சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதைகள் சுருக்கம் ஒரு பார்வை!

A view on Srirangathu Devathaigalbook by Sujatha

1. கடவுளுக்கு கடிதம்

ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் கதை இது. ஸ்ரீரங்கத்தில் டீக்கடை வைத்திருப்பவன் ரங்கு. அவனுடைய கடைக்கு அடிக்கடி வருபவன் கோவிந்து. அவனுக்கு அப்பா இல்லை. அம்மாவும் ஒரு தம்பியும் மட்டுமே. நல்ல வசதியான வீட்டுப்பிள்ளை என்றாலும் கொஞ்சம் மனப்பிறழ்வு கொண்டவன் கோவிந்து. சட்டை அணியாமல் பூநூல் இல்லாத வெற்று உடம்புடன் எங்கயாவது வெறித்துப் பார்த்தபடியே இருந்துவிட்டு திடீரென  காகிதத்தை எடுத்து அவன் கடவுளுக்கு கடிதம் எழுதுவதை சுற்றியிருப்பவர்கள் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் பார்ப்பார்கள். 

அனுப்புநர் முகவரி இல்லாமல் பெறுநர் முகவரியில் கடவுள் பெயரையும் வைகுண்டா என்ற அட்ரசையும் மட்டும் எழுதி அனுப்பும் அவனுடைய கடிதங்கள் மதிப்பிழந்து பலமுறை திரும்ப வந்துள்ளன. இருந்தாலும் கடிதம் எழுதுவதை அவன் நிறுத்தவில்லை. அவனுடைய இந்த செயல் அம்மாவுக்கு வருத்தமளிக்க தம்பியோ அண்ணனை கிறுக்கு என்று அழைக்கிறான். 

கோவிந்துவை கீழ்ப்பாக்கம் அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கிறார்கள். மகனுக்கு கரன்ட் ஷாக் கொடுப்பதை பார்க்க முடியாத அம்மா அவனை வீட்டுக்கு அழைத்து வந்து பார்த்துக்கொள்கிறார். மகன் குணம் பெற வேண்டி ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு தினமும் நெய் விளக்கு ஏற்றுகிறாள் கோவிந்துவின் தாய். சில நாட்களில் கோவிந்துவின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட அவன் புது சட்டைகள் அணிந்துகொள்கிறான். கடவுளுக்கு கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு செய்திதாள்கள் படிக்க ஆரம்பிக்கிறான். இதை கவனித்த டீக்கடை ரங்கு கோவிந்து சரியாகிவிட்டான் என்று சந்தோசப்பட்டு அவன் கோவிந்துவின் அம்மாவுடன் சேர்ந்து கோவிந்துவுக்கு பெண் பார்க்க ஆரம்பிக்கிறான். அதே ஊரில் உள்ள தமிழ் வாத்தியாரின் மகளை கட்டி வைக்க முடிவெடுக்கிறார்கள். வாத்தியாரின் மகளும் சம்மதம் தெரிவிக்க கோவிந்துவின் அம்மாவும் ரங்குவும் சேர்ந்து வீட்டுக்கு வரப்போற பெண்ணுக்கு மோதிரம் புதுப்புடவை எல்லாம் எடுத்து தருகிறார்கள். 

கோவிந்துவின் அம்மா கொஞ்ச நாட்கள் நிம்மதியாய் இருக்க திடீரென ஒருநாள் கோவிந்து சட்டை எதுவும் போடாமல் பழையபடி கடவுளுக்கு கடிதம் எழுத ஆரம்பிக்கிறான். அதைக் கண்டு அவனுடைய தாய் வருந்துகிறாள். ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் என்றெண்ணி தன் மகனுக்கு உங்கள் மகளை கட்டித்தர வேண்டாம் உங்கள் மகளை வேற நல்ல இடத்தில் கட்டிக்கொடுங்கள் நான் கொடுத்த பொருட்களை உங்கள் மகளே வைத்துக்கொள்ளட்டும் என்கிறாள் கோவிந்துவின் தாய். 

வருடங்கள் பல கடக்கிறது. கோவிந்து எப்போதும் போல சட்டை போடாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு நேர் எதிர் திசையில் உள்ள திண்ணையில் அவனை கிறுக்கு என்று திட்டிய அவனுடைய தம்பி சட்டை போடாமல் கடவுளுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தான். முதலில் ஒரு நெய்விளக்கு மட்டும் ஏற்றிய அவனுடைய அம்மா இப்போது சக்கரதாழ்வாருக்கு இரண்டு மகன்களும் குணமாக வேண்டி இரண்டு நெய் விளக்குகள் ஏற்றி வருகிறார். 

2. ராவிரா

கடவுளுக்கு கடிதம் சிறுகதையில் வந்த அதே ரங்கு கடையில் உள்ள இன்னொரு மனிதரின் கதை இது. ரா. விஜயராகவனான ராவிரா திருச்சி கல்லூரியில் கெமிஸ்ட்ரி வாத்தியார். தமிழும் படித்தவர். இலக்கிய ஆர்வம் கொண்ட ராகவனை சுற்றி எந்நேரமும் இளைஞர் படை இருக்கும். ரங்கு கடை புகையிலை போடும் பழக்கம் அவருக்குண்டு. அவரை அவருடைய மனைவிக்குப் பிடிக்காது. 

தாஸ் என்ற பணக்காரனுடன் தன் மனைவி கள்ளக்காதல் செய்கிறாள் என்பது ராகவனுக்குத் தெரிந்தது தான். தாஸ் மீது கோபம் கொண்ட ராவிரா ஒருநாள் நிலா வெளிச்சத்தில் மெர்குரி குளோரைடு சாப்பிட்டா நொடியில உயிர் போயிடும் என்று சொல்கிறார். தாஸ் சாக வேண்டும் என்று ராவிரா நினைப்பார் போல என்று சுற்றியிருப்பவர்கள் நினைப்பார்கள். 

