எம் எஸ் பாஸ்கருக்கும் ஏ. ஆர். ரகுமானுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். ஆனால் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்களுடைய வசீகர குரல் தான் அந்த ஒற்றுமை. ரகுமான் இசைக்கலைஞர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருடைய குரல் வசீகரம் அவரை மென்மேலும் ரசிக்க வைக்கிறது. அதேபோல எம் எஸ் பாஸ்கரையும் குரல் வித்தகர் என்று குறிப்பிடலாம். அந்த இரண்டு கலைஞர்களை பற்றியும் பார்ப்போம்.
லவ் யூ ஏ. ஆர். ரகுமான்!
ஏ. ஆர். ரகுமான் என்றழைக்கப்படும் அல்லா ராஹா ரஹ்மான் மீது யாருக்குத் தான் காதல் இல்லை. சாதி மதத்தை தாண்டி அவரை நேசிப்பவர்கள் உலகம் முழுக்க பரவிக் கிடக்கிறார்கள். அவருடைய இசை அப்படி. நம்மை இசைக்கு அடிமையாக வைத்துவிடுகிறது.
அவருடைய இசையில் கிழக்கு சீமையிலே, தாஜ் மஹால், காதலன், முத்து, படையப்பா, தெனாலி, இந்தியன், ராவணன், உயிரே, கடல் போன்ற படங்கள் என்னுடைய பேவரைட். அந்தப் படங்களில் உள்ள எல்லா பாடல்களுமே கேட்க கேட்க இனிமையாக இருக்கும். அந்த வகையில் இப்போது என்னுடைய பேவரைட் லிஸ்ட்டில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படமும் இணைந்துள்ளது. காரணம் அந்தப் படத்தை இப்போது தான் பார்க்க நேர்ந்தது.
படத்தின் முதல் பாடல் கொஞ்சும் மைனாக்களே என்ற பாடல். வாவ்… இந்தப் பாட்டு இந்தப் படத்தில் தானா என வியப்பு உண்டானது. அடுத்ததாக வந்த கண்ணாமூச்சி ஏனடா என்ற பாடலும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதை தொடர்ந்து இல்லையென்று சொன்னால் என்ற பாடல் வந்தது. அஜித் டான்ஸ் ஆடும் அந்தப் பாடலை பலமுறை டீவீயில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட அந்தப் பாடலை முழுமையாக கேட்டதில்லை. படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது அந்தப் பாடல் ஏ. ஆர். ரகுமான் இசையில் உருவானது என்று. அடுத்து வந்த எங்கே எனது கவிதை… என்ற பாடலை கேட்டதும் உடல் சிலிர்த்துவிட்டது. இவ்வளவு அருமையான பாடல்களுமே ஒரே படத்தில் இருந்துள்ளன இந்தப் பாடலை போய் இத்தனை நாட்களாக நாம் பார்க்காமல் தவறவிட்டுவிட்டோமே என வருந்தினேன்.
இப்படி அட்டகாசமான மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்களை தந்த ஏ. ஆர். ரகுமான் தற்போது சொதப்பலான பாடல்களை தருவது ஏனோ? பாரதிராஜா, கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், மணி ரத்னம், ராஜீவ் மேனன் போன்ற இயக்குனர்களுடன் வேலை செய்யும்போது பல மடங்கு வீரியமாக உழைக்கும் ரகுமான் மற்ற இயக்குனர்களுடன் வேலை செய்யும்போது மிக சுமாரான அவுட்புட் கொடுப்பது ஏன் என்பது இன்றுவரை புரியவில்லை. குறிப்பாக அட்லி படத்தை, விஜய் படத்தை சொல்ல வேண்டும். இவர்கள் இருவரின் படங்களிலும் ரகுமானின் இசை அவருடைய இசையைப் போலவே இருப்பதில்லை. அதிலும் குறிப்பாக புது பாடலாசிரியர்களுடன் இணையும் போது அவருடைய பாடல்கள் மிக மோசமாக இருக்கின்றன. வைரமுத்துவும் ரகுமானும் இணைந்து வேலை செய்த பாடல்கள் அனைத்துமே இனிமையாக இருக்கையில் புது பாடலாசிரியர்களுடன் இணையும்போது சொதப்புவது ஏன் என்ற கேள்வி அவருடைய ரசிகர்களுக்கு இப்போது எழுந்துள்ளன. பழைய ரகுமானாக வாங்க ரகுமான்!
