அன்புச்செழியனுக்கு ஆப்பு வைத்து விஜயை அடக்கி வைத்த ரஜினி!

IT Raid on Bigil Team Rajnikanth's counterplay for Financier Anbu Chezhiyan!

ஏசியாநெட் செய்தி: 

ரஜினிக்கும் அன்புச்செழியனுக்கும் என்ன தகராறு என்பதை விளக்குகிறது இந்த செய்தி. 

தமிழ் சினிமாவையே தனது சுண்டு விரலால் சுழற்றி விளையாடி வந்த கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியனை அவரது வீட்டிலேயே குத்த வைத்து உட்கார வைத்ததுடன் உரித்து உப்புக் கண்டம் போட்டுள்ளார் ரஜினி.

பொதுவாக திரையுலகில் யாருடனும் மோதல் போக்கை கடைபிடிக்காதவர் ரஜினி. எதிர்முகாமில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிராக அரசியல், முதுகில் குத்தும் வேலைகள் தமிழ் சினிமாவில் ரொம்ப பிரபலம். 

ஆனால் இதுவரை ரஜினி எந்த நடிகருக்கு எதிராகவும் செயல்பட்டது இல்லை. ரஜினியால் தனது வாழ்க்கை போய்விட்டதாக இதுவரை எந்த நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் கூறியதே இல்லை. மேலும் எந்த விஷயத்திலும் ரஜினி சமரத்திற்கே தயாராக இருக்க கூடியவர்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட இழப்பை திருப்பி கொடுத்தவர் ரஜினி தான். 

பாபா படம் பெரிய விலைக்கு விநியோகஸ்தர்களால் வாங்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் கேட்காமலேயே அவர்களை அழைத்து நஷ்டத் தொகையை திருப்பி கொடுத்தார் ரஜினி. காரணம் அந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினி தான். இதே போல் குசேலன், லிங்கா படங்களுக்கான நஷ்டத்தையும் திருப்பி கொடுத்தவர் ரஜினி.

இந்த சூழலில் தான் தர்பார் படத்தில் தங்களுக்கு பெரும் நஷ்டம் என்று கூறி விநியோகஸ்தர்கள் சிலர் ரஜினி வீட்டிற்கு சென்றனர். இதனை கேட்டு ரஜினி முதலில் அதிர்ந்து போய்விட்டார். ஏனென்றால் பொங்கலுக்கு வேறு எந்த படமும் வெளியாகவில்லை. 

சுமார் பத்து நாட்கள் திரையரங்குகளில் தர்பார் படத்தை தவிர வேறு எந்த படமும் ஓடவில்லை. மேலும் கமர்சியலாக படம் நன்றாக போவதாகத்தான் ரஜினிக்கு பீட் பேக் வந்திருந்தது. இந்த நிலையில் விநியோகஸ்தர்கள் நஷ்டம் என்று வீட்டுக் கதவை தட்டியதால் ரஜினி அது குறித்து விசாரித்துள்ளார்.

 வந்தவர்கள் பெரும்பாலும் தென்மாவட்டங்களை சேர்ந்த விநியோகஸ்தர்கள். 

பெரிய அளவில் இதுவரை அவர்கள் எந்த படத்தையும் விநியோகம் செய்தது இல்லை. இது குறித்து லைக்காவிடம் கேட்ட போது, மதுரை ஏரியாவை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் அடிமாட்டு விலைக்கு கேட்டதாகவும் தாங்கள் கொடுக்காமல் சின்ன சின்ன விநியோகஸ்தர்களுக்கு பிரித்து கொடுத்ததாகவும் பதில் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மதுரை ஏரியா திரையரங்க உரிமையாளர்களை ரஜினி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது ஒன்பது நாட்கள் திரையரங்குகளில் மாலை காட்சி மற்றும் இரவுக் காட்சி ஹவுஸ் புல் என்று அவர்கள் தெரிவிக்க, பிறகு ஏன் விநியோகஸ்தர்கள் நஷ்டக்கணக்கு காட்டுகிறார்கள் என்று ரஜினி விசாரித்துள்ளார். அப்போது தான் இதன் பின்னணியில் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையை போல மதுரை திரையரங்குகளில் கணிணிமயமாக்கப்பட்ட டிக்கெட் கிடையாது. இதனால் படத்திற்கு ஹவுஸ் புல்லாக ரசிகர்கள் வந்தாலும் வரவில்லை என்று பொய் கணக்கு எழுதி நஷ்ட கணக்கு காட்டியது தெரியவந்துள்ளது.

