இதய நோய்களும் அதற்கான நவீன சிகிச்சைகளும் ஒரு பார்வை!

Heart Diseases and Modern Treatments

இதயம் காக்கும் புதிய சிகிச்சைகள்!

ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் நாள் ‘ உலக இதய விழிப்புணர்வு நாள்’  எனக் கொண்டாடி வருகிறோம். காரணம் நம் உயிருக்கு பாதுகாப்பு தருவதில் முன்னிலை வகிக்கின்ற உறுப்பு இதயம். இதை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

நவீன மருத்துவத்திலும் இதயத்தை காக்கின்ற சிகிச்சை முறைகளில் மகத்தான முன்னேற்றங்கள் ஏற்படுவதும் வழக்கமாகிவிட்டது. அப்படிப்பட்ட மருத்துவ முன்னேற்றங்களும் சிலவற்றை இப்போது பார்ப்போம். 

இதயத்தை பாதிக்கும் நோய்களில் மாரடைப்பு மிகவும் மோசமானது. உயிருக்கு ஆபத்து தருவது.  இதய தசைகளுக்கு ரத்தம் தரும் கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவது ரத்தம் உறைவது போன்ற காரணங்களால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இந்த ரத்தக் குழாய்களைச் சரிசெய்யும் வகையில் 1977-ல் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வந்தது. இந்த சிகிச்சையின் போது தொடையில் சிறிய துளை போட்டு அங்குள்ள ரத்த குழாய் வழியாக கதீட்டர் என்னும் கம்பியை உள்ளே அனுப்பி இதயத்தில் அடைப்பு உள்ள இடத்தை அடைந்ததும் அந்த கம்பி முனையில் உள்ள பலூன் அமைப்பை வீங்கச் செய்து அடைப்பை சரி செய்கிறார்கள். காலப்போக்கில் இந்த பலூன் அந்த ரத்தக் குழாயில் இருந்து நகன்றுக்கொள்ள ஆரம்பித்த காரணத்தால் அதை நகராமல் வைத்திருக்க வழி தேடினார்கள் மருத்துவர்கள். 

1988-ல் இதயத் திசுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உலோகத்தால் ஆன வலை போன்ற அமைப்பை கண்டுபிடித்தார்கள். இதற்கு ஸ்டென்ட் என்று பெயர். இதை பலூன் அமைப்புடன் ரத்தக்குழாய்கள் செலுத்தி குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அங்கு வலையமைப்பை விரித்து நிலையாக நிறுத்தி விட்டு பலூனை சுருக்கி வெளியே எடுத்து விடுகிறார்கள். இதனால் ரத்தம் செல்வதில் இருந்த தடை நீக்கப்படுகிறது. இது உலோகம் என்பதால் நீண்ட காலம் அந்த இடத்திலிருந்து நகராமல் நிலையாக இருந்து ரத்த ஓட்டம் தடைபடாமல் பாதுகாக்கிறது. இருந்தாலும் எந்த சிகிச்சை முறையிலும் ஒரு சிக்கல் தோன்றியது. அதாவது இந்த கம்பி வலை ரத்தம் உறைவதற்கு வழிவிட்டதால் இவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் பெருகின. 

இதை தவிர்க்க மருந்து தடவப்பட்ட ஸ்டென்ட் 2002இல் அறிமுகமானது. இந்த மருந்து ரத்தம் உறைவதைத் தடுக்கும் குணம் உள்ளது. ஆகவே அந்த இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. தற்போது இதை விட சிறந்ததாக ஒரு ஸ்டன்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இதய திசுவோடு திசுவாக கலந்து விடும் தன்மை உடையது. ‘பயோஅப்சார்பபல் ஸ்கேஃபோல்டு ஸ்டென்ட்’ என்று இதற்கு பெயர். 