ஒரு நாள் இரவு ரங்குவின் கடை மூடும் நேரத்தில் ராவிரா அங்கு வருகிறார். எனக்கு வீட்டுக்குப் போக பிடிக்கல என்று கடையிலயே படுத்துக்கொள்ள அனுமதி கேட்கிறார். அடுத்த சில நாட்களில் ராவிரா காணாமல் போகிறார். தாஸ் அவரை பற்றி ரங்குவிடம் கேட்கிறான். திடீரென ஒருநாள் ராவிரா வாயில் நுரை தள்ள பிணமாக தன் வீட்டு நடுக்கூடத்தில் படுத்துக்கிடக்கிறார். 

ராவிரா பூரத்தை (மெர்க்குரி குளோரைடு) சாப்பிட்டு விட்டாராம்… என்று கதை முடிகிறது! முதல் கதையில் வந்த கோவிந்து இந்தக் கதையின் ஓரிடத்தில் வந்து செல்கிறான். அதே போல இந்தக் கதையின் ஓரிடத்தில் வந்த குண்டு ரமணி தான் அடுத்த சிறுகதையின் மைய கதாபாத்திரம். 

3. குண்டு ரமணி

கோபால் தாஸ் வீட்டு திண்ணை குண்டு ரமணி ஒரு மனநலம் பிறழ்ந்தவள். 30 – 50 வயதுடையவள்! ஒற்றைக்கண் மொட்டைத்தலைக்காரி! அழுக்குப் பிடித்தவள்! ஜாக்கெட் அணியாத தனிக்கட்டை! 

ஊரில் உள்ள அனைவர் வீட்டு திண்ணையிலும் வந்து அமர்ந்துகொண்டு அதிகாரமாக சோறு வாங்கித் தின்பவள். அப்படி கட்டுப்பாடு இல்லாமல் சோறு வாங்கித் தின்று ஊளைச்சதை பெருத்து குண்டு ரமணி என பெயர் பெற்றாள். என் வீட்டுத் திண்ணையில் உட்காராதே என்று விரட்டினாலும் சோறு சாப்பிடாமல் போக மாட்டாள். அப்படி ஒருமுறை அய்யர் ஒருவர் அவளுடைய தலையில் கிரிக்கெட் மட்டையால் அடித்தார். தொடர்ந்து அடிக்க பருப்பு மத்தை எடுக்க அதை பிடுங்கி எறிந்த குண்டு ரமணி அய்யரை புரட்டி எடுத்துவிட்டாள். அடுத்த இரண்டு நாள்கள் அய்யர் கடும் காய்ச்சலால் படுக்கையிலயே வீழ்ந்து கிடந்தார். 

ஏன் குண்டு ரமணி இப்படி ஆனாள் என்று விசாரித்த பிறகு அவள் கணவனுடன் நன்றாக வாழ்ந்தவள் கணவன் இறந்த பிறகு சொந்தபந்தம் சொத்து எழுதி வாங்கி ஏமாற்ற குழந்தையை கொஞ்சி விளையாடும்போது குழந்தை கீழே விழுந்து மண்டை சிதறி இறந்ததால் இவள் இப்படி ஆனாள் என தெரிய வருகிறது. அது நிஜமா என தெரிந்துகொள்ளும் வகையில் கொஞ்சம் சோறு கொடுத்து அவளிடம் அவளுடைய குழந்தையை பற்றி கேட்க அவள் சிரித்துக்கொண்டே செத்துப் போச்சு என்கிறாள். 

குழந்தை நியாபகம் வந்ததும் குண்டு ரமணி தனது கற்பனைக் குழந்தையை முதுகில் சாய்த்து ஆடிக்கொண்டே குழந்தையை கொஞ்சி பாடி கண்களில் கண்ணாடி போல ஜலம் திரையிடச் சிரித்தாள் என முடிகிறது இந்தக் கதை. 

4. வி.ஜி.ஆர்

விஜிஆர் என்பவர் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர். வயது 104 ஆகிறது. கண்பார்வை மங்கல், காது கேளாமை, படுத்த படுக்கை என்று வயது மூப்புக்கே உண்டான இயற்கைத் தன்மையுடன் இருந்தார். 

என்னுடைய சாவு என்னுடைய சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திலயே இருக்க வேண்டும் என்பது அவருடைய பிடிவாதம். அருகில் வருபவரை நிழல் வைத்து கண்டுபிடித்து இன்னார் மகன் என விவரம் தெரிந்து “உங்கப்பன் கணக்குல…” என்று பேசத் தொடங்கிவிடுவார். 

வேட்டியை கூட சுயமாக கட்ட முடியாமல் அவசியமான பாத்திரங்களை படுக்கையருகே வைத்துக்கொண்ட போது அவருடைய மகன் வந்து அப்பாவின் இறப்பிற்காக ஒருவாரம் இருந்து காத்திருந்து அப்பா இறக்காத சோகத்தில் சலிப்புடன் திரும்புகிறார். 

விஜிஆர் எப்போதும் தன்னருகே ஒரு கணித புத்தகம் வைத்திருப்பார். ஒருநாள் திடீரென அவர் இறந்துபோக அவர் பணியாற்றிய பள்ளியில் அவர் இறந்த தினத்தில் துக்க தினமாக விடுமுறை அளிக்கிறார்கள். எப்போதும் அவர் கையருகே இருக்கும் அந்த கணித புத்தகத்தை விரித்து பார்க்கிறார்கள், நடுங்கிய கைகளுடன் அவர் எழுதிய “டோனேட்டட் டூ தி ஸ்ரீரங்கம் ஹைஸ்கூல் லைப்ரரி” என்ற வாசகம் தென்படுகிறது என்ற வரியுடன் முடிகிறது இந்தக் கதை. 

