தையல் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்சனைகள் – ஒரு பார்வை!

A View on problems facing tailors

உடைகள் என்ற ஒரு விஷயம் கண்டுபிடித்த காலத்திலிருந்தே தையல் என்கிற ஒரு விஷயமும் இருந்துகொண்டு வருகிறது. பல வருடங்கள் கடந்து உடைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தகுந்தமாதிரி அதன் வடிவமைப்பில் தன்மையில் மாறினாலும் இந்த தையல் தொழில் மாறுவதில்லை. ஏதோ ஒரு விதத்தில் இந்த தையல் தொழில் ஒரு நிலையான தொழிலாக இருக்கிறது. அதனால் தான் இந்த தையல் தொழிலை நிறைய பெண்கள் தங்களின் வாழ்வாதார தொழிலாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்கள் மட்டுமல்ல சில ஆண்களுக்கு கூட இந்த தையல் தொழில் சாப்பாடு போடுகிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை. இப்படி தையல் தொழில் நிலையான தொழிலாக இருப்பதால் தான் அரசு குறிப்பிட்ட சில பெண்களுக்கு தையல் மெஷின்களை வழங்குகிறது. அதேபோல அரசு சில பெண்களுக்கு இலவசமாக தையல் தொழிலை கற்று தந்து பயிற்சி கொடுக்கிறது. இங்கு “குறிப்பிட்ட சில பெண்கள்” என்று சொல்வது குறிப்பிட்ட சில சமூகத்தைச் சார்ந்தவர்களை  அல்ல, பொருளாதார ரீதியாக உண்மையாகவே பின் தங்கி இருக்கும் பெண்களுக்கு அரசு ஒரு வகையில் உதவி செய்து கொண்டிருக்கிறது என்பதை விளக்குவதற்கான வரிகள் தான் அவை. 

அப்படிப்பட்ட தையல் தொழிலில் பல வருடங்களாக பல வகைகளாக நடந்துகொண்டு வருகிறது.  ஒரு படத்தில் கவுண்டமணி  தள்ளுவண்டி போன்று இருக்கும் தையல் மிஷினில் உட்கார்ந்து கொண்டு வீடு வீடாக சென்று கிழிந்த துணி இருக்கிறதா என்று கேட்பார். அதுபோல நடமாடும் தையல் தொழிலாளிகள் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தார்கள். ஆனால் இப்போது அந்த மாதிரி மனிதர்களை சுத்தமாக பார்க்க முடியவில்லை. அதற்கடுத்து மரத்தடி தையல் தொழிலாளிகள். இவர்கள் சொந்தமாக வாங்கிய ஒரே ஒரு தையல் மெஷினை வைத்துக்கொண்டு அல்லது வாடகைக்கு எடுத்து வந்த தையல் மெஷினை வைத்துக்கொண்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து அன்று வரும் துணிகளை எல்லாம் அன்றைக்கே தைத்து தரக்கூடிய தொழிலாளிகளாக இருந்தார்கள்.  ஆனால் இப்போது அந்த மாதிரியான மரத்தடி தையல் தொழிலாளர்கள் எப்போதாவதுதான் கண்ணில் தென்படுகிறார்கள். மரத்தடி தையல் தொழிலாளிகளை காட்டிலும் கொஞ்சம் வசதியானவர்கள் சாலையோர கூடாரங்களில் இருக்கும் தையல் தொழிலாளிகள்.  இவர்களை இன்றும் கூட நிறைய நகரங்களில் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் வெறும் மெஷினை மட்டும் வைத்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர பெரும்பாலான நேரங்கள் துணி தைப்பது இல்லை என்பது போல தான் அவர்களை தினமும் கவனிப்பவர்களுக்கு தெரிகிறது. இப்படி தையல் தொழிலை ஆரம்ப காலம் முதல் தங்களுக்குச் சோறு போடும் தொழிலாக செய்து வந்தவர்கள் பெரிதும் பாதிப்படைந்து விட்டனர். இன்று அவர்களுடைய குடும்பம் எப்படி மூன்று வேளை உணவு உண்கிறது என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. 