பொதுவாக உலோக ஸ்டென்ட் ஒரு கூண்டு மாதிரி நிரந்தரமாக ரத்தக்குழாய்க்குள் இருக்கிறது. இது உலோகம் என்பதால் ரத்தக் குழாயின் தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் ரத்தம் உறைவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பல ஆண்டுகளுக்கு மாத்திரை சாப்பிட வேண்டும். இந்த புதிய ஸ்டென்ட் உயிரித் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. கரையக்கூடியது. இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் தான் இருக்கும். 24 மாதங்களில் இது ரத்த குழாய் திசுவோடு திசுவாக கலந்துவிடும். இதனால் ரத்தக் குழாயின் இயற்கையான தன்மையைப் பாதுகாக்கிறது. இயல்பான ரத்த ஓட்டம் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்திவிடலாம்.

அடுத்து இந்த ஸ்டென்ட் மிகச்சரியாக பொருத்துவதற்கும் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகியுள்ளன. பிராக்சனல் ஃபுளோ ரிசர்வ் டெக்னிக் என்பது அதில் ஒன்று. இதில் ஒரு சென்சார் உள்ள கருவியை கத்திடரின் முனையில் பொருத்தி இதய ரத்தக் குழாய்கள் அனுப்பி சில படங்களை எடுக்கிறார்கள். இதன் மூலம் அங்கு உள்ள அடைப்பின் தன்மை ரத்த அழுத்த அளவு போன்றவை நன்கு புரியும். முக்கியமாக அங்கு உள்ள அடைப்பை சரிசெய்ய தேவையா இல்லையா என்பதை இதன் மூலம் அறிய முடியும். இதன் பலனாக தேவையில்லாமல் ஸ்டன்ட் பொருத்தப் படுவதையும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப் படுவதையும் தவிர்க்கலாம்.

‘ஆப்டிகல் கோகீரன்ஸ் டோமொகிரபி’ என்பது இன்னொரு புதிய தொழில்நுட்பம். இதில் ஒரு கேமரா உள்ளது. இது அடைப்பு உள்ள ரத்தக் குழாயின் உட்பகுதியை மிகத் துல்லியமாக படம் எடுத்துக் காண்பிக்கிறது. இதன் பலனாக அடைப்பு ஏற்பட்டுள்ள ரத்த குழாயின் தன்மை மற்றும் அடைப்பின் நீளம் அகலம் உள் அளவுகளை தெரிந்துகொள்ள முடியும். இவற்றைக் கொண்டு ஸ்டென்ட்டை எந்த இடத்தில் எப்படி பொருத்த வேண்டும் என்பதை மிகச் சரியாக தெரிந்து சிகிச்சை தர முடியும். 

அடுத்து கதீட்டரின் முனையில் அல்ட்ராசவுண்ட் கிரிஸ்டலை அனுப்பி படம் எடுத்துப் பார்த்தால் அங்கு பொருத்த வேண்டிய ஸ்டன்டின் சரியான அளவும் தெரிந்துவிடும். அதன்படி மிகச் சரியான அளவில் ஸ்டை பொருத்த முடியும். இது போல் கதீட்டர் முனையில் ரோட்டாபிலேட்டர் எனும் கருவியை பொருத்தி ரத்தக்குழாய்கள் அனுப்புகிறார்கள்.  இதன் நுனியில் வைரத்தால் ஆன ஊசி உள்ளது. இது அடைப்புள்ள இடத்தில் மிக்ஸி அச்சு சுழல்கிற மாதிரி சுழன்று அங்கு இருக்கின்ற அங்கு இருக்கின்ற ரத்த உறைவுக் கட்டியை கரைத்து ரத்த குழாயை சுத்தம் செய்து மிகச் சரியாக உட்கார வழி செய்கிறது. நிலத்தை சுத்தப்படுத்தி குழி வெட்டி மரக்கன்று நடுவது மாதிரி தான் இது.

இப்படி புதிது புதிதாக அறிமுகமாகியுள்ள பல தொழில்நுட்பங்களால் மாரடைப்புக்கான சிகிச்சை மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித உயிர் காக்கப்படுகிறது. மீண்டும் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் எல்லாமே தற்போது சென்னை மதுரை கோவை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செய்யப்படுகின்றன. 

இறந்து போன இதயத்திற்கு உயிர் தரலாம்!