மேலும் தர்பார் படத்தை விநியோகிக்கும் உரிமையை தனக்கு தரவில்லை என்பதால் அவர்களை பின்னால் இருந்து அன்புச் செழியன் தூண்டிவிடுவதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஒரு அரசியல் கட்சி அன்புச் செழியனை இயக்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொதித்துப்போன ரஜினி, தனது தொடர்புகள் மூலம் அன்புச் செழியனுக்கு தான் யார் என்று காட்டியுள்ளார்.

அன்புச் செழியன் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவை கட்டி ஆள்பவர். விஜய் படங்களுக்கு அதிக அளவில் பைனான்ஸ் செய்யக் கூடியவர். இவரிடம் பைனான்ஸ் வாங்காத தயாரிப்பாளர்களே இல்லை. கொடுத்தத பணத்தை திருப்பி வாங்க இவர் பயன்படுத்தும் டெக்னிக்கால் மணிரத்னத்தின் சகோதரர் ஜிவி, நடிகர் சசிக்குமாரின் உறவினர் அசோக் போன்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் நடிகைகள் ரம்பா, தேவயாணி போன்றோரும் கூட படத்தயாரிப்புக்கு இவரிடம் பணம் வாங்கி படாதபாடு பட்டதாக சொல்வார்கள். விஷால், ஞானவேல் ராஜா என இவரால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலும் நீளும்.

அதிலும் நான் கடவுள் படத்திற்கு வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தரவில்லை என்று அஜித்தை மதுரையில் ஒரு லாட்ஜில் வைத்து நாள் முழுவதும் அன்புச் செழியன் மிரட்டியது பகீர் ரகம். சொல்லப்போனால் அப்போது அஜித் அங்கு வைத்து அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுவது உண்டு. இப்படி இதுநாள் வரை யார் யாரிடமோ தனது செல்வாக்கை காட்டி வந்த அன்புச் செழியன் தான் மோதுவது பாறை இல்லை இமயமலை என்று தெரியாமல் ரஜினியிடம் மோதியுள்ளார்.

அதிகாரிகள் இதுநாள் வரை தனது வாடிக்கையாளர்களிடம் அன்புச் செழியன் நடந்து கொண்டதை போல அவரிடம் நடந்து கொண்டதாக சொல்கிறார்கள். சொல்லப்போனால் குத்த வைத்து விசாரணை நடத்தியதாக சொல்கிறார்கள். எது எப்படியோ இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இது நாள் வரை அன்புச் செழியனை சகித்துக் கொண்டிருந்த திரையுலகம் தற்போது அவர் வருமான வரித்துறையில் சிக்க காரணம் ரஜினி தான் என்பதை அறிந்து அவரை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

ஜூனியர் விகடன் செய்தி:

வருமான வரித்துறை யாரின் கையில் இருக்கிறது அது ஆளும்கட்சியையும் விஜய்யையும் அடக்க முயல்வதற்கான காரணங்களை இந்த செய்தி கூறுகிறது. 

‘‘ஜனரஞ்சகமாகத் தொடங்கிய ஜனவரி, பிகில் கிளப்பும் பிப்ரவரி… என 2020 அமர்க்களமாகப் போகிறதே!’’ என்று பரபரப்பான ‘இன்ட்ரோ’வுடன் சிறகுகள் படபடக்க வந்தமர்ந்தார் கழுகார். இளநீர்ப் பாயசத்தைப் பருகக் கொடுத்தோம். ரசித்து ருசித்த கழுகார், ‘‘வருமானவரித் துறை பலருக்கும் பாயசம் ஊற்றிக் கொண்டிருப்பதால், எனக்கும் பாயசம் அளித்தீரோ?’’ என்ற கிண்டலுடன் செய்திக்குள் தாவினார்.

‘‘உம்மிடம் நாங்கள் எதிர்பார்க்கும் பாயசம் என்னவென்று உமக்குத் தெரியாதா?’’

‘‘சினிமா ஃபைனான்ஷியர், கோபுரம் ஃபிலிம்ஸ் உரிமையாளர், சினிமா விநியோகஸ்தர் என்று பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான அன்புச்செழியனின் மதுரை அலுவலகம், வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை ரெய்டு, சினிமா உலகையும் தாண்டி அரசியல் அரங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. பிப்ரவரி 5-ம் தேதி, மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள அவருடைய தலைமை அலுவலகம், காமராஜர் சாலையில் உள்ள அவரின் நண்பர் சரவணனின் வீடு, கீரைத்துறையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் சென்னையிலிருந்து வந்த ஐ.டி டீம் ரெய்டு நடத்தியது. அவரது சென்னை தி.நகர் வீடும் சோதனையிலிருந்து தப்பவில்லை.’’

