கண்டிப்பாக பார்க்க வேண்டிய மூன்று திரைப்படங்கள்!

Must watch 3 Movies

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்:

இயக்குனர் ராஜீவ் மேனனின் இயக்கத்தில் மம்முட்டி, அஜீத், தபு, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் இது. இந்தப் படம் பார்த்து முடித்த பிறகு இவ்வளவு அருமையான அழகான படத்தை ஏன்டா இவ்வளவு நாள் பாக்காமலிருந்தோம் என்ற வருத்தம் உருவாகியுள்ளது. 

மிலிட்டிரியில் உயர் அதிகாரியாக இருக்கும் மம்முட்டி ஒரு துப்பாக்கிச் சண்டையின்போது கண்ணிவெடியில் காலை வைத்து ஒற்றை காலை இழக்கிறார். இதனால் ராணுவத்தை விட்டு வெளியேறிய மம்முட்டிக்கு எப்படியாவது நல்ல பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டுமென முயற்சி எடுக்கிறார் அவருடைய உறவினர் மணிவண்ணன். ஒரு நாள் கொழு பொம்மைகள் மத்தியில் ஐஸ்வர்யா ராய் கண்ணாமூச்சி ஏனடா என்ற பாடலை பாட அவர் மீது மம்முட்டிக்கு காதல் வருகிறது. ஆனால் ஐஸ்வர்யாவோ மம்முட்டியை புறக்கணித்து சீட்டு கம்பெனி தொழிலதிபர் அப்பாஸை காதலிக்கிறார். திடீரென ஒருநாள் அப்பாஸின் சீட்டுக் கம்பெனி திவாலாகிவிட அப்பாஸ் பணப் பிரச்சினையை சமாளிக்க அரசியல்வாதியின் மகளை திருமணம் செய்துகொள்கிறார். இப்போது ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார்? மம்முட்டியின் காதல் என்ன ஆனது என்பது ஒரு கதை. 

பணக்கார வீட்டுப் பையனான அஜீத் குமார்க்கு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்பது கனவு. அப்பா அம்மாவின் பேச்சை மீறி சினிமாவில் உதவி இயக்குனராக வேலை செய்து வருகிறார். அப்படியொரு நாள் வீட்டை லொக்கேசன் பார்க்க போன இடத்தில் அதிர்ஷ்டமில்லாத முதிர்கன்னி தபுவை சந்திக்கிறார். தபு மீது காதல் கொள்கிறார். என்னுடைய முதல் படம் ரிலீஸ் ஆனதும் உன்னை திருமணம் செய்துகொள்வேன் என்ற அஜீத் தபுவை கரம்பிடித்தாரா? அதற்கிடையில் தபுவும் அஜித்தும் சந்தித்த சவால்கள் என்ன என்பது இன்னொரு கதை. 

மேற்கண்ட இந்த இரண்டு கதைகளும் தனித்தனி அத்தியாயமாக வராமல் ஒன்றோடு ஒன்று பின்னி வருகின்றன. இந்த மாதிரியான கதைக்கு திரைக்கதை அமைப்பது மிக சவாலான காரியம். இயக்குனர் ராஜீவ் மேனன் எப்படி இதை சாத்தியப் படுத்தினார் என்பது ஆச்சர்யத்துக்குரியது. 

“மரணத்த விட கொடுமையானது மறக்கப்பட்றது… ” 

“கருணை வேற காதல் வேற…” போன்ற வசனங்கள் சுஜாதாவின் பெயர் சொல்கின்றன. 

“கொஞ்சும் மைனாக்களே… கண்ணாமூச்சி ஏனடா… என்ன சொல்ல போகிறாய்,  இல்லையென்று சொல்லாத… கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்… எங்கே எனது கவிதை…” என்று இந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு நல்ல கமர்ஷியல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் உள்ள படத்தில் கதாபாத்திரங்களை எப்படி வாடிவமைப்பது என்பதற்கும் இந்தப் படம் சிறந்த உதாரணம். 

தி லயன் கிங்

இது குழந்தைகளுக்கான படம் என்று சிலர் சொன்னதால் இந்தப் படத்தை நான் இவ்வளவு நாட்களாக தவிர்த்தேன். ஆனால் படத்தை பார்த்தபிறகு தான் புரிந்தது இது அனைவருக்குமான படம் என்று. 

காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கத்திற்கு ஒரு ஆண் சிங்கம் பிறக்கிறது. அந்த சிங்கத்தை அதாவது சிம்பாவை கையில் ஏந்தி இவன்தான் நம் வருங்கால ராஜா என்கிறது ஒரு குரங்கு. சிம்பாவின் பிறப்பினால் அந்த வனமே மகிழ்ச்சியாக இருக்க சிம்பாவின் சித்தப்பாவுக்கு மட்டும் அது பிடிக்கவில்லை. நான் தான் ராஜாவாக வலம் வருவேன் என்று அதிகார பற்று கொண்ட அந்த சித்தப்பா தன் சொந்த அண்ணனனையும் அண்ணனின் மகனையும் கொன்று காட்டிற்கு ராஜாவாக ஆசைப்படுகிறார். 

