நாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம்.
மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை ஏன் வருகின்றன, இதை எப்படிக் குணப்படுத்துவது என மருத்துவர்களுக்கும் தெரிவதில்லை. அதனால் இவற்றை எல்லாம் குணமாக்கும் முயற்சியை மருத்துவ உலகம் கைவிட்டுவிட்டது. ‘சர்க்கரையைக் குணப்படுத்த முடியாது, கண்ட்ரோலில்தான் வைக்கமுடியும்’ என சர்க்கரை மருத்துவர்கள் கூறுகிறார்கள்; சர்க்கரை நோயாளிகளும் அவ்வண்ணமே நம்புகிறார்கள்.
ரத்த அழுத்தத்தின் கதை இன்னமும் மோசம். ரத்த அழுத்தம் என வந்தால் மருத்துவர் கூறுவது ‘முதலில் உப்பைக் குறை’ என்பது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே எனும் பழமொழிக்கேற்ப மக்களும் உப்பில்லாமல் ஓரிரு நாள் ஓட்ஸ் கஞ்சி, கோதுமைச் சப்பாத்தி என சாப்பிட்டுப் பார்த்து கடைசியில் ‘உப்பில்லாம சாப்பிட முடியாது. நீங்க மருந்தைக் குடுங்க’ என கேட்டு வாங்கிக்கொண்டு போகிறார் கள். ஆண்டுக்கணக்கானாலும் வியாதி குணமாகும் வழியையும் காணோம். ஆரோக்கிய உணவுகள் எனக் கூறப்படும் சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு மற்றும் கைக்குத்தல் அரிசியைச் சாப்பிட்டால் இதற்கு விடிவு கிடைக்கும் எனும் நம்பிக்கையில் பலரும் சிறுதானியங் களுக்கு மாறி வருகிறார்கள்.
ஆனாலும் இவை வியாதியின் தீவிரத்தைச் சற்று குறைக்கின்றனவே ஒழிய வியாதிகளில் இருந்து விடுதலை கிடைப்பதில்லை. இந்த இடத்தில் நாம் நிதானித்து சில விஷயங்களை யோசிக்கவேண்டும். ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற எல்லாமே நாகரிக மனிதனுக்கு மட்டுமே வரும் வியாதிகள். நாகரிக மனிதன் எனக் கூறுகையில் நகரம், கிராமம் எல்லாவற்றையும் சேர்த்தே கூறுகிறோம். ஆண்டவன் படைப்பில் இந்த வியாதிகளில் இருந்து விடுபட்டு இருக்கும் உயிரினங்கள் எவை எனப் பார்த்தால் காட்டு மிருகங்களான சிங்கம், புலி, யானை போன்றவை. அதோடு, காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களில் யாருக்கும் இந்த வியாதிகள் இல்லை.
நாகரிக மனிதர்களான நகர்ப்புற மற்றும் கிராமப்புற மனிதர்களுக்கே இந்த நோய்கள் ஏற்படுகின்றன. காட்டில் வாழும் பழங்குடி மக்களை நாம் காட்டுமிராண்டிகள் என்றும் நாகரிகமற்றவர்கள் எனவும் கருதுகிறோம். ஆனால் அவர்கள் உடல்நலனை ஆராய்ந்த விஞ்ஞானிகள், அவர்களில் யாருக்கும் புற்றுநோய், உடல் பருமன், சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சைனஸ், சொரியாசிஸ்…போன்ற நோய்கள் கிடையாது. இவை எல்லாம் என்னவென்றே தெரியாது எனச் சொல்லி நம்மை வியப்பூட்டுகிறார்கள். இந்தப் பழங்குடி மனிதர்களிடமிருந்து நாகரிக மனிதர்களான நாமும், நம் மருத்துவர்களும் கற்கவேண்டிய விஷயங்கள் என்ன?