 உலக அளவில் மனிதர்களுக்கு ஏற்படும் இதய செயலிழப்பு இதயத் தசை அழிவு நோய் கடுமையான இதய வால்வு நோய் போன்றவற்றுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வாக இருக்கிறது.  அமெரிக்காவில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் இதய செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் இந்த நோயால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஆண்டில் சுமார் 2000 பேருக்கு மட்டுமே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 

இந்தியாவில் டெல்லி மும்பை கொல்கத்தா சென்னை கோவை போன்ற பெரு நகரங்களில் உள்ள சில மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான துடிக்கும் இதயத்தை விபத்தினாலோ பிற நோய்களினாலோ மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடம் இடம் இருந்து மட்டுமே பெற முடியும். அப்படி பெறுவதில் சட்டச் சிக்கல்களும் நடைமுறைச் சிக்கல்களும் நிறைய உள்ளன. அப்படி பெற்றாலும் அடுத்த 6 மணி நேரத்துக்குள் அந்த இதயத்தை மற்றொருவருக்கு பொருத்திவிட வேண்டும். அப்போதுதான் அது நன்கு செயல்படும். இதற்கு வாய்ப்பின்றி பலர் இறந்து போகிறார்கள். இந்த சிரமங்களுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய வழி ஒன்றை கண்டறிந்துள்ளனர். 

இறந்துபோன எலி பன்றி போன்ற விலங்குகளின் இதயத்தை எடுத்து அதற்குள் முழு அளவில் வளரும் ஆற்றல் கொண்ட செல்களை செலுத்துவதன் மூலம் இறந்துபோன அந்த இதயம் புது அவதாரம் எடுத்து மீண்டும் துடிக்க தொடங்குகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார் டோரிஸ் டெய்லர். விஞ்ஞானியான இவர் இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவர். 

‘இறந்து போன இதயத்தை கழுவுவதற்காக ஒரு சிறப்பு டிடர்ஜென்ட் தயாரித்தோம். அதை பயன்படுத்தி இறந்துபோன ஒரு பன்றியின் இதயத்தை கழுவினோம். அப்போது இதயத்தில் இருந்த செல்கள் அனைத்தும் அழிந்து போயின. ஆனால் அந்த இதயத்தின் கட்டமைப்புக் கலையாமல் இருந்தது. கூரை வீட்டில் வேய்ந்த கூரை பிடித்தால் மூங்கில் கட்டங்கள் மட்டும் இருக்கும் அல்லவா அது மாதிரி!

‘இதனைத் தொடர்ந்து அப்போது தான் பிறந்த ஒரு பன்றிக்குட்டி என் இதயத்திலிருந்து புரோஜனிட்டர்’ என்று அழைக்கப்படும் வளரும் செல்களை எடுத்து ஏற்கனவே கழுவி வைத்து இருந்த பன்றியின் இதயத்துக்குள் ஊசி மூலம் செலுத்தினோம். பிறகு அதை எங்கள் ஆராய்ச்சி கூடத்தில் கிருமிகள் தொற்றாத வளர் ஊடகமுள்ள ஒரு ஜாடியில் வைத்து பாதுகாத்தோம். அடுத்த நான்கு நாட்களில் அந்த இதயத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதிய செல்கள் வளர்ந்து இருந்தன. பிரிக்கப்பட்ட கூரையில் மீண்டும் கூரை வேய்ந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் எங்கும் நிகழ்ந்து இருந்தது. அந்த இதயத்திற்கு மீண்டும் அசலான வடிவம் கிடைத்துவிட்டது. அடுத்த ஆச்சரியம் என்னவென்றால் எட்டாம் நாளில் அந்த இதயம் துடிக்க தொடங்கிவிட்டது என்று விவரிக்கிறார் டெய்லர். 