சிம்பாவை ராஜா அழைத்து சென்று தன் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளை காட்டுகிறார். அந்த நேரத்தில் தான் கழுதைப் புலிகள் வசிக்கும் மயான தேசம் சிம்பாவிற்குத் தெரிய வருகிறது. தன் காதலி லாலாவுடன் சிம்பா அங்கு சென்று பார்க்கிறான். அங்கு சிம்பாவும் லாலாவும் கழுதைப் புலிகளிடம் சிக்கிக் கொள்ள ராஜா சிங்கம் வந்து கழுதை புலிகளை மிரட்டி அவர்களை தன் இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. சிம்பாவிற்கு தன் ஆசைகளை சொல்லி அவனோடு விளையாடி மகிழ்கிறது ராஜா சிங்கம். 

அப்பா முன் தான் ஒரு பெரிய பையன் என்பதை காட்ட வேண்டுமென்பதற்காக கழுதைப்புலிகள் இருக்கும் இடத்திற்குச் சென்று வேட்டையாட முயல சொல்கிறார் சிம்பாவின் சித்தப்பா. சித்தப்பாவின் சூழ்ச்சி தெரியாமல் சிம்பா அங்கு செல்ல அவனை காப்பாற்ற சென்ற அப்பா ராஜா தன்னுடைய சொந்த தம்பியின் துரோகத்தால் கொல்லப்படுகிறார். அப்பாவின் இறப்பிற்கு நீதான் காரணம் என சொல்லி சிம்பாவை அந்த ஊரைவிட்டே துரத்திவிடுகிறது அந்த சித்தப்பா சிங்கம். இதன் பிறகு சிம்பாவின் பயணம் எப்படி இருந்தது சித்தப்பாவின் சூழ்ச்சியை தெரிந்து சிம்பா எப்படி ஆட்சியைப் பிடிக்கிறான் என்பது மீதிக்கதை. 

சிம்பா! இந்தப் பெயரை அவ்வளவு ஆழமாக நம் மனதில் பதிந்ததற்கு காரணம் சிம்பா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம். ஒரு குழந்தையை போல அந்தக் கதாபாத்திரம் நம் மனதில் அழகாகப் பதிகிறது. குறிப்பாக சிம்பா சிறுவனாக இருக்கும்போது கர்ஜிக்க முயல்கிறான், அப்போது பூனை சத்தம் கேட்கிறது… எதிரிகள் அவன் சத்தத்தை கேட்டு சிரிக்க அவன் மீண்டும் மீண்டும் முயற்சித்து கர்ஜிக்கும் இடம் அவ்வளவு அழகாக இருந்தன. அப்பாவின் மரணத்திற்கு தான் தான் காரணம் என தெரிந்து சிம்பா வருந்தும் இடம் அவ்வளவு உண்மையாக இருந்தன. 

சிம்பாவும் லாலாவும் செல்லமாக சண்டை போட்டுக்கொள்ளும் இடங்கள், சிம்பா இறந்துவிட்டான் என்ற செய்திக்குப் பிறகு லாலாவின் பயணமும் லாலா சிம்பாவை கண்டுபிடித்து சிம்பாவை தன் நாட்டிற்கு அழைத்துச் சென்ற இடங்களும் செம. உன்னுடைய அப்பா இன்னும் சாகல என்று சொல்லி தெளிந்த நீரில் சிம்பாவின் முகத்தைக் காட்டி உனக்குள் இன்னும் உன் அப்பா இருக்கிறார் என்று சொல்லி அப்பாவின் அசரீயை கேட்க வைக்கும் இடம் மிக அருமையாக இருந்தது. 

சிம்பாவின் காதலி கதாபாத்திரம் லாலாவும், ரோபோ சங்கர் சிங்கம்புலி குரலில் வந்த கதாபாத்திரங்களும் ரசிக்க வைத்தன. சந்தோசம், துக்கம் என்று பலதரப்பட்ட உணர்ச்சிகளை விலங்குகளின் முகபாவனைகளில் நுணுக்கமாக காட்டி நம்மையும் குழந்தையாக மாற்றி படத்தை ரசிக்க வைத்துள்ளது படக்குழு. 

ஹோட்டல் மும்பை

ஏ. ஆர். ரகுமானுக்கு ஆஸ்கர் விருது வாங்கி தந்த ஸ்லம்டக் மில்லியனர் படத்தில் நடித்தவர் தான் இந்தப் படத்திலும் நாயகனாக நடித்துள்ளார் மற்றும் இது மும்பையில் நடந்த நிஜ சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படம் என்பதாலும் கண்டிப்பாக இந்தப் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. 

