ஹெச். வினோத்! – இவர் வெற்றிமாறனும் சமுத்திரக்கனியும் கலந்த கலவையா?

வேலூர் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட இயக்குனர் ஹெச். வினோத், ஆரம்பகாலத்தில் ஆர். பார்த்திபனிடம் பச்சைகுதிரை என்ற படத்திலும், விஜய் மில்டனின் கோலி சோடா என்கிற படத்திலும்,  ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகன் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து தன்னுடைய முதல் பட வாய்ப்பிற்காக ஹெச் வினோத் அலைந்து கொண்டிருந்த போது,  இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா தன்னுடைய பேனரில் நல்ல கதையம்சம் நல்ல மேக்கிங் உள்ள ஒரு படம் தயாரிக்க வேண்டும், அந்த மாதிரி ஒரு திறமையான ஆளை எனக்கு அனுப்பு என்று நலன் குமாரசாமியிடம் சொல்ல, நலன் குமாரசாமி வினோத்தை மனோபாலாவிடம் அனுப்பியிருக்கிறார். கதை கேட்டதும் உடனே படம் தயாரிப்பதற்கு ஒப்புக்கொண்டார் மனோ பாலா. அப்படி உருவான படம்தான் சதுரங்க வேட்டை. நட்டி அதற்கு முன்புவரை பிரபல நடிகராக இல்லாதபோதும், தயாரிப்பு நிறுவனம் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இல்லாத போதும்,  ரிலீஸ் நாளன்று போட்டியாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் ரிலீஸ் ஆன போதும் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அப்படி எளிமையான முறையில் உருவாகி பெரிய வெற்றியை பெற்ற சதுரங்க வேட்டை படம், தமிழக அரசின் சிறந்த கதைக்கான  விருதை பெற்றது. அதேபோல சைமா விருது, விஜய் டிவி விருதுகள் போன்ற பல விருதுகளை சதுரங்க வேட்டை படம் வென்றது. குறிப்பாக கதைக்காகவும் வசனங்களுக்கும் அந்த மாதிரியான விருதுகள் கிடைத்தன. சதுரங்கவேட்டை படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்கவேட்டை பார்ட் 2 படம் எடுப்பதாக தான் இருந்தது. ஆனால் ஹெச். வினோத் “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் மீது கவனம் செலுத்த சதுரங்க வேட்டை 2 படத்திற்கு கதையை மட்டும் எழுதிவிட்டு இயக்கும் பொறுப்பை சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமாரிடம் ஒப்படைத்து விட்டார். அந்தப் படத்தை முடித்து விட்டு ஏதோ ஒரு நாளில் சாப்பாட்டு பொட்டலத்தின் நியூஸ் பேப்பரில் இருந்த ஒரு செய்தியை பார்த்த பிறகு பவாரியா ஆபரேஷன் என்கிற விஷயம் வினோத்திற்க்கு நினைவிற்கு வந்தது. அதைத் தொடர்ந்து எழுத்தாளர் முருகன்,  மொழிபெயர்ப்பாளர் போப்பு,  எழுத்தாளர் வீ சித்தன்னன்  போன்ற எழுத்தாளர்களை சந்தித்து கைரேகை நிபுணர்கள் வழிப்பறி கொள்ளையர்கள்  போலீஸ் அதிகாரிகள் போன்றவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்தார். அந்த சம்பவங்களையும் தகவல்களையும் மையமாக வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்கிற படம் எடுத்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் ஒரு சில தரப்பு மக்களிடமிருந்து எதிர்ப்பையும் பெற்றது. பழங்குடி இன மக்கள் கொள்ளைக்காரர்கள், நாகரிகம் அற்றவர்கள், இரக்கமற்றவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் என்று இந்த படம் காட்சி அளிக்கிறது என்று அவர்கள் எதிர் கருத்தை தெரிவிக்க, அதற்கு இயக்குனர் வினோத் என்னுடைய நோக்கம் கண்டிப்பாக அது இல்லை, பழங்குடி மக்கள் சுதந்திரத்திற்காகவும் போராடி இருக்கிறார்கள், அவர்களை இந்த சமூகம் எப்படி குற்றவாளி ஆக்கியது என்பதையும் நான் பதிவு செய்திருக்கிறேன் என்று விளக்கம் அளித்தார். 

