நடிப்பு ராட்சசன் எம்.எஸ். பாஸ்கர் அசத்திய காட்சிகள் ஒரு பார்வை!

நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்புத்திறமையைப் பற்றிச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. இருந்தாலும் சில அசத்தலான காட்சிகளை இங்கு பகிர்ந்து கொள்வோம். 

மொழி:

முதல் படம் மொழி. மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த எம்.எஸ். பாஸ்கர் பல நாட்களாக அதே வருட நினைப்பில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் பிரித்விராஜ் அவரது உடலை பிடித்து குலுக்கி உன் பையன் செத்து ரொம்ப வருசமாச்சு… நல்லா அழுய்யா அழு… என்று சொல்ல அப்போது வெடித்து அழும் காட்சியில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். 

உத்தமவில்லன்: 

அதைத் தொடர்ந்து உத்தம வில்லன் படத்தில் உரியவருக்குக் கொடுக்க வேண்டிய கடிதத்தை தானே வைத்துக் கொண்டதால் பல வருடங்களாக உடைந்து போன உறவை நினைத்து கமலிடம் மண்டி போட்டு அழும் காட்சியில் நம்மை கலங்கடித்திருப்பார். 

எட்டு தோட்டாக்கள்: 

அதைத் தொடர்ந்து எட்டு தோட்டாக்கள் படத்தில் மிரட்டி இருப்பார். குறிப்பாக காப்பி ஷாப் சீன் என்றாலே லவ் ரொமான்ஸ் என்றிருந்த தமிழ் சினிமா வழக்கத்தை மாற்றியமைத்த படம். எட்டு தோட்டாக்கள் காப்பி ஷாப் சீன் அப்படியே எழுத்து வடிவில் உள்ளது. படித்து பாருங்கள், கண்முன்னே எம்.எஸ்.பாஸ்கர் வந்து நிற்பார். 

“கவல படாதிங்க சார்… உங்களுக்கு சீக்கிரமே வேல கிடைச்சிடும்…”

“எனக்கு எதுக்கு வேல போச்சுனு உங்களுக்கு தெரியாதா சார்… பேப்பர்லலாம் வந்துச்சே சார்… ஒரு எஸ்ஐ துப்பாக்கிய தொலைச்சு அதுல ஒரு குழந்தைய சுட்டாங்கன்னு…” 

“சார்… அதுக்கு நீங்க என்ன சார் பண்ணுவிங்க… வருத்தப்படாதிங்க சார்… எப்படி எடுத்துக்கறதுனு தெரில… பண்ணாத தப்புக்கு எட்டு வருசம் சிறுவர் சீர்திருத்த பள்ளில இருந்தேன்… உங்களுக்கு தெரியும் சிறுவர் சீர்திருத்த பள்ளி எவ்வளவு மோசமா இருக்கும்னு… இப்ப மறுபடியும் பண்ணாத தப்புக்கு பழிய சுமந்துட்டு இருக்கேன்… எவனோ ஒருத்தன் பண்ண தப்பால… யாரும் எனக்கு ஆறுதலாவும் இல்ல…”

“மனுச வாழ்க்கையே அப்படித்தான் சார்… ஆறுதல் தேடி அலைஞ்சே பாதி வாழ்க்க போய்டுது… இதுல யாராவது ஒருத்தர் வாழ்க்க முழுக்க இவங்க மட்டும் போதும்னு நினைச்சு வச்சிருப்போம்… அவிங்களும் பாதில விட்டுட்டு போவும்போது ஒடஞ்சிர்றோம் சார்…”

“சார் கேக்குறேனு தப்பா நினைக்காதிங்க… உங்களுக்கு எப்படி வேல போச்சு… சொல்லலாம்னா சொல்லுங்க… இல்லனா வேணாம்…” 

“குணா இருக்கான்ல… அவன் ரொம்ப மோசமானவன் சார்… நான் அவனுக்கு கீழ தான் பி5 ஸ்டேசன்ல வேல பாத்துக்கிட்டு இருந்தேன்… பத்து மாசத்துக்கு முன்னாடி திடீர்னு ஒருநாள் ராத்திரி எவனோ ஒருத்தன் டாஸ்மாக்ல குடிச்சிட்டு கலாட்டா பண்றானு போன் வந்தது… நாங்க அவன அரெஸ்ட் பண்றதுக்காக போனோம்… அவன் திடீர்னு ஒரு பீர் பாட்டில உடைச்சு பக்கத்துல இருந்தவன் கைய கிழிச்சுட்டான்… சரி ஒருநாள் நைட்டு ஸ்டேசன்ல வச்சிட்டு அனுப்பிரலாம்… அப்படினுதான் அவன கூட்டிட்டு வந்தோம்… அவன் நிறைய உளர்றுனா… அவன் இந்த நக்சலைட் இயக்கத்த சேந்தவன் மாதிரி இருந்தது… அவன மொதலயே கோர்ட்ல ஒப்படைச்சிருக்கனும்… அந்த குணா கேட்கல… அவன வச்சு எதோ பெரிய கேஸ் புடிக்கனும்னு ஆசைப்பட்டான்… 