டீசல்லுரைசீசன் என்று அழைக்கப்படும் இந்த புதிய பாணி உறுப்பு வளர்ச்சி முறை மருத்துவ முன்னேற்றத்தில் ஒரு மைல்கல். இந்த ஆராய்ச்சியை மனிதர்களிடம் செய்து பார்க்க விரும்புவதாக டோரிஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். அவ்வாறு மனிதர்களிடம் சோதிக்கும் போது நோயாளியின் இதயத்திலிருந்து ‘புரோஜனிட்டர்’ செல்களை எடுப்பது சிரமம் என்பதால் தனது ‘ஸ்டெம் செல்’களை எடுத்து பயன்படுத்த போகிறார் அவர். ‘ஸ்டெம் செல்கள்’ என்பவை உடல் உறுப்பின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை செல்கள். உடலில் இந்த செல்கள் வளர்ச்சி அடைந்து தனித்தனி உடல் உறுப்பாக மாற்றம் கொள்ளும் இயல்புடையவை. பிறந்த குழந்தையின் தொப்புள்கொடி ரத்தத்திலும் மற்றவர்களுக்கு எலும்பு மஜ்ஜையிலும் இந்த ஸ்டெம் செல்கள் காணப்படுகின்றன. அவற்றை உடலில் இருந்து வெளியில் எடுப்பது எளிது. 

‘இறந்தவர்களின் இதயத்தை கொடையாக பெற்று அதில் இந்த சோதனையை செய்ய வேண்டும். பிறகு நோயாளியின் எலும்பு மஜ்ஜையில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்து என் இதயத்தில் செலுத்த வேண்டும். அது துடிக்க தொடங்கியதும் நோயாளியின் இதயத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்திவிட்டால் அவருக்கு நோய் தீர்ந்துவிடும்’ என்று தம்முடைய அடுத்த கட்ட ஆராய்ச்சி பற்றி விளக்குகிறார். 

பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கொடையாளரின் உறுப்பும் தானம் பெறுபவரின் உறுப்பும் திசு பரிசோதனை, இரத்தப் பரிசோதனை என்று அனைத்து வகையிலும் பொருந்த வேண்டும். இல்லை என்றால்  உறுப்பு உடலில் சேராது. ‘டீசெல்லுரைசேசன்’ முறையில் உருவாக்கப்படும் உறுப்புகளில் இந்த பிரச்சனை இல்லை. காரணம் நோயாளியின் சொந்த செல்களை வைத்து இந்த உறுப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வாமைக்கு இங்கு இடமில்லை. மேலும் இறந்த மனிதர்களின் இதயம் கிடைக்காதபோது பன்றியின் இதயத்தை வளர்த்து மனிதனுக்குப் பொருத்தும் முடியும் என்கிறார் டோரிஸ் டெய்லர். 

இதயம் மட்டுமல்ல எதிர்காலத்தில் சிறுநீரகம் கல்லீரல் நுரையீரல் கணையம் என்று மனித உடல் உறுப்புகள் அனைத்துமே உயிர் உள்ளவர்களாக உருவாக்கிய நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை தருகிறார்கள் விஞ்ஞானிகள். 

இதய வால்வு நோய்க்கு இதமான சிகிச்சை

இன்று குழந்தைகளுக்கு வருகின்ற இதய பிரச்சினைகளில் வால்வு கோளாறுகள் முன்னிலை வகிக்கின்றன. மனித இதயத்தில் மொத்தம் நான்கு வால்வுகள் உள்ளன. அவற்றில் ‘அயோடிக் வால்வு’ மிக முக்கியமானது. இதயத்திலிருந்து ஆக்சிஜன் மிகுந்த சுத்த ரத்தத்தை உடலுக்கு எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்கள் மகா தமனி என்று பெயர். இது இடதுபக்க இதயத்தின் கீழ் அறையில் இருந்து கிளம்புகிறது. இந்த இடத்தில் அமைந்துள்ளது அயோடிக் வால்வு. 

வழக்கமாக இதயம் துடிக்கும் போது இதய அறைகள் சுருங்குவதும் விரிவதுமாக இருக்கும். இதய வால்வுகள் நிலைக்கதவு போல் திறப்பதும் மூடுவதும் ஆக இருக்கும். இதன் மூலம் இதயத்தில் இருந்து ரத்தம் உடலுக்குள் செல்வதும் உடலில் இருந்து இதயத்திற்கு வருவதுமாக இருக்கும். இது ஒரு சுழற்சி போல் நிகழும். இச்சுழற்சியின் ஒரு பகுதியாக இடது கீழறை சுருங்கும். அப்போது அதிலிருந்து மகாதமனிக்குள் இரத்தம் செல்வதற்கு அயோடிக் வால்வு மேல்நோக்கி திறந்து வழிவிடும். பிறகு இடது கீழறை விரியும். அப்போது அயோடிக் வால்வு கீழ்நோக்கி இறங்கி மகாதமனியை மூடிக்கொள்ளும். 

