சாகித்திய அகாடமி விருது வெற்றியாளர் கேவி ஜெயஸ்ரீயின் முதல் நேர்காணலின் எழுத்து வடிவம்!

Sahitya Akademi Award winner K. V. Jeyashree

1. கேள்வி: கேரளாவுல பாலக்காட்டில் பிறந்திருந்தால் கூட இங்க வந்து ஒரு தமிழாசிரியரா இருக்கீங்க…  தமிழ் மீது அவ்வளவு ஈடுபாடு இருக்கு… தமிழ் சார்ந்த மொழிபெயர்ப்புகளை வந்து மலையாளத்திலிருந்து செய்திட்டு வர்றீங்க… அதற்கான காரணம் என்ன? தமிழ் மீதான காதல் எப்படி வந்தது?

பதில்: பாலக்காட்டுல பொறக்கல நாங்க… அம்மாவும் அப்பாவும் தமிழ்நாட்டுல வந்து செட்டில் ஆயிட்டாங்க… அப்புறம் என்னுடைய இரண்டாவது வயசுல எங்க அப்பா இறந்துட்டாரு…  

அதுக்கப்புறம் எங்களுக்கு மாமா குடும்பம் தான்…  பெரிய குடும்பம் அது… பெண்கள் சார்ந்த உலகம் அது… அப்போ அம்மாவுக்கு வந்து மலையாளம் மட்டும்தான் படிக்க தெரியும் பேசத் தெரியும் தமிழ் தெரியாது…  என்னுடைய அக்காவா ஸ்கூல்ல சேர்க்கற காலத்துல அவிங்க மூலமா தமிழ் கத்துக்கிட்டேன்… நானும் தமிழ் பள்ளிக்கூடத்துல படிச்சேன்… அப்படி வீட்டுல பேசுற மொழி மலையாளமாகவும் வெளியில பேசுற மொழி தமிழாகவும் இருந்துச்சு… அப்படித்தான் எனக்கு இரண்டு மொழிகளுடைய பரிச்சயம் ஏற்பட்டது. 

2. கேள்வி: இப்ப நீங்க தமிழாசிரியராக இருக்கிறீங்க… அதற்கான உந்துதல் எப்படி கிடைச்சது?

பதில்: நான் பன்னிரண்டாவது வரைக்கும் இங்கிலீஷ் மீடியத்தில் தான் படிச்சேன்…  ஆனால் கல்லூரியில் நான் தமிழ் இலக்கிய மாணவியாக சேர்ந்தேன்… எனக்கு ஒரு தமிழ் டீச்சர் இன்ஸ்பிரேஷனாக இருந்தாங்க…  அவர்களோடு இன்ஸ்பிரேஷன் காரணமாகத்தான் நான் தமிழிலக்கிய மாணவியாக கல்லூரியில் சேர்ந்தேன்…

லட்சுமி சிவசங்கரி இந்துமதி இவங்கள்லாம் இன்றைக்கும் பெண் எழுத்தாளர்கள்ல முக்கியமானவர்களாக இருக்காங்களா ன்னு தெரியல… ஆனால் இவர்களுடைய புத்தகங்களை தான் என் அம்மா படிச்சிட்டு அந்த புத்தகங்கள எங்ககிட்ட கொடுப்பாரு… நானும் தங்கையும் அந்த புத்தகங்களை படிப்போம்…  அப்படி வாசிப்பு என்ற பழக்கம் எங்களுக்கு நான்காவது படிக்கும் காலத்திலிருந்து இருந்தது… இப்படித்தான் எனக்கு கல்லூரியில் தமிழ் இலக்கியம் எடுக்கணும்ங்கற ஆர்வம் பிறந்தது… 