எம். எஸ். பாஸ்கர் எனும் மகாகலைஞன்!
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களால் என்ன கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடிக்க முடியும். அதுவும் சாதாரணமாக அல்ல மனதை கொள்ளையடிக்கும் வகையில் நடித்து தள்ளுவார்கள். அந்த சில நடிகர்கள் யாரென்றால் நாகேஷ், மனோரமா இவர்கள் இருவரும் தான். நாகேஷின் நகைச்சுவையை பார்த்து நாம் எப்படி சிரிக்கிறோமோ அதை போல அவர் சீரியஸாக நடிக்கும் காட்சியில் நம்மால் கண் கலங்காமல் இருக்க முடியாது.
உதாரணத்திற்கு வசூல் ராஜா படத்தை எடுத்துக் கொள்வோம். அந்தப் படத்தில் தன் மகன் டாக்டர் இல்லை டாக்டர் போல் வேசம் போடுகிறான் என தெரிந்ததும் நாகேஷ் கொடுக்கும் ரியாக்சன்கள் நம் மனதை என்னமோ செய்துவிடுகிறது. அதே போல தான் மனோரமாவும். அபூர்வ சகோதரர்கள், சின்ன கவுண்டர் போன்ற படங்களில் அவருடைய நகைச்சுவை சிரிக்க வைக்கும். அதே நகைச்சுவை நடிகை மனோரமா நாட்டாமை படத்தில் நாட்டாமை இறந்ததும் கதறி அழுவார். அந்தக் காட்சியை பார்க்கும் நமக்கும் கண்கள் தானாக கலங்கிவிடும். அந்த இரண்டு மகா கலைஞர்களுக்கு அடுத்தபடியாக இடம் பிடிப்பவர் திரு. எம். எஸ். பாஸ்கர் மட்டுமே.
சின்ன பாப்பா, பெரிய பாப்பா தொடரில் பட்டாபியாக வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக இருக்கிறார் பாஸ்கர். நிறைய படங்களில் அவர் காமெடியன் வேடம் ஏற்று நம்மை சிரிக்க வைத்தாலும் அவர் நடித்த சீரியசான கதாபாத்திரங்கள் நம்மை கலங்கடிக்காமல் இருப்பதில்லை. அந்த மாதிரியான படங்களில் முதல் படம் ராதாமோகனின் மொழி. மகனின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் அந்த காலத்திலயே இருக்கிறார், அவரை இந்த உலகம் கோமாளியாகப் பார்க்க ஒரு கட்டத்தில் நாயகன் உண்மையை பட்டென்று உடைக்க கதறி அழுவார் பாஸ்கர். எப்போது நினைத்தாலும் கண்கள் கலங்கும் சீன் அது.
அடுத்ததாக அரிமா நம்பி படத்தை எடுத்துக்கொள்வோம். இந்தப் படத்தில் நாயகனை காப்பாற்றி தன் உயிரை கொடுக்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மனதை தொட்ட கதாபாத்திரம். அதே போல ஆ என்ற ஹாரர் படத்திலும் ஏடிஎம் வாட்ச் மேனாக நன்றாக நடித்திருப்பார். ஆ படத்தை பார்க்காதவர்கள் எம். எஸ். பாஸ்கரின் காட்சிகளுக்காகவாவது அந்தப் படத்தை ஒருமுறை பாருங்களேன்.
இந்தப் படங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்ட படம் தான் எட்டு தோட்டாக்கள். இந்தப் படத்தில் உண்மையில் இவர் தான் நாயகன். போலீஸ் நண்பனுடன் கேன்டீனில் பிளாக் டீ சாப்பிட்டுக் கொண்டே தன் மனைவியை பற்றி பேசும் காட்சி அவ்வளவு கனமானது. அந்தக் காட்சிக்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
Be the first to comment on "தமிழ் சினிமாவின் இரண்டு உன்னதமான “குரல்” கலைஞர்கள்! – பாஸ்கரும் ரஹ்மானும்!"