இவ்வாறு மகா தமணிக்குள் செலுத்தப்பட்ட ரத்தம் மீண்டும் இதயத்தின் கீழறைக்கை திரும்பி விடாமல் தடுப்பது இந்த வால்வு செய்யும் முக்கிய பணி. இது சரியாக வேலை செய்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தம் முறையாக கிடைக்கும். இல்லையென்றால் ரத்தம் இதயத்திலேயே தேங்கிவிடும். அப்போது இதயத்தின் இடது கீழறை வீங்கிவிடும். இதன் விளைவால் இதயம் தொடர்ந்து இயங்க முடியாமல் செயலிழந்து விடும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

குழந்தைப்பருவத்தில் ஏற்படுகின்ற ருமாட்டிக் காய்ச்சல் இதய வால்வுகளை தாக்குவதில் முன்னிலை வகிக்கிறது. சிலருக்கு பிறவியிலேயே இந்த வால்வின் அமைப்பில் குறைபாடு உண்டாகிறது. இன்னும் சில குழந்தைகளுக்கு இந்த வால்வை சுற்றி ஒரு சவ்வு வளர்ந்து இது மூடித் திறப்பதை தடுக்கிறது. வயதில் பெரியவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக இது சிதைந்து விடுகிறது. 

அயோடிக் வால்வில் சுருக்கம் உள்ள குழந்தைகளுக்கு நோயின் ஆரம்பத்தில் ஓடும்போது விளையாடும்போது மாடிப்படி ஏறும்போது இளைப்பு வரும். சாதாரண வீட்டு வேலைகள் செய்யும் போது கூட நெஞ்சு வலிக்கும். படபடப்பு வரும். தலைசுற்றல் மயக்கம் போன்ற தொல்லைகள் உண்டாகும். இதயத்தை எக்கோ பரிசோதனை செய்து பார்த்தால் வால்வில் உள்ள கோளாறு தெரியவரும். இந்த நோய்க்கு சிறந்ததொரு தீர்வாக ‘வால்வு மாற்று அறுவை சிகிச்சை’ நடைமுறையில் உள்ளது. அதாவது பழுதாகி விட்ட வால்வை அகற்றிவிட்டு செயற்கை வால்வு ஒன்றை அந்த இடத்தில் பொருத்தி விடுவது இதன் செயல்முறை.

முன்பெல்லாம் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால் மார்பு பகுதியில் நீளமாக அறுத்து மார்பு எலும்புகளை உடைத்து உள்ளே செல்ல வேண்டும். இதய தசைகளை கிழித்து வால்வை மாற்ற வேண்டும். பின்பு இதயத் தசைகளைத் தையல் போட்டு மூடவேண்டும். இதனால் வலி ஒருபுறம் வேதனைப்படுத்தும். தொண்டைக்கு கீழே தொடங்கி வயிறு வரை புண் ஆற நீண்ட நாட்களாகும்.  அந்த இடத்தில் தழும்பு ஏற்படும். அந்த தழும்பு பலருக்கு மனச்சோர்வை தரும். குறிப்பாக பெண்கள் இந்தத் தழும்பை பார்த்து மனச் சங்கடப் படுவார்கள்.

மேலும் இந்த சிகிச்சையின்போது இதயத்தை நிறுத்திவிட்டு இதயத்தின் வேலையை செயற்கையாக செய்வதற்காக ஹார்ட் லங் இயந்திரத்தை பயன்படுத்துவார்கள். இதில் ரத்த இழப்பு ஏற்படும் அபாயம் உண்டு. ஆகவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்க வேண்டும். இந்த பிரச்சனைகளை எல்லாம் எப்படி தீர்ப்பது என்று பல்வேறு ஆராய்ச்சிகளை உலகெங்கிலும் மேற்கொண்டு வந்தனர். அதில் வெற்றியும் அடைந்தனர். ‘சாப்பியன் டிரான்ஸ்கதீட்டர் அயோடிக் வால்வு’ என்னும் பெயரில் ஒரு செயற்கை வால்வு கண்டுபிடிக்கப்பட்டது. 