எங்களுடைய தமிழ் பேராசிரியர் ஒரு மணிநேரத்தில் ஒரு கவிதை எழுது என்று படைப்பிலக்கிய வகுப்பில் கிளாஸ் எடுப்பார்…  ஆனால் அடைக்கப்பட்ட நான்கு சுவற்றுக்குள் எனக்கு எந்த படைப்பும் வரவில்லை… அந்த ஆசிரியர் தான் என்னை மொழிபெயர்ப்பு என்ற இடத்திற்கு நகர்த்தினார்…  படைப்பு வரல என்றதும் எனக்குத்தான் இரண்டு மொழி தெரியுமே என்று நான் மொழிபெயர்ப்புக்கு தயாரானேன்… கல்லூரி ஆண்டு மலரில் சிற்றரசர்கள் பற்றிய கதையை மொழிபெயர்த்து அதை ஒரு நாடகமாக எழுதினேன், அது எல்லோருடைய பாராட்டையும் பெற்றது… 

அதுக்கு அப்புறம் தான் தமிழ் இலக்கியத்தில் நம்மளோட பங்குனா அது நம்முடைய மொழிபெயர்ப்பாக இருக்கட்டும்னு முடிவெடுத்தேன்… 

3. கேள்வி: சாதாரணமாவே தமிழ் சூழலில் என்ன நிலவுது அப்படினா  படைப்புகளை யாரும் படிக்கறதில்லைனு இருக்கும்போது மொழிபெயர்ப்பு  படைப்புகள் ஏன் அவசியம் நினைக்கிறீங்க? ஏன் நிறைய மொழிகளில் இருந்து படைப்புகள் எல்லாம் மொழிபெயர்க்கப்படும்னு  நினைக்கிறீங்க? நிறைய இளைஞர்கள் எல்லாம் ஏன் மொழிபெயர்ப்புக்கு வரணும்னு நினைக்கிறீங்க?

பதில்:  படைப்பிலக்கிய வாதிகளுக்கு  கொடுக்கிற அங்கீகாரத்தை மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் கொடுக்கறது இல்ல…  என்ன காரணம்னா மொழிபெயர்ப்ப இரண்டாம் தரமாக மூன்றாம் தரமாக தான் பார்க்கிறாங்க… எனக்கு தெரிஞ்சு இந்த பதினைந்து வருடமாக தான் மொழிபெயர்ப்புகளும் ஓரளவுக்கு கவனம் பெறுகிறது… 

ஆனால் இந்திய எழுத்தாளர்கள் எல்லாருமே மொழிபெயர்ப்பு தான் முதல்ல கையில் எடுக்கிறாங்க புதுமைப்பித்தன் போன்ற தமிழ் எழுத்தாளர்கள் உட்பட…  மொழிபெயர்ப்பு இல்லைனா உலக இலக்கியமே இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்… அப்படிப்பட்ட மொழிபெயர்ப்பு எப்படி உருவாகியிருக்கும்?னா ஒரு குழுவில் இருந்து இன்னொரு குழுவினருக்கு தங்களுடைய தேவைகளை வெளிப்படுத்துவதற்காக  தான் மொழிபெயர்ப்பு வந்திருக்கும்… நாடோடிகளாக பயணிகளாக சென்றவர்கள் அப்படி மொழிகளை பரவவிட்டு இருக்கலாம்… ஆனால் இந்த மொழிபெயர்ப்பு இல்லேன்னா இலக்கியமே இல்லை…  

தமிழ் இலக்கியத்தில் இருக்கிற எழுத்து மட்டுமே எனக்கு போதும்னு நினைச்சா… நமக்கு காண்டேகர் தெரியாமல் போனா…  குமாரசாமி தெரியாமல் போனா… நம்ம மொழிக்கு வளம் இருக்கா… அவர்கள் கொண்டு வந்து சேர்த்த வங்காள இலக்கியம் மராட்டியம் கன்னட இலக்கியம் தெலுங்கு இலக்கியம்  இவையெல்லாம் தான் நம்ம மொழிக்கு வளம்… என்னுடைய மொழி மட்டும் இருந்தா போதும் நிச்சயமா அந்த இலக்கியம் வளமுடைய இலக்கியமாக இருக்காது… அதனாலதான் மொழிபெயர்ப்பு ரொம்ப முக்கியம் என நினைக்கிறேன்… 