5. திண்ணா

திருநாராயணா என்பதே திண்ணாவின் விளக்கம். வறுமை காரணமாக அவனை குசி தென்கலை (தென்கலை பிரிவில் உள்ள வசதியில்லா பிள்ளைகளை படிக்க வைக்கும் வேத பாடசாலை) பாடசாலையில் இளம்பாலகனாக இருக்கும்போது சேர்க்கப்படுகிறான். 

அந்த பாடசாலையில் உள்ள பாட்டிக்கு திண்ணாவை ரொம்ப பிடித்துவிட்டது. ஈரானிய சிவப்புடன் குடுமித் தலை, நாமம், பூணூல் என்று பக்திமயத்துடன் பாடசாலையில் பாடம் படிக்கிறான். அவன் வேதம் பாடினால் கடவுளே வந்து பாடுவது போல் இருக்கும். 

இளம் வயதிலயே  பெரிய சாமியார் போல உபநியாசம் செய்ய ஆரம்பித்தான். புரியவில்லை என்றாலும் அவனுடைய பேச்சு பலரை கவர்ந்தது. குறிப்பாக அவனுடைய பேச்சுக்கு பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூடியிருக்கும் அனைவருக்கும் “இந்த இளம் வயசுல பசங்க சினிமா, கிரிக்கெட், சைட் என்று இருக்க இவன் மட்டும் எப்படி பக்திமயமா இருக்கான்” என்ற வியப்பு. பெரியவன் ஆனதும் உபநியாசம் பண்ணுவதில் பெரிய மனிதனாக உயர்ந்து நிற்பான் என ஊரே எதிர்பார்க்கிறது.

ஆனால் அவனோ ஜீன்ஸ், கிராப் என்று வேதங்களை மறந்து ஆளே மாறிப் போய் சினிமா புரொடக்சனில் வேலை செய்துகொண்டிருந்தான். அவனுடைய இந்த மாற்றத்தை நான் ‘வீழ்ச்சி’ என குறிப்பிடமாட்டேன் என கதையை முடிக்கிறார் சுஜாதா. 

6. சின்ன ‘ரா’

பாலாமணி என்ற பெண்ணின் அப்பா ஏழு பெண் குழந்தைகள் பெற்றவன். இருந்தாலும் குடி, சூதாட்டம், பெண்டாட்டியை அடிப்பது என்று தருதலையாக இருந்தான். 

இந்த சூழலில் வளர்ந்த பாலாமணி என்ற பெண் மீது இரக்கப்பட்டு அவளை தேற்றிவிடும் விதமாக அவளுக்கு இலவச டியூசன் எடுக்கிறார் ஜேவி வாத்தியார். அந்த ஒரு பெண்ணுக்கு மட்டும் அவர் டியூசன் எடுப்பதை கொச்சைப் படுத்தும் விதத்தில் பாலாமணியையும் ஆசிரியரையும் தவறாக இணைத்து யாரோ ஒருவர் சுவரொன்றில் எழுதி வைக்கிறார்கள். இதை ஊரே பார்த்துவிடுகிறது. பாலாமணிக்கு டியூசன் எடுக்கும் ஆசிரியரும் இதை கவனிக்கிறார். யாரோ கொச்சையாக எழுதிய அந்த வாக்கியத்தில் றா என்றெழுதுவதற்குப் பதில் ரா என எழுதியிருக்கிறது. 

இது கண்டிப்பாக தன்னுடைய பள்ளிக்கூட ஆசிரிய விரோதியான சங்கர குருப்புவின் வேலையாகத் தான் இருக்கும் என யூகிக்கிறார் ஆசிரியர். இதை தொடர்ந்து பாலாமணியைப் பார்த்து நம்பிக்கை கூற அவளுடைய வீட்டுக்கு ஆசிரியர் செல்ல அங்கு பாலாமணியின் அப்பா அந்தப் பெண்ணை சாகச் சொல்லி திட்டுகிறான். வாத்தியார் நீங்க எப்படி வேணாலும் நடந்துக்குலாம் இவளுக்கு எங்க போச்சு அறிவு என்று தன் மகளை கொச்சையாக திட்டுவது ஆசிரியருக்கு எரிச்சலை தந்தது. 

சுவரில் எழுதியிருந்த எதுவுமே உண்மையில்லை பெண்ணுடைய அப்பாவாகிய நீங்களே இதை பெரிதுபடுத்தாதீர்கள் இதை எழுதிய சங்கர குருப்புவை இழுத்து மன்னிப்பு கேட்க வைக்கிறேன் என்று சொல்லி செல்கிறார் ஆசிரியர்.

அடுத்தநாள் பாலாமணியின் வீட்டில் கூட்டம். நடுக்கூடத்தில் பாலாமணி படுத்துக்கிடக்க அவள் இறந்துவிட்டாள் என எண்ணி எல்லோரும் ஒப்பாரி வைக்கிறார்கள். ஆசிரியர் உள்ளே நுழைந்து பாலாமணி கிணற்றில் விழுந்து சாகத் துணிந்த அளவுக்கு தற்கொலை உணர்வை தூண்டிய அவளுடைய அப்பாவை திட்டுகிறார். பாலாமணியின் உடலில் உயிர் இருப்பதை உணர்ந்து டாக்டரை வரவழைத்து அவளை காப்பாற்ற அவளோ மயக்கம் தெளிந்து எழுந்து என் வாழ்க்கையே போச்சு என்று கதறுகிறாள். உனக்கு நான் வாழ்க்கை தரேன் என்று பாலாமணியை திருமணம் செய்துகொள்கிறார் ஆசிரியர். திருமணத்துக்கு வந்த சங்கர குருப்பு உங்க மேல எனக்கு கோவம் தான் ஆனா சொவத்துல நான் சத்தியமா எழுதல என்று சொல்ல ஆசிரியர் அதை பெரிதுபடுத்தாமல் அவருடன் சகஜமாகப் பேசுகிறார். 