இது பன்றியின் இதய வால்வில் இருந்து தயாரிக்கப்படுகிறது. விரியும் தன்மை கொண்டது. ‘பலூன் கதீட்டர்’ என்னும் வளையும் தன்மையுள்ள ஒரு வயர் போன்ற குழாயில் உள்ள ஸ்டென்ட்டில் இது இணைக்கப்பட்டிருக்கும். (ஸ்டென்ட் என்பது விரியும் தன்மை கொண்ட உலோகத்தாலான ஒரு சிறிய ஸ்பிரிங் கம்பி). தொடையில் சிறு துளை போட்டு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் தொடை ரத்த குழாய் வழியாக பலூன் கதீட்டரை உடலுக்குள் செலுத்தி மிகத்துல்லியமாக மகாதமனிக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு சென்றதும் வெளியில் இருந்தபடியே மருத்துவர் பலூனை விரித்துவிடுவார். அப்போது அதனோடு இணைந்து ஸ்டென்டும் வால்வும் விரிந்து பழுதான வால்வின் மேல்  மிகச் சரியாகப் பொருந்திகொள்ளும். இதயம் துடிக்கும் போது இந்த வால்வு விலகி விடாமல் இருக்க ஸ்டென்ட்டை அந்த இடத்தில் நிலையாக பொருத்தி விடுகிறார்கள். இதனை தொடர்ந்து இயற்கையான வால்வு போல் இது செயல்பட தொடங்கும். நோயாளிக்கு மூச்சிளைப்பு நெஞ்சு வலி போன்ற தொல்லைகள் உடனடியாக விலகும். சிகிச்சை முடிந்ததும் பலூன் கதீட்டை சுருக்கி வெளியில் எடுத்து விடுகிறார்கள். சிகிச்சை பெற்ற சில நாட்களில் நோயாளி வீடு திரும்பி விடலாம். 

இந்த புதிய சிகிச்சையில் மார்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப் படுவதில்லை. மார்பு எறும்பை அகற்றத் தேவையில்லை. வலி எதுவும் இல்லை. தழும்பு ஏற்படுவது இல்லை. ரத்த இழப்பு இல்லை. இதனால் வேறு நபர்களிடம் இருந்து ரத்தம் பெற்று நோயாளிக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை. நோய்தொற்றுக்கு வாய்ப்பே இல்லை. ஆகவே இந்த சிகிச்சை இப்போது அனைவராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இப்போதைக்கு இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் இந்தியாவுக்கும் வரவிருக்கிறது.

இதயம் காக்கும் பயோ மார்க்கர்

மாரடைப்பு என்றாலே மக்கள் பயப்பட காலம் ஒன்று இருந்தது. ஆனால் மாரடைப்பு மற்ற நோய்களை போலத்தான் என்று சொல்லும் அளவுக்கு தற்போது மருத்துவம் வளர்ந்துவிட்டது. மாரடைப்பை கண்டறிவதிலும் அதற்குண்டான சிகிச்சையிலும் நவீன முறைகள் வந்து விட்டதால் அது குணம் அடையும் விகிதமும் அதிகரித்து விட்டது.

மனிதனை மரண வாசலுக்கு அழைத்துச் செல்லும் கொடிய நோய் மாரடைப்பு. இதய தசைகளுக்கு ரத்தம் வழங்கும் கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது இதயம் செயல் இழக்கத் தொடங்கும். ஒரு கட்டத்தில் அது துடிப்பதை நிறுத்தி விடும். இதுதான் மாரடைப்பு. 