அவன் பூந்தமல்லிக்குப் பக்கத்துல எதோ ஒரு இடத்துல நிறைய ஆயுதங்கள பதுக்கி வச்சிருக்கறதா சொன்னான்… இடத்த அடையாளங் காட்ட சொல்லி அவன நானும் குணாவும் இன்னும் ரெண்டு போலீஸையும் கூட்டிட்டு போனோம்… எங்கள ஏமாத்திட்டு தப்பிச்சிட்டு போய்ட்டான் சார்… இதுக்குள்ள எஸ்ஐ மூலமா மேலிடத்துக்கு போன் போயி உடனே அவன கொண்டுவாங்க… அவன கொண்டுவாங்கனு குணாவுக்கு போன் மேல போனு… அவன தப்பிக்க விட்டோம்னு சொன்னா எனக்கு ரொம்ப அசிங்கமாயிடும்… தயவுசெஞ்சு எனக்காக இந்த பழியை ஏத்துக்குங்க… நான் உங்கள சீக்கிரமா இந்த கேஸ்ல இருந்து ரிலீஸ் பண்ணிட்ரேன் அப்பிடினு எங்கிட்ட கெஞ்சி எங்கள சம்மதிக்க வச்சான் சார்… 

நானும் சரி… இந்தாளு செஞ்சிடுவாருனு நம்பி சம்மதிச்சேன்… பாத்தா தப்பிச்சு போனவன் பெரிய ஆளு போல இருக்கு… நாடு முழுக்க தேடுற குற்றவாளி… அவன தப்பிக்க விட்டுட்டிங்களே அப்படினு எங்க மேல சீரியஸா ஆக்சன் எடுத்து இன்னைக்கு வரைக்கும் வேலை திரும்ப கிடைக்காம அல்லாடிட்டு இருக்கேன் சார்…” 

“குணா மேல ஆக்சன் எடுக்கலயா…”

“ஒரு ஸ்டேசனுக்கு டிரான்ஸ்பர் பண்ணாங்க… அவ்வளவு தான்… அப்புறம் தான் சார் தெரிஞ்சுது அவன் அந்த நக்சல்கிட்ட டீல் பேசி தான் அவன தப்பிக்க விட்டிருக்கான்னு… 

வாழ்க்கை முழுக்க பொழைக்க தெரியாமலே இருந்துருக்கேன் சார்… எல்லாருக்கும் சல்யூட் அடிச்சு சல்யூட் அடிச்சு… சம்பள பணத்துக்கு மேல சல்லிக்காசு வாங்குனது இல்ல சார்… எல்லா எதுக்குனு வெறுத்துப் போச்சு… பெத்த பிள்ளைங்க கூட மதிக்க மாட்டிங்குறாங்க… 

சும்மா சொல்லுவாங்க சார்… நல்லதே செய் நல்லதே நடக்கும்னு… நேர்மையா இருந்தா ஊரே உன்ன புகழும்னு… இதெல்லாம் சுத்த பொய்… அத மொத மொதல்ல சொன்னவன் மட்டும் என் கைல கிடைச்சான்… அவன செருப்பாலயே அடிப்பேன் சார்…”

“சார்… உங்க பொண்டாட்டி குழந்தைங்க எல்லாம்…” 

“என் பொண்டாட்டி தெய்வம் சார்… என் வாழ்க்கைல எனக்கு இருந்த ஒரே ஆறுதல் அதுதான்… எங்கிட்ட ஆயிரம் குறைகள் இருந்தாலும் அதயெல்லாம் பொருட்படுத்தாம முப்பது வருசம் என்கூட குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைங்கள பெத்து… சாமி சார்… 

எனக்கு அது வேணும் இது வேணும்னு அவ எதையும் எங்கிட்ட கேட்டதே இல்ல… என் கொஞ்ச சம்பள பணத்துல அப்படி இப்படி மிச்சம் பிடிச்சு குடும்பத்த நடத்திருவா… நான் எத பத்தியும் பெருசா கவலபட்டதே இல்ல… அவ இருந்த வரைக்கும் நான் ராஜா மாதிரி கெத்தா வாழ்ந்தேன் சார்… அவ போயிட்டா… கிடந்து அசிங்கப்படுறேன்…