1841ம் ஆண்டு டோக்லு தீவுக்கு வந்த அமெரிக்கத் தீவுகள் ஆய்வுக்குழு வரைந்த படம். இதில் மிக ஒல்லியாக இருக்கும் டோக்லு தீவுவாசிகளைக் காணலாம். நியூசிலாந்து அருகே டோக்லு, புகாபுகா என இரு தீவுகள் உள்ளன. டோக்லுவில் 1,400 பேர் வசிக்கிறார்கள். புகாபுகாவில் 600 பேர் வசிக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக நாகரிக மனிதனின் சுவடே இன்றி இம்மக்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்தப் பகுதி முழுக்க மணல் நிரம்பிய தீவுகள். விவசாயம் செய்ய வழியே இல்லை. மணலில் தென்னை மரங்கள் மட்டுமே முளைக்கும். உணவுக்கு மீன், தேங்காய் மற்றும் தீவுவாசிகள் வளர்க்கும் பன்றி மற்றும் கோழியையும், சீசனில் முளைக்கும் கிழங்குகளையும் மட்டுமே நம்பியிருந்தார்கள். அதிலும் பன்றிக்கு உணவாக தேங்காய் மட்டுமே கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் மீனும், தேங்காயும், பன்றி இறைச்சியும் சில கிழங்குகளும் மட்டுமே உண்டு வந்தார்கள். உலகின் மிக போர் அடிக்கும் டயட் என டோக்லு தீவு டயட்டைச் சொல்வார்கள். கோழிகளை வளர்த்தாலும் அதன் முட்டைகளை இவர்கள் ஏதோ மூடநம்பிக்கை காரணமாக உண்பதில்லை. அதன்பின் நாகரிக உலகம் இவர்களைக் கண்டுபிடித்தது. அங்கே முதலில் போய் இறங்கிய கேப்டன் ஜேம்ஸ் குக், கந்தவர்கள் போன்ற அழகுடன் ஆண்களும், பெண்களும் இருப்பதைக் கண்டார். அதன்பின் தீவு, வெள்ளையரின் காலனிமயமானது. அப்போதும் அவர்களுடைய பாரம்பரிய உணவு அதிகம் மாறவில்லை.
20-ம் நூற்றாண்டின் மத்தியில் அவர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், ‘இத்தனை உறைகொழுப்பு உண்டும் அவர்கள் யாருக்கும் சர்க்கரை, மாரடைப்பு என்றால் என்னவென்பதே தெரியவில்லை’ என்பதை அறிந்து வியப்படைந்தார்கள். இதை ‘அடால் பாரடாக்ஸ்’ (தீவு முரண்பாடு) என அழைத்தார்கள். (இதேபோல் உறைகொழுப்பை அதிகம் உண்டும் மாரடைப்பு குறைவாக இருக்கும் பிரெஞ்சு பாரடாக்ஸ், இத்தாலியன் பாரடாக்ஸ், மசாயி பாரடாக்ஸ் எல்லாம் உண்டு.) அதன்பின் அந்தத் தீவு, நியூஸிலாந்து அரசின் வசம் வந்ததும் தீவுவாசிகள் மேல் ‘இரக்கம்’ கொண்டு கப்பல் கப்பலாக அரிசி, ரொட்டி, டின்னில் அடைத்த மாமிசம், கேக், பிஸ்கட் எல்லாம் அனுப்பினார்கள். அதன்பின் டோக்லுவாசிகள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்துவிட்டது. வியாதிகளும் அதிகரித்தன. இது ஏன் நடந்தது என்றும் யாருக்கும் தெரியவில்லை. முதல்முதலாக அங்கே மருத்துவமனை கட்டும் சூழலும் ஏற்பட்டது. இதன்பின் 1966-ல் புயல் அபாயம் ஏற்பட்டதால் நாலைந்து மாதம் கப்பல்கள் எதுவும் டோக்லுவுக்கு வரவில்லை. அந்த மாதங்கள் முழுக்க வேறுவழியின்றி தீவுவாசிகள் தங்கள் பாரம்பரிய உணவுக்குத் திரும்பினார்கள். வியப்பளிக்கும் விதத்தில் அந்தக் காலகட்டத்தில் தீவு மக்களின் உடல்நலன் மிக மேம்பட்டதாக தீவின் மருத்துவர்கள் பதிவு செய்கிறார்கள். அதன்பின் புயல் நின்றதும் மீண்டும் கப்பல்கள் தீவுக்கு வந்தன; மீண்டும் வியாதிகள் சூழ்ந்தன. இத்தீவில் மட்டும்தான் இப்படியா? மற்ற பழங்குடிகளின் நிலை என்ன?