மாரடைப்பில் மூன்று விதம் உண்டு. இதயத் தசைகளுக்கு ரத்தம் கிடைப்பது குறைய தொடங்கி விட்டாலே இதயமதை காட்டிக்கொடுத்துவிடும். உதாரணமாக மாடிப் படிகளில் ஏறும்போதும் வேகமாக நடக்கும்போதும் இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கும்.  அப்போது ரத்தமும் ஆக்சிஜனும் தேவையான அளவு கிடைப்பதில்லை. எனவே இதயம் துடிக்க சிரமப்படும். இதன் விளைவால் நடு நெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவது போல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துவிட்டால் நெஞ்சு வலி குறைந்துவிடும். இந்த அலார அறிகுறிகளை கவனித்து நாம் சிகிச்சை பெற்றுக்கொண்டால் மீண்டும் மாரடைப்பு வராது.  இதற்கு ‘இஸ்கீமியா’ என்று பெயர். 

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கடுமையாக வலிக்கும். இந்த வலி கழுத்து தாடை இடது புஜம் கை விரல்களுக்கு பரவும். உடல் அதிகமாக வியர்த்து ஜில் என்று ஆகி விடும். ஓய்வு எடுத்தாலும் நெஞ்சு வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மயக்கம் வரும். மரணத்தின் அறிகுறிகள் எட்டிப் பார்க்கும். இதுதான் உண்மையான மாரடைப்பு. அதாவது இன்பார்க்சன். இதனால் பாதிக்கப்பட்டவரை எவ்வளவு சீக்கிரம் சிகிச்சைக்கு கொண்டு செல்கிறோமோ அந்த அளவுக்கு மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி விடலாம். அடைத்துக்கொண்ட கரோனரி ரத்தக் குழாய்களில் பலூன் ஸ்டென்ட் வைத்து அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து இதயத் தசைகளுக்கு தங்கு தடையின்றி செல்ல வழி செய்யப்படுவதால் மரணம் தவிர்க்கப்படுகிறது. 

இன்னும் சிலருக்கு மோசமான மாரடைப்பு வரும். ‘நெஞ்சைப் பிடிச்சுட்டு வலிக்குதுன்னு சொன்னார். அடுத்த நிமிஷமே மயங்கி விழுந்துட்டார். பேச்சும் மூச்சும் நின்னுபோச்சி!’ மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களின் வீடுகளில் இப்படி சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். அக்யூட் ஹார்ட் அட்டாக் எனும் உடனடி மாரடைப்பு இது. சிகிச்சை பெறுவதற்கு நேரம் தராது. நெஞ்சுவலி வந்ததுமே இறப்பும் வந்துவிடும். கார்டியாக் அரஸ்ட் என்று இதனை கூறுகிறார்கள். 

தற்போது மாறிவிட்ட வாழ்க்கை முறைகளால் இம்மாதிரியான கொடுமையான மாரடைப்பு வருவது இந்தியாவில் அதிகரித்து வருகிறது.  அதிலும் டீன் ஏஜில் உள்ளவர்களை இது தாக்குகிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

இந்த மாரடைப்பு யாருக்கு எல்லாம் உறுதியாக வரும் என்று முன்னதாக தெரிந்து கொள்ள முடிந்தால் டீனேஜ் மருந்துகளை எளிதில் தடுத்து விடலாம் என்று இதய நோய் மருத்துவர்கள் நீண்ட காலமாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதன் பலனால் சில ஆண்டுகளுக்கு முன்பு 320 சிடி ஸ்கேன் அறிமுகமானது. இந்த பரிசோதனையில் நோயாளியின் இதயத்தை ஸ்கேன் எடுத்து பார்த்து கரோனரி ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து இருப்பது தெரிந்தால் அவருக்கு மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது என்று சொல்வார்கள். இதில் உள்ள சிறு குறை என்னவென்றால் ரத்தக் குழாய்களில் அடைப்பு வந்த பிறகுதான் நோயாளிகளை எச்சரிக்க முடியும்.

அடைப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே மாரடைப்பை தெரிந்து கொள்ள ஒரு வழி கிடைக்காதா என்று ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். அமெரிக்காவில் கிளீவ்லேண்ட் கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் டி எம் ஏ ஓ பயோமார்க்கர் என்னும் புதிய ரத்த பரிசோதனையை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் என்ன விசேஷம்? 