மொழிபெயர்ப்பு படைப்புகள் படிக்கிறதுக்கு சில பேருக்கு பயங்கர போரா இருக்கும்… ஆனா மொழிபெயர்ப்பு படைப்புகளை தேடித்தேடி படிக்கறவங்கள நான் பார்த்திருக்கேன்…  அப்ப கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்… 

4. கேள்வி: உங்களுக்கு தமிழ் எழுத்தாளர்களுடனும் நல்ல பரிட்சயம்… மலையாள எழுத்தாளர்கள் உடனும் நல்ல பரிச்சயம் அதேபோல தமிழ்  படைப்புகளும் படிக்கிறீங்க மலையாள படைப்புகளும் படிக்கிறீங்க… அதுல ஒற்றுமை வேற்றுமையாக எதை பார்க்குறீங்க? மலையாள எழுத்தாளர் களுக்கு இருக்கக்கூடிய அங்கீகாரம் தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லைன்னு சொல்றாங்க… காரணம் மலையாள  எழுத்தாளர்களைப் போல மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் இறங்கி போராடுவது இல்லை அப்படின்னு சொல்றாங்க அதை பத்தி என்ன நினைக்கிறீங்க?

பதில்: கேரளா எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் தெருவில் இறங்கி சாதாரணமாக நடமாடக் கூடிய மனிதர்களாகத் தான் இருக்கிறார்கள். கேரளாவில் ஒரு எழுத்தாளருக்கு விருது கொடுக்கணும்… ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு எழுத்தாளரால் வர முடியவில்லை என்றால் அந்த விருது கொடுப்பவரே எழுத்தாளரின் வீடு தேடி சென்று விருதை கொடுத்து வருகிறார்.  அப்படி வாசிப்பு எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு எழுத்தாளர்களை கொண்டாட தான் செய்வார்கள் கேரளாவில் அப்படி வாசிப்பு பழக்கம் அதிகம் இருக்கிறது. 

அப்படி வாசிப்பு பழக்கம் அதிகம் இருக்க எழுத்தாளர்கள் மக்களுடன் மக்களாக கலந்து இருக்கிறார்கள்.  முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பால் சக்காரியா கொடுத்த குரல் போல் எந்த எந்த எழுத்தாளர்களும் கொடுக்கவில்லை.  இத்தனைக்கும் அவர் கேரளாவில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அவருடைய அந்த துணிச்சலில் தான் அவரைக் கொண்டாட வைக்கிறது.  தமிழ் எழுத்தாளர்களிடம் அந்த மாதிரி ஒரு துணிச்சல் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. 

5. கேள்வி: கேரளா மற்றும் தமிழக படைப்புகளில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்ன?

பதில்:இந்திய இலக்கிய உலகைப் பொறுத்தவரை மராட்டி இலக்கியமும் வங்காள இலக்கியமும் கேரள இலக்கியமும் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம்.  அது உண்மையும் கூட. ஆனால் அதற்கு சரிசமமாகவே தமிழ் எழுத்து உலகில் முயற்சிகள் பிறந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த முயற்சிகளை அந்த எழுத்தை கொண்டாடக்கூடிய வெகுஜனம் இங்கு இல்லை.  அங்கெல்லாம் ஒரு புத்தகம் முதல் பிரிண்ட் ஆயிரம் காப்பிகள் விற்பனையாகிறது அடுத்த மாதம் இன்னொரு ஆயிரம் புத்தகங்கள் பிரிண்ட் செய்கிறார்கள், அதுவும் விற்பனையாகிறது. ஆனால் தமிழகத்தில் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற புத்தகத்தை 2000 காப்பிகள் போடுவதற்கு ஆறு வருடங்கள் ஆகிவிட்டது.  ஆனால் அங்கெல்லாம் 15 ஆயிரம் புத்தகங்களை ஒருவர் ஒரு வருடத்தில் விற்பனை செய்கிறார்கள். 

