சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. ரோஜாக்கூட்டம், சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் சசி இயக்கிய இந்தப் படத்தில் பைக் ரேசராக இருக்கும் ஜீவி பிரகாசு டிராபிக் போலீஸ்க்கு பயப்படாமல் டிராபிக் ரேஸ் ஓட்டுவார். அவரை துரத்தி பிடித்து நைட்டி அணிவித்து ஊர்வலமாக வரவைத்து அதை வீடியோ எடுத்து யூடூப்பில் ஏற்றி அவமான படுத்துவார் டிராபிக் போலீசாக நடித்த நாயகன் சித்தார்த். அந்தக் காட்சியைக் குறித்து பொம்பளைங்க ட்ரெஸ்னா அவ்வளவு இளக்காரமா போச்சா… நாங்க உங்க – ஆம்பளைங்க ட்ரெஸ்ஸ போடும்போது சாதாரணமா தான் உணர்றோம்… நாங்க உங்க ஜட்டிய துவைக்கும்போதும் சாதாரணமா தான் உணர்றோம்… ஆனா ஆம்பளைங்க பொம்பளைங்களோட ட்ரெஸ்ஸ போடுறத மட்டும் ஏன் அவமானமா பாக்குறிங்க… பொம்பளைங்கனா அவ்வளவு இளக்காரமா… என்று நாயகனின் அம்மா நாயகனிடம் பேசுவார்.
நோ மீன்ஸ் நோ, நிலம் எங்கள் உரிமை, நாம வாழனும் செமயா வாழ்ந் தான்டான்னு சொல்ற அளவுக்கு வாழனும், விவசாயத்த காப்பத்தனும் விவசாயிகள மதிக்கனும், இராணுவ வீர்ர்கள மதிக்கனும், போலீஸ் உங்கள் நண்பன், பிரசவத்துக்கு இலவசம், கண் முன்னாடி நடக்குற தப்ப தட்டிக் கேட்கனும், லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து, நிமிர்ந்து நில், உன் வாழ்க்கை உன் கையில், ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான்… ஆனா கைவிட மாட்டான், நல்லது ஜெயிக்கும் ஆனா என்ன கொஞ்சம் லேட் ஆகும்… இப்படி தமிழ் சினிமாவில் இதுவரை ஏகப்பட்ட நல்ல வசனங்கள் வந்துள்ளன. அவற்றில் சில வசனங்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியதுண்டு… அவற்றையெல்லாம் நாம் கேட்டு ரசித்ததுண்டு. ஆனால் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் வரும் மேற்கண்ட வசனம் நமக்குள் உறுத்தலை உண்டாக்குகின்றன. காரணம் இதுவரை சினிமாவில் பார்த்த காட்சிகள் அப்படி.
நாயகிகள் ஆண்களின் உடைகளை அணிந்துகொண்டால் அது கெத்தான காட்சியாகவோ அல்லது ரொமான்ஸ் காட்சியாகவோ காட்டப்படும். ஆனால் நாயகன்கள் பெண்களின் உடைகளை அணிந்துகொண்டால் அது காமெடி காட்சியாகவோ அல்லது அவமானத்துக்குரி்ய காட்சியாகவோ காட்டப்படும். கம்பீரம் படத்தில் வடிவேலு பாவாடையை கட்டிக்கொண்டு இருப்பார், அதே போல கில்லி படத்தில் விஜய் தன் தங்கையின் பாவாடையை கட்டிக்கொண்டு படிப்பது போன்ற காட்சி வரும். இந்த இரண்டு காட்சிகளுமே காமெடியாகத் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை ஏன் நம் மனம் காமெடியாகப் பார்க்கிறது. நம் மூளையில் பதிந்திருப்பது என்ன… போயும் போயும் பொம்பளைங்க துணிய போட்ருக்கான் பாரு… என்ற இளக்காரம் காலம் காலமாக நம்முள் பதியப் பட்டு வருகிறது. அவ்வளவு ஏன் நம் வீட்டில் இருக்கும் பெண்களே அப்படித்தான் நினைக்கிறார்கள். பெண்களின் துணிகளை துவைக்க ஆண்களே முன் வந்தாலும் அய்யய்ய… பொம்பள சட்டியா நீ… நீ எதுக்கு இந்த வேலைலாம் செஞ்சிக்கிட்டு… கொடு நான் செய்யுறேன்… என்று சொல்லும் பெண்கள் தான் நம் வீட்டில் இருக்கிறார்கள். அவர்கள் மீது குற்றம் சுமத்துவது தவறு. அவர்கள் அப்படி இருக்க காரணம் ஆண்களே… நாம் பெண்களை அப்படித்தான் பழக்கப் படுத்தி வைத்திருக்கிறோம்.