பெரிய பெரிய ஜவுளி கடைகளுக்கு பக்கத்தில் தையல் கடை வைத்திருப்பவர்கள் அல்லது ஜவுளிக்கடைகளில் மாத சம்பளத்திற்கு நியமிக்கப்பட்ட தையல் தொழிலாளிகள் இவர்கள் ஓரளவுக்கு நல்ல வருமானம் பார்க்கிறார்கள். இவர்கள் அல்லாத நிறைய தையல் தொழிலாளிகள் பெரிய பெரிய டெக்ஸ் கம்பெனிகளில் ஊழியர்களாக வேலை செய்கிறார்கள். குறிப்பாக கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் டெக்ஸ் கம்பெனிகளுக்கு சென்று வேலை செய்யும் பெண்களும் ஆண்களும் தான் அதிகம் இருக்கின்றனர். இவர்களை ஆடு மாடுகளை ஏற்றிச் செல்வது போல பேருந்து வைத்து தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏற்றிக் கொண்டு செல்கிறது அந்த டெக்ஸ் கம்பெனி. கம்பெனிக்குள் நுழைந்து விட்டால் போதும் கண்டிப்பாக அவர்கள் எல்லோரும் மாடுகள்தான்.  கொண்டுவந்து வைக்கும் அத்தனை துணிகளையும் துண்டுகளையும் அவர்கள் எந்த சலிப்பும் இல்லாமல் தொடர்ந்து தைத்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சோர்வாகி  ஏனோதானோவென்று தேய்த்து கொடுத்தால் அவற்றில் இருக்கும் சின்ன சின்ன பிழைகளைப் பார்த்து அங்கு இருக்கும் மேனேஜர்கள் கண்டபடி திட்டுவார்கள். இதுதான் நீ வேலை செய்ற லட்சணமா? இப்படி பீஸ் அடித்துக் கொடுத்தால் என்ன செய்வது என்று அத்தனை பேர் முன்பு கத்துவார்கள். இவற்றையெல்லாம் விட மிக பெரிய பிரச்சனையாக இருப்பது காலை முதல் மாலை வரை மாங்கு மாங்கு என்று தைத்த துணிகளையும் துண்டு பீஸ்களையும் பொறுமையாக அமர்ந்து கணக்கு தவறாமல் அடுக்கி வைத்து எண்ணி எத்தனை பீஸ்கள் உள்ளது என்று குறிப்பு சொல்லிவிட்டுப் போக வேண்டும். அப்படி எண்ணி அடுக்கி வைப்பதில் ஏதாவது கூடுதலாகவோ குறைவாகவோ போய் விட்டால் அவர்கள் இவ்வளவு நேரம் மாங்கு மாங்கு என்று தைய்த்த உழைப்புக்கான மரியாதை மொத்தமாக காணாமல் போய்விடும். எங்களை ஏமாற்றி சம்பாதிக்கலாம்னு நினைக்கிறியா?  இப்ப நினைச்சா உன்னைய வேலையை விட்டு தூக்க முடியும், மாச மாசம் சம்பளம் சரியா தர்றோம் இல்ல, அப்புறம் எதுக்கு இந்த திருட்டு வேலை என்று அவர்கள் இஷ்டத்துக்கு பேசித் தள்ளுவார்கள். இப்படி அந்த டெக்ஸ் கம்பெனிக்காரர்கள் கொடுக்கும் மாத சம்பளம் 8000 ரூபாய் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு நேரம் உழைத்து ஏதோ கவனக்குறைவால் செய்த தவறுக்கு இப்படியெல்லாமா பேசுவார்கள் என்று அந்த தையல் தொழிலாளிகள் மனமுடைந்து இந்த வேலையே வேண்டாம் என்று வெளியேறி விடுகிறார்கள். 