மருத்துவர் வெஸ்டன் ப்ரைஸ் 1930களில் மத்திய கனடாவின் குளிர்மிகுந்த ராக்கி மலைகளில், தான் சந்தித்த பூர்வக்குடிகளைப் பற்றி கீழ்கண்டவாறு எழுதுகிறார். ‘இவர்கள் இருக்குமிடத்துக்கு போவதே சிரமம். மலைகளில் விமானத்தை இறக்கவும் முடியாது. சாலைகளும் கிடையாது. மலையில் உறைந்து கிடந்த ஆற்றில், ஒரு படகில் கஷ்டப்பட்டுச் சென்று அவர்கள் இடத்தை அடைந்தோம். இவர்களுக்கும் கனடிய அரசுக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டு. அதன்படி வருடம் ஒருமுறை இவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை கனடிய அரசு வழங்கிவருகிறது. உணவு, உடை, பொருள் என நாகரிக மனிதனின் பொருள்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், பாதி பூர்வக் குடிகள் இந்த நஷ்ட ஈட்டுத் தொகையை ஏற்க மறுத்துவிட்டார்கள். மீதிபேர் அரசு கொடுப்பதை வாங்கிக் கொள்கிறார்கள். ஆக ஒரே இனத்தில் நாகரிக மனிதனின் உணவை உண்ணும் பூர்வக்குடிகளையும், அதைப் புறக்கணித்து தம் பாரம்பரிய உணவை உண்பவர்களையும் சந்திக்க முடிந்தது. பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழ்தான் வெப்பம் எப்போதும் என்பதால் இங்கே எந்தப் பயிர்களும் முளைப்பதில்லை. கறவை மாடுகளையும் வளர்க்க முடிவதில்லை.
ஆக இவர்கள் உண்ணக்கூடிய ஒரே உணவு, இவர்கள் வேட்டையாடும் மிருகங்கள்தான். நதி உறைந்து கிடப்பதால் மீன்களைக்கூட உண்ண முடிவதில்லை. இப்பகுதியில் கரடிகள் ஏராளம். கரடிகளை இவர்கள் வேட்டையாடிப் பிடிக்கிறார்கள். உணவில் காய்கறி இல்லாவிட்டால் வைட்டமின் சி இன்றி ஸ்கர்வி எனும் நோய் (பற்களில் துவாரம் ஏற்படுதல்) வரும். ஆனால் உணவில் தாவரங்களே இன்றி இருக்கும் இவர்களுக்கு ஏன் ஸ்கர்வி பாதிப்பு இல்லை என யோசித்து, ஸ்கர்வி எப்படி இருக்கும் என விளக்கி அங்கே இருந்த கிழவரிடம் ‘அந்த வியாதி இங்கே யாருக்காவது வந்ததுண்டா?’ எனக் கேட்டேன். அக்கிழவர் சற்று யோசித்து ‘அது எங்களுக்கு வராது, அது வெள்ளையர்களுக்கு மட்டும் வரும் வியாதி. இந்த ஊரில் இருக்கும் வெள்ளையர்களுக்கு அந்த நோய் தாக்கியுள்ளதைப் பார்த்துள்ளேன்’ என்றார். ‘அவர்களுக்கு உங்களால் உதவ முடியுமல்லவா? ஏன் உதவவில்லை?’ ‘அவர்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்கிறார்கள். எங்களுக்கு ஒன்றுமே தெரியாதாம். நாங்கள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாம். இந்த நிலையில் நாங்கள் கொடுக்கும் மருந்தை அவர்கள் எப்படிச் சாப்பிடுவார்கள்?’ அதன்பின் ஸ்கர்விக்கான மருந்தைக் காட்டுவதாகச் சொன்னார்.