சாரி சார் கொஞ்சம் எமோசனல் ஆயிட்டேன்… அவளுக்கு இன்னைக்குப் பிறந்தநாள் சார்…”

“அவிங்களுக்கு என்ன ஆச்சு சார்… எப்படி இறந்தாங்க…”

“அதுக்கும் இந்தப் பாவி தான் சார் காரணம்…” 

“அவளுக்கு சுகர் இருந்தது சார்… இந்த சுகர்தான் வயசு ஆகஆக ஜாஸ்தி ஆகுமே… மருந்து மாத்திரையெல்லாம் அதிகமாயிடுச்சு… இந்த இன்சுலின்லாம் போட வேண்டியிருந்தது… 

எனக்கு எதுவுமே தெரியல சார்… கவனமா பாத்துருக்கனும்… நான் பாட்டுக்கு ஸ்டேசனு கேசுனு மாடு மாதிரி இருந்துட்டேன்… ஒருநாள் உடம்புக்கு முடியாம விழுந்துட்டா… ஆஸ்பிட்டல கொண்டுபோயி சேர்த்துருக்காங்க… ஹெல்த் கண்டிசன் ரொம்ப பேடா இருந்துருக்கு… ஆறு மாசமா எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடல சார்…

ஐசியுல இருந்து பேஸ்மாஸ்க்லாம் போட்டுக்கிட்டு இருக்கா… அவ கைய புடிச்சு “ஏன்மா”னு கேட்டேன்…” 

“வீட்டு செலவு ஜாஸ்தி ஆயிடுச்சு… பசங்க வளந்துட்டாங்க… அவங்க படிப்புக்கு காலேஜ் பீஸெல்லாம் கட்ட வேண்டியிருக்குன்னு… இது எதையுமே என்கிட்ட சொல்லாம… மகராசி மருந்து மாத்திர காசெல்லாம் மிச்சம் புடிச்சு… நான் இது எத பத்தியுமே தெரிஞ்சுக்காம இருந்துருக்கேன் சார்… அவள பத்தி… வீட்ட பத்தி… அவளோட உடம்ப பத்தி… எல்லாமே கைமீறி போயிடுச்சு… போயிட்டா…

நாட்டுல விலைவாசி தான் சார் தினமும் ஏறுது… நம்ம சம்பளம் ஏறவே மாட்டிங்குது சார்…”

“இப்ப உங்க பசங்க கூட இருக்கிங்களா…”

“பதினஞ்சு நாள் பையன் வீட்டுல… பதினஞ்சு நாள் பொண்ணு வீட்டுல… இன்னிக்கு என் பையங்கிட்ட இன்னைக்கு உங்கம்மாவோட பிறந்தநாளுடா அப்படினு சொன்னேன்… என்னைய அப்படியே உத்துப் பாத்துட்டு பேசாம போயிட்டான்… ஒருவேள அவிங்களோட சாவுக்கே நீதான் காரணம்டானு நினைக்குறானோ என்னமோ தெரியல…” 

“அப்படிலாம் நினைக்காதிங்க சார்…”

“பசங்க மேலயும் எதுவும் தப்பில்ல சார்… மூணு வேள சோறு போடுறாங்க… மத்தபடி எங்கிட்ட முகங்கொடுத்து பேசுறது இல்ல… அவிங்களுக்கு சின்ன வயசுல என்னால பெருசா எதுவும் வசதி செஞ்சு தர முடியாம போச்சு சார்… கவுர்மெண்ட் ஸ்கூல்ல தான் படிக்க வச்சேன்… 

பையனுக்கு இன்ஜினியரிங் படிக்கனும்னு ஆசை… ஆனா பிஎஸ்சி கம்ப்யூட்டர்ல தான் சேத்தேன்… அவங்களுக்கு அவங்க அம்மா மேல ரொம்ப ஆச சார்… அம்மான்னா ரொம்ப பாசமா இருப்பாங்க… எல்லா தகப்பனுக்கும் உள்ளதுதான சார்… பாதி நேரம் பொழப்புக்காக ஓடிஓடி பிள்ளைங்களுக்காக நேரம் ஒதுக்க முடியாமயும் பாசம் காட்ட முடியாமயும் போயிடுது…” 

ஓ மை கடவுளே:

எட்டு தோட்டாக்களை அடுத்து சமீபத்தில் ரிலீசான ஓ மை கடவுளே படத்திலும் நம்மை கவர்ந்திருப்பார். குறிப்பாக “தான் எப்படி கக்கூஸ் கம்பெனி முதலாளி ஆனேன்” என்பதை விளக்கும் காட்சி செம. அந்தக் காட்சியின் எழுத்து வடிவமும் இங்கு உள்ளது.