அப்படி வேலையை விட்டுவிட்டு வந்து பிறகு வாழ்வாதாரத்திற்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் தவிக்கிறார்கள், சொந்தமாக ஒரு மெஷின் வாங்கி வீட்டிலேயே துணிகளையும் துண்டு பீஸ்களையும் வாங்கி அடிக்கலாமா என்று யோசிக்கிறார்கள். ஆனால் அப்படி வீட்டில் தனிமையில் உட்கார்ந்து வேலை செய்தால் அது எந்த அளவுக்கு நல்ல வருமானத்தை தரும் என்று அவர்களுக்கு தெரியாத காரணத்தினால் சில தெரு பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு கடையை வாடகைக்கு எடுத்து டெக்ஸ்டைல் கம்பெனிகளிடம் பங்கு பேசி துணிகளை வாங்கி தைக்கும் வேலையை செய்து வருகின்றனர். இப்போது அந்த மாதிரியான கடைகளுக்குச் சென்று வேலை கிடைக்குமா என்று கேட்கின்றனர் இந்த அப்பாவி தையல் தொழிலாளர்கள். அந்த மாதிரியான கடைகளில் எளிதில் வேலை கொடுத்து விடுகிறார்கள். வேலைக்கு ஆள் கிடைத்தால் போதும் என்கிற மனநிலை தான் அவர்களுடையது. மிஷின்கள் இல்லை என்றாலும் கூட புதிதாக வேலைக்கு சேரும் நபருக்காக ஒரு மெஷினையே புதிதாக வாங்கி போடக் கூடிய அளவுக்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் சம்பளம் என்பது டெக்ஸ் கம்பெனிகளில் கொடுத்ததை விட பாதி ஆகத்தான் இருக்கும். ஏதோ சொற்ப வருமானம் கிடைத்தாலும் பரவாயில்லை, வீட்டிற்கு பக்கத்திலேயே வேலை செய்யக் கூடிய சூழல் அமைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொள்ளலாம் என்று அவர்கள் அந்த சின்ன கடைகளில் அமர்ந்து கொண்டு கடுமையாக உழைக்கிறார்கள். இப்படி சின்ன கடைகளில் உட்கார்ந்துகொண்டு சொற்ப வருமானத்திற்காக காலை முதல் மாலை வரை மாங்கு மாங்கு என்று தைத்து தள்ளுகிறார்கள். தைத்த பிறகு மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக அமர்ந்து தைத்த துணிகளை பொறுமையாக எண்ணி அடுக்கி வைக்கிறார்கள். இதற்குள் அவர்கள் “போதும்டா சாமி” என்பது போன்ற நிலையை உணர்கிறார்கள். 

