தனுஷ் படங்களும் அண்ணன் தம்பி எமோஷனல் காட்சிகளும் ஒரு பார்வை!

 

நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய அண்ணனான செல்வராகவனும் “துள்ளுவதோ இளமை” படத்தில் இருந்து தங்களுடைய சினிமா பயணத்தை தொடங்கினர். அந்த முதல் படத்திலேயே தனுஷ் கவனிப்பை பெற்றுவிட அதைத் தொடர்ந்து தன் அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் “”காதல் கொண்டேன்”, “புதுப்பேட்டை”, “மயக்கம் என்ன” என்று மூன்று படங்களிலும் செல்வராகவன் எழுதிய கதையில் உருவான “யாரடி நீ மோகினி” என்கிற படத்திலும் தனுஷ் ஹீரோவாக நடித்தார். அண்ணனும் தம்பியும் இணைந்த இந்த ஐந்து படங்களுமே சூப்பர்ஹிட். இன்றுவரை இந்த ஐந்து படங்கள் பற்றி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. 

இப்படி அண்ணனின் அரவணைப்பில், அண்ணன் கொடுத்த கதகதப்பில், ஊக்குவிப்பில், பயிற்சியில் தன்னை உயர்த்திக் கொண்ட நடிகர் தனுசுக்கு அவருடைய படங்களில் வரும் “அண்ணன் தம்பி” காட்சிகள் என்றால் அவ்வளவு கச்சிதமாக பொருந்தி விடுகிறது. திருவிளையாடல் ஆரம்பம், வேலையில்லா பட்டதாரி என இரண்டு படங்களில் மட்டும் தனுஷ், அண்ணனாக நடித்திருப்பார். மற்ற படங்களிலெல்லாம் தனுஷ் தம்பியாக விளையாட்டுப் பிள்ளையாக நடித்திருப்பார். முதலில் அண்ணனாக நடித்த திருவிளையாடல் ஆரம்பம் மற்றும் வேலையில்லா பட்டதாரி இந்த இரண்டு படங்களைப் பற்றி பார்ப்போம். “திருவிளையாடல் ஆரம்பம்” படத்தில் தனுஷுக்கு ஒரு பப்ளிமாஸ் தம்பி இருப்பார். அண்ணனுக்கும் தம்பிக்கும் பெரும்பாலும் இந்த படத்தில் முட்டலும் மோதலுமாக தான் இருக்கும். ஒரு கட்டத்தில் தனுஷ் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்துவிட, தீபாவளி தினம் அன்று வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் தன் தம்பியை ஒரு ஓரமாக மறைந்து நின்று பார்ப்பார் தனுஷ். தனுஷை பார்த்த அந்த பப்ளிமாஸ் தம்பி ஆசையாக “அண்ணே” என்று அழைத்து, தனுஷ் வாங்கிக்கொடுத்த தீபாவளி புது துணியை அன்போடு வாங்கி அணிந்து கொள்வான். அந்தக் காட்சி பார்ப்பதற்கு அவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும். அதேபோல வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்துக்கொள்வோம். அந்தப் படத்தில்  தன்னுடைய தம்பி, தன்னை விட அதிகம் சம்பாதிப்பவனாக இருந்தாலும், வீட்டில் அவனை வைத்து தன்னை தாழ்த்திப் பேசினாலும், மற்றவர்களிடம் தன் தம்பி அடி வாங்கும்போது வெகுண்டு எழுந்து சென்று அவர்களை புரட்டி எடுப்பார் தனுஷ். பணத்தைத் தொலைத்து விட்டேன் என்று தன்னுடைய தம்பி, வாசலில் நின்று அழுது கொண்டிருக்க… தன்னுடைய முதல் மாத சம்பளத்தை அப்படியே தூக்கி தம்பியிடம் கொடுக்கிறார் அண்ணன் தனுஷ். அந்தக் காட்சி பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்கும். 