அந்த மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு அந்த படைப்புகளை வாசிக்க வில்லை என்றாலும் அது எழுத்தாளர்களை தெரிந்திருக்கிறது.  தமிழகத்தில் அப்படி இல்லை. ஐடி இளைஞர்கள் போன்ற படித்த இளைஞர்கள் தமிழ் இலக்கிய உலகை தங்களுக்கு பரிச்சயபடுத்திக் கொள்கிறார்கள். ஆனால் வெகு ஜனங்களுக்கு அந்த பழக்கம் இல்லை.  இவற்றை மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசமாக நான் பார்க்கிறேன். 

6. கேள்வி: உங்களை மாதிரி படைப்பாளிகள் எல்லாம் மலையாளத்தில் உள்ள சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.  அந்த மாதிரி தமிழில் உள்ள படைப்புகள் எல்லாம் மலையாளத்திற்கு மொழிபெயர்க்க படுகிறதோ அதே போல மற்ற மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப் படுகிறதா என்பது ஒரு கேள்விக்குறி? அதற்குப் பின்னாடி உள்ள அரசியல் பற்றி என்ன நினைக்கிறீங்க? அதற்குத் தீர்வாக என்ன நினைக்கிறீங்க?

பதில்: அரசியல்னு பார்த்தா மனசுல உள்ள அரசியல் தான்…  தமிழ் இலக்கியங்கள் அப்படி என்ன பெருசா இருந்தடபோவுது அப்படின்னு கேரள மக்கள் நினைக்கிறாங்க போல…  தமிழர்களுக்கு ஒன்னும் தெரியாது என்கிற நினைப்பு அவர்களுக்கு இருக்கு… கேரளாவிலும் தமிழகத்திலும் வளர்ந்த என்னால  அவிங்களோட நினைப்ப புரிஞ்சுக்க முடியுது… ஆனால் தமிழக மக்கள் அப்படி இல்லை கேரள மக்களை பெரிய அறிவுஜீவிகளாக தான் கொண்டாடி வருகிறார்கள்… 

மதிமுகம் சேனலுக்கா அபிநயா ஸ்ரீகாந்த் என்பவர் நடத்திய ஒரு படைப்பாளரின் கதை என்ற நிகழ்ச்சியில் உள்ள கேள்வி பதில்கள் இவை. இன்னும் பல கேள்வி பதில்கள் அந்த நிகழ்ச்சியில் உள்ளன.

Related Articles

இன்றைய தமிழ் சமூகத்தில் “பெண் குழந... இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான படம் "கருத்தம்மா". 1996ல் நான் பிறந்தேன். நான் பிறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே அதாவது 1994 ல் வெளியான இ...
பேசாத பேச்செல்லாம்!  – நீங்கள் யார... மொத்தம் 32 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தான் எழுத்தாளர் பிரியா தம்பி எழுதிய இந்த "பேசாத பேச்செல்லாம்" புத்தகம். இந்தப் புத்தகம் கற்றுக் கொடுத்த சில விஷ...
சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்... சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல் பற்றிய விவாதம் இப்போது நடந்து வருகிறது. இது மக்களுக்கான திட்டம் மக்கள...
96 ராமை போல் திருமணம் செய்யாமலே வாழ்வது ... 96 படம் சமீபத்தில் வெளியாகி விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ரசிகர்களின் பலத்த  ஆதரவை பெற்றது. வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றியை ர...

Be the first to comment on "சாகித்திய அகாடமி விருது வெற்றியாளர் கேவி ஜெயஸ்ரீயின் முதல் நேர்காணலின் எழுத்து வடிவம்!"

Leave a comment

Your email address will not be published.


*