‘‘அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் அவர் நெருக்கமானவர்தானே?’’

‘‘அதுமட்டுமல்ல… மதுரை மாநகர அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞரணி பொறுப்பிலும் அவர் இருக்கிறார். துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு நெருக்கமான வராக அறியப்படுபவர். ‘தென்மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று முக்கிய அமைச்சர்களின் பணத்தை, திரைத்துறையில் அன்புச்செழியன் முதலீடு செய்திருக்கிறார். தனக்கு கிடைக்கும் வட்டியில் அவர்களுக்கு மாதாமாதம் பங்குத்தொகை தருகிறார்’ என்றெல்லாம் பேச்சுகள் உண்டு. இந்தத் தகவலின் அடிப்படையில்தான் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் வட்டத்தில் கூறுகின்றனர். அமைச்சர்களுக்கு எதிராக அன்புவிடம் இருந்து வாக்குமூலம் பெறவும் வருமானவரித் துறை முயற்சி செய்வதாகவும் வெளியாகியிருக்கும் தகவல்தான், ஆளுங்கட்சி வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.’’

‘‘ஏன் இந்தத் திடீர் ரெய்டு?’’

‘‘ரஜினிதான் காரணம் என்கின்றனர். `தர்பார்’ படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சில விநியோகஸ்தர்கள் தரப்பில் போர்க்கொடி உயர்த்தப்பட்டது. ரஜினியை நேரில் சந்தித்து நஷ்டஈடு பெறவும் முடிவெடுக்கப்பட்டது. மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த விநியோகஸ்தர்களைத் தூண்டிவிட்டதே, அவர்களுக்கு ஃபைனான்ஸ் செய்த அன்புச்செழியன்தான் என்று கூறப்படுகிறது.’’

‘‘ஓஹோ…’’

‘‘இதுகுறித்து பிரபல ஆடிட்டரிடம் ரஜினி விவாதித்ததாகவும் கூறப்படு கிறது. ரஜினிக்குத் தெம்பூட்டிய அந்த ஆடிட்டர், டெல்லிக்கும் தகவலை பாஸ் செய்துவிட்டாராம். இதன் பிறகே ரஜினியைச் சீண்டிய அன்புமீது வருமானவரித் துறை பாய்ந்ததாம். சமீபத்தில் ரஜினியின் பெரியார் பற்றிய பேச்சுக்கு

ஓ.பி.எஸ், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தனர். `அப்படிப் பேசக் கூடாது’ என்று அவர்களுக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம்.’’

‘‘அடேங்கப்பா… ரஜினிக்காக ஏன் இவ்வளவு தூரம் பா.ஜ.க இறங்கிவருகிறது?’’

‘‘வேறென்ன… எல்லாம் எலெக்‌ஷனுக்கான கூட்டணிக் கணக்குதான். ரஜினி மீதிருந்த வருமானவரி வழக்குகளை எல்லாம் பைசல் செய்துவிட்டனர். அதற்கு பிரதி உபகாரமாகத்தான், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருக் கிறார். வழக்கமாக, ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிப்பார் பிரதமர் மோடி. இந்த முறை பிரதமர் வாழ்த்து தெரிவிக்காதபோதே சுதாரித்து இறங்கி வந்துவிட்டாராம் ரஜினி. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ரஜினியுடன் கைகோக்க விரும்பும் பா.ஜ.க, சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கவும் திட்ட மிட்டிருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க-வுக்குப் பணம் வரக்கூடிய வழிகளையும் அடைத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதிதான் அன்புச்செழியனின் வீட்டில் நடந்த ரெய்டு.’’

‘‘நடிகர் விஜய் மீதும் ரெய்டு பாய்ந்துள்ளதே?’’

‘‘அதற்கு இரண்டு பிரதான காரணங்களைச் சொல்கின்றனர். ஒன்று, ‘பிகில்’ படத்தின் வருவாய்க்கு, சரியான வரியைக் கட்டவில்லை. அன்புச்செழியனின் இடங்களில் ரெய்டு நடைபெற்றபோதே, நடிகர் விஜய்யை வைத்து ‘பிகில்’ படத்தை எடுத்த ஏ.ஜி.எஸ் சினிமா நிறுவனம் தொடர்புடைய 22 இடங்களிலும் வருமானவரித் துறை சோதனை மேற்கொண்டது. இந்த நிறுவனத்தின் தி.நகர் அலுவலகத்தில் சோதனையிட்டபோது, ‘பிகில்’ படத்துக்காகச் செலவழிக்கப்பட்ட தொகையின் கணக்கு விவரங்கள் சிக்கினவாம். இதன் அடிப்படையில் தான், நடிகர் விஜய் விசாரிக்கப்பட்டதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.’’