உடலில் குறிப்பிட்ட நோய் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் உடலில் உயிர் பொருளுக்கு பயோமார்க்கர் என்று பெயர். இது புரதம் கொழுப்பு மரபணு என்சைம் என்று எதுவாகவும் இருக்கலாம்.  களவுபோன வீட்டில் கை ரேகைகளைப் பார்த்து திருடனை கண்டுபிடிக்கிற மாதிரி தான் இது. ஒருவர் உடலில் குறிப்பிட்ட பயோமார்க்கர் காணப்பட்டால் அவருக்கு அந்த பயோ மார்க்கருரிய நோய் உள்ளது என்று முடிவு செய்யப்படும். இதன் மூலம் மிக ஆரம்ப கட்டத்தில் உள்ள நோய்களை கண்டுபிடித்து தடுத்து விடலாம். 

டிரைம்திலமின் என் ஆக்சைடு என்பதன் சுருக்கம் தான் டி எம் ஏ ஓ. இது உணவிலுள்ள கார்னைட்டின் கொலின்ஸ் ஆகிய சத்துக்களை நம் குடல் பாக்டீரியாக்கள் சிதைக்கும்போது உருவாகின்ற ஒரு நச்சுப் பொருள். இது ரத்தத்தில் இருந்தால் மாரடைப்பு வருவது உறுதி. காரணம் இது கரோனரி ரத்தக் குழாய்களை சீக்கிரமே அரித்துப் புண்ணாக்கிவிடும். அங்கு கொழுப்பு படிவதற்கு வழி அமைத்து இளம் வயதிலேயே மாரடைப்புக்கு கம்பளம் விரிக்கும். முன்பு சுண்டெலிகள் இடமும் குரங்குகள் இடமும் இப்போது மனிதர்களிடமும் செய்யப்பட்ட சோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே டிஎம்ஏஓ பயோமார்க்கர் மூலம் கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு வரும் முன்னரே ஒருவருக்கு மாரடைப்பு வருமா வராதா என்று தெரிந்து கொள்ள முடியும். ஆண்டுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். 

இது எல்லோருக்கும் பயன் தரக்கூடிய பரிசோதனை தான் என்றாலும் பரம்பரையாக மாரடைப்பு நோய் உள்ளவர்கள் புகை பிடிக்கும் பழக்கம் சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் அதிகமான அழுத்தம் உடல்பருமன் ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு மாரடைப்பு வரும் ஆபத்து உள்ளதா என்பதை முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம். எச்சரிக்கையாக இருந்து ஆபத்தை தவிர்த்துவிடலாம்.

Related Articles

தமிழ் நாட்டின் முதல் பெண் டைரக்டர் டி. ப... ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் 1911 ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். சொந்த ஊர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு. தந்தை பஞ்சாபகேச அய்யர், கிராம கணக்க...
நான்கு மாதங்கள் கோமாவில் இருந்த பெண், பா... இசை ஒரு சிகிச்சை சக்தி என்பதை வாழ்வின் பல தருணங்களில் நாம் உணர்ந்தே வந்திருப்போம். நம்மை அழவைப்பது முதல் தூங்கவைப்பது வரை இசை நம்மை தன்வயப்படுத்தி இரு...
இதற்கெல்லாமா நம்ம அரசாங்கம் செலவு செய்யு... ஒரு அரசாங்கம் செயல்படுவதற்கு அடிப்படை மக்களின் வரிப்பணம். அனைத்து வகைகளிலும் மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணம் முறையாகத் தான் செலவு செய்யப்படுகிறதா...
மார்ச் 8 – 5 years of நிமிர்ந்து ந... * "சிலையும் நீயே சிற்பியும் நீயே, உன்னை நீ சரிசெய்துகொள்... உலகம் தானாக சரியாகி விடும்... " * " ஒழுக்கம், உண்மை, நேர்மை, பெரியவங்கள மதிக்...

Be the first to comment on "இதய நோய்களும் அதற்கான நவீன சிகிச்சைகளும் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*