இப்படியே தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய முதுகெலும்பு சவ்வு பிரச்சினைக்கு உள்ளாகின்றது.   இடுப்பு நரம்புகள் அடிக்கடி வின்னு வின்னு என்று இழுத்துப் பிடிக்க ஆரம்பிக்கிறது. மிஷினில் ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.  சைக்கிளில் டிவிஎஸ் எக்ஸெல் போன்ற வாகனங்களில் கூட உட்கார்ந்து பயணிப்பது அவர்களுக்கு சிரமமான காரியமாக அமைந்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக வேகத்தடை அதிகம் இருக்கக்கூடிய சாலைகள், மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கக்கூடிய சாலைகள் என்றால் அவர்கள் வண்டியில் பயணிப்பதை விரும்பாமல் கீழே இறங்கி வண்டியை தள்ளிக்கொண்டு நடந்து செல்லக்கூடிய அளவுக்கு முதுகெலும்பு பிரச்சினையை அனுபவிக்கிறார்கள். கீழே அமர்ந்து தேங்காய் திருவுவது, காய்கறிகள் நறுக்குவது போன்ற செயல்களெல்லாம் அவர்களால் செய்ய முடிவதில்லை, நின்றுகொண்டுதான் அந்த வேலைகளை அவர்கள் செய்ய வேண்டும் என்பது போன்ற  சூழல் வந்துவிடுகிறது. சில சமயங்களில் நின்று கொண்டு செய்தால் மேலும் முதுகு வலி அதிகமாகி பல்லைக் கடித்துக் கொண்டு கீழே குந்த வைத்து அமர்ந்து ஒவ்வொரு வேலையையும் மூச்சை பிடித்துக்கொண்டு மெதுவாக செய்ய வேண்டியதாக இருக்கிறது.   இவற்றையெல்லாம் விட துணி துவைப்பது, அதிலும் குறிப்பாக பெட்சிட்க்களை தூக்கி துவைப்பது என்ற காரியம் அவர்களுக்கு நரக வேதனையை தந்து விடுகின்றன. ஒரு கட்டத்தில் முதுகுத் தண்டில் பிரச்சனை அதிகமாக மூச்சு விட முடியாமல் சரியாக தூங்க முடியாமல் அணத்திக்கொண்டே படுத்திருக்க ஆம்புலன்சை வரவழைத்து மருத்துமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கு மருத்துவர்கள் கண்டிப்பாக ஆபரேஷன் செய்தால் மட்டுமே இது குணமாகும்.  இல்லையென்றால் இவர்களால் நிம்மதியாக தூங்க முடியாது, உட்கார முடியாது, நடக்க முடியாது எந்த வேலையும் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அவர்கள் பல்லை கடித்து கொண்டு கண்ணீரை அடக்கி வைத்துக்கொண்டு வேலைகள் செய்ய வேண்டியதாக இருக்கும். நீங்கள் உடனடியாக ஆபரேஷன் செய்து விடுவீர்களா அல்லது ஆபரேஷன் செய்யாமல் இந்த மனிதரை நீங்கள் கொடுமைப் படுத்தப் போகிறார்களோ என்று மருத்துவர்கள் கேட்பார்கள். அதைக் கேட்ட குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும் என்றும் தெரியாமல் அங்கே இங்கே என்று அலைந்து கடன் வாங்கி காசை புரட்டி அந்த தையல் தொழிலாளிக்கு முதுகெலும்பு சவ்வு ஆப்பரேஷன் செய்கிறார்கள். ஆபரேஷன் செய்த பிறகு நீங்கள் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் வரை தையல் மெஷின் பக்கம் போகவே போகாதீர்கள் என்று மருத்துவர்கள் அடித்து சொல்லி விடுகிறார்கள்.  மறுபடியும் நீங்கள் அந்த தொழிலுக்கு செல்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக அது உங்கள் உயிருக்கு அல்லது நரம்பு மண்டல மற்றும் மூளை நோய்கள் போன்றவற்றைக் கூட ஏற்படுத்தி உயிருக்கே பிரச்சினையாக போய் முடியக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.  ஆனால் தயவு செய்து வருமானம் சரியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வீட்டில் அமைதியாக இருந்து கொண்டே வீட்டு வேலையை மட்டும் கவனியுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்புகிறார்கள். இவ்வளவு நாட்கள் 5,000 ரூபாய் பத்தாயிரம் ரூபாய்க்கு சரியாக சாப்பிடக்கூட முடியாமல் ஓடி ஓடி உழைத்த உடம்பு இப்போது எதற்கும் பயன் அளிக்கவில்லை என்று நினைத்து அந்த தையல் தொழிலாளிகள் கண்ணீர் வடித்தபடி வீட்டில் தனிமையில் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

Related Articles

பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு சில ஆலோ... பெண் பிள்ளைகளின் பெற்றோர் செய்யக் கூடியவை, செய்ய வேண்டாதவைதாய் தந்தையை தவிர வேறு யாரும் குழந்தையை தீண்ட அனுமதிக்க கூடாது. குழந்தைகள் தனியாக இ...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் ம... குடியுரிமை சட்டம் 2016ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன...
படைப்பாளிகள் கலைஞர்கள் இவர்களெல்லாம் தங்... தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா அளவில் ஏன் உலக சினிமா அளவில் கூட மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் பிரபலமான அல்லது மக்களுக்கு மிகவும...
மக்களின் பாராட்டுக்களை பெற்ற தெலுங்கானா ... உயர் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள் முதல் கடைநிலை அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையை நம்ப வேண்டும் என்பதற்கு உதாரணமாக தெலுங்கானாவில் உள்ள...

Be the first to comment on "தையல் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்சனைகள் – ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*