வருடங்கள் கடக்கிறது. வெளியூரில் இருக்கும் தன் கணவனான ஆசிரியருக்கு பாலாமணி கடிதம் எழுதி அனுப்புகிறாள். அந்த கடிதத்தில் ஒரு வார்த்தையில் ‘றா’ என்ற எழுத்துப் பதிலாக ‘ரா’ என்று இருக்கிறது. இதைப் பார்த்த ஆசிரியர் அதிர்ந்து சுவரில் கொச்சையாக எழுதியது பாலாமணியாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். அடுத்த நொடியே “சே இருக்காது” என்று ஆசிரியர் சொல்ல கதை முடிகிறது. 

7. பெண் வேஷம்

எந்த வேலைக்கும் போகாத நிறைய சொத்துக்காரன் வரதன். அவனோடு சேராத என்று தாய்மார்கள் கண்டித்து வைப்பதாலயே அவனை அந்த ஊர் சிறுவர்களுக்கு அதிகம் பிடிக்கும். அப்படித்தான் சுஜாதாவுக்கும் பாட்டியின் அதட்டலை தாண்டி வரதனை பிடிக்கும். 

வரதன் நல்ல அறிவாளி. அவனுடைய கதை கூட எதோ பத்திரிக்கையில் வெளியாகி இருக்கிறது. கலை ஆர்வம் மிக்க வரதன் வீரசிம்மன் என்ற நாடகம் போட திட்டம் போடுகிறான். நாடகத்துக்கான டிக்கெட் விற்பனை நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக டிக்கெட் வாங்கியவருக்கு குலுக்கல் முறையில் பசு மாடு பரிசாகத் தரப்படும் என்ற அறிவிப்பால் டிக்கெட் விற்பனை அமோகமாகப் போகிறது. 

ஜிவி என்கிற வரதனின் வீர சிம்மன் நாடகத்தில் வீரசிம்மன் என்ற ராஜாவுக்கு மயிலிறகால் காற்று வீசும் தோழி கதாபாத்திரத்தை சுஜாதா செய்ய வேண்டும் என்பது வரதனின் ஆசை. சுஜாதாவுக்கு மேடை என்றாலே பயம், அதிலும் பெண் வேஷம் என்பதால் முடியவே முடியாது என்கிறார். நீ மட்டும் இத செஞ்சினா உனக்கு ஆங்கிலேயர்களுடைய செக்ஸ் புகைப்படங்களை காட்டுவேன் என்கிறான் வரதன். செக்ஸ் புகைப்படத்துக்கு ஆசைப்பட்டு சுஜாதாவும் சரியென ஒப்புக் கொள்கிறார்.

நாடக தினம் வந்தது. ஒரு பள்ளியில் நாடகம் நடக்க இருக்கிறது. சுஜாதா அழுதுகொண்டே பெண் வேஷத்தை ஏற்றுக்கொள்கிறார். மேடையில் சென்று தன்னுடைய வேலையான காற்று வீசும் பணியை கூச்சத்துடன் தொடங்கி பிறகு தைரியமாக செய்கிறார். அப்போது மேடைக்கு கீழே இருக்கும் ஒருவர் பெண் வேஷத்தில் இருக்கும் சுஜாதாவை பார்த்து கண்ணடிக்கிறார். 

நாடகத்தில் சின்ன சலசலப்பு. டிக்கெட்டுகளை குலுக்கி பசுமாட்டை பரிசாக தரச்சொல்லி அந்த பெருங்கூட்டம் கத்தியது. வரதனும் ஒரு சீட்டை எடுத்து நம்பரை அறிவித்து ஒருவருக்கு பசுமாட்டை பரிசாகத் தருகிறான். பிறகு தான் தெரிகிறது அந்த பசுமாடும் பரிசு வாங்கிய ஆளும் ஏற்கனவே செட்டப் செய்யப்பட்டவர்கள் என்று. கூட்டம் ஆவேசத்தில் கத்த, வரதன் சுஜாதா உட்பட கலைஞர்கள் அனைவரையும் தப்பியோட சொல்கிறார். 

சுஜாதா பெண் வேசத்தோடு ஓட குறுக்கே அவரை பார்த்து கண்ணடித்த நபர் வர, யோவ் நா ஆம்பளையா என்று தப்பியோடுகிறார் சுஜாதா. அன்று போன வரதன் எந்த ஊரில் இருக்கிறான் என்ன ஆனான் என்பதே தெரியாத சுஜாதாவின் ஆங்கிலேயர்களின் செக்ஸ் புகைப்படங்களை ஆசை நிறைவேறாமலே போனது.

8. ஏறக்குறைய ஜீனியஸ்

சுஜாதாவின் தெருவில் இருந்த பாப்பா என்கிற அம்மணி என்ற பெண்மணியை திருமணம் செய்துகொண்டு காரில் வலம் வந்தார் மாப்பிள்ளை ரங்கநாத். கார் டகடக என்று சத்தம் எழுப்பும் அளவிற்கு டப்பா காராக இருந்தது. இருந்தும் தன்னுடைய விஞ்ஞான மூளையை பயன்படுத்தி உதிரி பாகங்களை வாங்கி கோர்த்து காரை ஓட்டி வந்தார். மாப்பிள்ளை துரைசாமியை செல்வாக்கானா மாப்பிளை போல என நினைத்த சுஜாதாவின் அம்மா சுஜாதாவுக்கு வேலை போட்டு தருவதாக கேட்கிறாள். மாப்பிள்ளை ரங்கநாத்தும் ஏற்றுக்கொள்கிறார். 