“திருநெல்வேலி ஜில்லாவுல ஒரு சின்ன குக்கிராமம்… சின்ன வயசுல எங்க ஊர்ல நான் கக்கூசுலாம் பாத்ததே இல்ல… எதுக்கெடுத்தாலும் வெளியில தான் போவனும்… 

அந்த மாதிரி ஒரு தடவ கக்கூசு போறதுக்காக வயக்காட்டுப் பக்கம் போன எங்கம்மா அந்த நேரத்துல பாம்பு கடிச்சு செத்துப் போச்சு… 

இதுக்கு என்ன காரணம்… எங்க வீட்டுல ஒரு கக்கூசு இல்ல… இருந்திருந்தா எங்க ஆத்தா செத்திருக்காது இல்லையா… அன்னைக்கு முடிவு பண்ணேன்… எனக்கு வந்த நிலைமை வேற யாருக்கும் வரக் கூடாது… ஊர்ல ஃப்ரீ டாய்லெட் கட்டி கொடுக்கனும் அப்படினு சொன்னப்ப எல்லாரும் என்னைய பைத்தியக்காரன பாத்து சிரிக்கற மாதிரி சிரிச்சாங்க… நான் கவல படுல… 

ஒரே ஒரு துணிப்பையோட சென்னைக்கு ரயில் ஏறுனேன்… இங்க வந்து ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சேன்… அதனால உருவானது தான் கக்கூசு கம்பெனி… 

இன்னிக்கு எங்கட்ட சொந்தமா பங்களா இருக்கு… கார் இருக்கு… பேங்க்ல பணம் இருக்கு… ஆனா இதுலலாம் சந்தோசம் இல்ல… என் சொந்த செலவுல 420 ஃப்ரீ டாய்லெட் கட்டி கொடுத்திருக்கேன்… அன்னைக்கு என்னைய பாத்து சிரிச்சங்கள்ளாம் இன்னைக்கு வாயடைச்சு போயி நிக்குறாங்க… 

மத்தவங்களுக்கு எதிர்க்க நாம யாருங்கறத ப்ரூ பண்ணிட்டோம்னு வச்சுக்கயேன்… எல்லாருக்கும் ஆட்டோமேட்டிக்கா நம்ம மேல நம்பிக்கை வரும்… அதுக்கு என்ன பண்ணனும்… ஹார்ட்வொர்க் பண்ணனும்… ” 

உண்மையிலயே அற்புதமான மோடிவேசன் சீன் இது. எந்த தொழிலுமே கேலிக்குரிய தொழில் இல்லை என்பதை எம்.எஸ்.பாஸ்கர் தவிர வேறு யாராவது சொல்லியிருந்தால் நாம் கேட்டிருப்போமா? என்பது சந்தேகமே? 

இப்போதெல்லாம் எம்.எஸ்.பாஸ்கரை எந்தப் படத்தில் பார்த்தாலும் அவர் எங்கே அழ வைக்க போகிறாரோ என்று பதட்டமாகவும் இருக்கிறது, ஜாலியான கேரக்டரில் வந்தால் இவரை சரியா பயன்படுத்தவில்லையோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. 

 

Related Articles

ஜல்லிக்கட்டு! தமிழரின் அடையாளம் – ... கடந்த வருடம் இதே மாதத்தில் ஜல்லிக்கட்டு என்பது எங்களின் வாழ்வுரிமை என்று அதனை மீட்டெடுக்க ஒன்றுதிரண்டு போராடி வெற்றிகண்டார்கள் தமிழர்கள். வேலை இல்லாமல...
இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்க... கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிக முக்கியமான படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து மிக அழகாக உருவாக்கி இருந்தார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இ...
தந்தை பெரியாரின் பொன்மொழிகள் 50!... ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும். நமக்கு மாறுபட்ட கருத்துடையயோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில்...
படம் ரிலீசாகும் வரை ரஜினி பேட்டி கொடுக்க... காலா படம் நல்ல விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் வசூலில் சறுக்கியது. காரணம் கபாலி தந்த எபெக்ட் அப்படி. அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு எக...

Be the first to comment on "நடிப்பு ராட்சசன் எம்.எஸ். பாஸ்கர் அசத்திய காட்சிகள் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*