இப்போது தனுஷ் தம்பியாக நடித்த படங்களைப் பார்ப்போம். மன்மத ராசா என்ற பாடல் மூலம் பெரிய ஹிட் கொடுத்த “திருடா திருடி” படத்தில் ஒரு அப்பாவி அண்ணன் இருப்பார்.  அண்ணனுக்கும் தம்பிக்கும் எப்போதும் எதிரும் புதிருமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட அண்ணனை திடீரென போலீஸ்காரர்கள் வந்து தனக்கு பதிலாக தவறுதலாக அழைத்துச் சென்றுவிட ஆவேசமடைந்து எங்க அண்ணனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு என்று எதிராளியை மிரட்டிப் பேசுவார். புதுப்பேட்டை படத்தில் சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட அந்த ஒரு இரவில், தொழில் கற்றுக் கொடுத்த அண்ணன் இறந்துவிட தனுஷ் அப்போது அவர் எனக்கு “அண்ணன் மாதிரி” என்று சொல்வார். கொக்கி குமார் மிருகமாக இருந்தாலும் அந்த வார்த்தையில் ஒரு ஈரம் இருக்கும். இயக்குனர் செல்வராகவன் எப்படி தனுசுக்கு நிஜத்தில் ஒரு அண்ணனோ, அதே மாதிரிதான் இயக்குனர் வெற்றிமாறனும் நடிகர் தனுசுக்கு ஒரு விதத்தில் அண்ணன் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி வெற்றிமாறனும் தனுசும் இணைந்த, படங்களில் உள்ள “அண்ணன் தம்பி” எமோஷனல் காட்சிகள் பற்றிப் பார்ப்போம். 

ஆடுகளம் படத்தில் நடிகர் பொல்லாதவன் கிஷோரை வார்த்தைக்கு வார்த்தை “அண்ணே… அண்ணே…” என்று அழைப்பார் தனுஷ்.  சேவல் பந்தய சண்டையில் தனுஷ்  குறித்து பலரும் பலவிதமாக பேச “தம்பி பண்ணுடா பாத்துக்கலாம்” என்று கிஷோர் உறுதியாக சொல்ல, சேவல் பந்தயத்தில் ஜெயித்ததும் ஓடிப்போய் அந்த அண்ணன் இடுப்பில் தாவி அமர்ந்து கொள்கிறார் தனுஷ். அப்படிப்பட்ட தம்பி தனுஷை ரொம்ப உற்சாகத்தோடு தூக்கி கொண்டாடுகிறார் அந்த அண்ணன். 

வடசென்னை படத்தில் ராஜன் – அன்பு இருவருக்குமிடையில் உள்ள உறவு அண்ணன் தம்பியா, குரு சிஷ்யனா என்பதை தாமாக விளக்காமல் ரசிகர்கள் தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடுவார் வெற்றிமாறன். ஆனால் படம் பார்த்து தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய ரசிகர்கள் அத்தனை பேருமே அன்பு என்கிற தனுசுக்கு, ராஜன் என்கிற அமீர் உண்மையில் உடன்பிறவாத ஒரு அண்ணன் என்றும் அண்ணன் வழியில் தம்பி பயணிக்கிறான், அண்ணனை சதித் திட்டம் மூலம் சாய்த்தவர்களை “தம்பி” பழிவாங்குகிறான் என்று தான் கருதுகின்றனர். ராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் மீண்டும் அன்புவின் வாழ்க்கையில் வேறொரு வடிவில் வரும். தனுசின் முன்னோடிக்கு நடந்ததுதான் தனுசுக்கு திரும்ப வேறொரு வடிவில் நடக்கிறது என்பதை நன்கு காட்டி இருப்பார்கள். 

வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட “அசுரன்” படத்தில் அப்பா-மகன் உறவு அவ்வளவு உணர்வுபூர்வமாக காட்டப்பட்டிருக்கும். வெக்கை நாவலிலும் அந்த எமோசன் தான் பெரிதும் காணப்படுகிறது. வெக்கை நாவலை படித்தவர்களுக்கு, “அசுரன்” படத்தில் எது புத்தகத்தில் உள்ள காட்சிகள், எது வெற்றிமாறனால் இணைக்கப்பட்ட காட்சிகள் என்பது தெளிவாய் தெரியும். அதன்படி பார்த்தால் பிளாஷ்பேக் காட்சிகளும் அதில் வரும் சிவசாமி, மாரியம்மா, விஸ்வநாதன், முருகன் போன்ற கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க வெற்றிமாறனால் எழுதப்பட்டது. ஆனால் புத்தகம் படிக்காமல் அசுரன் படம் பார்த்தவர்களுக்கு பிளாஷ்பேக் தான் படத்தின் தொடக்கம் என்பது போல் தெரிய வாய்ப்பு உண்டு. படத்தை அங்கிருந்து பார்க்கத் தொடங்கினால் “அப்பா – மகன்” உறவைக் காட்டிலும் “அண்ணன் – தம்பி” எமோசன் தான் அதிகமானதாய் தெரிகிறது. 