ரங்கநாத் அண்ட் கோ என்ற பெயரில் மாப்பிள்ளை தொடங்கிய கம்பெனியில் சுஜாதா சேல்ஸ் எக்ஸ்யூட்டிவாக சேர்கிறார். மாப்பிள்ளை வீட்டு முன்பு “ரங்கநாதன் & கோ ” என்று பெயரிட்ட பலகை தொங்குகிறது. அந்தப் பலகையை பார்த்தபடி மாப்பிள்ளை சொன்னதன்பேரில் கடைகளில் உள்ள அத்தனை மெழுகுவர்த்தியையும் சுஜாதா வாங்கிச் சென்று தலைவலி தயாரிக்கிறார் மாப்பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு சேல்ஸ் டிரிப்புக்கு சுஜாதா செல்ல எதுவும் விற்பனை ஆகவில்லை. அதனால் சுஜாதாவுக்கு  தலைவலி உண்டாக தைலத்தை அவர் தடவிக்கொள்ள நெற்றியில் எரிச்சல் ஏற்படுகிறது. இது முயற்சி தோல்வியில் முடிய தன்னுடைய கண்டுபிடிப்புகளை அதற்கு எடுத்த பேட்டன்ட் முயற்சிகளை அந்த கண்டுபிடிப்புகளுக்கான வெளிநாட்டு விஞ்ஞானிகளின் பாராட்டு கடிதங்கள் பற்றியெல்லாம் சுஜாதாவிடம் பேசுகிறார் மாப்பிள்ளை. 

அடுத்ததாக சாக்பீஸ்களை எல்லாம் நுணிக்கி அதனுடன் சிவப்பு சாந்து சேர்த்து பல்பொடி தயாரித்தார். அது உதட்டில் எரிச்சலை ஏற்படுத்த அதுவும் தோல்வியில் முடிகிறது. இந்நிலையில் சுஜாதாவிற்கு முன்பு ஒருமுறை இண்டர்வியூ போய் வந்த அரசு உத்தியோகம் கிடைக்கிறது. மாப்பிள்ளையோ அந்த வேலை வேண்டாம் சம்பளம் கம்மி நீ என்னுடனே இருந்துக்கோ நான் அதிக சம்பளம் தரேன் என்று சுஜாதாவிடம் சொல்கிறார் மாப்பிள்ளை. 

சுஜாதா மாப்பிள்ளையின் பேச்சை கேட்காமல் அரசு உத்தியோகத்தில் சேர்கிறார். பல வருடங்கள் கழித்து சுஜாதா ஊருக்கு திரும்பி வர ரங்கநாதன் அண்ட் கோ என்ற போர்டு புயல்காற்றில் சிதைந்துபோயிருக்க மாப்பிள்ளை தொழில்கள் தொடங்க வாங்கிய கடனால் நஷ்டம் ஏற்பட வீட்டை விற்க வேண்டிய சூழல். வீட்டிற்குள் உள்ள மாப்பிள்ளையின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் எடைக்குப் போட சுஜாதா அந்தப் பொருட்களை எடுத்துப் பார்க்கிறார். முதலில் நன்கு செயல்பட்ட அந்தக் கடிதம் பிறகு பழுதாகி சுக்குநூறாக விழுகிறது. மாப்பிள்ளை ஆல்மோஸ்ட் ஜீனியஸ் என்று முடிகிறது கதை.

9. பேப்பரில் பேர்

வேலைக்கு அப்ளை செய்துவிட்டு சில மாதங்கள் சுஜாதா சும்மா இருந்த நாள்கள் அவை. எப்போதும் போல ரங்கு கடையில் அந்தத் தெரு இளைஞர்கள் கூட அம்பி வருகிறான். தஞ்சாவூர் டீமுடன் நிஜ கிரிக்கெட் (நிஜ கிரிக்கெட் பந்தில் மேட்ச்) மேட்ச் அரேன்ஜ் பண்ணியிருப்பதாகவும் மேட்சில் சுஜாதாவை சேர்த்துக் கொண்டதாகவும் கேவி என்ற பிளேயர் டீமில் இருக்கிறான் என்றும் கூறுகிறான் அம்பி. 

சுஜாதா கல்லூரி நாட்களில் ஒரு ஒப்புக்கு கிரிக்கெட் மேட்சில் கலந்துள்ளார். அதற்குப் பிறகு இப்போது விளையாட இருக்கிறார். விளையாட்டில் படு சுமார். எதாவது காரணம் சொல்லி ஜகா வாங்க முற்பட அவரை பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறான் அம்பி. 

பயிற்சி முடிந்து விளையாட தயாராக வந்த தஞ்சாவூர் டீமை 

வரவேற்க ரயில் நிலையம் சென்று இருந்தார்கள். தஞ்சாவூர் டீம் பிளேயர்கள் ஒவ்வொருத்தரும் தடி தடியாக இருந்தார்கள். அவர்களைப் பார்க்கவே சுஜாதாவுக்கு பயமாக இருந்தது. 

நீங்களெல்லாம் சிறிய பையன்களாக இருக்கிறீர்கள் அதனால் நாங்கள் உங்களுடன் விளையாட மாட்டோம் என்று தஞ்சாவூர் அணியினர் சொல்ல கேவி ஒருமுறை  விளையாண்டுதான் பாருங்கள் எங்களுடைய விளையாட்டு நன்றாக இருக்கும் என்று சொல்கிறான்.

மேட்ச் தொடங்குகிறது.  தஞ்சாவூர் அணியினர் மிக மிக அலட்சியமாக விளையாட கேவி என்பவன் சுஜாதா, வரதன் என்று தன் நண்பர்களை பயன்படுத்தி அதிக ரன்களை அடிக்கிறான். அதனால் தஞ்சாவூர் விளையாட்டு வீரர்கள் எரிச்சலடைகிறார்கள் அவர்களால் கேவி அணியை வெற்றி அடைய முடியவில்லை. இந்த வெற்றியை நிருபர் ஒருவர் தன் பத்திரிகையில் சுஜாதாவின் பெயரையும் குறிப்பிட்டு கேவியையும் குறிப்பிட்டு செய்தியாக வெளியிடுகிறார். அந்த செய்தி தான் சுஜாதாவிற்கு பத்திரிக்கையில் வந்த முதல் பெயர். அதை இன்று வரை நினைத்து சந்தோஷப்படுகிறார்.  பல வருடங்கள் கழித்து சுஜாதா கேவியை பார்க்க கேவி இளமை மாறாமல் என்ன மச்சி இன்னொரு மேட்ச் போடலாமா என்கிறான். இன்றுடன் முடிகிறது கதை.

