்டரில் மிரட்டி இருந்தார். அவர் பேசிய “நானே கட்டளை… நானே சாசனம்…” என்ற வசனம் இந்தியா முழுக்க புகழ் பெற்றது.  அதிலும் கட்டப்பா என்று உரக்க அழைக்கும் அவருடைய குரல் இன்றும் கணீரென்று ரசிகர்களின் காதில் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. 

தென்னிந்திய மொழி  சினிமாக்களில் நடிக்கத் தொடங்கி தென் இந்தியா முழுக்க பிரபலம் ஆகி பிறகு மார்க்கெட் இழந்து  ஐட்டம் டான்ஸ் சீரியல் என்று சரிந்த பிறகும்  மீண்டும் சிவகாமியாக தென்னிந்தியா முழுக்க பிரபலம் ஆனார். அடுத்தடுத்து மீண்டும் வெளியில் தலைகாட்ட ஆரம்பித்தார்.  அதிலும் குறிப்பாக சூர்யாவுடன் இணைந்து நடித்த தானா சேர்ந்தகூட்டம் படத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். 

சிங்கம் போன்ற படங்களில் தனது கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்திய சூர்யா,  ரம்யா கிருஷ்ணனின் கம்பீரத்திற்குப் பக்கத்தில் நிற்கும் போது கொஞ்சம் சின்னவராக தெரிகிறார். அவர் தன்னை சிபிஐ என்று காட்டிக்கொள்ளும் இடங்களில் கம்பீரமான நடிப்பு வெளிப்பட்டது.  ரம்யா கிருஷ்ணன் அந்த படத்தில் இருந்ததால் ஹீரோயினாக நடித்த கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் பாவமாகத் தான் தெரிந்தார். 

அதைத்தொடர்ந்து ஆரண்யகாண்டம் புகழ் தியாகராஜா குமாரராஜாவின்  இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.  அதில் அவருக்கு ஜோடியாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருந்தார்.  இவர்கள் இணைந்து நடித்த காட்சிகள் 80 90 க்கும் மேற்பட்ட டேக்குகள் சென்றுள்ளது.  இத்தனைக்கும் மிஸ்கின் ரம்யா கிருஷ்ணன் இருவருமே மிகச் சிறந்த நடிகர்கள். அதிலும் குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் சிங்கிள் டேக் ஆக்டர்.  அவர் ஒரு காட்சியில் நடிக்க 80 90 டேக்குகள் எடுத்தார் என்ற செய்தி உண்மையிலேயே வியப்பளிக்கிறது. 

சிவகாமி கதாபாத்திரத்திற்காக என்று ஏகப்பட்ட விருதுகள் அவருக்கு கிடைத்தது.  அதைத்தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் கேரக்டருக்கும் அவருக்கு ஆனந்த விகடன் உள்ளிட்ட மிகப் பெரிய விருதுகள் எல்லாம் கிடைத்தது.  பிகைன்ட்வுட்ஸ், பிளாக் சீப், jfw அமைப்புகள் ரம்யா கிருஷ்ணனை தேடி பிடித்து  அவருக்கு விருது கொடுத்து மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்துதான் குயின் வெப்சீரிஸ்ல் அவர் பங்கேற்றார். ஜெயலலிதா போன்ற கம்பீரமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணனை தவிர வேறு ஆள் இல்லை என்று பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.  இப்போது குயின் வெப் சீரியஸ் பலராலும் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. 

 இதன் மூலம்  ஜெயலலிதாவும் ரம்யா கிருஷ்ணனும் சமம் என்று சொல்லவரவில்லை. ஜெயலலிதா வேறு ரம்யாகிருஷ்ணன் வேறு. ஆனால் இருவருமே கம்பீரமான பெண்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. படையப்பா படத்தில் வரும் நீலாம்பரிக்கு இன்ஸ்பிரேசனாக  பொன்னியின் செல்வனின் நந்தினி கேரக்டரை வைத்து தான் எழுதப்பட்டது என்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சொல்லியிருப்பதாக பலர் கூறுகின்றனர்.  அப்படி இருக்கையில் இப்போது பொன்னியின் செல்வனை படமாக்கி கொண்டிருக்கும் இயக்குனர் மணிரத்தினம் ஏன் நந்தினி கேரக்டருக்கு  ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்யவில்லை என்பது  கேள்விக்குறியாக இருக்கிறது.  ஐஸ்வர்யா ராயும் கூட கொஞ்சம் எப்போது முதிர்ச்சி அடைந்தது போல தான் இருக்கிறார்.  ஆக ரம்யா கிருஷ்ணனையே கொஞ்சம் உடல் இளைக்க வைத்து நந்தினி கேரக்டரில் நடிக்க வைத்திருக்கலாம். 

கிளாமர், காமெடி, வில்லத்தனம்,  நடனம் என அனைத்திலும் அட்டகாசம் செய்யும் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையான நடிகை இன்னும் தமிழ் சினிமாவில் வரவில்லை என்பதுதான் உண்மை. அரசியல் விமர்சகரும் நடிகரும் பத்திரிக்கை ஆசிரியருமான சோ அவர்கள், நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்த தாய் மாமன் முறை ஆகிறார்.  இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன் அந்த செல்வாக்கைத் எந்த இடத்திலும் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அனுஷ்காவிற்கு ரம்யா கிருஷ்ணன் போல சாமி வேடம், கிளாமர், நடனம், கம்பீரம் போன்றவை நன்றாக வந்தாலும் ரம்யா கிருஷ்ணனை போல நகைச்சுவை திறமை அவரிடம் சற்று குறைவாகவே உள்ளது என்பது கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம். 

இன்றைக்கு இருக்கும் நடிகைகளில் யார் யாரையோ லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்கிறோம். ஆனால்  உண்மையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது ரம்யா கிருஷ்ணன் மட்டுமே!

Related Articles

குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படு... நாகரீக சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தைப் பேறை தள்ளி போட்டு தங்களது எதார்காலத்தை தொலைத்து வருகின்றனர். மனித வாழ்க்கையில் ...
லவ் யூ சிதம்பரம்! – அசுரன் விமர்சன... தயாரிப்பு : v கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு. எழுத்து இயக்கம் : வெற்றிமாறன்மூலகதை : எழுத்தாளர் பூமணிஇசை : ஜீவி பிரகாஷ் குமார்ஒளிப்பதிவ...
மக்களுக்கு விசம் கொடுத்து சம்பாதிக்கிறது... (TASMAC - Tamilnadu Anaiththu Samooga Makkalum Arundhum Cool Drinks) சமூக வலை தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் வரிகள் இது. உண்மை தான். தெருவுக்கு தெரு ...
அட்லியின் நிறத்தை கலாய்க்கும் நெட்டிசன்க... கருப்பாக இருக்கும் இளசுகளை கரிச்சட்டி தலையா, கருவாயா இப்படி விளையாட்டுக்கு அழைப்பது தமிழகத்தில் வழக்கம். அதே கருப்பை வைத்து ஒருவரை மட்டம் தட்டுவதும் த...

Be the first to comment on "ஜெயலலிதாவும் ரம்யா கிருஷ்ணனும்! – கம்பீரமான பெண்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*