முருகன் – சிவசாமி: 

ஒரு பக்கம் தம்பி சிவசாமி சாராயம் காய்ச்சுகிறான். இன்னொரு பக்கம் அண்ணன் முருகன் நில உரிமைக்காகப் போராடுகிறான். ஒருகட்டத்தில் சாதிவெறி பிடித்த சாராயக்கடை முதலாளி, சிவசாமியை “நீ என் கால நக்கிப் பிழைக்கற நாய்” என்பதுபோல் நடத்துகிறான். இவ்வளவு நாள் முதலாளியை அப்பாவாகப் பார்த்த சிவசாமி, “முதலாளி என்னை என்னவாகப் பார்த்தார்” என்பதை உணர ஆரம்பிக்கிறான். அப்போது அண்ணன் முருகனின் தொடர் போராட்டங்களும் அவர் பேசும் “போராடுனும்டா, போராடுனாத்தான் கிடைக்கும்” வார்த்தைகளும் சிவசாமிக்கு சரியெனப் படுகிறது. அண்ணன் முருகன் வழியில் தம்பி சிவசாமி பயணத்தை தொடங்க அதிகாரவர்க்கத்தினர் சூழ்ச்சி செய்து, முதலில் புரட்சி பேசுபவனை போட்டுத்தள்ளனும் என்று முருகனை வெட்டுகின்றனர். அந்த இரவுநேரத்தில் வேற விஷயத்திற்காக சைக்கிளை மிதிக்க தொடங்கிய சிவசாமி, “டேய் சிவசாமி உங்கண்ணன் முருகன வெட்டிப்புட்டாங்கடா” என்ற குரலை கேட்டதும் அதிர்கிறான். அதன்பிறகு அவன் குடும்பத்தையும் அழித்துவிட்டார்கள் எனத் தெரிந்ததும் சிவசாமி அண்ணனை கொன்ற சாதிவெறி மிருகங்களை வெட்டிச் சாய்க்கிறான்.  

முருகன் – சிதம்பரம்: 

சிவசாமிக்கும் பச்சையம்மாளுக்கும் இரண்டு மகன்கள். அதில் முதல் மகனுக்குத் தன் அண்ணன் பெயரான முருகன் என்ற பெயரையும் இரண்டாவது மகனுக்குச் சிதம்பரம் என்ற பெயரையும் சூட்டுகிறான் சிவசாமி. எந்நேரமும் புரட்சி, போராட்டம், உரிமை என்றே சுற்றிக்கொண்டிருக்கும் தன் அண்ணன் முருகன் பெயரை வைத்ததாலோ என்னவோ “நமக்குத் தேவையானத நாம தான்பா அடிச்சு வாங்கனும்… நம்ம நிலத்த எதுக்குப்பா விடனும்” என்று அதிகாரவர்க்கத்துக்கு அடிபணியாதவனாக இருக்கிறான் மூத்த மகன் முருகன். அவனை வடக்கூரான் அணி வெட்டிச் சாய்க்கிறது. “அண்ணேன் தைரியம் யாருக்கும் வராது, இன்னிக்கும் எல்லாமே அப்படியேதான் இருக்கு… அதே காத்து, அதே பாறை, தேன்தட்டு, ஆனா அண்ணன் மட்டும் இல்ல” என்று வருந்தும் தம்பி சிதம்பரம் இப்போது தன் அண்ணன் முருகனோட சட்டையை அணிந்துகொண்டு சென்று வடக்கூரானை வெட்டிச் சாய்க்கிறான். 