கூட்டிச் சென்ற வழியில் கனடிய அரசின் உணவுப்பொருள் அங்காடி இருந்தது. ‘அது வெள்ளையனின் மளிகைக்கடை. அதை நாங்கள் சீந்துவதே கிடையாது’ எனச் சொல்லி ஒரு மானை வேட்டையாடி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். மானின் கிட்னிக்கு மேலே முழு கொழுப்பால் ஆன இரு பந்து போன்ற சதை உருண்டைகள் இருந்தன. ‘அதை வெட்டி எடுத்துச் சின்னச் சின்னத் துண்டுகளாக்கி உண்டால் ஸ்கர்வி வராது’ என்றார். பச்சை இறைச்சியில் வைட்டமின் சி இருப்பது அப்போது மருத்துவ உலகம் அறிந்திராத விஷயம். ஆனால் இதுபற்றி அறியாத அந்தப் பழங்குடிகள், அந்த இறைச்சியைக் கொண்டு ஸ்கர்விக்கு மருந்து கண்டுபிடித்திருந்தார்கள். அதன்பின் அங்கே இருந்த 87 பேரின் 2,464 பற்களை மருத்துவர் ப்ரைஸ் சோதனையிட்டார். அதில் வெறும் நான்குப் பற்களில் மட்டுமே கேவிட்டி இருந்தது. சதவிகித அளவில் இது 0.16%! அதே மலையின் கீழே இருந்த நகரான பாயின்ட் க்ரீக்கில் சோதனை செய்தபோது 25.5% மக்களுக்குப் பல் சொத்தை இருந்தது தெரியவந்தது. நகர்ப்புறத்தைச் சேர்ந்த பாயிண்ட் க்ரீக் மக்களுக்கு எல்லா வியாதிகளும் குறைவின்றி இருந்தன. அங்குப் பலருக்கும் டிபி இருந்தது, ஆத்ரைட்டிஸ் இருந்தது. ஆனால் இந்த வியாதி இருந்த ஒரு பூர்வக்குடியைக்கூட மருத்துவரால் காணமுடியவில்லை. அப்பூர்வக்குடி மக்களின் உணவாக இருந்தது, இன்றைய மருத்துவர்கள் தவிர்க்கச் சொல்லிப் பரிந்துரைக்கும் கொழுப்பு நிரம்பிய இறைச்சி மட்டுமே.
இன்றைய ஆரோக்கிய உணவுகளாக கருதப்படும் கொழுப்பு அகற்றிய பால், ஓட்மீல், சீரியல், சிறுதானியம், கைக்குத்தல் அரிசி, பருப்பு, பீன்ஸ் எதையும் அவர்கள் உண்ணவில்லை. இந்த இரு உதாரணங்கள் மட்டுமல்ல. உலகம் முழுக்க உள்ள பழங்குடிகளின் உணவில், பெரும் பான்மையான கலோரிகள் உறைகொழுப்பிலிருந்தே வருகிறது. பழங்குடி உணவு என்பது பெரும்பகுதி கொழுப்பு நிரம்பிய இறைச்சி, சில காய்கறிகள், கோடைக்காலத்தில் கிடைக்கும் வெகு அரிதான சில பழங்கள் அவ்வளவே. இந்த டயட்டைக் கேட்டால் நவீன டயட்டிசியன்களும், மருத்துவர்களும் பதறுவார்கள். ஆனால் இந்த டயட்டை உண்டு வாழும் மக்கள் எவ்வித வியாதிகளும் இன்றி முழு உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மருந்துகளும், மருத்துவர்களும், டயட்டிசியன்களும் தேவைப்படுவதில்லை. தற்காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் எனக் கூறப்படும் கார்ன்ஃபிளேக்ஸ், ஓட்மீல், கொழுப்பெடுத்த பால், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவை மனிதருக்கான உணவே அல்ல. இவற்றைப் பண்ணைகளில் இறைச்சிக்கு வளர்க்கப்படும் மிருகங்களைக் கொழுக்க வைக்கவே விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் உள்ள பண்ணைகளுக்குச் சென்று அங்கே உள்ள விவசாயிகளுடன் பேசியுள்ளேன். இறைச்சிக்கு வளர்க்கப்படும் மாடுகளையும், பன்றிகளையும் கொழுக்க வைக்க விவசாயிகள் கீழ்க்காணும் உத்திகளைக் கையாள்வார்கள். பன்றிகளுக்குக் கொழுப்பு அகற்றிய பாலைக் கொடுப்பார்கள். 