அந்தப் படத்திற்கும் நிறைய விருதுகள் கிடைத்தது குறிப்பாக அந்த படத்தின்  நிஜ ஹீரோவான பவாரி ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்திய போலீஸ் அதிகாரி அந்த படத்தின் மூலம் மக்களிடம் பெரிய அளவில் பாராட்டு பெற்றார்.  நிறைய ஊடகங்கள் அந்த போலீஸ் அதிகாரியை மேடைக்கு அழைத்து விருது கொடுத்து கௌரவித்தது.  சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று இந்த இரண்டு படங்களுமே செய்தித்தாள்களில் வந்த உண்மை சம்பவங்களையும் எழுத்தாளர்கள் மற்றும் அதிகாரிகள் கொடுத்த தகவல்களை வைத்துக்கொண்டு வினோத் தன்னுடைய கற்பனையை கொஞ்சம் கலந்து எடுக்கப்பட்டவை என்று பேசப்பட்டது.  இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் சமுத்திரக்கனி இவர்கள்தான் எழுத்தாளர்களுடைய கதைகள் செய்தித்தாள்களில் வரும் சம்பவங்களை மையப்படுத்தி கதை எழுதி தங்களுடைய பாணியில் படம் எடுப்பவர்கள் இவர்களுடைய வரிசையில் வினோத்தும் இணைந்து விட்டார் என்று பலர் பேசிக் கொள்ள முற்றிலும் எதிர்பார்க்காத மாதிரி ரீமேக் படத்தில் இறங்கினார். 

 தீரன் என்கிற மாஸ் வெற்றிப்படம் கொடுத்த பிறகு, வினோத் அஜீத்திற்கு கதை சொல்லி அவரை வைத்து படம் எடுக்கலாம் என்ற முடிவுடன் அவரைத் தேடிச் செல்ல, அஜித்தோ வினோத்தின் கதையை அப்புறமாக செய்து கொள்ளலாம் முதலில் இந்த படத்தை நீங்கள் ரிமேக் பண்ணுங்கள் என்று “பிங்க்” படத்தை பற்றி சொல்கிறார். உடனே வினோத் ரீமேக் எனக்கு செட்டாகாது அப்படியே ரீமேக் பண்ணாலும் ஒரிஜினல் வெர்ஷனில் எப்படி இருக்கிறதோ அதே மாதிரி தான் எடுப்பேன் என்று சொல்ல, அஜித் நானும் அதை தான் எதிர்பார்த்தேன் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படியே எடுங்கள் என்று சொன்னார். 

அஜித் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வினோத் மிகுந்த சிரத்தை எடுத்து நேர்கொண்ட பார்வை என்ற அந்தப் படத்தை வெற்றிகரமாக இயக்கினார். தன்னுடைய முதல் படத்தில் திருடனை ஹீரோவாகவும் இரண்டாவது படத்தில் போலீஸை ஹீரோவாகவும் காட்டிய வினோத் மூன்றாவது படத்தில் வழக்கறிஞரை  ஹீரோவாகவும் வழக்கறிஞரை நம்பியிருக்கும் அந்த மூன்று பெண்களை முக்கியமான கதாபாத்திரத்தில் காட்டியிருந்தார். 