மும்பை தாஜ் ஹோட்டலில் சமையல் ஊழியராக பணியாற்றி வருபவர் நாயகன். அவர் அன்றைய நாளில் வறுமை சூழ்ந்த தனது குடும்ப உறவுகளுக்காக வழக்கம்போல பணிக்குச் செல்கிறார். அன்றைய ஒரு நாளில் முழுக்க முழுக்க ஹோட்டலுக்குள் நடக்கும் தீவிரவாத தாக்குதல் தான் படத்தின் மையக்கரு. 

அன்றைய நாளில் மும்பை தாஜ் ஹோட்டல் வழக்கம்போல செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்படி இருக்கையில் பெரிய பேக்குகளுடன் சில இளைஞர்கள் அந்த ஹோட்டலுக்குள் மக்களோடு மக்களாக நுழைகிறார்கள். சில நிமிடங்கள் சென்றதும் தங்கள் பைகளுக்குள் இருக்கும் துப்பாக்கியை வெளியே எடுத்து கண்முன் நிற்பவர்களை இஷ்டத்துக்கு சுட்டுத் தள்ளுகிறார்கள். ஹோட்டலின் ஒரு பகுதியில் நடக்கும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் ஹோட்டலே அதிர்கிறது. ஹோட்டலின் மற்ற பகுதியில் இருக்கும் மக்கள் துப்பாக்கி தாக்குதலில் இருந்து தப்பிக்க பதுங்கி பதுங்கி செல்கிறார்கள். அப்படி பதுங்கி செல்பவர்களில்  கை குழந்தையுடன் ஒரு தாயும் இருக்கிறாள். குழந்தை நிறைய முறை அழ முயல குழந்தையை அழ விடாமல் தடுக்கிறாள். அந்த அறைக்குப் பக்கத்திலிருக்கும் அறையில் இருக்கும் அவளுடைய உறவினன் அவளை காப்பாற்ற முயல்கிறான். இதே போல இன்னொரு அறையில் இருக்கும் பொதுமக்களை நாயகன் வழிநடத்திச் செல்கிறார். இந்நிலையில் குழந்தையை காப்பாற்ற சென்றவன் தீவிரவாதிகளிடம் சிக்கி கொள்கிறான். தீவிரவாதிகளுக்கு போன் மூலமாக பெரிய தீவிரவாதிகளிடமிருந்து ஆணை வந்துகொண்டே இருக்கிறது. அந்த ஆணைப்படி அவனை ஒரு அறைக்குள் சிறை வைக்கிறான். அந்த அறைக்குள் போன பிறகு தான் தெரிகிறது தன்னை போலவே சிலர் கொல்லப்படாமல் இருக்கிறார்கள் என்று. காரணம் அவர்களில் சிலர் இந்தியர்கள். இந்தியர்களை குறிப்பாக முஸ்லீம்களை அவர்கள் சுட்டுத் தள்ளுவதை பெரிய இடத்து ஆணையையும் மீறி தவிர்க்கிறார்கள். அப்போது தான் தெரிகிறது அந்த தீவிரவாதிகள் நிஜ தீவிரவாதிகள் இல்லை, சாதாரண குடும்பத்து இளைஞர்களாக இருந்து மூளைச் சலவை செய்யப்பட்டு புதிதாக தீவிரவாத கும்பலில் இணைந்தவர்கள் என்று. இறுதியில் காவற்படை ஹோட்டலின் மற்றொரு வழியாக நுழைய நாயகன் பொதுமக்களை வழிநடத்த தீவிரவாதிகள் வீழ்கிறார்கள். படம் பார்க்க தொடங்கிவிட்டால் முழு படத்தையும் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு உறைய வைக்கும் படம். 

படம் தமிழ் டப்பிங்கில் கிடைக்கவில்லை என்றாலும் இந்தப் படத்தை பாருங்கள் எந்த மொழியாக இருந்தாலும் இந்தப் படம் எல்லோருக்கும் புரியும்.  

Related Articles

டெல்லியில் ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் பா... டெல்லி காவல்துறையின் தரவுகளின் படி, 2018 ஆம் ஆண்டின் முதல் 3.5 மாதங்களில் ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார...
பெட்ரோல் திருடச் சுரங்கம் தோண்டிய கொள்ளை... தென்மேற்கு டெல்லி, கக்ரோலா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில், கடந்த செவ்வாய் கிழமை நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி...
ரஜினி அஜித் ரசிகர்களுக்கிடையே போட்டியை உ... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் " பேட்ட " . அதே நாளில் சிவா இயக்கத்தில் அஜ...
காதலர் தினத்தில் இந்தப் புத்தகத்தை பரிசள... கவிப்பேரரசு வைரமுத்துவின் மிக முக்கியமான கவிதை தொகுப்பு தான் "தண்ணீர் தேசம்". இந்தப் புத்தகத்தை மிக அழகான காதல் காவியம் என்று கூட சொல்லலாம். கலைவண...

Be the first to comment on "கண்டிப்பாக பார்க்க வேண்டிய மூன்று திரைப்படங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*