10.பாம்பு

சுஜாதாவிற்கு பக்கத்து வீட்டில் விறகுகளை கொட்டி வைத்திருந்தார்கள். அதற்குள் எப்படியோ பாம்பு நுழைந்துவிட்டது. ஆனால் அது யாருக்கும் தெரியவில்லை. 

சிவராமன் என்பவன் சுஜாதாவின் தங்கை வத்சலாவை சைட் அடிக்க சைக்கிளில் சுஜாதாவின் வீட்டிற்கு வருகிறான். அவனுடைய சைக்கிளில் பாம்பு சுற்றி இருக்க அதை சுஜாதா, சிவராமன், வத்சலா மூவரும் பார்க்கிறார்கள். சிவராமன் வத்சலா முன்பு சீன் போட வேண்டும் என்பதற்காக அந்தப் பாம்பை அடிக்க சுஜாதாவை பேட் எடுத்து வர சொல்கிறான். வத்சலா அந்தப் பாம்பை அடிக்க வேண்டாம் என கெஞ்ச பேட் வந்ததும் சிவராமன்  சைக்கிளில் ஓங்கி அடிக்க அது பாம்பு மேல் படாமல் சைக்கிள் சீட்டில் பட்டது. பாம்பு தப்பித்து அருகே உள்ள சாக்கடைக்குள் ஒழிந்துகொண்டது. 

வத்சலாவின் தாத்தா சரியாக பாம்பு ஒளிந்திருக்கும் சாக்கடையின் மேல் கட்டிலைப் போட்டு படுக்க வர தாத்தாவை கட்டிலோடு அலேக்க்காக தூக்கி வேறு இடத்தில் வைக்கிறார்கள்.  சாக்கடையை சுற்றி நின்று சிவராமன் விளக்குமாறு குச்சியால் பாம்பை தேட, பத்மநாம அய்யங்கார் என்ற பக்கத்து வீட்டுக்காரர் புகைபோட கூட்டம் கூடியது. 

கேவி வந்தான். கொடிக்குச்சி வாங்கி சாக்கடைக்குள் முழுவதுமாக நுழைத்து குத்து குத்து என குத்தினான். பாம்பு வெளியே வரவில்லை. பிறகு தான் கவனித்தார்கள் பாம்பு புகை எரிச்சலை தாங்காமல் வெளியே வந்து தாத்தாவின் கட்டில் காலில் சுற்றிக்கொண்டது என. சிவராமன் பாம்பை பார்த்து பயந்து நடுங்க வத்சலா கொஞ்சமும் பயப்படாமல் அதை குச்சியால் சுருட்டி தூக்க அந்த பாம்பு நழுவி கீழே ஊர்ந்து செல்ல கேவி தன் பக்கத்தில் இருந்த பேட்டை எடுத்தான். வேண்டாம் அதை அடிக்காத என்று வத்சலா அழுது கெஞ்ச கெஞ்ச கேவி அதை பேட்டால் அடித்து சாகடித்தான். 

அந்த சம்பவத்திற்குப் பிறகு சிவராமன் வத்சலாவை சைட் அடிக்க அவள் வீடு தேடி போவதில்லை. இந்த சம்பவத்தின் மூலமாக சுஜாதா தன் தங்கையை புரிந்துகொண்டார் என்று முடிகிறது கதை. 

11. எதிர் வீடு

சுஜாதாவின் எதிர்வீடு பத்மநாப அய்யங்கார் எனும் டென் அணாஸ் வீடு. அவர் வீட்டிற்குள் சென்று அவருடைய விலை உயர்ந்த அறிவியல் உபகரணங்களை சுஜாதா ஒருமுறை கூட பார்த்ததில்லை. அக்கம்பக்கத்தினர் அப்படி இப்படி என சொல்வதைக் கேட்டு அவர் வீட்டை பார்க்க வேண்டுமென்று ஆசை. ஆனால் பத்மநாபனின் ஸ்ட்ரிக்டான குணம் கண்முன் வரவே சுஜாதா பயந்துகொள்வார். ஒருமுறை பத்மநாபனின் மகள் ஜம்புகாவின் நடுமார்பிலயே பந்தை அடித்ததால் பல நாட்கள் அவளுடைய அப்பாவுக்குப் பயந்து பயந்து வாழ்ந்தார் சுஜாதா. 

சுஜாதாவின் தம்பிக்கு கிராமபோன் வாங்கி அதில் இந்திப் பாடல்களை கேட்க வேண்டுமென்று ஆசை. பெற்றோர்களிடம் அடம்பிடித்து அதை வாங்குகிறான் சுஜாதாவின் தம்பி. சில நாட்கள் மட்டுமே பாடல்களை ஒலிக்கவிட்ட அந்த கிராமபோன் பிறகு முற்றிலும் பழுதானது. தம்பிக்கு எப்படியாவது இந்திப் பாடல்களை கேட்க வேண்டுமென ஆசை. 