இந்த படம் பத்திரிகையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றதே தவிர ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இந்த படத்தில் மாஸ் காட்சிகள் எதுவுமே இல்லாதது அதிரடி பாடல்கள் எதுவுமே இல்லாதது ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் வைத்திருந்தால் பிங்க் படம் சிதைந்திருக்கும் என்று நேர்கொண்டபார்வை படத்தின் குழுவினர் சொல்ல, ஒரு தரப்பினர் நேர்கொண்டபார்வை படத்தை கொண்டாடினர். அஜித் மாதிரியான நடிகர்கள் இந்த மாதிரி படங்களில் நடிப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்று பாராட்டினார். இந்த படத்திற்கு பிறகு “நோ மேன்ஸ் நோ” என்கிற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது, பிரபலமானது. 

தன்னுடைய பிசினஸ் எப்படிப்பட்டது என்று தெரிந்திருந்த போதிலும் இந்த மாதிரியான எளிமையான கதையை எடுத்துக்கொண்டு மாஸ் ஹீரோ என்ற பிம்பத்தை தனக்கு தானே உடைத்துக்கொண்டார் அஜித்.  இப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட இந்த நேர்கொண்டபார்வை மீதும் சிலர் விமர்சனங்கள் வைத்தனர். நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார். அதாவது பைபோலார் டிஸ்ஆர்டர் என்று நோய் அவரைத் தாங்கி இருக்கும்.  அப்படிப்பட்ட நோயுடையவர்கள் கோபம் வந்தால் இந்த சமூகத்திற்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கக்கூடிய மனிதர்களாக மாறி விடுவார்கள் என்று படம் காட்டுகிறது, இது பொதுமக்களை தவறான பாதைக்கு தவறான புரிதலுக்கு அழைத்துச் செல்லும்  ஒரு தவறான தகவல். அஜித் மாதிரியான பெரிய ஹீரோக்கள் இந்த மாதிரியான தவறான தகவலை தங்கள் படங்களில் இனி சொல்லக்கூடாது என்று சிலர் விமர்சனம் செய்திருந்தனர். இப்படியும் வரவேற்பும் விமர்சனமும் பெற்ற இந்த நேர்கொண்ட பார்வை படம் பெரிய அளவில் விருதுகள் வாங்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அதேபோல நேர்கொண்டபார்வை படத்தில் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் அஜித்திற்கு போட்டியாளராக வசனங்கள் பேசினார். ஒரு தரப்பு மக்கள் அஜித் பேசும் வசனங்களுக்கு கைதட்ட, இன்னொரு தரப்பு மக்கள் ரங்கராஜ் பாண்டே பேசும் வசனங்களுக்கு கைதட்டலும் விசிலும் பரிசாக தந்தனர். இயக்குனர் ஹச் வினோத்திற்கும் மற்றும் அந்த படத்தில் நடித்திருந்த அந்த மூன்று பெண்களுக்கும்  கிடைக்காத விருது ரங்கராஜ் பாண்டேவுக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று விருதுகள் அந்த ஒரு படத்திற்காகவே பாண்டே வாங்கினார். 

தன்னுடைய முந்தைய இரண்டு படங்களுக்கு வந்த விமர்சனங்கள் அந்த படைப்புகளுக்கு கிடைக்காத விருதுகள் போன்றவை அனைத் திற்கும் ஒட்டு மொத்தமாக சேர்த்து “வலிமை”ப் படத்திற்கு உழைத்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இப்படி மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் இயக்குனர் வினோத், படமாக்கும் விதம் முற்றிலும் வேறுபட்டது.  இதுதான் கதை, படத்தில் இவ்வளவு சீன்கள் தான் இருக்கு, எந்தெந்த சீன்களில் எப்படி எப்படி எடிட் பண்ண வேண்டும், கேமரா கோணங்கள் எப்படி இருக்க வேண்டும், சண்டைக்காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முழுக்க முழுக்க பேப்பரில் தயார் செய்துவிட்டு பிறகு தான் சூட்டிங் போவார்.  சூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொரு காட்சியும் எடுத்து முடித்த பிறகு நன்றாக இருக்கும் காட்சிகளை உடனுக்குடனே கோர்த்து  அப்பொழுது எடிட்டிங் வேலையை முடித்து விடுவார் எடிட்டிங் என்பதற்கு தனியாக அவர் நேரம் ஒதுக்க மாட்டார். இது வினோத்தின் சிறப்பம்சம் என்று கூட சொல்லலாம். பிளாஷ்பேக்கை அல்லது மிக முக்கியமான ஒரு வரலாற்று சம்பவத்தை அனிமேஷன் வடிவில் தந்து அதை பிரபலமாக்கிய  பெருமை ஹெச். வினோத்திற்கு உண்டு. சதுரங்க வேட்டை படத்தில் வரும் நட்டியின் பிளாஷ்பேக், தீரன் படத்தில் வரும் போர்க்காட்சிகள் இவை இரண்டும் படங்களில் சில நொடிகள் மட்டுமே வரும்.  ஆனால் இந்த சில நொடிகளுக்கு அந்த அனிமேஷன் டீம் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக உட்கார்ந்து வேலை செய்திருக்கின்றனர்.