‘‘ஓஹோ… இரண்டாவது காரணம்?’’

“இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் நடந்த வருமானவரித் துறை சோதனையின்போது, நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட சில ஆவணங்கள் கைப்பற்றப் பட்டிருக்கின்றன. விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை, அவரின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர்தான் முதலில் தயாரித்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு லலித் என்பவர் தயாரிக்கிறார். பெயருக்கு அவர் தயாரிப்பாளர் என்றாலும், பணம் முழுவதும் நடிகர் விஜய்யுடையது எனக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே விஜய்யின் நடவடிக்கையைக் கண்காணித்த வருமானவரித் துறையினர், ‘மாஸ்டர்’ பட வியாபாரம் பெரிய அளவில் நடந்துள்ளதை அறிந்து ரெய்டு நடத்தியதாகவும் தகவல் வருகிறது. ஆனால், இந்த ரெய்டு பின்னணியில் அரசியல் காரணங்களும் அடுக்கப்படுகின்றன.’’

‘‘முதலில் அதைச் சொல்லும்!’’

‘‘தமிழ்த் திரையுலகில் உச்ச மார்க்கெட்டில் இருப்பவர் விஜய். தனக்கென்று பெரும்ரசிகர் கூட்டத்தையே கட்டமைத்து வைத்திருப்பவர். இதைவைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் திட்டமிடுகிறார். விஜய்க்கும் உள்ளுக்குள் அந்த ஆசை இருந்தாலும், இப்போதைக்கு வேண்டாம் என நினைக்கிறாராம். எஸ்.ஏ.சந்திரசேகரின் அரசியல் ஸ்டன்ட்களை உன்னிப்பாகக் கவனிக்கும் டெல்லி மேலிடம், ரஜினிக்குப் போட்டியாக விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்துவிட்டால், தங்கள் மொத்தத் திட்டமும் தவிடுபொடி ஆகிவிடும் என்று ‘ஜெர்க்’கானதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘இதற்கு ஏற்றாற்போல், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் வெற்றிபெற்றுள்ளனர். சமீபத்தில்கூட சேலத்தில் ஒரு வெற்றிவிழா கொண்டாடப் பட்டது. இதைப் பற்றியும் உளவுத்துறை அதிகாரிகள், டெல்லிக்கு ‘நோட்’ அனுப்பியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகத் தான் நடிகர் விஜய்க்கு ‘செக்’ வைப்பதற்காக வருமானவரித் துறை பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.’’

உள்ளாட்சித் தேர்தலில் வென்ற விஜய் மக்கள் மன்றத்தினர்

உள்ளாட்சித் தேர்தலில் வென்ற விஜய் மக்கள் மன்றத்தினர்

‘‘ரஜினிக்கு ‘டிக்’… விஜய்க்கு ‘செக்’கா?’’

‘‘அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை வருமானவரித் துறை குறிவைத்திருக்கிறதாம். அவருடைய குடும்பத்தினருக்கு நடிகர் விஜய்யுடன் நெருக்கமான தொடர்பு உண்டு. அவருடைய வீட்டில் விஜய்க்கு சொந்தமான சில ஆவணங்கள் இருப்பதையும் வருமான வரித் துறையினர் மோப்பம்பிடித்திருக்கிறார்களாம். சென்னையில் உள்ள அவரது வீட்டில் விரைவில் சோதனை நடக்க இருக்கிறதாம்.’’

‘‘ஆனால், இப்போது நடந்த ரெய்டில் விஜய் வீட்டிலிருந்து பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என வருமானவரித் துறை விளக்கமளித்திருக்கிறதே?’’

‘‘ஆமாம். தயாரிப்பாளர், ஃபைனான்ஷியர் மற்றும் விநியோகஸ்தர்கள் தொடர்பான இடங்களில் மட்டும் கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித் துறையே விளக்கம் அளித்திருக்கிறது. விஜய்யின் சமீபத்திய படம் (பிகில்) 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின்பேரில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும் விளக்கமளித் திருக்கின்றனர்.’’

‘‘இதற்கு மட்டும் இவ்வளவு அவசரமாக வருமானவரித் துறை விளக்கம் கொடுத் திருப்பது ஏன்? கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான ரெய்டுகள் நடந்திருக் கின்றன. எதைப் பற்றியுமே பெரிதாக எந்த விளக்கத்தையும் வருமானவரித் துறை கொடுத்ததே இல்லையே!’’