பத்மநாபன் வீட்டில் ஒரு கிராமபோன் இருக்கிறது என்பது அவருடைய உறவினர் செல்லப்பா மூலம் தெரிய வர சுஜாதா, சுஜாதாவின் தம்பி, செல்லப்பா மூவரும் பத்மநாபன் வீட்டிற்கு அவரும் அவருடைய குடும்பத்தினரும் இல்லாத சமயத்தில் வீட்டிற்குச் செல்கிறார்கள். தம்பி தனக்குப் பிடித்த இந்திப் பாடலை கேட்கிறான். மீண்டும் ஒருமுறை கேட்கனும் என்று தம்பி சொல்ல தம்பிக்காக அந்த கிராமபோனின் சாவியை திருகுகிறார் சுஜாதா. அடுத்த நொடி உள்ளே இருந்த ஸ்பிரிங் அறுந்துவிடுகிறது. தம்பியும் செல்லப்பாவும் பழியை சுஜாதா மேல போட, சுஜாதா பதறுகிறார். தம்பி தனக்கு சம்பந்தமே இல்லாதது போல் இருக்கிறான். 

செல்லப்பா அந்த உடைந்துபோன துண்டுகளை எடுத்து ஒரு பையில் போட்டுக்கொண்டு ரிப்பேர் கடைக்குப் போக சுஜாதா தான் அந்த ரிப்பேருக்கு காசு கொடுக்க வேண்டுமென சொல்கிறான் செல்லப்பா. ரிப்பேர் செய்பவர் ஸ்பிரிங் போய்டுச்சு எங்கட்ட இருக்கற பழசு ஒன்ன போட்டு தரேன் என்று அவர் சொல்லி ரிப்பேர் செய்ய ஆரம்பிக்க சரியாக அந்த நேரம் பார்த்து அங்கு வருகிறார் பத்மநாபன். அவரிடம் பொய் சொல்ல விரும்பாத சுஜாதா அவர்முன் மண்டியிட்டு தன் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். பத்மநாபனோ கொஞ்சமும் கோபம் இல்லாமல் போனா போவது போ என்கிறார்… என்று முடிகிறது இந்தக் கதை. 

12. கிருஷ்ண லீலா

சுஜாதாவின் நண்பன் கிருஷ்ணமூர்த்தி. ஒருமுறை வகுப்பறையில் இருக்கும்போது சுஜாதாவின் தொடையில் ஊக்குப்பின்னால் குத்தி ரத்தம் வர வைத்தவன். அதற்கு தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை தண்டிக்காமல் சுஜாதாவின் (சுஜாதாவின் தாத்தா ஒரு டெபுட்டி கலெக்டர்) கன்னத்தில் பளாரென அறைவிட்டார். 

கிருஷ்ணமூர்த்தி கொஞ்சம் ஆணவம் பிடித்தவன். அவன் சொல்வது தான் நியாயம் அவன் விதிப்பது தான் ரூல்ஸ் என்பதுபோல நடந்துகொள்பவன். அவன் சுஜாதாவை பலமுறை அடிமையாக பயன்படுத்தி உள்ளான். இந்த சூழலில் தான் அந்த தெருவுக்கு வீரராகவன் என்பவன் புதிதாக வந்தான். வந்த சில நாட்களில் கிருஷ்ணமூர்த்திக்கு நண்பனாகி பிறகு எதிரி ஆகி தனிக்கட்சி ஆரம்பித்தான். 

வீரராகவன் தன் கூட்டாளிகள் அனைவருக்கும் விளையாட்டில் சம உரிமை கொடுத்தான். அது சுஜாதாவிற்குப் பிடித்துப் போனது. கிருஷ்ண மூர்த்தியிடம் இருந்து விலகி சுஜாதா வீரராகவன் கூட்டணியுடன் சேர அது கிருஷ்ணமூர்த்திக்குப் பிடிக்கவில்லை. உனக்கு நான் கொடுத்த பொருட்களை எல்லாம் தா, உன்னுடைய   ரகசியங்களை எல்லாம் என்னுடைய கீழ்த்தென்றல் இதழில் வெளியிடுவேன் என கிருஷ்ணமூர்த்தி மிரட்ட சுஜாதா பயந்துபோய் மீண்டும் கிருஷ்ணமூர்த்தி அணியுடனே சேர்ந்துகொள்கிறார். இதை அறிந்த வீரராகவன் அந்த ஊரைவிட்டு வெளியேறும் வரை சுஜாதாவை அற்பபுழுவை பார்ப்பதுபோல பார்த்தான். 

வருடங்கள் பல கடந்தது. டெல்லியில் நல்ல பதவியில் வீரராகவனை பார்த்த சுஜாதா பழையவற்றை மறந்து நட்புடன் பேசுகிறார். கிருஷ்ணமூர்த்தியோ சுஜாதாவிடம் வேலை கேட்டு சிபாரிசு கடிதத்துடன் காத்திருக்கிறான் என கதை முடிகிறது. 

13. காதல் கடிதம்

கிருஷ்ணய்யங்கார் என்பவரின் மகள் மல்லிகா. கறுப்பாக இருந்தாலும் கலையானவள். முகத்தில் திட்டு திட்டாகப் பவுடர் பூசி சீன் போடுபவள். 

சுஜாதாவின் தெருவில் ஐவர் சங்கம் தொடங்கினார்கள். ஐந்து இளைஞர்கள் கொண்ட சங்கம் அது. அந்த ஐவரில் கோபாலனும் சுஜாதாவும் உறுப்பினர்கள். வீடு வீடாக ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகள் சங்கம் சார்பாக விநியோகிக்க வேண்டும். சுஜாதாவோ விதவைகள் மாமிகள் பாட்டிகள் வீட்டிற்கு பத்திரிக்கைகள் விநியோகம் செய்ய மல்லிகாவை சைட் அடிப்பதற்காக கோபாலன் அவள் வீட்டிற்கு மட்டும் கல்கியை விநியோகம் செய்தான். அது குறித்து சங்கத்தில் பிரச்சினையாகி தினமும் ஒவ்வொருத்தர் அந்த வீட்டிற்கு முறை வைத்து போக வேண்டும் என்று விதி பிறக்கிறது. 