சிவசாமி – சிதம்பரம்: 

சிவசாமி, சிதம்பரம் இருவரும் தன் அண்ணன்களை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். இருவரும் அப்பா – மகன் என்பது ஒருபக்கம் இருந்தாலும், இருவருமே அண்ணன்களை பலிகொடுத்துவிட்டு எதிரியைப் பழிக்குப் பழி வாங்கிவிட்டு மிச்ச வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்காக ஓடிக் கொண்டிருக்கும் வெவ்வேறு வயதுடைய இரண்டு தம்பிகள். இருவருடைய உள்மனதிலும் “எனக்கொரு அண்ணன் இருந்தான்… சும்மா நெருப்பு மாதிரி இருப்பான்… ப்ச் அண்ணன் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்…” என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கிறது. கிளைமேக்ஸில் படிப்பின் அவசியம் பற்றி பேசிய பிறகு சிவசாமி – சிதம்பரம் இருவரும் மாறிமாறி புன்னகைப்பார்கள். அப்போது சிதம்பரத்துக்கு அருகில் அவனுடைய அண்ணன் முருகன் (டீஜே அருணாச்சலம்) ஆத்மாவும், சிவசாமிக்கு அருகில் அவனுடைய அண்ணன் முருகன் (சுப்ரமணிய சிவா) ஆத்மாவும் புன்னகையுடன் நிற்பதுபோல ஒரு கற்பனை காட்சி இன்னமும் கண்முன் நிற்கிறது. 

காக்கா முட்டை படத்தில் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆன உறவை மிக அழகாக காட்டியிருப்பார்கள். அதிலும் குறிப்பாக பீட்ஸா கடையின் முன்பு தன்னுடைய அண்ணன் வாட்ச்மேனிடம் அறை வாங்கும் போது சின்ன காக்கா முட்டையின் முகம் வெளிறிப் போய் விடும். அப்படிப்பட்ட அண்ணன் தம்பி பாச கதையான “காக்கா முட்டை” படம் தயாரித்த தனுஷ், “இந்தப் படத்தின் கதையில் வருவது போல நானும் எங்கள் அண்ணனும் நிறைய இடங்களில் அலைந்து திரிந்து இருக்கிறோம். அதைப்போல சண்டையும் போட்டு இருக்கிறோம். அதனால் இந்த படம் எனக்கு ரொம்பவே மனதிற்கு நெருக்கமான படம்” என்று தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட தனுஷ் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருதை வாங்கப்போகும் பிகைன்ட்வுட்ஸ் மேடையில், தன்னை செதுக்கிய அண்ணன் செல்வராகவன் அமைதியாக நின்றுகொண்டிருக்க மேடை ஏறியதும் முதல் வேலையாக அண்ணனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார் தனுஷ். 

அந்த மேடையில் தனுஷைப் பற்றி செல்வராகவனும், செல்வராகவன் பற்றி தனுஷும் மாறி மாறி பேசிக்கொண்ட வார்த்தைகள் இங்கே: 

தனுஷ்: என்ன நானே செதுக்கல சார்… என்ன செதுக்கியவர் என் பக்கத்துல நிற்கிறார்… என் அண்ணன்…! அவருடைய படத்துல நடிச்சிட்டு இருக்கும்போது ஒரே காட்சியை 6 டேக், 7 டேக் திரும்பத் திரும்ப பண்ணிட்டே இருந்தேன். செல்வா சார் அப்போ ரொம்ப ஒர்க் ப்ரஸர்ல இருந்தாரு… கோபத்துல என்னை கூப்பிட்டு கன்னத்தில பட்டுனு அடிச்சு போடா அப்படின்னு சொல்லிட்டாரு… இன்னிக்கு அறை வாங்கன கையிலேயே அவார்ட் வாங்குறத நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு…!

செல்வராகவன்: தனுஷ் அவார்டு வாங்குறத பார்க்கும்போது, ஒரு அம்மாவுக்கு என்ன சந்தோஷம் இருக்குமோ அந்த மாதிரி இருக்கு…! பெத்தது மாதிரியான சந்தோஷம்

Related Articles

தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந... கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான அற...
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் போல்... கடந்த வெள்ளிக் கிழமை அன்று சந்தோஷ் ஜெயக்குமாரின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சாரா, வைபவி, யாசிகா ஆனந்த், சந்திரிகா ஆகியோரின் நடிப்பில் வெளி வந்த படம...
எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் கையில் பண... பணக்காரர்கள் ஏழை வேடமிட்டு மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். ஆனால் உண்மையான ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் உருண்டு பிரண்டு எவ்வளவு சம்பாதித்தாலும் க...
கிங்ஸ் XI பஞ்சாப் (KXIP) ஐபிஎல் 2018 அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி கிங்ஸ் XI பஞ்சாப் போட்டிகள் நேரம் இடம்1 2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி ...

Be the first to comment on "தனுஷ் படங்களும் அண்ணன் தம்பி எமோஷனல் காட்சிகளும் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*