‘‘உண்மைதான். கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் இதுதான் ‘ஹாட் டாபிக்’காக இருக்கிறது. எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்-க்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி அலுவலகங்களில் மூன்று வருடங்களுக்கு முன் சோதனை நடத்தி கணக்கில் வராத பல சொத்துகளையும் ரொக்கத்தையும் கைப்பற்றினார்கள். அவரது திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர்மீது தொடரப் பட்ட வழக்குகள் ரத்துசெய்யப் பட்டன. அதையடுத்து சேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் புதிய பதவி வழங்கப்பட்டது. அடுத்து பசுமை வழிச்சாலை அமைக்க எடப்பாடி அரசு தாமதித்த நேரத்தில் குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அவரின் உறவினர்கள், பினாமிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அதன் பிறகும் தேவைப்படும்போதெல்லாம் ரெய்டுகளால் விஜயபாஸ்கரைத் துரத்தியது மத்திய அரசு. ஆனால், இன்று வரை விஜயபாஸ்கர் அமைச்சராகத்தான் வலம்வருகிறார்.’’

‘‘அது தெரிந்ததுதானே!’’

‘‘அதேபோல் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை யின் அருப்புக்கோட்டை, சென்னை, மதுரை அலுவலகங்கள், வீடுகளில் ரெய்டு நடத்தி சுமார் 1,000 கோடி ரூபாய் பரிமாற்றங்களுக்கான ஆவணங்களையும், 190 கோடி ரூபாய் ரொக்கத்தையும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளையும் கைப்பற்றினார்கள். இவர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியுடன் இணைந்து ஒப்பந்தத் தொழில் செய்துவருபவர். ரொக்கம் மிக அதிகமாகப் பிடிபட்டது இந்த ரெய்டில்தான். அந்த வழக்கும் என்ன ஆனது எனத் தெரியவில்லை. செய்யாத்துரையின் நிறுவனம் இன்றும் அரசு ஒப்பந்தப் பணிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறது.’’

‘‘வேறு?’’

‘‘சில வாரங்களுக்கு முன்னர், தமிழகத்தின் பெரிய கல்விக் குழுமமான வேலம்மாள் நிறுவனத்தில் 50 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. இந்த நிறுவனத்தின் தலைவர் முத்துராமலிங்கம், துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸுடன் நெருக்கமானவராக அறியப்படுபவர். வேலம்மாள் நிறுவனத்தில் 560 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு அதுவும் கிடப்பில் போடப்பட்டது.’’

‘‘என்ன சொல்ல வருகிறீர்?’’

‘‘இப்படி தேவைப்படும்போது வருமானவரித் துறையை ஏவி சோதனை நடத்துவதும், ஆவணங்களைக் கைப்பற்றுவதும், பிறகு வழக்கைத் தூக்கி மூலையில் போட்டுவிடுவதும் மத்திய அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது. அன்புச்செழியன் விவகாரத்தில்கூட, கணக்கில்காட்டாத 65 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். மூன்று அமைச்சர் களுக்கு எதிராக வாக்குமூலம் பெற முயற்சி செய்கின்றனர். கூட்டிக்கழித்துப் பார்த்தால், ரஜினிக்கான அரசியல் பாதையை பா.ஜ.க உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், அவர் வந்தால்தான் நிச்சயம்.’’

Related Articles

கன்னியாகுமரி கிராமங்களில் வெள்ளத்தால் எட... மண்டைக்காடு புதூர், குறும்பனை, கொட்டில்படு, நீரோடி, வள்ளவிளை, இரயுமன்துறை, தூத்தூர் மற்றும் போத்துறை உள்ளிட்ட கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் வீடுக...
தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத... 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின...
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படமான ... சாதியும் மதமும் மனித வாழ்விற்கே விரோதமானது என்ற வரி மிக முக்கியமானது. அனைத்து கல்வி நிலையங்களிலும் எழுதி வைக்கப்பட வேண்டிய வரி. இசை சந்தோஷ்நாராயணன...
லவ் யூ சிதம்பரம்! – அசுரன் விமர்சன... தயாரிப்பு : v கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு. எழுத்து இயக்கம் : வெற்றிமாறன்மூலகதை : எழுத்தாளர் பூமணிஇசை : ஜீவி பிரகாஷ் குமார்ஒளிப்பதிவ...

Be the first to comment on "அன்புச்செழியனுக்கு ஆப்பு வைத்து விஜயை அடக்கி வைத்த ரஜினி!"

Leave a comment

Your email address will not be published.


*