கிரீடம் படத்தில் திரிஷா, விவேக்கை கலாய்க்கும் வகையில் ஒரு வசனம் பேசி இருப்பார். நான் வரப்ப அது பொண்டாட்டியோட உள்பாவாடைய துவைச்சிக்கிட்டு இருந்தது என்பது தான் அந்த வசனம். ஏன் மனைவியின் துணியை அக்கா தங்கையின் துணியை அம்மாவின் துணியை ஆண்கள் துவைப்பது அவமானத்துக்குரியதா… அல்லது துணிதுவைப்பது என்பது பெண்களுக்கு மட்டுமே எழுதிவைக்கப்பட்ட தொழிலா… என்று வினா எழுப்ப தோன்றுகிறது. ஜோக்கர் படத்தில் ஒரு மாற்று சிந்தனைக் காட்சி வரும். கோமாவில் படுத்துக் கிடக்கும் பொண்டாட்டியின் துணியை நாயகன் துவைப்பது போல் நாயகிக்கு அணிவிப்பது போல் காட்சி அமைக்கப் பட்டிருக்கும். அதே போல மாரி2, மன்னன் போன்ற படங்களில் நாயகர்கள் தங்களின் மனைவி, அன்னை போன்றோரின் துணிகளை துவைப்பது போல் காட்சிகள் உள்ளன. ஆனால் அந்தக் காட்சிகள் எல்லாம் வெறும் சினிமா தனமாகவே பார்க்கப் படுகிறது. நிஜத்தில் இந்தக் காட்சிகளை ஏற்க மறுக்கிறது ஆண்களின் மனம். அந்த மறுப்பை பெண்களும் ஏற்றுக் கொண்டு சுமையை தங்களுடைய
அவ்வகையில் சிகப்பு மஞ்சள் பச்சை படம் ஒரு புதிய எண்ணத்தை நம்முள் விதைத்து உள்ளது. சினிமாவில் பெண்களின் உடையை வைத்து செய்யப்படும் காமெடி காட்சிகள் மற்றும் அவமானப் படுத்தும் காட்சிகள் இந்தப் படத்திற்குப் பிறகு இனி ஓரளவுக்கு அல்லது முழுமையாக குறையும் என்று நம்புவோம். நிஜ வாழ்க்கையிலும் பெண்களின் உடைகளை ஆண்கள் துவைப்பது பயன்படுத்துவது அவமானத்துக்குரிய செயல் இல்லை… கேலிக்குரிய செயல் இல்லை… என்பதை புரிந்து செயல்படுவோம். அப்படி செயல்படும் ஆண்களை பொம்பள சட்டி, பொண்டாட்டி தாசன், பொட்டை, பயந்தாங்கோழி என்று பழித்துப் பேசுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பெண்கள் அவ்வாறு பழித்துப் பேசுவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அது பெண்கள் தங்கள் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு சமமாக கருதப்படும்.
Be the first to comment on "பெண்களின் ஆடைகளை ஆண்கள் துவைப்பது, பயன்படுத்துவது அவமானத்துக்குரியதா? – கேலி செய்யும் பெண்கள் திருந்துவார்களா?"