1930-ம் ஆண்டில் இருந்தே ஆரகன் மாநில விவசாயக் கல்லூரி, பன்றிகளின் உடல் கொழுப்பை அதிகரிக்க, கொழுப்பு அகற்றிய பாலைக் கொடுக்கப் பரிந்துரை செய்கிறது. உணவில் அதிகக் கொழுப்பு இருந்தால் அது நம் பசியுணர்வைக் கட்டுப்படுத்தி விடும். அதனால் கொழுப்பு இல்லாத பாலைக் கொடுத்தால்தான் பன்றிகளுக்குப் பசி அதிகரிக்கும். மக்காச்சோளம் மாதிரி எடையைக் கூட்டும் தானியம் எதுவும் இல்லை. சுமார் 3.5 கிலோ மக்காச்சோளம் உண்டால் பன்றிக்கு 1 கிலோ எடை ஏறும். மக்காச்சோளத்தின் விலையும் குறைவு. எடையையும் குப் என ஏற்றும். இந்த மக்காச்சோளம் என்பது வேறு எதுவுமல்ல, கார்ன்ஃபிளேக்ஸ் என்ற பெயரில் டப்பாவில் அடைக்கப்பட்டு, நமக்குக் காலை உணவாக ஆரோக்கிய உணவு என்ற பெயரில் விற்கப்படும் உணவே. பன்றிகளை வெட்டும் முன் அவற்றுக்கு மொலாசஸ் (கரும்பு ஜூஸ்), சாக்லெட் (சாக்லெட் கம்பெனி கழிவு) எல்லாம் நிறைய கொடுப்பார்கள். வெட்டப்படும் முன்பு, அந்த நாளில் மட்டும் ஏராளமான இனிப்புகள் கொடுக்கப்படும். இதனால் பன்றிகளின் ஈரலின் அளவு சுமார் 34% அதிகமாகிறது. மேலும் இனிப்புகளைக் கொடுக்கக் கொடுக்க பன்றிகளுக்குப் பசி எடுத்து சோளத்தையும் அதிகமாகச் சாப்பிட்டு எடையை இன்னும் கூட்டிக்கொள்ளும். இறுதியாக, பன்றிகளை வெயிலே படாமல் ஒரே இடத்தில் அடைத்து வைத்து, உடல் உழைப்பும் இல்லாமல் எடையை ஏற்றுவார்கள். வைட்டமின் டி தட்டுப்பாடும் எடையை அதிகரிக்கும்.
ஆபிஸில் மணிக்கணக்கில் ஒரே நாற்காலியில் வெயில் படாமல் அமர்ந்திருக்கும் நமக்கும் இதான் நிகழ்கிறது. சிறிது சிந்திப்போம். நமக்கு உடல் எடை ஏறுவதும் இதே உணவுகளை உண்பதால்தானே? இறைச்சிக்காக கொழுக்க வைக்கப்படும் பன்றிகளுக்கும், மாடுகளுக்கும் என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அதே உணவுதானே நமக்கும் ஆரோக்கிய உணவு எனும் பெயரில் வழங்கப்படுகிறது? பிறகு எப்படி எடை குறையும்? ஆக நவீன டயட் முறைகளும், நவீன ஆரோக்கிய உணவுகளும், நாட்டுப்புற ஆரோக்கிய உணவுகளுமான கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி போன்ற எவையுமே நம்மை ஆரோக்கியமாக இருக்க வைப்பதில்லை. வியாதிகள் இன்றி வாழும் ஒரே மனிதர்கள், பழங்குடி மக்களே. இதற்குக் காரணம் அவர்கள் செய்யும் உடலுழைப்பு மட்டுமே எனக்கூற முடியாது. நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் நாள் முழுக்க கைவண்டி இழுப்பவர்களையும், வயல்வேலை செய்து வரும் ஏழை, எளிய மக்களையும்கூட நாகரிக மனிதனின் வியாதிகளான சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சைனஸ், ரத்தசோகை, மாலைக்கண் வியாதி போன்றவை தாக்குகின்றன. ஆக, இவ்வியாதிகள் எல்லாம் குணப்படுத்த முடியாத வியாதிகளோ அல்லது குணப்படுத்த முடியாமல் மருந்தால் மட்டுமே கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய வியாதிகளோ அல்ல. பலரும் ‘நாற்பதைத் தாண்டினால் எல்லாருக்கும் சுகர் வரும்’, ‘ஆறுமாதக் குழந்தைக்குக் கூட டைப் 2 டயபடிஸ் இருக்கிறது’ எனச் சொல்லி ஆறுதல் அடைவார்கள். ஆனால் டைப் 2 டயபடிஸ் வந்திருக்கும் ஆறுமாதக் குழந்தை என்ன சாப்பிடுகிறது எனப் பார்த்தால் அது புட்டிப்பாலாக இருக்கும். புட்டிப்பாலில் என்ன இருக்கிறது எனப் பார்த்தால் அதிலும் சர்க்கரையும், அரிசியும், கோதுமையும், சோயாபீன் ஆயிலும், செயற்கையான வைட்டமின்களும் இருக்கும்.
தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் பிள்ளைகளுக்கு டைப் 2 டயபடிஸ் வராது. அரிசி, கோதுமை, இட்லி, கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகளில் என்ன கெடுதல் உள்ளன? இவற்றை உண்டால் நமக்கு ஏன் டயபடிஸ் முதல் இன்னபிற வியாதிகள் வருகின்றன? இவற்றை உண்ணாமல் தவிர்க்கும் பழங்குடி மக்களை ஏன் இவ்வியாதிகள் அண்டுவதில்லை? துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டு உணவுவகைகள் பலவும் ஏராளமான சர்க்கரைச் சத்து கொண்டவை யாகவே உள்ளன. நம் காலை உணவான இட்லியை எடுத்துக்கொள்வோம். ஒரு இட்லியில் சுமார் 15 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு இட்லி சாப்பிடுவது, சுமார் நான்கு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதற்குச் சமம்.
காலையில், சாம்பாரோடு சேர்த்து ஐந்து இட்லி சாப்பிட்டால் 20 ஸ்பூன் சர்க்கரை அதாவது 75 கிராம் சர்க்கரை உண்கிறீர்கள் எனப் பொருள். ‘இட்லி சாப்பிடுவதும் சர்க்கரை சாப்பிடுவதும் ஒன்றா? இட்லி ஆரோக்கிய உணவு அல்லவா?’ – என என்மீது நீங்கள் கோபப்படலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஐந்து இட்லி சாப்பிடுவது நேரடியாக 75 கிராம் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை விட மோசமானது. அரிசி, கோதுமை ஆகிய உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. காரணம் இவற்றில் உள்ள க்ளுகோஸ். காலை: ஐந்து இட்லி மதியம்: சாதம், சாம்பார், ரசம், மாலை: வடை, காப்பி இரவு: சப்பாத்தி, குருமா இப்படி சராசரியான தமிழ்நாட்டு உணவை உண்பது – தினம் சுமார் அரைக் கிலோ முதல் முக்கால் கிலோ வெள்ளைச் சர்க்கரையை நேரடியாக உண்பதற்குச் சமம். தினம் அரைக் கிலோ வெள்ளைச் சர்க்கரையை 40, 50 வருடங்களாகத் தொடர்ந்து உண்டுவந்தால் டயபடிஸ் வருவதிலும், உடல் எடை கூடுவதிலும் வியப்பு என்ன? இவை எல்லாம் வராமல் இருந்தால்தான் ஆச்சரியம்! வெள்ளை அரிசியைத் தவிர்த்து கம்பு, கேழ்வரகில் இட்லி செய்வதாலும், இட்லியை ஐந்திலிருந்து நாலாகக் குறைப்பதாலும் சர்க்கரை மற்றும் பிற நோய்கள் வராமல் இருக்காது. பலரும் இவ்வகை மாற்றங்களை மட்டுமே செய்துகொண்டு ஆரோக்கிய உணவுகளை உண்பதாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்த உணவுகள், இந்த நோய்களைக் குணப்படுத்துவதும் இல்லை. வியாதிகளில் இருந்து முழுவிடுதலை பெறச் சிறந்த வழி, ஆதிமனிதன் உண்ட உணவுகளை உண்பதே.
நன்றி : நியாண்டர் செல்வன்
Be the first to comment on "சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?"