அப்படி ஒருநாள் கோபாலன் மல்லிகா வீட்டிற்கு செல்ல வேண்டிய தினத்தில் சுஜாதாவிடம் கல்கியை கொடுத்து அனுப்புகிறான் கோபாலன். சுஜாதாவும் அப்பாவியாக அதை மல்லிகாவிடம் நீட்ட பிறகு தான் அதில் கோபாலன் எழுதி இணைத்த காதல் கடிதம் இருப்பது தெரிய வந்தது. கடிதத்தை படித்து பார்த்த மல்லிகா சுஜாதாவை தவறாக நினைத்து தன் அப்பாவிடம் போட்டுக்கொடுக்கிறாள். 

சுஜாதா அன்றைய இரவில் வீட்டைவிட்டு ஓடிப்போய்விடலாம் என நினைக்கிறார். உறங்காத அந்த இரவு விடிகிறது. மல்லிகாவின் அப்பா சுஜாதாவின் வீட்டுக்கு வந்து அந்த காதல் கடிதத்தை காட்டுகிறார். சுஜாதாவின் பாட்டியும் தங்கை வத்சலாவும் அந்த கடிதத்தை படித்துவிட்டு இது சுஜாதாவின் கையெழுத்து இல்லை கோபாலனின் கையெழுத்து இத தூக்கிட்டு காலைலங்காட்டி நியாயங்கேட்க வந்துட்டியா என்று மல்லிகாவின் அப்பாவை விரட்டி அடிக்கிறார்கள். 

வருடங்கள் பல கடக்கிறது. கோபாலனுக்கும் மல்லிகாவுக்கும் திருமணம் முடிந்து ஒரு மகள் இருக்கிறாள். மல்லிகாவைப் போலவே கறுப்பாக இருக்கும் அவளுடைய மகள் கன்னத்தில் திட்டு திட்டாக பவுடர் பூசி சென்றாள் என்று முடிகிறது கதை. 

14. மறு

சுஜாதா கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயம். அவருடைய வீட்டில் வேலைக்காரியாக இருந்தாள் செவளா. பாட்டி சொல்லும் எல்லா வேலையையும் தட்டாமல் செய்யும் செவளா. அந்த சமயத்தில் சுஜாதாவிற்கு பாக்கெட் மணியாக நாலணா மட்டுமே தருவார் அவருடைய பாட்டி.  

ஒருமுறை தான் வாங்கிய ஒரு மாத சம்பள பணம் மூன்று ரூபாயை சுஜாதாவின் புத்தகத்திற்குள் பத்திரமாக இருக்கட்டும் என வைக்கிறாள் செவளா. அந்தப் புத்தகத்திற்குள் செவளாவின் பணம் இருப்பது தெரியாமல் புத்தகத்தை கல்லூரிக்கு எடுத்துச் செல்கிறார் சுஜாதா. காசு இருப்பதை பார்த்ததும் அது செவளாவின் பணம் என தெரிய வருகிறது. இருந்தாலும் அந்த ஒரு மாத பணத்தை மூன்று மணிநேரத்துக்குள் நண்பர்களுடன் சேர்ந்து செலவழித்துவிட்டு வீடு திரும்புகிறார். 

வீட்டு வாசலில் செவளாவும் பாட்டியும் சிரித்தபடி நிற்கிறார்கள், “என்ன செவளா புத்தகத்துல காச வச்சத மறந்துட்டியா… இந்தா உன் பணம்…” என்று சுஜாதாவே எடுத்து நீட்டுவார்கள் என்பதால் அவர்கள் முகத்தில் சிரிப்பு. ஆனால் சுஜாதாவோ அவர்கள் எதிர்பார்த்தபடி நடந்துகொள்ளாமல் இல்லவே இல்லை என பொய் சொல்லி மறுக்கிறார். 

வேலைக்காரியோ அழுதுகொண்டே சரி விடுங்கய்யா அது எங்கயாவது தவறி விழுந்துருக்கும்… இந்த மாசத்துக்கு என் கொலுச வித்து பொழப்ப ஓட்டிக்குறேன் என்கிறாள். இந்த சம்பவம் பல வருடங்களாக சுஜாதாவின் மனதுக்குள் உறுத்தலாக இருக்கிறது. காசை வட்டியோடு திருப்பிக் கொடுக்க முயன்றாலும் வேலைக்காரியிடமும் பாட்டியிடமும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் தைரியம் வரவில்லை. 

பல வருடங்கள் கழித்து பாட்டி படுக்கையில் விழுந்துகிடக்க அப்போது சுஜாதா தன் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். பாட்டி எனக்கு இது எப்பவே தெரியும் என்கிறார்… இப்படி முடிகிறது கதை. 

Related Articles

குலேபகாவலி – சினிமா விமர்சனம்... தயாரிப்பு: கே.ஜே.ராஜேஷ் ஸ்டூடியோஸ் இயக்கம்: கல்யாண் இசை: விவேக் - மெர்வின் ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்தகுமார் நடிப்பு: ரேவதி, பிரபு தேவா, ஹன்சிகா மோ...
தமிழ் சினிமாவிற்கு இன்னொரு பாலா கிடைத்து... சென்னை மனநல காப்பகத்தில் இருந்து படம் துவங்குகிறது. மனநல காப்பகத்தில் வரும் ஆர்யாவின் அறிமுக காட்சியும் பின்னணி இசையும் போதும் இது எப்படிபட்ட படம் என்...
விளம்பர இடையூறற்ற இசையை வழங்குகிறது அமேச... அமேசான் தனது ப்ரைம் செயலியின் மூலம் காணொளி மற்றும் திரைப்பட சேவைகளை வழங்கி வருகிறது. அதை மேலும் இலாபகரமான ஒன்றாக மாற்றத் திட்டமிட்ட அமேசான் இந்தியா நி...
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் க... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தச் சீசனில் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. இரண்டு ஆண்டுத் தடை காலத்துக்குப் பிறகு அண...

Be the first to comment on "சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதைகள் சுருக்கம் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*