அஜித் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தால் அந்த படம்  பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். அந்த படத்தில் உள்ள பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படும். ஆனால் ஹெச்.வினோத் யுவன் சங்கர் ராஜா இவர்களுடைய கூட்டணி அஜித் படத்திற்கு அப்படி ஒரு பெயரை தர வில்லை. அதனால் ஹெச். வினோத் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் சேர்ந்து வலிமை படத்தில் தங்களுடைய திறமையை காட்டிவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக உழைத்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா ஒரு விருது மேடையில், வலிமை படத்தின்  மியூசிக் சும்மா செய்றோம்… அந்த மாதிரி இருக்கும்… என்று சொன்னார். 

 * மணி ஈஸ் ஆல்வேஸ் அல்டிமேட்!  

* நல்லவனா வாழ்ந்தா செத்ததுக்கு அப்புறம் தான் சொர்க்கத்துக்கு போக முடியும் கெட்டவனா வாழ்ந்த வாழும் போதே சொர்க்கத்துல வாழுற மாதிரி வாழலாம்…  போன்ற வசனங்கள் இயக்குனர் ஹச் வினோத்தின் முத்திரை வசனங்கள் என்று சொல்லலாம். 

உங்களை இம்ப்ரஸ் பண்ண இளம் இயக்குனர்கள் யார்? என்ற கேள்விக்கு –  “தீரன் அதிகாரம் ஒன்று”, “சதுரங்க வேட்டை” படம் எடுத்த இயக்குனர் வினோத்தின் வொர்க் நல்லாயிருக்கு என்று பாராட்டி இருந்தார்” இயக்குனர் ஷங்கர். 

Related Articles

புற்றுநோயை உண்டாக்கும் பால் பாட்டில்கள்!... குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்த படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தடை செய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்க கூடிய அபாயம் உடைய பிஸ்பினா ஏ என்ற மூலப...
அண்ணனுக்காக வெறியோடு களமிறங்கும் பூண்டி ... " அண்ணன் செத்த அடுத்த பதினாவது நாள் அவன் தம்பி வந்தாண்டா... " துப்பாக்கி படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனம் இது. சமீபத்தில் வெளியான தனுஷின் நடிப்பில் ...
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196... தமிழகத்தில் நீட் தேர்வு வந்த பிறகு, பல குளறுபடிகள் நடந்து உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு எழுத்துப்பிழைகள் காரணமா...
தண்ணீரைச் சேமிக்க புதிய தொழில்நுட்பத்தை ... தண்ணீரைச் சேமிப்பதற்காக மாற்றுத் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது சென்னை மெட்ரோ. ஒரு நாளைக்கு குளிரூட்டிகளுக்காக(Air Conditioners) மட்டும் 20000 லிட...

Be the first to comment on "ஹெச். வினோத்! – இவர் வெற்றிமாறனும் சமுத்திரக்கனியும் கலந்த கலவையா?"

Leave a comment

Your email address will not be published.


*